Press "Enter" to skip to content

காசி, மதுரா மசூதிகளை இடிக்கக் கோரும் வழக்குகளை 1991-ஆம் ஆண்டு சட்டம் ஏன் தடுக்கவில்லை?

பட மூலாதாரம், ARRANGED

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பு குறித்து சட்டநிபுணர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

முஸ்லிம் தரப்பின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையில் இந்து தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஞானவாபி மசூதி கோயிலின் மீது கட்டப்பட்டது என்றும், அதை புதுப்பிப்பதற்கும், கோயிலைக் கட்டுவதற்கும், வழிபடுவதற்கும் இந்துக்களுக்கு உரிமை வழங்குவதாகக் கூறுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடை செய்யவில்லை என வழக்கு விசாரணையின்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

“ஞானவாபி வளாகத்தில் இந்து மதத் தன்மை அல்லது முஸ்லிம் மதத் தன்மை உள்ளது. இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. இரண்டு தரப்பினரின் மேல்முறையீடுகளை மனதில் வைத்து, அதன் மதத் தன்மையை தீர்மானிக்க வேண்டும்,” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாபர் மசூதி -அயோத்தி கோவில் தொடர்பான வாதத்தின்போது இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம், எதிர்காலத்தில் கோவில்-மசூதி தகராறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க கொண்டு வரப்பட்டது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோயில்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவதை இந்தச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் தடுக்கவில்லை.

அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சில சட்ட நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். 1991 சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

காசி மற்றும் மதுரா

பட மூலாதாரம், ANI

ஞானவாபி வழக்கும் – வழிபாட்டுத் தலங்கள் சட்டமும்

மசூதி குழு சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஞானவாபி மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

1991 ஆம் ஆண்டில், பல இந்துக்கள் மசூதியின் பெரும்பகுதி விஸ்வேஷ்வரின் கோவிலின் மீது கட்டப்பட்டதாகவும், பல ‘கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்கு தெரியாத’ தெய்வச் சிலைகள் இருப்பதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தனர்.

இவை ஔரங்கசீப் ஆட்சியின் போது அழிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அந்த பகுதிகளை இந்து தெய்வத்தின் சொத்தாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், கோவிலை புனரமைத்து வழிபட இந்துக்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறப்பட்டது.

மசூதியில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

1991 சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது மஸ்ஜித் குழுயின் நிலைப்பாடாக உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, சுதந்திரத்தின் போது இருந்த வழிபாட்டுத் தலம், மதத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது.

அந்தச் சட்டம், ‘வழிபாட்டுத் தலங்களை மாற்றுவது தொடர்பான சச்சரவுகளைத் தடுப்பதற்கும்’, ‘சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கும்’ நிறைவேற்றப்பட்டது.

சுதந்திரத்தின் போது இருந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்த வழக்கையும் தாக்கல் செய்ய முடியாது என்று அச்சட்டம் கூறுகிறது.

இருப்பினும், இந்த சட்டம் பாபர் மசூதி-ராம ஜென்மபூமி சர்ச்சைக்கு பொருந்தாது.

எனவே, சுதந்திரத்தின் போது, ஞானவாபி மஸ்ஜித் ஒரு மசூதியாக இருந்தது, அதன் மதத் தன்மையை மாற்ற முடியாது என்று மசூதி குழு வாதிடுகிறது.

ஆனால், இதற்கு இந்து தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போதைய காலத்தில் மதத்தின் தன்மை என்ன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

“ஒரு முறை கோவில் கட்டப்பட்டால், அது எப்போதும் கோவிலாகவே இருக்கும்” என இந்து தரப்பினர் வாதிட்டனர்.

ராம ஜென்மபூமி வழக்கில் கூட, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் இந்தச் சட்டத்தை விவாதித்தது.

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வரலாற்று தவறுகளை சரி செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது,’வரலாற்றையும் அதன் தவறுகளையும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட மாட்டாது’ என்று நாடாளுமன்றம் தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தது.

மசூதியில் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றம் என்ன சொன்னது?

இந்து தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம், மதமாற்றம் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மட்டுமே வரையறுக்கிறது, ஒரு இடத்தின் மதத் தன்மையை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.

கியான்வாபி மசூதியின் மதத் தன்மையை மாற்ற இந்துக்கள் முயலவில்லை என்றும், அது எப்போதும் கோவிலாக இருந்ததாக அறிவிக்க வேண்டும் என்று மட்டுமே கோரி வருவதாகவும் நீதிமன்றம் கூறியது.

இதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், அதனால்தான் இந்திய தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

சட்டத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?

1991 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டும், ராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் இருந்தும், மசூதி இருக்கும் இடத்தை கோவிலுக்கான இடம் என்று கூறிய பல வழக்குகள் தடுக்கப்படவில்லை.

இந்த அடிப்படையில் இப்போது இரண்டு பெரிய வழக்குகள் உள்ளன. வாரணாசியில் ஒன்று, மதுராவில் ஒன்று.

மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி இருக்கும் இடத்தில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்று இந்துக்கள் சார்பில் வாதிப்புகிறது. 1991 சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பாக வழக்குத் தொடுக்க முடியாது என்று மசூதி தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனாலும் இந்துக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. 2020-ஆம் ஆண்டில், மதுரா மாவட்ட நீதிமன்றம் கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சைக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று கூறியது. ஷாஹி இத்கா மசூதியிலும் நீதிமன்றம் மூலம் ஆய்வு நடந்து வருகிறது.

2022 இல் கூட, உச்ச நீதிமன்றம் 1991 சட்டம் வழிபாட்டுத் தலத்தின் உண்மையான மதத் தன்மையை நிர்ணயிப்பதைத் தடுக்கவில்லை என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது .

இருப்பினும், இந்த கருத்து ஒரு உத்தரவு அல்ல, எனவே பின்பற்றப்படவில்லை. ஆனால் இதே கருத்தை பல நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பல இந்து அமைப்புகள் இந்த சட்டத்தை ரத்து செய்ய முயற்சித்தன.

கடந்த 2022-ம் ஆண்டு பாஜக எம்பி கிருஷ்ணபால் யாதவ், 1991-ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்து, “இந்த சட்டம் கடந்த கால ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான இந்துக்களின் குரலை நசுக்குகிறது” என்று கூறினார்.

மேலும், இந்தச் சட்டத்தை எதிர்த்துப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்தச் சட்டம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்று வாதிடப்படுகிறது.

காசி மற்றும் மதுரா

சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

பல சட்ட வல்லுநர்கள் இது முதல் முறையாக நடப்பதாகக் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் கூறுகையில், “ஒரு தலத்தின் மதத் தன்மையை தீர்மானிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நம்புகிறேன். தற்போது தினமும் தொழுகை நடைபெறும் மசூதி என்பதால் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் கீழ் வழக்குத் தள்ளுபடி செய்யலாமா என்பதை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை, இந்த வழக்கு 1991 சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட வேண்டும். 1991 சட்டத்தின்படி நீதிமன்றங்கள் செயல்படவில்லை என்றால், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அர்த்தம். இது மிகவும் வருத்தத்திற்குரியது,” என்றார்.

1991 சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சியூ சிங் நம்புகிறார். இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டால், இதுபோன்ற 3,000 வழக்குகள் வரிசையாகத் தாக்கல் செய்யப்படும் என்கிறார் அவர்.

“இந்த முடிவு 1991- ஆம் ஆண்டு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு கோவில் இருந்ததாகவும், அது ஔரங்கசீப்பின் உத்தரவால் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாகவும் மனுதாரர் கூறினார். கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா என்பதுதான் அடிப்படைப் பிரச்னை என்பது அவர்களின் வாதம்,” என்றார்.

சியூ சிங்கின் கூற்றுப்படி, இந்து தரப்பினரின் மனுக்கள் 1991 சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவது தான் ஒரே இறுதி முடிவு.

“1947 ஆகஸ்ட் 15 அன்று அதன் மதத் தன்மை என்ன என்பதை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். அந்த நேரத்தில் இந்த இடம் ஒரு மசூதியாக இருந்தது. மசூதியும் அதன் மேடையும் வக்பு வாரியத்தின் சொத்து என்றும் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த உரிமை உண்டு என்று 1937 ஆகஸ்ட் 25 தேதியிட்ட சிவில் நீதிமன்றத்தின் ஆணை உள்ளது,” என்றார் சியூ சிங்.

“இந்தப் பின்னணியில், ஆகஸ்ட் 15, 1947 அன்று, வழிபாட்டுத் தலமும் அதன் மதத் தன்மையும் ஒரு மசூதியாக இருந்தது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தெளிவானது.” என முடித்தார் சியூ சிங்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »