Press "Enter" to skip to content

பாஜகவை அதிமுக விமர்சிப்பதால் திமுகவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்

கடந்த வருடம் கடும் சர்ச்சைகளுக்கு இடையே நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு நேற்று அதிமுக,வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதில், 13 தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்டிருந்தன.

அதேவேளையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பேச்சில் மத்திய அரசையும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடியிருந்தார்.

அதிமுக,வின் பொதுக்குழு தீர்மானமும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சும், பாஜக மீதான எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறா?

எடப்பாடி தன்னை வலிமையான தலைவராக முன்னிறுத்த முயல்கிறாரா அல்லது தேர்தல் அழுத்தத்தால் திமுக எதிர்ப்பு மற்றும் பாஜக எதிர்ப்பு என ஒரே நேரத்தில் இரண்டையும் கடைபிடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக பொதுக்குழு

பட மூலாதாரம், ANI

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, பதிவு செய்த அரசியல் கட்சி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்ட வேண்டும் என்பது விதி. கடந்த ஆண்டு ஜூலை மாதம், பொதுக்குழு கூட்டப்பட்டு, அதில், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதே பொதுக்குழுவில் அப்போதைய பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் கூட்டணி யாருடன் இருக்கும், தேர்தலுக்கான கட்சியின் வியூகம் என்னாக இருக்கும் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று காலை இந்தக் கூட்டம் சென்னையில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், பொதுக்குழுவில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள், தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப்பணிகள் உள்ளிட்டவையை குறை சொல்லியும், நீட் தேர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்டவையை குறிப்பிட்டு திமுக,வை கண்டித்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேவேளையில், மத்திய அரசு, கூடுதலாக வெள்ள நிவாரணம் அளிக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாக்குரிமை தர வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை விலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தில் திமுக மற்றும் திமுக தலைமையிலான மாநில அரசை கண்டித்த அதிமுக, பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டிக்காமல், வலியுறத்தியிருந்தது பேசு பொருளாக இருந்தது. இது திமுக மீது கடுமை காட்டுவதும், பாஜக மீது மென்மையான போக்கை கடைபிடிப்பதுவுமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு மேடையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்திக்கொள்கிறேன் என சொன்னதும் அவையில் இருந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்ப்பரித்தனர்.

“தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது மத்திய அரசு”

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “நாம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. சிறுபான்மையின மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறிவிடும் என்ற அச்சத்தில் ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே, நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இல்லை என்பதை,” எனப் பேசினார்.

அதேபோல, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரச கொடுத்ததாக வரலாறு இல்லை என மத்திய அரசையும் சாடினார் அவர்.

“மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. மத்திய அரசின் நிதக்காக காத்திருக்காமல் மாநில அரசின் நிதி மூலம் மக்களை காப்பபாற்றியது அதிமுக அரசு. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக வரலாறு இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் பாஜக ஆண்டாலும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தமிழ்நாட்டை பார்க்கிறது,” எனப் பேசினார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டாலும், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தயாராகிறார் என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் மோதி

அதிமுக,வை உயிர்ப்புடன் வைக்கவா திமுக எதிர்ப்பு?

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, திமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அறுவடை செய்துவிடக் கூடாது என்பதற்காக திமுக எதிர்ப்பை கடுமையாக்கியதாகத் தெரிவித்தார்.

“தற்போது தமிழ்நாட்டில், திமுக-பாஜக போன்ற தோற்றம் வருகிறது. அதனால், திமுக எதிர்ப்பை பாஜக அறுவடை செய்து விடக்கூடாது என்பதற்காக திமுக மீதான எதிர்ப்பை இந்தக் கூட்டத்தில் சற்று அதிகமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேவேளையில், மத்திய அரசையும், பாஜகவையும் விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆதரவு கூடி வருகிறது. அதனையும் கருத்தில் கொண்டே அவர், மத்திய அரசையும், பாஜக,வையும் தன் பேச்சில் விமர்சித்துள்ளார்,” என்றார் ரவீந்திரன்.

அதேபோல, திமுக எதிர்ப்பை கடைபிடித்தால் மட்டுமே மாநிலத்தில் இரண்டாவது கட்சி அல்லது எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி திமுக எதிர்ப்பை தங்களது தீர்மானத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்றார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் துறை தலைவரும் அரசியல் ஆய்வாளருமான முனைவர் ராமசாமி.

“தமிழ்நாட்டில் எப்போதும் மாநிலக் கட்சிகள்தான். அதில், யார் வந்தாலும் திமுக எதிர்ப்பை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். அந்த வகையில், மாநிலத்திற்கு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை தெரிவித்தாலும், திமுக எதிர்ப்பை பாஜக கூர்மைப்படுத்திக்கொண்டே இருந்தது. அதனை தற்போது சரியாக புரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அந்த ஆயுதத்தை அவர் தற்போது கையில் எடுத்திருக்கிறார். இது அவருக்கும், கட்சிக்கும் நல்லது,” என்றார் ராமசாமி.

இதன் மூலம் தன்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வலிமையான தலைமை என நிறுவ எடப்பாடி பழனிச்சாமி முயற்சிப்பதாகவும் ரவீந்திரன் துரைசாமி கருதினார்.

“இப்படி திமுக.,வையும், பாஜக.,யும் சாடுவதன் மூலம், அதிமுக.,வின் முன்னாள் தலைவர்களைப்போல தன்னையும் ஒரு வலிமையான தலைமையாக முன்னிறுத்த முயல்கிறார். ஆனால், அது வருகின்ற 2024 நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும். ஒருவேளை, வரும் தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவினால், கட்சிக்குள்ளேயே மாற்றுத்தலைமைக்கான குரல்கள் கேட்கத் தொடங்கும்,” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

அதிமுக தொண்டர்கள்

அதிமுக,வின் பாஜக மற்றும் மத்திய அரசு மீதான எதிர்ப்பு

அதிமுக.,வின் தற்போதைய பாஜக எதிர்ப்பு என்பது வருகின்ற 2024 தேர்தலுக்கான கூட்டணி உத்தியாகப் பார்க்கிறார் பேராசிரியர் ராமசாமி.

“இது ஒரு தேர்தல் உத்தியாகவே தெரிகிறது. அவர் அதிமுக மேடையில் இதனை தெளிவுபடுத்துவது ஸ்டாலினுக்காக இல்லை. தனது தொண்டர்களுக்கும், கூட்டணியில் சேரலாமா வேண்டாமா என தயக்கத்தில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும்தான். இப்படி மேடையிலேயே பாஜக எதிர்ப்பை வலிமையாக பேசினால், கூட்டணிக்காக பேசி வரும் சிறுபான்மையின கட்சிகளும், பாஜக எதிர்ப்பை கடைபிடிக்கும் மற்ற கட்சிகளும் கூட அதிமுக,வுடன் கூட்டணி வைக்கலாம்,” என்றார்.

மேலும், திமுக, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் இது ஒரு அழைப்பாக பார்க்கிறார் ராமசாமி.

“திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் சில அதிருப்திகள் இருக்கலாம். அவர்களுக்கும் ஒரு மாற்றுத் தேவைப்படலாம். ஆனால், பாஜக எதிர்ப்பை அந்தக் கட்சிகள் கடைபிடிப்பதால், அவர்கள் மாற்று அணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இவ்வளவு காலம் இருந்திருக்கலாம். தற்போது, அதிமுக,வும் பாஜக எதிர்ப்பை கடைபிடிப்பதால், அதிமுக பக்கம் அவர்கள் செல்லலாம்,” என்றார் ராமசாமி.

அதேவேளையில், அதிமுக உண்மையிலேயே பாஜக எதிர்ப்பை கடைபிடிப்பதாக தான் நம்பவில்லை என்றும், இது ஒரு தேர்தல் உத்தியாகவே பார்ப்பதாகவும் ராமசாமி தெரிவித்தார்.

ஆனால், அதிமுக தீர்மானத்தையும், எடப்பாடி பழனிச்சிாமியின் பேச்சையும் ஒப்பிட்ட அரசியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பாஜவை தீர்மானத்தில் கண்டிக்காதது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான கதவை திறந்து வைப்பதை போன்றது எனக் கூறினார்.

“திராவிடக் கட்சிகளுக்கு பொதுக்குழு தீர்மானம் என்பது எப்போதும் ஒரு வரலாற்று ஆவணம். அதில் எப்போதும், தங்களது எதிர்காலத்திட்டத்தை மனதில் வைத்தே தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அந்த வகையில், தற்போது வருகின்ற தேர்தலுக்கு பாஜக தேவையில்லை என கூட்டணி குறித்தும் மத்திய அரசு குறித்தும் எடப்பாடி விமர்சிக்கிறார்.

ஆனால், ஒருவேளை தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால், பாஜக,வை ஆதரிப்பதற்காகவே தீர்மானத்தில் பாஜக குறித்தும் கூட்டணி குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை.” என்றார்.

மேலும், இந்த உத்திகளை பாஜக,வும் புரிந்துகொள்ளும் என பேராசிரியர் ராமசாமியும், அரசியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தியும் கூறினர்.

பிரதமர் மோதி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம், ARUN KARTHICK

என்ன சொல்கிறது திமுக?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜக,வுடன் கூட்டணி இல்லை என்ற பழனிச்சாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை எனக் கூறியுள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம் என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பாஜகவை விமர்சிக்க வேண்டியதுதானே! அதிமுகவை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்தோ அல்லது பாஜக,வைக் கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களில் ‘கண்டனம்’; ஒன்றிய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் ’வலியுறுத்தல்’ என்பது இரட்டை முகமூடிதானே!பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை,” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பாபுமுருகவேலிடம் கேட்டோம். அப்போது அவர்,“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை திமுக,வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை காலம், அந்த காரணத்தைச் சொல்லியே மக்களிடம் வாக்கு வாங்கி வந்தனர்.

இப்போது, எதனைச் சொல்லி வாக்கு வாங்குவது என அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால், இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக என்ன அரசியல் செய்ய வேண்டும், என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என திமுக பாடமெடுக்க தேவையில்லை,”என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »