Press "Enter" to skip to content

ஆப்கன்: ‘குழந்தைக்கு உணவளிக்க முடியாவிட்டல் விஷம் கொடுக்கச் சொல்கிறார்கள்’

பட மூலாதாரம், AAMIR PEERZADA

ஆப்கனில் பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த குடும்பங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன.

“நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன்” என்று தாலிபன் சகோதரர் ஒருவரிடம் கேட்ட பெண்ணிடம், அவர் “அவர்களுக்கு விஷம் கொடுங்கள். ஆனால் நீங்கள் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது” என்று பதிலளித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண் கூறுகிறார்.

அவரைப் போலவே பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார் சோஹைலா நியாசி. “நான் கடைசியாக என் குழந்தைக்கு பால் வாங்கி இரண்டு மாதம் ஆகிறது. பொதுவாக குழந்தையின் பால் பாட்டிலில் தேநீரைத்தான் நிரப்பி வைப்பேன், அல்லது தேநீரில் ரொட்டியை ஊற வைத்து, அதை அவளுக்கு ஊட்டுவேன்,” என்கிறார் அவர்.

அவர், கிழக்கு காபூலில் உள்ள ஒரு மலையில் மண் செங்கலால் ஆன வீட்டில் வசிக்கிறார். அவர் வீட்டிற்குச் செல்ல சாலை வசதிகள் இல்லை. செங்குத்தான மண் பாதையில் பயணித்துதான் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

கணவரை இழந்த சோஹைலாவிற்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அவர்களில் இளையவரான ஹுஸ்னா ஃபக்கீரி என்ற பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகின்றது. தன் குழந்தைக்கு கொடுப்பதாக சோஹைலா குறிப்பிடும் தேநீர், ஆப்கானிஸ்தானில் பாரம்பரியமாகக் குடிக்கப்படும் பச்சை இலைகளை வெந்நீரில் போட்டு தயாரிக்கப்படும் தேநீர், அவற்றில் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. இதனால், சோஹைலாவின் குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது.

கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் (WFP) அவசரகால உணவு உதவியை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட 10 மில்லியன் மக்களில் சோஹைலாவும் ஒருவர். இது ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்படும் இருபது லட்சம் குடும்பங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாலிபன் ஆட்சியால், சோஹைலா வேலைக்குச் சென்று தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது எனக் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான்: பசியில் வாடும் குழந்தைக்கு தாலிபன்கள் விஷம் கொடுக்கச் சொல்கிறார்களா?

பட மூலாதாரம், Getty Images

“எங்களுக்குச் சாப்பிட எதுவுமே இல்லாத இரவுகள் இருந்துள்ளன. இந்த இரவில் நான் எங்கு போய் பிச்சை எடுக்க முடியும் என நான் என் குழந்தைகளிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பசியுடன் தூங்குவார்கள். ஆனால், அவர்கள் எழுந்தவுடன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் என் யோசனையாக இருக்கும்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உணவு கொண்டு வந்தால், எங்கள் குழந்தைகள் எனக்குக் கொடு என அவர்களிடம் சண்டையிடுவார்கள். அந்த உணவை நான் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால்தான் அவர்கள் சமாதானமடைவார்கள்,” என்கிறார் சோஹைலா.

பசியால் வாடும் தன் பெண் குழந்தையை அமைதிப்படுத்த, சோஹைலா “தூக்க மருந்து” தருவதாகக் கூறுகிறார்.

“அவளுக்குக் கொடுக்க என்னிடம் பால் இல்லாததால் அவள் எழுந்து பால் கேட்கக்கூடாது என்பதற்காக, நான் அதைக் கொடுக்கிறேன். அவளுக்கு அந்த மருந்தைக் கொடுத்த பிறகு, அவள் ஒரு நாள் காலையில் இருந்து அடுத்த நாள் வரை தூங்குகிறாள். சில நேரங்களில் அவள் உயிருடன் இருக்கிறாளா அல்லது இறந்துவிட்டாளா என்று நான் சோதித்து பார்த்துக்கொள்வேன்,” என்கிறார் சோஹைலா.

சோஹைலா தன் மகளுக்குக் கொடுக்கும் மருந்தைப் பற்றி பிபிசி விசாரித்தது. அதுவொரு பொதுவான ஆண்டிஹிஸ்டமைன் அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து என்பதைக் கண்டறிந்தோம்.

சில ஆப்கானிஸ்தானிய பெற்றோர்கள் பசியால் வாடும் குழந்தைகளுக்கு இந்த மருந்தை அதிகளவு கொடுப்பதால், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தாலிபன் படைகளுக்கும் தாலிபன் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடந்த சண்டையில், தனது கணவர் கொல்லப்பட்டதாக சோஹைலா கூறுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு, WFP வழங்கிய மாவு, எண்ணெய் மற்றும் காய்கறிகளை அவர் பெரிதும் நம்பியிருந்தார்.

சோஹைலா தற்போது முழுக்க முழுக்க உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நம்பியிருக்கிறார். நாங்கள் அங்கிருந்த பெரும்பாலான நேரம், குழந்தை ஹுஸ்னா அமைதியாகவும் செயலற்றும் இருந்தார்.

குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் நிறுத்தப்பட்ட நிதி உதவி

குழந்தைகள் நல மருத்துவமனை

பட மூலாதாரம், AAMIR PEERZADA

யுனிசெஃப் (Unicef) கருத்துப்படி, அவர் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர். ஆப்கனில், முப்பது லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளில் ஒருவர் இப்படியான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கின்றனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு நாட்டின் இளம் வயதினரை அழிக்கும் அதே வேளையில், மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த நிதி உதவியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உணவுக்கு நிதியுதவி அளித்தது. இது, 2021இல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட அவசரகால உதவித் திட்டம்.

இப்போது அது தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரே குழந்தைகள் நல மருத்துவமனையான காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை உட்பட பெரும்பாலான சுகாதார மையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சம்பளம் இப்போது அரசாங்கத்திடம் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவருக்கும் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது,” என்று தாலிபன்களால் நியமிக்கப்பட்ட மருத்துவ இயக்குநர் மருத்துவர் முகமது இக்பால் சாதிக் பிபிசியிடம் கூறினார்.

மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவையும் மூடிவிட்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கும் வார்டு நிரம்பியதால், பல நாட்களாக, ஒரு படுக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டியிருந்தது.

அந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கும் வார்டின் ஒரு மூலையில், பிறந்து 14 மாதங்களான சுமயா படுத்திருந்தார். அந்தக் குழந்தைக்கு அருகில், பிறந்து 18 மாதங்களான முகமது ஷஃபி படுத்திருந்தார். முகமது ஷஃபியின் தந்தை தாலிபன் அமைப்பில் இருந்தவர். அவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு அருகில், அவரின் வயதான பாட்டி ஹயாத் பீபி அமர்ந்திருந்தார்.

‘நாங்கள் உதவி கேட்க மாட்டோம்’ – தாலிபன்

ஆப்கானில் உணவின்றி அவதிப்படும் குழந்தைகள்

பட மூலாதாரம், AAMIR PEERZADA

அவர், தன் பேரனை தாலிபன்கள்தான் மருத்துவமனைக்குக் கொண்டு வர உதவியதாகக் கூறினார்.

“நான் இப்போது கடவுளின் கருணையை மட்டும்தான் நம்பியிருக்கிறேன். நான் இங்கிருந்து எங்கு செல்வேன் எனத் தெரியவில்லை,” என்றார் ஹயாத் பீபி.

தாலிபன் அரசாங்கத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்திடம், சர்வதேச அளவில் மேலும் உதவிகள் பெற என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டோம்.

“நன்கொடை வழங்கும் நாடுகளின் பொருளாதாரம் சரியாக இல்லாததால், அவர்கள் உதவியை நிறுத்தியுள்ளனர். கொரோனா மற்றும் யுக்ரேன் போரால், எங்களுக்கு உதவும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களிடமிருந்து நாங்கள் உதவியை எதிர்பார்க்க முடியாது. நாங்கள் அவர்களிடம் பேசி உதவி பெற மாட்டோம்,” என்றார்.

“நாங்கள் தன்னிறைவு பெற்றவர்களாக மாற வேண்டும். எங்களது பொருளாதாரம் விரிவடைகிறது, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சுரங்க ஒப்பந்தங்களை நாங்கள் வழங்குகிறோம். ஆனால், எங்களுக்கு இன்னும் சவால்கள் இருப்பதால் உதவிகளைக் குறைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை,” என்றார் அவர்.

தாலிபன் கொள்கைகளும் பிரச்னையின் ஒரு பகுதி என்பதை அவர் உணர்ந்தாரா, பெண்கள் மீது அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், நன்கொடையாளர்கள் பணம் கொடுக்க விரும்பவில்லையா என அவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “உதவி பெறுவது ஓர் அழுத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டால், இஸ்லாமிய எமிரேட், அதன் சொந்த மதிப்புகளைக் கொண்டுள்ளது, அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கும். ஆப்கானியர்கள், நாட்டின் மதிப்புகளைப் பாதுகாக்க கடந்த காலத்தில் பெரிய தியாகங்களைச் செய்துள்ளனர். அதேபோல, இந்த உதவி நிறுத்தத்தையும் தாங்கிக்கொள்வார்கள்,” என்றார் முஜாஹித்.

அவரது வார்த்தைகள் பல ஆப்கானியர்களுக்கு ஆறுதல் அளிக்காது. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை.

காபூலில் உள்ள ஒரு தெருவில் உள்ள ஒற்றை அறை கொண்ட வீட்டில் நாங்கள் ஒரு பெண்ணைச் சந்தித்தோம். அவர், தெருவில் பழங்கள், காய்கறிகள், மற்றும் பிற பொருட்களை விற்பதை தாலிபன்கள் தடுத்ததாகக் கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தான் ஒரு முறை தாலிபன்களால் கைது செய்யப்பட்டதாகவும், அவரது கணவர் போரின்போத கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“அவர்கள் குறைந்தபட்சம் எங்களை உழைத்து நேர்மையாக வாழ அனுமதிக்க வேண்டும். நான் கடவுளிடம் சத்தியம் செய்கிறேன், நாங்கள் கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டோம். நாங்கள் எங்கள் குழந்தைகளின் உணவுக்காக மட்டுமே சம்பாதிக்கச் செல்கிறோம், அவர்கள் எங்களை இப்படித் துன்புறுத்துகிறார்கள்,” என்றார் அவர்.

அவதிப்படும் ஆப்கான் மக்கள்

பட மூலாதாரம், AAMIR PEERZADA

அந்தப் பெண் தற்போது, தனது 12 வயது மகனை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

“நான் சம்பாதிக்கவில்லை என்றால் நான் என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன் என ஒரு தாலிபன் சகோதரரிடம் கேட்டேன். அதற்கு அவர், அவர்களுக்கு விஷம் கொடுங்கள், ஆனால் நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்றார். தாலிபன் அரசு எனக்கு இரண்டு முறை கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். ஆனால், அது போதுமானதாக இல்லை,” என்றார்.

ஆப்கனை தாலிபன்கள் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பொதுச் செலவில் முக்கால்வாசி பங்கு முந்தைய ஆட்சிக்கு நேரடியாக வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பணத்தில் இருந்து வந்தது.

உலர் ரொட்டி மற்றும் தண்ணீரைக் குடித்து லட்சக்கணக்கானவர்கள் உயிர் வாழ்கின்றனர். சிலர் இந்தக் குளிர்காலத்தைக் கடக்க மாட்டார்கள்.

கூடுதல் செய்தி சேகரிப்பு: இமோஜென் ஆண்டர்சனின்

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »