Press "Enter" to skip to content

விஜயகாந்த்: திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சாகசங்கள் செய்த நாயகன்

சொக்கத்தங்கம்… இது விஜயகாந்த் நடித்த படம் மட்டுமல்ல, அவரும் அப்படித்தான் என்று திரையுலகில் அவரைத் தெரிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருமே ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு திரையுலகில் தலைகாட்டி, பின்னர் சின்ன (மினி)மம் கியாரண்டி நாயகனாக உருவெடுத்து, அதன் தொடர்ச்சியாகத் தன்னைப் பெரிய கதாநாயகனாக வார்த்துக் கொண்டவர் விஜயகாந்த். தான் மட்டுமல்ல, தன்னைப் போலவே திரையுலகில் சாதிக்கத் துடித்த பலரையும் கைதூக்கி விட்டவர். இன்றைய தமிழ் திரைப்படத்தின் வசூல் நாயகனாகத் திகழும் விஜய் தொடங்கி சரத்குமார், அருண்குமார் போன்ற முந்தைய தலைமுறை கதாநாயகன்கள் பலருக்கும் ஏணியாக இருந்தவர் விஜயகாந்த்.

தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படும் சமத்துவத்தை உள்ளுணர்வோடு திரையுலகில் சாதித்துக் காட்டியவர். அதாவது, படப்பிடிப்புகளின் போது நாயகன், நாயகி போன்ற பெரிய நடிகர்களுக்குத் தனி கவனிப்பு, முகம் தெரியாத சிறு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சராசரி என்றிருந்த சாப்பாட்டை அனைவருக்கும் ஒரே மாதிரியாக மாற்றிக் காட்டியவர் அவர்.

விஜயகாந்த் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் அவருக்கு என்னென்ன உணவுகள் பரிமாறப்படுகிறதோ அவை அனைத்தும் கொஞ்சமும் மாறாமல் லைட்பாய் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் என்று திரையுலகினர் அவரைப் பற்றி பெருமையாகக் கூறுகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு முகவரி கொடுத்தவர். அவர்கள் திரையுலகில் அழுத்தமாக கால் பதிக்க தோள் கொடுத்தவர். திரையுலகில் நடிகராக மட்டுமின்றி, நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து கடனில் தத்தளித்த அந்த சங்கத்தை மீட்டெடுத்தவர்.

அதன் தொடர்ச்சியாக அரசியலிலும் துணிச்சலாகக் களம் கண்டு மிகக் குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர். ஒரு கட்டத்தில் அடுத்த முதலமைச்சர் என்னும் கூறும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்து திரையுலகிலும், அரசியலிலும் துணிச்சலை மட்டுமே முதலீடாகக் கொண்டு உழைப்பாலேயே முன்னுக்கு வந்தவர் விஜயகாந்த்.

திரைப்படத்தில் அறிமுகம்

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், RASI STUDIO

மதுரையில் கே.என் அழகர்சுவாமி – ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் பிறந்தவர் விஜயகாந்த். அவரது இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி. சிறு வயதிலேயே நடிப்பின் மீது காதல் கொண்ட அவர் அதற்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினர்.

நடிக்கும் வேட்கையில் 1970களில் சென்னைக்கு வந்த அவர், எந்தவொரு பின்புலமும் இல்லாமல் கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே திரையுலகில் விஜயகாந்த் என்ற பெயரில் அறிமுகமானார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் பகைவனாக அறிமுகமான விஜயகாந்திற்கு, 1981-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் திரையுலகில் தனியொரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தின் இயக்குநரான நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரன், அதன் தொடர்ச்சியாக சட்டம் என் கையில், சட்டம் ஒரு விளையாட்டு என்று சட்டம் என்று தொடங்கும் பல படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கினார்.

தொடர் வெற்றிகளால் விஜயகாந்த் சின்ன (மினி)மம் கியாரண்டி நடிகராக வளர்ந்தார். அந்த நேரத்தில், விஜயகாந்த் எடுத்த துணிச்சலான முடிவு ஒன்று திரையுலகில் அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. அதுதான், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உருவாக்கத்தில் அவர் நடித்த ஊமை விழிகள் திரைப்படம். சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்த அந்த திரைப்படத்தை விஜயகாந்த் நாயகனாக தோன்றியிருப்பார். அந்த காலகட்டத்தில் திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்து, பின்னர் இயக்குநராவதே தமிழ் திரைப்படத்தில் மரபாக இருந்தது. அதனை உடைத்து, திரைப்படக் கல்லூரியில் படித்து நேரடியாக திரைப்படத்தை இயக்க முயற்சித்த ஆபாவாணன் குழுவினருடன் இணைய மற்ற நடிகர்கள் தயங்கிய போது விஜயகாந்த் துணிச்சலாக முன்வந்து கைகொடுத்தார். இயல்பாகவே விஜயகாந்திடம் இருந்த துணிச்சலும், யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்யக் கூடிய ரிஸ்க் எடுக்கும் குணமுமே அவரை ஒவ்வொரு கட்டத்திலும் முன்னொக்கி அழைத்துச் சென்றன.

தமிழ் திரைப்படத்தில் மக்கள் விரும்பத்தக்கது கதாநாயகன்

விஜயகாந்த் - திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் சாகசங்கள் செய்த நாயகன்

பட மூலாதாரம், RASI STUDIO

ஊமை விழிகள் திரைப்படத்தின் மூலம் மக்கள் விரும்பத்தக்கது கதாநாயகனாக உருவெடுத்த விஜயகாந்த் அடுத்தடுத்த படங்களில் உச்சம் தொட்டார். தமிழ் திரைப்படத்தில் ரஜினியும், கமலும் கோலோச்சிய 1980-களில் அவர்களைப் போலவே ரசிகர்களை திரையரங்கிற்குள் அழைத்து வரும் மக்கள் விரும்பத்தக்கது கதாநாயகனாக விஜயகாந்த் வலம் வந்தார்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் விஜயகாந்திற்கென பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. அவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. 2015ஆம் ஆண்டு வரை தமிழ் திரைப்படத்தில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த பல படங்கள் தெலுங்கு, இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனாலும், ‘தமிழில் மட்டுமே நடிப்பேன்’ என்பதில் பிடிவாதமாக இருந்த விஜயகாந்த் கடைசி வரை மற்ற மொழிப் படங்களில் தலைகாட்டவே இல்லை. தமிழ் திரைப்படத்தில் புரட்சிக் கலைஞராக அறியப்பட்ட விஜயகாந்த் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என பன்முகம் கொண்டவர்.

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், I. V. Cine Productions

திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக…

தமிழ் திரைப்படத்தில் காவல்துறை சீருடைக்கே மிடுக்கு சேர்த்தவர் என்ற பெயர் விஜயகாந்திற்கு உண்டு. காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக அவர் அறிமுகமாகும் காட்சிகளில் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரம் பிடிக்கும். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல் என்று பல படங்களில் காவல்துறை அதிகாரியாக வந்து அசத்தியிருப்பார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் இல்லாத சிறப்பு விஜயகாந்திற்கு உண்டு. ஒரு நடிகருக்கு நூறாவது படம் என்றாலே சரியாக ஓடாது என்றிருந்த திரைப்படம் சென்டிமென்ட் விஜயகாந்த் விஷயத்தில் பொய்த்துப் போனது. விஜயகாந்த் நூறாவது படமாக நடித்த கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றிப்படமாக பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்டு, அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான மைல்கல் படமாக அமைந்தது.

விஜயகாந்த் படங்களில் அவரது சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டவை. அதற்காக அவர் எந்த ரிஸ்க் எடுக்கவும் தயங்கியதில்லை. 1984-ம் ஆண்டு நாளை உனது நாள் என்ற திரைப்படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் விஜயகாந்திற்கு டூப்பாக நடித்த சண்டைக் கலைஞர் அப்போது நேரிட்ட விபத்தில் இறந்துவிட்டார். இதனால் மன வேதனையடைந்த விஜயகாந்த், ‘சண்டைக் காட்சியில் என்னை ரசிக்கும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அந்த காட்சிகளுக்கு நியாயம் சேர்க்க நானே அந்த ரிஸ்க்கை எடுப்பதே சரியானது’ என்று கூறி அதற்குப் பிறகு வந்த படங்களில் டூப் இல்லாமல் அவரே எல்லா சண்டைக் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்தாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், I. V. Cine Productions

வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்

தமிழ் திரைப்படத்தில் வசனங்களை எழுதி புகழ் பெற்றவர் கருணாநிதி என்றால், அந்த வசனங்களுக்கு தனது உச்சரிப்பாலும், நடிப்பாலும் திரையில் உயிர் கொடுத்ததன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அநியாயத்தை தட்டிக் கேட்கும் இடத்திலோ, சமூக அவலங்களைக் கண்டு பொங்கும் காட்சியிலோ முகத்தில் கோபம் கொப்பளிக்க கண்கள் சிவக்க உணர்ச்சிப்பூர்வமாக அவர் பேசிய வசனங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன.

குறிப்பாக, நீதிமன்ற காட்சிகளிலும், காவல்துறை அதிகாரியாக வரும் காட்சிகளிலும் அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் பேசப்படக் கூடியவை. வேறெந்த நடிகருக்கும் அதுபோன்று வாய்க்கவில்லை அல்லது விஜயகாந்தைப் போல உணர்வுப்பூர்வமாக அவர்களால் அந்த காட்சிகளுக்கு உயிரூட்ட முடியவில்லை என்றே சொல்லலாம்.

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், Aascar Films

ரமணா – புதிய பரிணாமம்

விஜயகாந்தின் திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக அமைந்தது ரமணா திரைப்படம். விஜயகாந்த் படம் என்றாலே 8 பக்க வசனம் கொண்ட காட்சி கட்டாயம் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்த காலகட்டத்தில் வெளியான இத்திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் மற்றொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியது. உணர்வுப்பூர்வமான வசனங்களை பேசிப்பேசியே ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்திற்கு இந்த படத்தில் பெரிய அளவில் வசனங்களே இல்லை. படம் முழுவதுமே அதிகம் பேசாத பேராசிரியராகவே விஜயகாந்த் வலம் வருவார்.

ஆனாலும், ஒரே ஒரு இடத்தில் புள்ளிவிவரங்களுடன் விஜயகாந்த் பேசும் வசனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். உணர்வுப்பூர்வமான வார்த்தைகளுடன் ஒப்பிடுகையில் புள்ளிவிவரங்கள் சலிப்பு தரக்கூடியவை என்பதே நிதர்சனம் என்ற நிலையில், விஜயகாந்த் தனது தனித்துவமான வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் அந்த காட்சி தனியொரு ஆளாக தாங்கிப் பிடித்திருப்பார். அந்த காட்சியின் தாக்கத்தில் அதன் பிறகு வந்த பல படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றளவும் மேடை நிகழ்ச்சிகளில் விஜயகாந்தின் அந்த வசனம் பிரபலம்.

‘நிஜ வாழ்க்கையிலும் அவர் கதாநாயகன்தான்’

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், S.A.Chandrasekaran

1980-களில் தமிழ் திரைப்படத்தில் வெற்றிகரமான இளம் நாயகனாக வலம் வந்த விஜயகாந்த் திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாகவே இருந்தார் என்று திரையுலகினர் அவரைப் புகழ்கின்றனர். உதவி வேண்டி வருவோருக்கு இரங்கும் அவரது மனமும், தயாள குணமும், தாராள மனப்பான்மையும் எப்போதும் நினைவில் நிற்கும் என்று அவரால் உயர்ந்த திரைக்கலைஞர்கள் வியந்து கூறுகின்றனர்.

தொடக்க காலத்தில் அவரை வைத்து தொடர்ச்சியாக படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு நேர்காணலில் பேசுகையில், “விஜயகாந்த் படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் எதற்கும் அஞ்சாதவர். ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவில் சென்னை தியாகராயர் நகரில் வீட்டிற்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ 2 பேர் சாலையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய விரட்டியுள்ளார். அதைப் பார்த்த விஜயகாந்த் தேரை நிறுத்தி, கீழே இறங்கி கத்தியுடன் அச்சுறுத்திய நபரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டே வீட்டிற்குச் சென்றார்” என்று கூறினார்.

விஜயகாந்தால் திரைப்படத்தில் உயர்ந்தவர்கள்

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், B. V. Combines

தமிழ் திரைப்படத்தில் இன்று வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் அவரது அறிமுக கட்டத்தில் மக்கள் மனதில் அழுத்தமாக பதிய உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். விஜய் நடித்த படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக அவர் பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் செந்தூர பாண்டி. இந்த படத்தில் நடிப்பதற்காக விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தயக்கத்துடன் விஜயகாந்தை அணுக, அவரோ தன்னை திரைப்படத்தில் உயர்த்திய சந்திரசேகரனுக்கு நன்றிக் கடனாக கொஞ்சமும் தயங்காமல் செந்தூர பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

விஜயகாந்தின் செயல் குறித்து நெகிழ்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், “விஜயகாந்த் அப்போது பல படங்களில் வேலையாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரை இந்தப் படத்தில் நடிக்க கேட்கலாமா? அவர் ஒப்புக் கொள்வாரா? என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஒரு வழியாக விஜயகாந்திற்கு போன் செய்து அதுகுறித்து பேச அவர் வீட்டிற்கு வருவதாகக் கூறினேன். ஆனால், அவரோ நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் என் வீட்டிற்கு வந்துவிட்டார். எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும், எப்போது வேண்டும்? என்று என்னிடம் கேட்டு உடனடியாக தேதி ஒதுக்கிக் கொடுத்தார். திரையுலகில் விஜயகாந்த் போன்ற மனிதர்களை பார்க்கவே முடியாது” என்றார்.

அதேபோல், சரத்குமார், அருண் பாண்டியன், ராம்கி போன்ற நாயகர்களுக்கும், குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்கள், இயக்குநர்கள் பலருக்கும் திரையுலகில் ஏணியாக இருந்தவர் விஜயகாந்த்.

அரசியல் பிரவேசம்

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், VIJAYAKANTH

தமிழ்நாட்டில் திரையுலகில் கோலோச்சிய நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா, டி.ராஜேந்தர், ராமராஜன் என நீண்ட பட்டியலே போடலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் அரசியலில் சாதித்துக் காட்டியவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1990-களில் பிற்பகுதியில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பூதாகரமானதாக உருவெடுத்து வந்த நிலையில் அவரது தயக்கம் அதற்கு அணை போட்டது. ஆனால், எதற்கும் தயங்காத விஜயகாந்தோ துணிச்சலாக அரசியலிலும் கால் பதித்தார்.

திரையுலகைப் போலவே அரசியலிலும் துணிச்சலாக அவர் எடுத்த முடிவுகள் அவரை வேகமாக புகழ் ஏணியில் ஏற்றி வைத்தன. தேமுதிகவை தொடங்கி 2006-ம் ஆண்டு முதல் தேர்தலை எதிர்கொண்ட அவர், தனி செல்வாக்கு பெற்ற மதுரையில் போட்டியிடுவார் என்று கணிக்கப்பட்டிருந்த யாரும் எதிர்பார்க்காத வகையில், தனக்கு நேரடியாக தொடர்பில்லாத விருதாசலம் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேமுதிக சார்பில் தனி ஒருவராக தேர்வான விஜயகாந்த் தனது நடவடிக்கைகளால் மக்களையும் கவர்ந்தார்.

ஏற்றமும் சறுக்கலும்

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், VIJAYAKANTH

2006-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்த விஜயகாந்திற்கு அரசியல் வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே அமைந்தது. அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த பெரும் தலைவர்களையெல்லாம் தாண்டி கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்திற்கு அவர் வேகமாக உயர்ந்தார். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை விஞ்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதம் ஒன்றில் விஜயகாந்த் நாக்கைத் துருத்தியதாக எழுந்த சர்ச்சை இன்றளவும் ஓயவில்லை.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு தொகுதியைக் கூட வெல்லாத நிலையில், விஜயகாந்த் தலைமை வகித்த கூட்டணி 2 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சித் தலைவராக வலம் வந்த விஜயகாந்தே அடுத்த முதலமைச்சராக வருவார் என்று பேசும் அளவுக்கு வளர்ந்தார். அதற்கேற்ப 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துணிச்சலாக அவர் மேற்கொண்ட முடிவே அவரை மீண்டு வர முடியாத சரிவில் தள்ளியது. விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டு அவர் தலைமையில் அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்தும் தனது தொகுதியில் தோல்வியை தழுவினார். அவரது அரசியல் வாழ்க்கையில் அப்போது தொடங்கிய சரிவில் இருந்து அவர் மீண்டு வரவே முடியவில்லை.

விஜயகாந்த் மீதான விமர்சனங்கள்

சட்டப்பேரவையில் நாக்கைத் துருத்தியது, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் நாட்களை கடத்தி திமுகவுடன் பேரம் பேசியது, கடைசியில் திடீரென மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது என்பன போன்ற சர்ச்சைகள் அவர் மீது இன்றும் தொடர்கின்றன. அதேநேரத்தில், கட்சிக்குள் குடும்ப அரசியல் வளர்வதை அவர் தடுக்கவே இல்லை என்ற குற்றச்சட்டும் உண்டு. அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன் ஆகியோருடன் மைத்துனர் சுதீஷூம் கட்சியில் தீவிரமாக செயலாற்றியதுடன், மூத்த தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முக்கிய முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

சொந்த வாழ்க்கை

விஜயகாந்த் காலமானார்

பட மூலாதாரம், VIJAYAKANTH

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த போது 1990-ம் ஆண்டு நடிகர் பிரேமலதாவை விஜயகாந்த் கரம் பிடித்தார். அவருக்கு விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் நுழைந்து, தேமுதிகவில் இயங்குகிறார். சமீபத்திய ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். வீட்டில் குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் காணொளிக்களை அவ்வப்போது அவரது மனைவி பிரேமலதா வெளியிட்டு வந்தார்.

கடந்த மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். அண்மையில் நடந்து முடிந்த தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அதன் நிறுவன தலைவரான விஜயகாந்த் கலந்து கொண்டார். உடல் நலிந்து போயிருந்த அவரை 2 பேரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி அரசியல் தாண்டி அனைவரையும் கலங்கச் செய்தது. அந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார்.

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி

விஜயகாந்த் காலமானார்

செவ்வாய்க்கிழமையன்று விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் “நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்” என மருத்துவமனை சார்பில் அந்த செய்தி வெளியிடப்பட்டது. விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலக வளாகத்திலேயே நாளை மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள தேமுதிக அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »