Press "Enter" to skip to content

பாகிஸ்தான் – இரான்: பரஸ்பர தாக்குதலுக்குப் பின் சுமூகப் பேச்சுவார்த்தை – பதற்றம் தணியுமா?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வார்-உல்-ஹக்கின் அலுவலகத்தின்படி, பாகிஸ்தானும், இரானும் தங்களது ராஜ்ஜீய உறவுகளை மீட்டெடுத்துள்ளன.

எல்லையில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், தற்போது இருவரும் சுமூகப் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, இரானும், பாகிஸ்தானும் அந்தந்த நாட்டின் தலைநகரங்களில் இருந்து தங்களது தூதர்களைத் திரும்பப் பெற்றன.

தற்போது, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டின் தூதர்களும் தங்கள் பதவிகளுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 18) நடந்த தாக்குதல்களில் தங்களது எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக இரான் அரசு கூறியது. அதேபோல, செவ்வாய்க்கிழமை(ஜனவரி 16) அன்று இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

பாகிஸ்தான் இரான் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

இந்த சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக இரான் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, வெள்ளிக்கிழமை(ஜனவரி 19) அன்று இரானுடனான அனைத்துப் பிரச்னைகளையும் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாக இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பிறகு பாகிஸ்தான் கூறியது.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இரானுடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிலானி கூறினார்.

“அவர்களும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து பதற்றத்தைத் தணிக்க ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளின் தூதர்கள் அந்தந்த தலைநகரங்களுக்குத் திரும்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.”

பாகிஸ்தானின் பதில் தாக்குதல் மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே இது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இஸ்ரேல் காஸாவில் பாலத்தீன ஹமாஸுடன் சண்டையிட்டு வருகிறது. அதேபோல, லெபனானில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹஸ்புல்லா ஆயுதக் குழுவுடனும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

வரைபடம்

இதற்கிடையில், இராக் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவு குழுக்கள் அமெரிக்கப் படைகளை குறிவைக்கின்றன. அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகளை தாக்கியுள்ளன. ஹூத்திகள் போக்குவரத்துக் கப்பலை தாக்கினர்.

இரானின் சரவண் நகரைச் சுற்றி நடந்தப்பட்ட தாக்குதல்களுக்கு உளவுத் துறையின் எச்சரிக்கையே காரணம் என்றும், இரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை முழுமையாக மதிப்பதாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணியினர் குறிவைத்து ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு குழுக்களும் தென்மேற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான பலுசிஸ்தானில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த பல தசாப்தங்களாக போராடி வருகின்றன.

என்ன நடந்தது?

பாகிஸ்தான்-இரான்

பட மூலாதாரம், Getty Images

முதலில் பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் பஞ்கூர் பகுதியில், இரான் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து, வியாழக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.

உளவு அடிப்படையிலான நடவடிக்கை வாயிலாக, பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் பதுங்கிடங்கள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு சில மணிநேரம் முன்னதாக, இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக, இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான தொடர்பு தொடர்வதற்கான தேவை குறித்துப் பேசியுள்ளார். அப்போது, பாகிஸ்தான் தங்களின் நண்பர் என்றும் சகோதர நாடு என்றும் வர்ணித்துள்ளார் ஹொசைன்.

பாகிஸ்தானின் கிழக்கு, மேற்கு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் அதன் உறவு நெருக்கடியில் உள்ளது. மேலும், அந்நாட்டின் படைகள் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் அதிதீவிரம் அல்லாத வகையில் போரிட்டு வருகின்றன. இந்தச் சூழலில், இரானின் தலையீடு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும்

பாகிஸ்தான் இரான் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

இரானுடனான பாகிஸ்தானின் உறவு, அந்நாடு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருக்கும் உறவில் இருந்து வித்தியாசமானது என்கிறார், இஸ்லாமாபாத்தில் செயல்பட்டு வரும் ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரீஜினல் ஸ்டடீஸ்` எனும் சிந்தனை மையத்தைச் சேர்ந்த இரானிய நிபுணர் ஃபராஸ் நக்வி.

பயங்கராவத முயற்சிகளை எதிர்கொள்வதில் இரான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மிக விரிவான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கும் நிலையில், இரானின் இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

“இது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையில் போதாமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கூட்டுப் பயிற்சிக்காக பாகிஸ்தான் கடற்படையினர் இரானில் உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பாகிஸ்தானின் தொழில் பிரதிநிதிகள் குழு சப்ஹாருக்கு சென்றுள்ளது.

மேலும், இரானின் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்லாமாபாத்திற்கு சென்றிருக்கிறார். இந்தப் பின்னணியில், இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

இஸ்லாமாபாத் தனது தடுப்பு நடவடிக்கைக்காக பதிலடி தாக்குதல்களைத் தவிர்க்க முடியாது என்று ஃபராஸ் கூறுகிறார். அதேவேளையில், பதிலடி தாக்குதலுக்குப் பின்னர் இப்போது இந்த நிலைமையை அமைதியான முறையிலும் நுட்பத்துடனும் கையாள வேண்டும் என்கிறார் அவர். எனினும், இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு இருநாட்டு உறவு எப்படி இருந்ததோ அதே நேர்மறையான பாதையில் உறவை மீட்டெடுப்பதற்கு இன்னும் சில காலமாகும் என்கிறார் அவர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து மற்ற நாடுகள் என்ன சொல்லியது?

வெளியுறவு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் சலாம் ஜாவெத்தும் பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பாராட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தான் இந்த விவகாரத்தை புத்திசாலித்தனமாகக் கையாண்டுள்ளதாக அவர் நம்புகிறார்.

“பாகிஸ்தான் இந்த விஷயத்தில் எதையும் யோசிக்காமல் அதிரடியாகச் செயலாற்றவில்லை. திட்டமிட்டு எதிர்வினையாற்றியுள்ளது. பதிலடி தாக்குதல் கொடுப்பதற்கான முடிவு எடுப்பதற்கு பாகிஸ்தானுக்கு 32 மணிநேரம் இருந்திருக்கிறது. நட்பு நாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் தனது வான்வெளியில் தூண்டப்படாத அத்துமீறலுக்கு பதிலளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று தெஹ்ரானுக்கு தெரிவித்துள்ளது,” என்கிறார் அவர்.

பாகிஸ்தான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, சர்வதேச நடைமுறையின்படி மற்றொரு நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடத்தின் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தியது என்கிறார் சலாம். ஆனால் இப்போது மற்ற உலக வல்லரசுகளும் இதில் இணைந்துள்ளன. சீனா, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளும் நெருக்கடியை மட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. எனவே, நிலைமை மேம்படும் என நம்பப்படுகிறது.

இரானும் பாகிஸ்தானும் “பதற்றத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்குமாறு” சீனா இருநாடுகளையும் அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இரானிய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இருநாடுகளிலும் துருக்கி அமைதியை வலியுறுத்தியுள்ளது. துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹகான் ஃபிடான் இதுகுறித்து இருநாடுகளிடையேயும் பேசியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »