Press "Enter" to skip to content

அயோத்தி இந்துக்களின் வாடிகனாக மாறுகிறதா? வளர்ச்சிக்கு நடுவே இழையோடும் அதிருப்தி

பட மூலாதாரம், Getty Images

மோசமான குளிர் வீசும் ஒரு காலைப்பொழுதில், பலத்த பாதுகாப்பில் இருக்கும், கடவுள் ராமர் பிறந்ததாக நம்பப்படக்கூடிய தற்காலிக கோவிலுக்கு சென்று வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார் யோகேந்திர குரு.

வட இந்திய நகரமான அயோத்தியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாத்ரீகர்களை வரவேற்பதற்கான பெரிய முனையம், மணற்கல் வளைவு நுழைவுவாயில், 217 மில்லியன் அமெரிக்க டாலரில் கட்டப்பட்ட இந்து தெய்வத்தின் கோவிலுக்கு செல்வதற்கான பரந்ழ விரிந்த மற்றும் நீண்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டு புல்டோசர்களை கொண்டு அந்நகரமே சில இந்து தேசியவாத தலைவர்கள் அழைப்பது போல் “இந்துக்களின் வாடிகன்” போல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள தங்களது கிராமத்திலிருந்து அயோத்திக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இரண்டு டஜன் குடும்ப உறுப்பினர்களுடன் கடுமையான 14 மணி நேர பேருந்து பயணத்தை மேற்கொண்டார் குரு.

“இறுதியில் எங்களுக்கு ஒரு புதிய கோயில் கிடைக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதை பார்த்தால் இந்துக்கள் விழித்துக் கொண்டதைப் போல் தெரிகிறது, நாங்கள் சுதந்திர உணர்வை அனுபவிக்கிறோம். இதற்கு முன்பு ஒடுக்கப்பட்டிருந்தோம் என நான் நம்புகிறேன்,” என்று அவர் என்னிடம் கூறினார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரிய மத தளத்தில் ஒரு காலத்தில் நின்று கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மசூதியை அகற்றிவிட்டு உருவாகியுள்ள கோவிலை திறந்து வைப்பதன் மூலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்து தேசியவாதிகளுக்கு அளித்து வந்த உறுதிமொழியை நிறைவேற்றவுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் இந்த பகுதியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மேல் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி 1992ஆம் ஆண்டு இந்துக் கலவர கும்பல் மசூதியை இடித்தது. இதனால் நாடு முழுவதும் வெடித்த கலவரத்தில் 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

ராமர் கோவிலுக்கு நாளை குடமுழுக்கு

இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையிலான இந்த இடத்தின் மீதான உரிமை போராட்டம் 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. மசூதியை இடித்தது “ மோசமான சட்ட விதிமீறல்” என்று தெரிவித்த போதும், அந்த இடத்தை இந்துக்களுக்கே வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். (மசூதி கட்டிக் கொள்வதற்காக இஸ்லாமியர்களுக்கு அயோத்தியில் வேறு ஒரு இடத்தை ஒதுக்கியது நீதிமன்றம்)

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அயோத்தியில் இந்த கோவிலை திறந்து வைக்கிறார் மோதி. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோவில் “தேசத்தை ஒருங்கிணைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கோவில் “ தேசத்தின் கலாசார மறுமலர்ச்சியை குறிக்கும் என்றும், தேசிய பெருமையை மீட்டெடுக்கும்” என்று நம்புகிறார் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மதம் சார்ந்த முக்கியத்துவத்தை விட அரசியல் மூலோபாயத்தை நோக்கியே, தேர்தலுக்கு முன்பாக ஒரு இந்து தேசியவாத இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நேரமாக இந்த திறப்புவிழா இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அனைத்திற்கும் மேலாக, பாஜகவை இந்திய அரசியலில் ஒரு முக்கிய நிலைக்கு கொண்டு செல்ல இந்த கோவில் கட்டும் இயக்கமே முக்கிய காரணியாக இருந்ததாக அவர்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

“நீண்ட நாட்களாக கூடாரத்தில் வாழ்ந்த பிறகு, ராமர் தற்போது சரியான இருப்பிடத்தைக் கண்டடைந்துள்ளார். இது நம் அனைவருக்கும் பொறுமையை சோதிக்கும் காலமாக இருந்தது,” என்று கூறுகிறார் 86 வயதான சத்யேந்திர தாஸ், இவர்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக ராமரின் சிறிய சிலை அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கோவிலின் தலைமை பூசாரி.

புதிய கோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 70 ஏக்கர் வளாகத்தில் 7.2 ஏக்கர் பரப்பளவில், இளஞ்சிவப்பு மணற்கற்களால் மூடப்பட்ட மற்றும் கருப்பு கிரானைட்களால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மூன்று மாடி அமைப்பு உயர்ந்த தூண்களுடன் அமைந்துள்ளது. மற்றவை 70,000 சதுர அடி (6,503 சதுர மீ) அழகிய வெள்ளை பளிங்கு கற்களில் அமைக்கப்பட்டுள்ளது. 51 அங்குல (4.25 அடி) ராமர் சிலை பளிங்கு பீடத்தில் வைக்கப்பட உள்ளது.

முழுமையாக முடிந்த பிறகு ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோதி இதை திறந்து வைக்கிறார். இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த கோவிலுக்கு நாளொன்றில் 1,50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம்.

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

அயோத்தி ‘இந்துக்களின் வாடிகன்’ ஆகிறதா?

இவை அனைத்தையும் சாத்தியப்படுத்துவதற்காக, கங்கை நதியின் கிளை நதிக்கரையான சரயு நதியை ஒட்டி அமைந்துள்ள அமைதியான யாத்ரீக நகரான அயோத்தியை “ உலகத்தரம் வாய்ந்த யாத்ரீக மற்றும் சுற்றுலா தளமாக” மாற்றியமைக்க மோதி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

3.85 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், பளபளக்கும் புதிய விமான நிலையம், பெரிய தொடர் வண்டிநிலையம் மற்றும் பல அடுக்கு தேர் நிறுத்துமிடம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு செல்லும் புதிதாக பெயரிடப்பட்ட 13 கிமீ (8-மைல்) ராமர் பாதை உட்பட நான்கு முக்கிய சாலைகளை விரிவுபடுத்துவதற்கு வசதியாக 3,000 த்திற்க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் “மத கட்டமைப்புகள்” முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடிக்கப்பட்டுள்ளன. இலகுவான மஞ்சள் வண்ணங்கள் தற்போது கட்டிடங்களுக்கு சீரான மற்றும் சாதுவான தோற்றத்தை அளிக்கின்றன.

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

ஹோட்டல் துறையை சேர்ந்த ரேடிசன் மற்றும் தாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கட்டுமானங்களை கட்டி வருகின்றன. இங்கு 50 புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதே சமயம் பழைய மற்றும் மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஆச்சரியத்திற்கு இடமின்றி , ஏற்கனவே இங்கு நிலத்தின் மதிப்பு மும்மடங்கு உயர்ந்து விட்டது.

“உங்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு, இந்த இடம் தற்போது மிகவும் மாறி விட்டது. இவை அனைத்தும் நடந்து விட்டது என்பதை நினைக்கும் போது உண்மையில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது” என்று கூறுகிறார் இந்த நகரத்திற்கு 2016 முதல் சென்று வரும் அயோத்தி: சிட்டி ஆஃப் ஃபெயித், சிட்டி ஆஃப் டிஸ்கார்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் வாலே சிங்.

வருபவர்களை ஈர்ப்பதற்காக புதிய கோவிலை சுற்றி கூடுதல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் 162 சுவரோவியங்களை பார்வையிடும் வகையில் பாரம்பரிய நடை, “வேத நாகரிகத்தைப் பற்றிய பார்வையை” வழங்கும் சரயு நதி தீவு வசதி, திருமண நகரம் உருவாக்குதல் மற்றும் அந்த இடத்தை இயற்கை மருத்துவ மையமாக மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

“நாங்கள் உலகின் மிக அழகான நகரத்தை உருவாக்க விரும்புவதாக” கூறுகிறார் அயோத்தியின் மூத்த அதிகாரி கௌரவ் தயாள்.

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், BIMAL THANKACHAN

ஒழுங்கற்ற முறையில் வானளவு உயர்ந்துள்ள கோவில்கள் கொண்ட மற்றும் சாலைதோறும் துறவிகள் நடந்து கொண்டிருக்கும் அயோத்தியில் வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் நம்பிக்கை இழையோடுகிறது. பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது இந்த நகரைச் சுற்றி வருகின்றனர். நகரம் முழுவதும் குரங்குகள் சுதந்திரமாக ஓடித்திரிகின்றன. பூக்கள், சந்தனம், ஆன்மீக புத்தகங்கள், தெய்வங்களின் பிரதிகள் என மதம் சார்ந்த சிறு பொருட்களை விற்கும் வியாபாரிகளால் பஜார் நிரம்பி வழிகிறது.

இதை “வலுவில்லாத, யாத்ரிகம் சார்ந்த பொருளாதாரம்” என்று விவரிக்கிறார் சிங். வடகிழக்கு இந்தியாவின் ஷில்லாங்கைச் சேர்ந்த லைஃப் சயின்ஸ் மாணவியான திஷா சக்ரவர்த்தி இந்த நகரத்திற்கு முதல்முறை வந்த போது என்னிடம் இப்படி கூறினார்: “நேர்மையாக சொன்னால், இந்த இடம் பாழடைந்துள்ளது . ஆனால் மக்கள் மிகவும் பக்தியுடன் இருப்பதால் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. பலர் தங்கள் கூட்டு நம்பிக்கையை ஒரு சிலை மீது வைத்துள்ளனர்.”

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், BIMAL THANKACHAN

ஆனாலும், பெரியதும் சிறியதுமான சில ஆயிரம் கோயில்கள் மற்றும் தோராயமாக 45 மசூதிகள், திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் இரண்டையும் கொண்ட இந்த நகரத்தில், பழையவற்றை புதியவற்றுடன் கலக்கும் ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு டாட்டூ பார்லர்கள் மற்றும் உணவுகள் வாங்கி செல்லும் டார்க் கிளவுட் என்ற உணவகமும், ஸ்டைலிஷ் சந்த் மென்ஸ் பார்லர் என்ற சலூனும் அயோத்தியில் இருக்கிறது. வானம் இருண்ட பிறகு லேசர் காட்சிகள் அதை ஒளிரச் செய்கின்றன. போட்டிபோடும் யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பாளர்களால் இந்த இடம் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் இந்த இடத்தை “போக்காக்க” முயன்று வருகின்றனர்.

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், REUTERS

வளர்ச்சிக்கு நடுவே இழையோடும் அதிருப்தி

புதிய கோவில் திறப்பிற்கு பிறகு நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அயோத்தி நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதன் அமைதியிலும் அதிருப்தியின் சத்தம் தென்படுகிறது. யாத்ரீகர்களுக்கான சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர் மூலம் உடைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உள்ளூர் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவரான ஆனந்த் குமார் குப்தா, அவர்களில் சுமார் 1,600 பேர் “இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், செல்வதற்கு வேறு இடமில்லை என்றும்” கூறியுள்ளார். மேலும் அதற்கு இழப்பீடாக அவர்களுக்கு சராசரியாக 1,00,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இந்த மறுகட்டமைப்பு எங்களை தொந்தரவு செய்துள்ளது,” என அவர் கூறுகிறார்.

யாத்திரை செல்லும் பாதை விரிவுபடுத்தப்படும் அதே வேளையில், இந்நகரின் கோவில்களில் பணிபுரியும் மக்களின் சுமார் மூன்று டஜன் வீடுகள் பாதியளவு இடிக்கப்பட்டுள்ளன. தெருக்களில் குழாய்கள் கசிவினால் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. மணல் நிறைந்த குழிகளில் ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டிருக்கும் தள்ளாடும் மூங்கில் பாலங்கள் நிலத்திற்கு வெளியில் அடையாளங்களை கொண்டுள்ளன. முழுமையாக தகர்க்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு வெகுதொலைவில் மனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சாலை விரிவாக்கத்திற்காக தனது ஆறு அறைகள் கொண்ட பூர்வீக வீடு பாதியளவு இடிக்கப்பட்டதாக விஷால் பாண்டே தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுமார் 7,00,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ள போதிலும், எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அவரது குடும்பத்தின் தலைமுறை வீடு திரும்பி வராது என்று அவர் கூறுகிறார். மேலும் “உள்ளூர் மக்களிடையே கோபம் உள்ளது, ஆனால் இறுதியாக ராமருக்கு ஒரு நிரந்தர வீடு கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் நீண்ட காலத்திற்கு ஒரு கூடாரத்தில் இருந்தார். தற்போது அந்த துன்பத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம்” என்று பாண்டே என்னிடம் கூறினார்.

“எங்கே அழிவு இருக்கிறதோ, அங்கே வளர்ச்சி இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.”

புனித நகரத்திலிருந்து இந்துக்களுக்கான வாடிகனாக மாறும் அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

தனது பாதி வீட்டை இழந்த காந்தி தேவி, மேலும் பதற்றமாக காணப்பட்டார். “நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. அதிகாரிகள் கூட, எங்களிடம் வந்து உங்களுக்கு அதிக வலிகளை கொடுத்துள்ளோம் என்று கூறுகிறார்கள். கோவில் கட்டியது நல்லது தான், ஆனால் அது எப்படி எங்களுக்கு உதவும்? நாங்கள் எதையெல்லாம் உருவாக்கி வைத்திருந்தோமோ, அதையெல்லாம் கூடுதல் யாத்ரிகர்கள் நகரத்திற்கு வருவதற்காக இடித்து விட்டார்கள்“ என்று அவர் கூறினார்.

அரசு திட்டங்களின் கீழ், இடிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகளில் வசிப்பவர்களுக்கு பணம் மற்றும் புதிய வீடுகள் வழியாக இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். “அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விட்டன. குடும்ப தகராறு தொடர்பான பிரச்னைகள் காரணமாக சில வழக்குகளில் தாமதமாகிறது. இப்போது செய்ய எதுவுமில்லை,” என்கிறார் தயாள்.

இந்துக்களும் முஸ்லீம்களும் நீண்ட காலமாக ஒன்றோடு ஒன்று கலந்து வசித்து வரும் அயோத்தியின் தலைவிதியை பல வழிகளில், வெளியில் இருந்து வரும் மக்கள் வடிவமைத்துள்ளனர். இது 1992 டிசம்பரில் 18 முஸ்லிம்களின் மரணத்திற்கு மற்றும் அவர்களின் வீடுகள் தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு வழிவகுத்த மசூதி இடிப்பு மற்றும் உள்ளூர் இஸ்லாமியர்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதலுக்குப் பிறகும் நீடித்தது. அப்போது இந்நகரமே மத வன்முறையின் தொடக்க புள்ளியாக மாறியது.

“நாங்கள் அதை கடந்து வந்துவிட்டோம். இருப்பினும், அந்த நிகழ்வு இன்னமும் எங்களுக்கு வலி தருவதாக உள்ளது” என்கிறார் சமூக சேவகரான காலிக் அகமது கான்.

அயோத்தியில் இந்துக்களும் முஸ்லீம்களும் நூற்றாண்டு பழைய மற்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்த அன்பான உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர், என்று கான் நம்புகிறார். “ராமர் மீதான இந்து பக்தி, இஸ்லாமியர்களின் ஆதரவுடன் பின்னிப் பிணைந்துள்ளது, குறிப்பாக கோவில் சார்ந்த பொருளாதாரத்தில் அவர்களின் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு சமூகங்களும் பிரிக்க முடியாதவை.”

இந்த உணர்வை உள்ளூர் கல்லூரி பேராசிரியர் ரகுவன்ஷ் மணி எதிரொலிக்கிறார் : “இந்த மத கலவரம் வெளியில் இருந்து உருவானது; அதில் உள்ளூர் மக்களுக்கு குறைந்த பங்கே உண்டு.” என்கிறார் அவர்.

புதிய கோவில் அயோத்தியை உலகிற்கு திறந்து விடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வெளியாட்கள் தான் தங்கள் தலைவிதியை நிர்ணயம் செய்கிறார்கள் என்று சில உள்ளூர்வாசிகள் ஒரே மாதிரியான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

“காலம்தான் பதில் சொல்லும்” என்கிறார் திரு பாண்டே.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »