Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில் திறப்பு: என்ன நடக்கிறது? நேரலை

அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோதி முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

இன்று ராமர் அவதரித்த அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடத்தப்பட உள்ளது.

கோவிலில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் குடமுழுக்கு நடைபெறும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், ANI

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக கோவிலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தின்போதும், அதற்குப் பிறகும் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டள்ளனர்.

10,000 கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் ஆகியவை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவிலை சுற்றி முக்கியமான இடங்களில் முள்கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது அச்சிலையில் 114 குடங்களில் மூலிகை நீர் மற்றும் பல்வேறு புனித தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரும் கொண்டு அபிஷேகம் செய்யப்படும் என, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் பிரதமர் மோதியுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேர் மட்டும் கலந்துகொள்வார்கள் என, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காசி தோம் ராஜா என அழைக்கப்படும் சௌத்ரியும் இந்த 15 பேரில் ஒருவராவார்.

ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

யாரெல்லாம் கலந்துகொள்வார்கள்?

துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை.

இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.

அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், ANI

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், நிதின் கட்காரி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்களைத் தவிர, இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை சென்னையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா மற்றும் திரைக்கலைஞர்கள் ஆலியா பட், ரன்வீர் கபூர், ராம் சரண், கங்கனா ரணாவத், ரன்தீப் ஹூடா, ஆயுஷ்மான் குரானா, மாதுரி தீட்சித், மதுர் பண்டார்கர், மோகன்லால், சிரஞ்சீவி, யாஷ், பிரபாஷ், தனுஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

இதைத் தவிர, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் தற்காலிகமாக திரை அமைத்து, கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்தி வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வு முடிந்தபின் அவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பார்கள்.

ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் பார்க அனுமதிக்கப்படுவார்கள்.

அயோத்தி பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதார கட்டமைப்பையும் வலுப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் மக்கள் வரத்தொடங்குவார்கள் என்பதால், அயோத்தியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை 120 படுகைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல, அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு உலங்கூர்தி சேவை தொடங்க உள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் முகேஷ் மெஷ்ராம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »