Press "Enter" to skip to content

ராமர்தான் இந்தியாவின் சட்டம் என்று மோதி குறிப்பிட்டது எதை உணர்த்துகிறது?

பட மூலாதாரம், ANI

திங்கட்கிழமையன்று (ஜன. 22) அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் விரிவான உரை சுட்டிக்காட்டுவது என்ன?

திங்கட்கிழமையன்று அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழாவில் ஒரு விரிவான உரையை நிகழ்த்தியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அந்த உரையில் பிரதமர் கூறியிருக்கும் சில விஷயங்கள் இந்தியாவை, பாஜக எடுத்துச் செல்லவிருக்கும் திசையைக் காட்டுகிறதா என கவனிக்க வைத்திருக்கிறது.

“ராமர் தான் இந்தியா”

பிரதமர் நரேந்திர மோதியின் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ராமர் கோவில் திறப்பு விழாவில் உணர்ச்சிப் பெருக்கோடு ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார் நரேந்திர மோதி.

“பல நூற்றாண்டு கால பொறுமை, எண்ணற்றோரின் தியாகங்கள், தவம் ஆகியவற்றால் பிரபு ராமர் வந்திருக்கிறார். இந்தப் பணியை முடிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டுவிட்டதற்கு நான் ராமரிடம் மன்னிப்பைக் கோருகிறேன். எங்கள் விரதத்தில் சில குறைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் கடந்துவந்திருக்கிறோம். ராமர் எங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“ராமர் இருக்கிறாரா என்பதற்கான சட்டப் போராட்டம் பல தசாப்தங்களாக நடந்துவந்தது. ராமரின் இருப்பே கேள்விக்குட்படுத்தப்பட்டது. நீதியை வழங்கிய நீதித் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோவில், சட்டப்படி கட்டப்பட்டிருக்கிறது” என்றார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @NARENDRAMODI

மேலும், “2024-ம் ஆண்டு ஜனவரி 22 என்பது வெறும் தேதியல்ல. ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று நாடு மேலே எழ வேண்டும். ராமர் ஒரு பிரச்னையல்ல. அவரே தீர்வு. அவர் எங்களுக்கு மட்டுமானவர் அல்ல. எல்லோருக்குமானவர்.

“ராமர்தான் இந்தியாவின் நம்பிக்கை. ராமர்தான் இந்தியாவின் அடித்தளம், ராமர்தான் இந்தியா என்ற சிந்தனை. ராமர்தான் இந்தியாவின் சட்டம். ராமர்தான் இந்தியாவின் கௌரவம். ராமர்தான் தலைவர், ராமர்தான் என்றைக்குமானவர்.”

“ராமர் பெருமைப் படுத்தப்படும்போது அது சில ஆண்டுகளுக்கோ, சில நூற்றாண்டுகளுக்கோ நீடிப்பதில்லை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கிறது. காலச்சக்கரம் மாறுவதை என்னால் உணர முடிகிறது. அடுத்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவிற்கான அடிக்கல்லை நாம் நட வேண்டும்” என்பதே அவரது உரையின் சாரமாக அமைந்தது.

ஏ.எஸ். பன்னீர்செல்வன்

பட மூலாதாரம், AS Panneerselvan

”நீதிமன்றம் சொன்ன மசூதி என்ன ஆனது?”

இந்த அவரது உரையில், நீதித் துறைக்கு நன்றி தெரிவித்தது, ராமர் எல்லோருக்குமானவர் எனக் குறிப்பிட்டது, ராமர்தான் இந்தியாவின் அடித்தளம், இந்தியாவின் சட்டம் என்று குறிப்பிட்டது, அடுத்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவுக்கான அடிக்கல்லை நட வேண்டுமெனக் கூறியது ஆகியவை இந்த உரையில் கவனிக்கத்தக்கதாக இருந்தன.

“இந்திய அரசியலில் ராமர் என்பது திரும்பத் திரும்ப எழுப்பக்கூடிய ஒரு பெயராக இருந்து வந்திருக்கிறது. இதற்கு முன்பாக காந்தி இதைச் செய்திருக்கிறார். அவரும் ராம ராஜ்ஜியம் குறித்துப் பேசினார். ஆனால், காந்தி செய்ததற்கும் தற்போது நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காந்தி பேசியது எல்லோரையும் இணைக்கும் விஷயமாக வழிபாடு இருந்தது. இப்போது முன்வைக்கப்படும் ராமர் மக்களைப் பிரிப்பதற்கான விஷயமாக மாறியிருக்கிறது.”

“நீதித் துறைக்கு நன்றி தெரிவிக்கிறார் பிரதமர். உச்ச நீதிமன்றத்தின் அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பில், தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயரே இருக்காது. தவிர, கோவிலும் மசூதியும் கட்டப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது நீதிமன்றம். கோவில் கட்டப்பட்டுவிட்டது, மசூதி என்ன ஆனது?”

“இவர்களால் பொருளாதார ரீதியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. அண்டை நாடுகளுடன் உறவுகள் மோசமாகியிருக்கின்றன. அந்நிய முதலீடுகள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்குத்தான் வருகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை உட்பட அவர்கள் முன்வைத்த எல்லா அதிரடி நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன. இந்த நிலையில் ராமரை உணர்வுபூர்மாக மாற்ற முயல்கிறார் பிரதமர்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பத்திரிகையாளர் ப்ரியன்

“ராமர் பொதுவானவர் அல்லர்”

ராமர் எல்லோருக்குமானவர் என முன்வைக்கப்படுவதை ஏற்க முடியாத ஒன்று என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன். “பிரதமர் ராமரை ஒரு பொதுவான கடவுளாக முன்வைக்கிறார். ஆனால், ராமர் பொதுவானவர் அல்ல. அவர் வைணவர்களின் கடவுள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெரிதாக வணங்கப்படுபவரும் அல்ல.

ராமர் பொதுவானவரா, இல்லையா என்பது பிரச்னையே இல்லை. ஆட்சியாளர்கள்தான் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். மோதிதான் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். பொதுவானவராக இருக்க வேண்டிய அவர்கள் அப்படியில்லாமல், ராமரைப் பொதுவானவராக முன்னிறுத்துகிறார்கள்” என்கிறார் அவர்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @BJP4INDIA

மோதி குறிப்பிடும் புதிய தொடக்கம் இதுதானா?

ஆனால், இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் என்பதை காசி, மதுரா ஆகியவற்றோடு இணைத்து அஞ்சத் தேவையில்லை என்கிறார் பன்னீர்செல்வன்.

“இந்த ராமர் கோவில் இயக்கத்தை யார் கட்டி எழுப்பினார்களோ, அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். பஜ்ரங் தள் தலைவர் வினய் கட்டியார், இந்த இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அங்கே இல்லை. இவர்களை ஒதுக்கிவிட்டதைத்தான் மோதி புதிய தொடக்கம் என்கிறார் போலிருக்கிறது.

வெறுப்பரசியலை ஆரம்பித்துவைத்தவர்களை ஒதுக்கிவிட்டு, இனிமேல் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம் என்று காட்டுவதாக வேண்டுமானால் புரிந்துகொள்ளலாம்” என்கிறார் அவர்.

இந்தியாவின் கடன் பல மடங்கு உயர்ந்து, ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்து, வேலையிழப்பு அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமாக காலச்சக்கரம் சுழலத் தொடங்கிவிட்டதாகச் சொல்வதெல்லாம் வேடிக்கையானது” என்கிறார் ப்ரியன்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @NARENDRAMODI

“உணர்வு ரீதியாக அணுக வேண்டும்”

ஆனால், பிரதமரின் பேச்சை அப்படிப் புரிந்துகொள்ளத் தேவையில்லை என்கிறார், மூத்த பத்திரிகையாளரான மாலன்.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்தவரை, ஒருவர்தான் ஜெயிக்க முடியும். ஆகவே வெற்றிபெற்ற தரப்பு, நன்றி சொல்வது இயல்பானதுதான். அதனை வேறு மாதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. ராமர்தான் சட்டம் என்று சொல்வதையும் வேறு மாதிரித்தான் பார்க்க வேண்டும். எழுதப்பட்ட சட்டம் எழுத்தில் இருக்கிறது. ஆனால், மக்களிடம் ஒரு சட்டம் இருக்கிறது. அது மக்களின் நம்பிக்கை சாார்ந்தது. அதைத்தான் மோதி குறிப்பிடுகிறார் எனக் கருதுகிறேன்.”

“ராஜீவ் காந்தியே ராம ராஜ்ஜியம் கொண்டுவருவேன் என்றுதான் பேசினார். ராம ராஜ்ஜியம் என்பது நியாயத்தின் ஆட்சி என்ற ஒரு கருத்து இருக்கிறது. மோதி அதைத்தான் சொல்வதாக கருதுகிறேன். யாரும் அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது.”

“இது ஒரு அரசு விழா அல்ல. ஆகவே, இந்த விஷயங்களையெல்லாம் பிரதமர் சொல்வதாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு கட்சித் தலைவர் சொல்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனையெல்லாம் அறிவுசார்ந்த விஷயங்களாகப் பார்ப்பதைவிட, உணர்வுசார்ந்த விஷயங்களாகப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்” என்கிறார் மாலன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »