Press "Enter" to skip to content

கைதி பற்களை உடைத்ததாக புகார் – அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்?

கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம் ரத்துசெய்யப்பட்டது ஏன்?

நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் அங்கே ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் 2023 மார்ச் மாதம் மிகப் பெரிதாக வெடித்தது.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

பணியாளர் தேர்வாணய விதிகள் என்ன சொல்கின்றன?

யுபிஎஸ்சி மூலம் அகில இந்தியப் பணிகளில் சேர்பவர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள், குற்றம் சாட்டப்படும் ஒரு அதிகாரி எவ்வளவு காலகட்டத்திற்கு இடைநீக்கத்தில் இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அதன்படி, “ஊழல் தவிர்த்த பிற குற்றங்களை எதிர்கொள்ளும் அதிகாரி, ஓராண்டிற்கு மேல் இடைநீக்கத்தில் வைக்கப்பட முடியாது. அந்த கால கட்டத்திற்குள் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கைகளுக்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கைகள் நிறைவடையவில்லையெனில், அந்த அதிகாரியின் இடைநீக்கம் தானாகவே ரத்தாகிவிடும்”.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளை மட்டும் இரண்டாண்டுகளுக்கு இடைநீக்கத்தில் வைத்திருக்கலாம்.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்? என கேள்வி

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கையை எடுத்து, உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது யார் தவறு எனக் கேள்வியெழுப்புகிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன்.

“இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை?

இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. இதுபோல 1990களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் ஏடிஎஸ்பியாக இருந்த ஒரு அதிகாரி மீது சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், அவர் தொடர் தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றார். இந்த அதிகாரியும் அப்படி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது.

அமுதா அளித்த அறிக்கை வெளியில் வரவில்லை, காவல் நிலையங்களின் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் வெளியில் வரவில்லை, ஆனால் இடைநீக்கம் குறித்த செய்திகள் மட்டும் கசிய விடப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த அரசு யார் பக்கம் இருக்கிறது?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி திஃபேன்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு பிரிவில் இடம்பெற்ற அவர், அம்பாசமுத்திரத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »