Press "Enter" to skip to content

திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண் பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள்

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கை: இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

“ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்”

இப்படித்தான் தான் அனுபவித்த சித்திரவதையை விவரிக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண்.

இந்தப் பெண், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த போது, ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் தன் உடலில் சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஜனவரி 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்க மதிவாணன் மற்றும் மெர்லினை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, தனது மகன் வீட்டில் என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது எனக் கூறினார்.

துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம், Getty Images

என்ன நடந்தது?

இச்சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசினோம். அப்போது அவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காக வேலையில் சேர்ந்ததாகக் கூறினார்.

“நான் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, எங்காவது வேலைக்கு சேரலாம் என இருந்தேன். என் அம்மா அப்போது கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு ஏஜென்சி மூலமாக திருவான்மியூரில் உள்ள எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் துடைப்பதற்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கும் வேலைக்கு சேர்ந்தேன்,” என தான் எப்படி வேலைக்குச் சேர்ந்தார் என பிபிசியிடம் பகிர்ந்தார்.

ஆனால், வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில், வேலை பிடிக்காததால், வேலையை விட்டு செல்ல முயன்றதாகவும், அப்போது கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ தன் அம்மாவை போலீசில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த வேலையைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

“இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். என்னால் செய்ய முடியாது என என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன். ஆனால், அப்போதே என் அம்மாவை எதாவது செய்துவிடுவோம் என மிரட்டியதால், நான் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. வேலைக்கு சேர்ந்து எட்டு நாட்களுக்கு பின் என் அம்மா வந்தார்.”

“அப்போதுதான் ஒப்பந்தம் போட்டனர். அதில், மாதம் ரூ 16,000 சம்பளம் என்று கூறியிருந்தனர். அப்போதே நான் என் அம்மாவிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால், பயத்தால் என்னால் சொல்ல முடியவில்லை. அன்றே எனது தொலைபேசியை என் அம்மாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்,” என்றார் அந்த 18 வயது பெண்.

துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம், Getty Images

‘காலால் முகத்தில் உதைத்தனர்’

கடந்த எட்டு மாதங்களாக திருவான்மியூரில் உள்ள ஆண்ட்ரோவின் வீட்டில் பணியாற்றி வந்த இவர், தினமும் தான் எதாவது ஒரு காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.

“ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத் தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு மெர்லின் என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்” என்றார்.

இதேபோல, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறினார்.

“எதாவது வேலை எனக்குத் தெரியாது எனச் சொன்னால், மெர்லின் மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, அப்படி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்கு 10 மிளகாயை சாப்பிட வைத்தனர். குடிக்கத் தண்ணீரும் கொடுக்கவில்லை,” என்றார்.

மேலும், தன்னுடைய முகமே மாறிவிட்டதாக அந்தப் பெண் மிகவும் வேதனை தெரிவித்தார். “அவர்கள் என்னை கீழே தள்ளி முகத்தின் மீது மிதிப்பார்கள், காலால் உதைப்பார்கள். அவர்கள் துன்புறுத்தியதில், என் முகமே மாறிவிட்டது. எவ்வளவு காயமானாலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல மாட்டார்கள்,” என்றார் அவர்.

இதுகுறித்து கருத்துகேட்க ஆண்ட்ரோவையும், அவரது மனைவி மெர்லினையும் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம், Getty Images

காவல்துறைக்கு எப்படித் தெரிந்தது?

பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போதுதான் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தாக அவர் கூறினார்.

“என் அம்மா என்னிடம் எப்போதாவது தான் பேசுவார். அவர் எப்போது பேசினாலும், அவர்கள் சொல்வதைத் தாண்டி நான் எதுவும் பேசக்கூடாது. மீறி பேச முயன்றால், என்னை அடிப்பார்கள். பொங்கலுக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியபோதும், அவர்கள் வீட்டில் நடந்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டித்தான் என்னை அனுப்பினர். நானும் அவர்களுக்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால்தான் இது வெளியே வந்தது,” என்றார் அந்தப் பெண்.

ஜனவரி 16 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது, அவரது முகம், கை, கால், தலை மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்த மருத்துவர்கள், அது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை கேட்டுவிட்டு, சென்னை அடையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையார் போலீஸ் மாவட்ட சரகத்திற்கு உட்பட நீலாங்கரை மகளிர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, “என் மகன் வீட்டில் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் வீட்டில் பணியாற்றும் நபர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறோம்,”என்றார் அவர்.

காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்?

இந்த வழக்கு குறித்து அடையார் சரகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில், எந்த தாமதமும் இல்லை. புகார் பெற்ற உடனேயே வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட ஆண்ட்ரோ மற்றும் மெர்லினை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்ற பிறகு அவரிடம் தொடர் விசாரணை செய்யவில்லை என்றும் கூறினார். “பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் நாங்கள் மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் செய்யப்படும்,” என்றார்.

இதற்கிடையில், இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையம், ஜனவரி 29 தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க உள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »