Press "Enter" to skip to content

சுதந்திரப் போராட்டம்: சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து ஆளுநர் ரவி கூறியதன் பின்னணி

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலை ஆகியவை குறித்து முன்வைத்த கருத்துகள் வழக்கம் போலவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள், அவர்களது குடும்பத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய பேச்சுதான் தற்போது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருக்காது. ஆனால் நாம் நன்றி உடையவர்களாக இல்லை. இந்திய நாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர பாவனை அளித்த பங்களிப்பு குறித்த வரலாற்றைப் பெருமையுடன் நாம் மீட்டெடுக்க வேண்டும்,” என்றார்.

மேலும் அவர், “1942க்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை. மகாத்மா காந்தி தலைமையிலான சுந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், 1942க்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லை. நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். முகமது அலி ஜின்னா தனி நாடு கேட்டுக்கொண்டிருந்தார். சுதந்திரம் வேண்டும், இல்லையென்றால் எதற்குமே ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் அதை பிரிட்டிஷ் அரசு கண்டுகொள்ளவில்லை.

அதே நேரத்தில், இந்திய தேசிய ராணுவம் களத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு கடற்படையில் இருந்த இந்திய வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள். 1946 பிப்ரவரி மாதம் இந்தக் கலகம் ஏற்பட்டது.

இந்திய விமானப் படையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. பிரிட்டிஷார், இனி இந்திய வீரர்களுக்குத் தங்களுக்காக வேலை செய்ய வைக்க முடியாது என்பதை உணர்ந்தார்கள். இந்தியாவில் இருப்பது பாதுகாப்பில்லை என உணர்ந்தார்கள். மார்ச் 1946ஆம் ஆண்டில் முதன்முதலாக, இந்தியாவை விட்டு 15 மாதங்களில் வெளியேறப் போவதாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள்.

அவர்கள் மிகவும் பயந்து போயிருந்தார்கள். அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக கேபினட் மிஷனையும் அமைப்பதாக அறிவித்தார்கள். இதற்கு இந்திய வீரர்களும் சுபாஷ் சந்திர போஸுமே முக்கியக் காரணம்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மிகக் குறைவானது, சுபாஷ் சந்திர போஸின் பங்கு முக்கியமானது என்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிட்டனின் பிரதமராக இருந்த கிளமண்ட் அட்லி ஓர் உரையாடலில் கூறியிருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது என்ன?

சுபாஷ் சந்திரபோஸ்

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU

ஆனால், வரலாற்றாசிரியர்கள் ஆளுநரின் கருத்துகளில் இருந்து மாறுபடுகிறார்கள்.

“காந்தி பங்கேற்ற பிறகுதான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுமக்கள் போராட்டமாக மாறியது. ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்துதான் எல்லாத் தரப்பு மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தார்கள். தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் என எல்லாத் தரப்பினரும் தேசிய இயக்கத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த இயக்கத்தின் பங்கு மிக மிக முக்கியமானது,” என்கிறார் வரலாற்று ஆசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி.

ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மிக மோசமான நகைச்சுவை என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் The Last Heroes: Foot Soldiers of Indian Freedom நூலின் ஆசிரியருமான பி. சாய்நாத்.

“ஆளுநரின் பேச்சு அவரது அறியாமையை மட்டுமல்ல, ஆணவத்தையும் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு அரசியல் சித்தாந்தத்தைப் பின்னணியாகக் கொண்டவர் இவர். அம்மாதிரி ஒரு அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறுவது, மிக மோசமான நகைச்சுவை.

அவர் சுபாஷ் சந்திர போஸை காந்திக்கு எதிராக நிறுத்த விரும்புகிறார். இந்த விஷயத்தில் ஆர்.என்.ரவி சொல்வதை ஏன் கேட்க வேண்டும்? நேதாஜி சொல்வதையே கேட்கலாமே. 1943ஆம் ஆண்டு காந்தியின் 74வது பிறந்த நாளில் பாங்காக்கில் இருந்து பேசிய நேதாஜி, சுந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு தனித்துவமானது என்றும் இணையில்லாதது என்றும் குறிப்பிட்டார்.

அதுதவிர, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட எல்லா இயக்கங்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அவை ஒவ்வொன்றையும் தனித்துப் பார்க்க முடியாது,” என்கிறார் சாய்நாத்.

சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்புக் குறித்துப் பேசும் ஆ.இரா. வேங்கடாசலபதி, அது இந்தியா முழுவதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்.

காந்தியும் சுபாஷ் சந்திர போஸும் முரண்பட்டனரா?

சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் காந்தி

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU

“இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் சுபாஷ் சந்திர பாவனை நடத்திய போராட்டம் மிகவும் வீரம் செறிந்த போராட்டம். ஆனால், அது வெகுமக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய தேசிய ராணுவம் (ஐஎன்ஏ) என ஒரு ராணுவம் இருந்ததே அந்தக் காலகட்டத்தில் யாருக்கும் தெரியாது.

அந்த ராணுவத்தின் நடவடிக்கைகள் இந்திய மக்களிடம் எந்த எழுச்சியையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாம் உலகப் போரை ஒட்டி அந்தக் காலகட்டத்தில் அமலில் இருந்த தணிக்கை இதற்கு மிக முக்கியமான காரணம்.

ஐஎன்ஏ பிரபலமானதில் காங்கிரஸ் மற்றும் நேருவின் பங்கு மிக முக்கியமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐஎன்ஏ வீரர்கள் மீது செங்கோட்டையில் நடந்த விசாரணையில், வீரர்கள் சார்பாக வாதாட காங்கிரசின் சார்பில் ஐஎன்ஏ டிஃபன்ஸ் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது.

அதில் ஜவஹர்லால் நேரு, அஸஃப் அலி, கைலாஷ் நாத் கட்ஜு உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த விசாரணையில், கர்னல் பிரேம் ஷகல், கர்னல் குருபக்ஷ் சிங் தில்லான், மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான் ஆகியோருக்காக நேருதான் வாதிட்டார்,” என்கிறார் வேங்கடாசலபதி.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸையும் காந்தியையும் ஆளுநர் எதிரெதிராக நிறுத்த விரும்பினாலும், உண்மை அப்படியானதல்ல என்கிறார் பி. சாய்நாத்.

“காந்தியுடனான சுபாஷ் சந்திர போஸின் முரண்பாடு என்பது சித்தாந்த ரீதியானது, வியூகரீதியானது, அரசியல் அடிப்படையிலானது. அவர் ஒருபோதும் காந்திக்கு எதிரானவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை.

இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த பல்வேறு ரெஜிமென்ட்களுக்கும் படைப் பிரிவுகளுக்கும் காந்தி ரெஜிமென்ட், நேரு ரெஜிமென்ட், ஆசாத் ரெஜிமென்ட் என்றுதான் அவர் பெயரிட்டார். யாரெல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமில்லை என ஆளுநர் ரவி குறிப்பிடுகிறாரோ, அவர்களது பெயரைத்தான் சுபாஷ் சந்திர பாவனை தனது படைப் பிரிவுகளுக்குச் சூட்டினார். மாறாக, நேதாஜி வகுப்புவாதத்தையும் மதவாத்தையும் கடுமையாக வெறுத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர பாவனை ஒரு மிகப் பெரிய தலைவர். ஆனால், அவரைப் பயன்படுத்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மற்ற தலைவர்களை விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல,” என்கிறார் பி. சாய்நாத்.

கடற்படை எழுச்சி எப்போது நடந்தது?

சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் காந்தி

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU

கடந்த 1946ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடற்படை எழுச்சியைப் பற்றி குறிப்பிடும் ஆளுநர், அந்த நிகழ்வுக்குப் பிறகுதான் இந்தியாவில் தொடர முடியாது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பம்பாய் கலகம் அல்லது இந்தியக் கடற்படை எழுச்சி எனக் குறிப்பிடப்படும் நிகழ்வு 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 18 முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பம்பாய் கடற்படை தளத்தில் தொடங்கிய இந்தக் கலகம், விரைவில் பிற கடற்படை தளங்களுக்கும் பரவியது. மொத்தமாக சுமார் 20,000 மாலுமிகள் இந்தக் கலகத்தில் பங்கேற்றனர்.

சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க் கைதிகள் சிலர் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய வழக்கின் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், 1946ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐஎன்எஸ் அக்பர் கடற்படை தளத்தில் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான உணவு இதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது. ஆனால், மூன்று நாட்களில் இந்த எழுச்சி அடக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த எழுச்சி பிரிட்டிஷாருக்கு உணர்த்தியது என்றாலும், எழுச்சியை ஆதரித்தது யார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் சலபதி.

“பிரிட்டிஷ் அரசுக்கு 1946ஆம் ஆண்டின் கடற்படை எழுச்சிக்குப் பிறகு, இந்தியாவை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது எனப் புரிந்தது என்பது உண்மைதான். ஆனால், இந்தப் புரட்சிக்கு ஆதரவளித்தது இடதுசாரி இயக்கங்கள்தான்,” என்கிறார் அவர்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட தருணத்தில் பிரிட்டனின் பிரதமராக இருந்த கிளமென்ட் ரிச்சர் அட்லி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியில் காந்தியின் பங்கு மிகக் குறைவானது எனக் கூறியதாக ஃபாலி எஸ் நரிமனின் The State of the Nation: In Context of India’s Constitution என்ற நூலில் கூறப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஆளுநர், “1950களில் கல்கத்தாவுக்கு வந்த அட்லி, அப்போதைய ஆளுநருடன் காலை உணவு உண்ணும்போது, இந்தக் கருத்தைச் சொன்னதாக” தெரிவிக்கிறார். ஆனால், அட்லி அப்படிச் சொன்னாரா என்பது குறித்து பலமுறை சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவிட்டன. 1956இல் அட்லி கல்கத்தாவுக்கு வந்தார் என்பது உண்மைதான். இது நடந்தது 1956ஆம் ஆண்டு அக்டோபரில். அப்போது மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தவர், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான பனி பூஷன் சக்கரவர்த்தி. பனி பூஷன் சக்ரவர்த்தியிடம்தான் அட்லி இவ்வாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவல் The Journal of Historical Review என்ற வரலாற்று ஆய்விதழில் 1982இல் “Subhash Bose, the INA and the War of Indian liberation” என்ற பெயரில் ரஞ்சன் போரா எழுதிய ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்ற இந்தத் தகவலுக்கு அடிப்படையாக, A History of Bengal நூலை எழுதிய ஆர்.சி. மஜும்தாரின் சுயசரிதையான Jibanera Smritideepe என்ற புத்தகம் சுட்டிக்காட்டப்பட்டது. மஜும்தாரின் புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பாளருக்கு பி.பி. சக்கரவர்த்தி ஒரு கடிதத்தின் மூலம் இந்தத் தகவல் மஜும்தாருக்கு சொல்லப்பட்டதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

பிபி சக்ரவர்த்தி 1976 மார்ச் 30ஆம் தேதி இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதாவது நிகழ்வு நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. வரலாற்று ஆசிரியரான ஆர்.சி. மஜும்தார், தனது சுயசரிதை தவிர வேறு எதிலும் இதைப் பதிவு செய்யவில்லை. அதேபோல, கிளமன்ட் அட்லியும் வேறு தருணங்களில் காந்தி குறித்தும் சுபாஷ் சந்திர பாவனை குறித்தும் இதுபோலக் குறிப்பிட்டதாக தகவல்கள் இல்லை.

அதோடு, கடற்படை எழுச்சியைப் பார்த்துப் பயந்து, பிரிட்டிஷ் அரசு மார்ச் மாதத்தில் முடிவு செய்ததாகவும் ஆளுநர் குறிப்பிடுகிறார். கடற்படை எழுச்சி நடந்தது 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி.

இந்திய சுதந்திரத்திற்கான பணிகளைத் துவங்குவதன் நோக்கத்தில் கேபினட் மிஷனை இந்தியாவுக்கு அனுப்பப் போவதாக அட்லி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்தது பிப்ரவரி 19ஆம் தேதி.

அதற்குக் காரணம், இந்த முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடந்த பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டத்தில் கேபினட் மிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »