Press "Enter" to skip to content

இந்தியா கூட்டணி: காங்கிரசுடன் முரண்படும் திரிணாமுல், ஆம் ஆத்மி – தமிழ்நாட்டில் திமுக என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் மோதல் அந்த கூட்டணி குறித்த ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. அது தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் தொகுதிப்பங்கீடு இல்லை என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் – திரிணாமுல் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் மம்தாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொகுதிப் பங்கீடு குறித்த திரிணாமுல் காங்கிரஸ் பரிந்துரையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சியிடமோ வேறு யாருடனோ நான் பேசவில்லை. நாங்கள் கொடுத்த பரிந்துரையை அவர்கள் நிராகரித்து விட்டனர். எனவே தேர்தலில் தனித்துப் போட்டி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ நியாய் யாத்ரா மேற்கு வங்கத்துக்குள் வருவது பற்றிய தகவலை தனக்கு தெரிவிக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறிய அவர் “நான் இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கிறேன். மரியாதை நிமித்தமாக கூட, எனது மாநிலத்துக்குள் வருவதை அவர்கள் தெரிவிக்கவில்லை” என்றார். இந்தியா கூட்டணியில் தொடர்வது பற்றி கருத்துக் கூறாத அவர், மத சார்பற்ற கட்சி என்ற முறையில், தேர்தலுக்கு பிறகு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் vs திரிணாமுல்

மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளில் நியாயமில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டும் நிலையில், தங்களது தயவு அவருக்கு தேவை என்று காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் பஹ்ராம்புர், மால்டா தக்ஷின் என இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த தேர்தலை இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மறைமுக உடன்பாட்டோடு எதிர்கொண்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வென்றது. முதல் முறையாக பாஜக 18 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றது.

இந்த தேர்தலில் இரண்டு இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருந்த நிலையில், 6 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரசுக்கு மேற்கு வங்கத்தில் சராசரியாக 10 சதவீதம் வாக்குகள் இருந்த நிலையில் கடந்த தேர்தலில் இது பாதியாக குறைந்துவிட்டது. அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டே வந்துள்ளது.

இந்தியா கூட்டணியில் முரண்பாடு

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாபிலும் இந்தியா கூட்டணியில் முரண்பாடு

மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கையும் வலிமையும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சிரமங்கள் உருவாகின்றன. பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மன், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி அந்த மாநிலத்தில் தனித்தே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கு முன் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணியாக எதிர்கொண்டிருந்தன.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையான தொகுதிகளை வென்றிருந்த நிலையில், அதற்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மாநில ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. அண்மையில் ஜலந்தர் தொகுதியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்த காரணத்தினால் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கூறுவது என்ன?

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், Facebook

“ஒருகையை மட்டும் தட்டினால் ஓசை வருமா? தங்களால் வெல்ல முடியாத 18 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளோடு பகிர்ந்துகொள்ள திரிணாமுல் முன்வர வேண்டும்“ என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடா மாணிக்கம் தாகூர் பி.பி.சி தமிழிடம் கூறினார் . மேலும் அவர் “கூட்டணி என்றால் என்ன? ஒன்றாக இருப்பது தானே. காங்கிரஸ் வெற்றி பெற்ற இரண்டு இடங்களை தவிர மற்ற 40 இடங்களையும் திரிணாமுல் ஜெயிக்கவில்லையே” என்று கேள்வி எழுப்பினார்.

நிலைமை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இல்லை என்கிறார் மாணிக்கம் தாகூர், “சில மாநிலங்களில் கண்டிப்பாக கூட்டணி கட்சிகளை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் உள்ளது. உதாரணமாக கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டிப்பாக ஒரே அணியில் நிற்க முடியாது. அதேபோன்ற மாநிலம் தான் பஞ்சாப். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சி செயல்படும் டெல்லி, குஜராத் என பிற மாநிலங்களை கணக்கில் கொண்டு, தேசிய அளவில் கூட்டணி பேசலாம் என்கிறோம்” என்றார்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி நிலை என்ன?

தமிழ்நாட்டை பொருத்தவரை, இந்தியா கூட்டணிக்குள் அதாவது, திமுக தலைமையிலான அணியில் நிலைமை சுமூகமாகவே உள்ளதாக திமுகவும், காங்கிரசும் கூறுகின்றன.

இந்தியா கூட்டணியின் மிக முக்கியமான அங்கமாக உள்ள திமுக, கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளது. பி.பி.சி தமிழிடம் பேசிய திமுக பொருளாளரும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு, “இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 36% மட்டுமே பாஜக பெற்றிருந்தது. எனவே, இந்த முறை இந்தியா கூட்டணி வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாட்களில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர் தெரிவிக்கையில், “திமுகவுடனான கூட்டணி மிக சுமூகமாக இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பிரச்னைகள் சில தசாப்தங்களுக்கு முன் இருந்தன. ஆனால், தற்போது, பல காலமாக நல்ல புரிதலுடன் இந்த கூட்டணி இருந்து வருகிறது. இந்த தேர்தல் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல், இந்தியா கூட்டணி காங்கிரஸுக்கு முக்கியமானது.” என்றார்.

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், Getty Images

“இந்தியா கூட்டணிக்கு அல்ல, காங்கிரசுக்கே சவாலானது”

“மாநில கட்சிகள் அவரவர் மாநிலங்களில் வலுவாக உள்ளன. எனவே தங்கள் இடங்களை விட்டுக் கொடுத்து காங்கிரஸ் அந்த இடத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைக்க மாட்டார்கள்” என்றார் மூத்த பத்திரிக்கையாளர் மாலன். மேலும் அவர், பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்திலேயே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சிந்தாந்த ரீதியாக ஒன்றுபட்ட கூட்டணி அல்ல. எனவே இது போன்ற மோதல்கள் எதிர்பார்க்கப்பட்டது தான். இவை இந்தியா கூட்டணிக்கான சவால் என்பதை விட காங்கிரஸ் கட்சிக்கான சவாலாகவே உள்ளது” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்தால்தான் தேர்தலுக்கு பின் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி சாத்தியமாகும். வேறு விதமான புரிதல்களும் ஏற்படலாம் என்கிறார் பத்திரிகையாளர் மாலன், “தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது அவரவர் பெறக் கூடிய இடங்களின் எண்ணிக்கையை பொருத்தது. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற சூழல் ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சாத்தியமாகும். சில நேரம் நாடாளுமன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு தருவது என்ற புரிதலும் வரலாம்” என்கிறார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »