Press "Enter" to skip to content

மகராஷ்டிரா: மராத்தா சமூகத்தின் இட ஒதுக்கீட்டுக்கான 25 ஆண்டுக்கால போராட்டம்

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மனோஜ் ஜாரங்கே என்பவர் கடந்த பல மாதங்களாகத் தொடர் போராட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவர் ஜனவரி 20ஆம் தேதி முதல் மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஜன. 26) மும்பையை அடைந்த அவர், ஆசாத் மைதானத்தில் தன் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கவுள்ளார்.

மும்பையை அடைந்த பின் அவர் அரசு பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர், ”மனோஜ் ஜாரங்கே பாட்டீலின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு, இதுவரை 37 லட்சம் பேருக்கு குன்பி சான்றிதழ் வழங்கியுள்ளோம். இப்போது ஜாரங்கே பாட்டீல் நேர்மறையாகச் சிந்திப்பார் என நம்புகிறோம்,” என்றார்.

மனோஜ் ஜாரங்கே பாட்டீலின் கோரிக்கையின்படி, மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது. முன்னதாக, ஜல்னாவில் உள்ள தனது கிராமமான அந்தர்வாலி சாரதியில் இருந்து மும்பைக்கு நடைபயணமாகச் செல்லும் திட்டத்தை அவர் அறிவித்திருந்தார்.

அரசாங்கம் ஏற்கெனவே இடஒதுக்கீடு வழங்கியிருந்தால், மராத்தா சமூக மக்கள் தெருவில் இறங்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று ஜாரங்கே கூறியிருந்தார். லட்சக்கணக்கான மராத்தா சமூகத்தினர் தனக்கு ஆதரவாக மும்பைக்கு வருவதாக ஜாரங்கே தெரிவித்தார்.

‘மாநில அரசு ஏற்கெனவே இடஒதுக்கீடு வழங்கியிருந்தால், மராத்தா மக்கள் வீதிக்கு வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது’ என்று ஜாரங்கே கூறியிருந்தார்.

மனோஜ் ஜாரங்கே-பாட்டீலின் முக்கிய கோரிக்கை, குன்பி துணை சாதி சான்றிதழ்களை வழங்கி அனைத்து மராத்தா சமூகத்தினரையுயும் ஓபிசி பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஏற்கெனவே குன்பிகளாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசின் நிலைப்பாடு. இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தர்வாலி சாரதியில் மனோஜ் ஜாரங்கேவின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டபோது, ​​குன்பி பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட மராத்தா சமூகத்தில் உள்ளவர்களுக்கு குன்பி சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநில அரசு அவருக்கு உறுதியளித்தது.

குன்பி சான்றிதழைப் பெற்ற பிறகு, ஓபிசி இட ஒதுக்கீட்டின் பலன்களை அவர்கள் பெற முடியும். குன்பி பதிவேடுகளைத் தேடும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. மனோஜ் ஜாரங்கே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மராத்தா இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு

மராத்தா இடஒதுக்கீடு

இதற்காக, மராத்தா சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையை மதிப்பிடுவதற்காக, ஜனவரி 23 முதல் 31 வரை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாக, மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவித்தது. அவர்களின் கூற்றுப்படி, இந்த 8 நாட்களுக்குள் மராத்தா சமூகத்தினர் மற்றும் பிற சமூகத்தினரின் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இதில், மாநிலத்தில் உள்ள சுமார் 2.5 கோடி குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். சுமார் 1.25 லட்சம் அரசு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இத்தகைய விரிவான கணக்கெடுப்பை முடிப்பது அரசு இயந்திரத்திற்கு சவாலாக உள்ளது.

முன்னதாக, மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது, ​​மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளில் உள்ள ஓட்டைகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அந்தத் தவறுகளைச் சரிசெய்வதற்காக, மராத்தா சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியலில் பின்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மீண்டும் ஒருமுறை இந்தக் கணக்கெடுப்பை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு மகாராஷ்டிராவில் உள்ள 36 மாவட்டங்கள், 27 மாநகராட்சிகள் மற்றும் 7 கன்டோன்மென்ட் வாரியங்களில் நடத்தப்படும்.

யார் இந்த மனோஜ் ஜாரங்கே பாட்டீல்?

மராத்தா இடஒதுக்கீடு

கடந்த ஆறு மாதங்களில் மனோஜ் ஜாரங்கே பாட்டீலின் பெயர் அடிக்கடி ஒலித்து வருகிறது. இருப்பினும் மராத்தா இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2011இல் கிராம அளவில் தொடங்கிய மனோஜ் ஜாரங்கேவின் பயணம் தற்போது பெரியளவில் – மாநிலம் தழுவிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

மனோஜ் ஜாரங்கே பாட்டீல் மராத்தா இட ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் பங்கு வகித்துள்ளார். அவற்றில் சில போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

இருப்பினும், கொரோனா பேரிடர் காலகட்டத்தில், ​​குறிப்பாக 2021இல், பத்திரிகையாளர் கிருஷ்ணா பாட்டீல் குறிப்பிட்டது போல், மராத்தா இட ஒதுக்கீட்டுக்காக சாஷ்ட-பிம்பல்கான் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் அவரது போராட்ட இயக்கம் வேகம் பெற்றது.

ஜாரங்கேவின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் மூன்று மாதங்களாக நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததைட்ப தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டார். மனோஜ் ஜாரங்கே பாட்டீல் மராத்தா இடஒதுக்கீடு பிரச்னையில் 123 கிராமங்களை ஒன்றிணைத்து அந்தர்வாலி சாரதியில் போராட்டம் நடத்தினார். இதனால் அவருக்கு ஜல்னா மாவட்டத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது.

இந்த முயற்சியால் மராத்வாடா பகுதியில் கணிசமான மக்கள் திரண்டனர். இதன் விளைவாக, மனோஜ் ஜாரங்கே பாட்டீல் ஆகஸ்ட் 29 முதல் சாரதி அந்தர்வாலி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியபோது, ​​​​அங்கு பெருமளவில் மக்கள் திரண்டனர். அப்போது, தனக்கு சுமார் 3 லட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார்.

மனோஜ் ஜாரங்கேவின் மற்ற கோரிக்கைகள் என்ன?

மராத்தா இடஒதுக்கீடு

மராத்தா இட ஒதுக்கீடு தவிர வேறு பல கோரிக்கைகளை மனோஜ் ஜாரங்கே முன்வைத்துள்ளார். கோபார்டி பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மராத்தா இட ஒதுக்கீட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த 45 குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஓபிசிக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மறுமதிப்பீடு செய்வதற்கும், முன்னேறிய சமூகங்களை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்குவது குறித்தும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அவரது மற்றொரு கோரிக்கை.

மேலும், பிஹெச்.டி படிக்கும் மாணவர்களுக்கு சார்த்தி (SARTHI) திட்டத்தின் கீழ் உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இவை தவிர, மராத்தா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?

மராத்தா இடஒதுக்கீடு

ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதிக்காமல் மராத்தா இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்று மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, பிபிசி மராத்தி பகுப்பாய்வு செய்து சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிடுகிறது. ஓபிசி ஒதுக்கீட்டுக்கு வெளியே இடஒதுக்கீடு வழங்குவது எளிதல்ல என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மராத்தா இடஒதுக்கீடு சட்டம் 2018இல் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலைகளில் 12% – 13% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இருப்பினும், அடுத்தடுத்த திருத்தங்களில் இட ஒதுக்கீடு சதவீதம் 63%-64% ஆக உயர்ந்தது. இடஒதுக்கீடுகளில் 50% வரம்பை அமைப்பது என்பது அரசமைப்புத் தேவை மற்றும் இந்த வரம்பை மீறுவதற்குச் சரியான மற்றும் தர்க்கரீதியான காரணத்தை முன்வைக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு விஷயத்தில் இவை சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் நிலைக்காது. எனவே, மராத்தா இடஒதுக்கீட்டின் அரசமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை மதிப்பிடுவதற்கு அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் இடஒதுக்கீடு சட்டங்களில் நிபுணருமான சித்தார்த் ஷிண்டே கூறுகையில், “50% இடஒதுக்கீடு வரம்பை மீறக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், அந்த வரம்பை மீறுவதற்குச் சரியான காரணங்கள் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீடு விஷயத்தில், 50% இட ஒதுக்கீட்டை மீறுவதை நியாயப்படுத்துவது அவசியம். எனவே, மராத்தா சமூகத்தினர் பின்தங்கிய சமூகத்தினர் என்று நிரூபிப்பது அவசியம்,” எனத் தெரிவித்தார்.

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை நியாயப்படுத்த மாநில அரசால் தரவுகளை வழங்க முடியவில்லை. எனவே, இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மராத்தா இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிலைநிறுத்த ஆய்வு நடத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கான சரியான மற்றும் தர்க்கரீதியான காரணத்தை மாநில அரசு வழங்கிய தரவு நியாயப்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரிவான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

கடந்த 1991இன் மண்டல் ஆணையத்தின் அறிக்கைப்படி, மராத்தா சமூகத்தினரின் மக்கள்தொகை 33% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மக்கள்தொகை 52% ஆகவும் உள்ளது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது ஒவ்வொரு சமூகத்தின் சரியான மக்கள்தொகையை வெளிப்படுத்தும். இருப்பினும், ஷிண்டே குறிப்பிட்டுள்ளபடி, இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அதிக காலம் ஆகலாம்.

குன்பி சான்றிதழ்களை வழங்குவது சிக்கலைத் தீர்க்காது என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனெனில், ஏற்கெனவே குன்பிகளாக பதிவு செய்தவர்கள் மட்டுமே சான்றிதழ்களைப் பெறத் தகுதியுடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவது மற்றொரு மாற்று வழி. இருப்பினும், இது பல சவால்களைக் கொண்டது. மற்ற மாநிலங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு முடிவெடுப்பதற்கு முன், முழுமையான ஆய்வு மற்றும் ஆலோசனை அவசியம்.

மராத்தா சமூகம் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதைத் தரவுகளுடன் மாநில அரசு நிரூபிக்க வேண்டும். மேலும், 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கான தேவையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டால், மராத்தா சமூகத்திற்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும். இருப்பினும், இந்தச் செயல்முறையைச் செயல்படுத்த அதிக காலம் தேவைப்படும்.

விரைவான தீர்வு வேண்டுமானால், “குன்பி பதிவுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இல்லை. இதுதொடர்பாக இரண்டு வழிகள் உள்ளன. ஓபிசி பிரிவில் இருந்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது 50% இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கத் தயாராக வேண்டும். இதில், இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கத் தரவுகளை உருவாக்க மாநில அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் செயல்முறை அதிக காலத்தை எடுத்துக்கொள்வது என்றாலும், இது அவசியம். இதை மேற்கொள்ளவில்லை என்றால், இடஒதுக்கீடு வழங்கிய மற்ற மாநிலங்களைப் போல, நாமும் நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் செயல்முறை நீண்ட நேரம் ஆகலாம். எனவே, அரசாங்கம் இந்த பிரச்னைகளை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்,” என வழக்குரைஞர் ஸ்ரீஹரி அனே பரிந்துரைக்கிறார்.

அரசமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத 50% வரம்பு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு சட்டம் இயற்றப்படலாம். இருப்பினும், இந்தக் கோரிக்கை மராத்தா இடஒதுக்கீடு மட்டுமல்ல, பிற மாநிலங்களில் உள்ள பல சமூகங்களையும் கவலையடையச் செய்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

மராத்தா இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய முதல் நபர் யார்?

மராத்தா இடஒதுக்கீடு

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை புதிதல்ல.

மூத்த பத்திரிகையாளரும் மராத்தா இடஒதுக்கீடு இயக்கத்தை உற்றுநோக்குபவருமான சஞ்சய் மிஸ்கின் கூறுகையில், “1981ஆம் ஆண்டு முதல் மராத்தா இடஒதுக்கீடு கோரி, மத்தடி கம்கர் தொழிற்சங்கத் தலைவர் அண்ணாசாகேப் பாட்டீல் போராட்டம் நடத்தியதில் இருந்து இது தொடர்கிறது. இருப்பினும், மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீட்டில் தீவிரமாகப் பங்கேற்கவில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும், விவசாய நெருக்கடியை எதிர்கொண்டாலும், இடஒதுக்கீட்டுக்கான அவசரத்தை சமூகம் உணரவில்லை. பொருளாதார முன்னேற்றம் மற்றும் உள்ளூர் மட்டத்தில் உள்ள நன்மையை வேறுபடுத்திப் பார்ப்பதில் அச்சமூகம் தவறிவிட்டது. அவர்கள் பின்தங்கியவர்கள் என்று அழைக்கப்படுவதை விரும்புவதில்லை,” என்கிறார்.

மார்ச் 22, 1982 அன்று, அன்னாசாகேப் பாட்டீல் மும்பையில் மராத்தா இடஒதுக்கீடு மற்றும் 11 கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தினார். அப்போது பாபாசாகேப் போசலே மகாராஷ்டிர முதல்வராக இருந்தார்.

“இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, அரசாங்கம் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தது. பின்னர், மராத்தா இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அரசாங்கம் கவிழ்ந்தது. இதனால், இடஒதுக்கீடு வாக்குறுதி நிறைவேறவில்லை. அடுத்த நாள், அண்ணாசாகேப் பாட்டீல், தன் சமூகத்தினருக்கு எப்படி பதிலளிப்பது என்பதால் தற்கொலை செய்துகொண்டார். அன்றிலிருந்து, மராத்தா சமூகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் உண்மையான அர்த்தத்தில் தொடங்கியது,” என, சஞ்சய் மிஸ்கின் கூறுகிறார்.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி, 1990-களின் ஆரம்பத்தில், மத்திய அரசு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs), பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. ஓபிசி பிரிவில் வேறு எந்த சாதியையும் சேர்க்க, மண்டல் ஆணையம் சில நிபந்தனைகளை முன்மொழிந்தது. மகாராஷ்டிராவில், 1995இல், முதல் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக நீதிபதி என். காத்ரி இருந்தார். மராத்தா இடஒதுக்கீடு குறித்த கேள்வி எழுந்தபோது, ​​அதுகுறித்து அவர் 2000இல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அவர்களின் பரிந்துரைகளின்படி, மராத்தா-குன்பி போன்ற மராத்தா சமூகத்தில் உள்ள சில துணை சாதிகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு ஓபிசி சான்றிதழ்கள் வழங்கப்படலாம். இது சில மராத்தியர்கள் ஓபிசி பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டைப் பெற அனுமதித்தது. இருப்பினும், சாதிச் சான்றிதழில் குன்பி அந்தஸ்து குறிப்பிடப்படாத மராத்தா பிரிவினர் ஓபிசி பிரிவில் சேர்க்கப்படவில்லை.

எனவே, மராத்தா இடஒதுக்கீடு பிரச்னை நீதிபதி ஆர்.எம்.பாபட் ஆணையத்தின் கீழ் வந்தது. நீதிபதி பாபட் ஆணையம் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை 2008இல் சமர்ப்பித்தது. மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓபிசி) சேர்ப்பதை ஆணையம் மறுத்தது. பாபட் ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு, மகாராஷ்டிரா முழுவதும் மராத்தா சமூகத்தில் ஆக்ரோஷமான போராட்டங்களும் தொடங்கின.

இதையடுத்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காண ரானே குழுவை மாநில அரசு அமைத்தது. மராத்தா மற்றும் குன்பி சமூகங்கள் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும் குன்பிகளுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால், குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதன்படி, இதே அடிப்படையில் மராத்தா சமூகத்திற்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க ரானே குழு பரிந்துரைத்தது.

எஸ்.இ.பி.சி என்பது என்ன?

மராத்தா இடஒதுக்கீடு

“சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Socially and Educationally Backward Class) மாநில அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் 16வது பிரிவின்படி, சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மாநில அரசு அடையாளம் கண்டால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உரிமை உண்டு. இந்த விதியின் அடிப்படையில், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று சட்ட நிபுணர் ராகேஷ் ரத்தோட் கூறுகிறார்.

“அரசமைப்பு சட்டத்தைத் தயாரிக்கும்போது, ​​அரசமைப்புக் குழுவின் தலைவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒரு கேள்வியை எழுப்பினார்.

‘சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் என்றால் என்ன?’

இதற்குப் பதிலளித்த மருத்துவர். பி.ஆர். அம்பேத்கர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற மாநிலங்களில் இதேபோன்ற பின்தங்கிய நிலையில் உள்ள குழுக்கள் உள்ளன. இருப்பினும், அவர்கள் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்குள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்,” என்கிறார் அவர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு

மராத்தா இடஒதுக்கீடு

பட மூலாதாரம், FACEBOOK / EKNATH SHINDE

நவம்பர் 14, 2014 அன்று, மும்பை உயர் நீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநில அரசு முறையீடு செய்தது.

ஆனால், உச்ச நீதிமன்றமும் தடையை நீக்க மறுத்தது. பின்னர், 2018 குளிர்கால கூட்டத்தொடரின்போது, ​​அப்போதைய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராத்தா சமூகத்தினருக்கு சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பின் (SEBC) கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்து வகையான இடஒதுக்கீட்டுக்கும் 50% வரம்பு விதிக்கப்பட்டது. மகாராஷ்டிர அரசு வழங்கிய மராத்தா இடஒதுக்கீட்டையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மராத்தா சமூகத்தினருக்கான 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கு சரியான காரணம் இல்லை என்றும், எந்தவித சரியான அடிப்படையும் இல்லாமல் புதிய இடஒதுக்கீடு வழங்குவது அனுமதிக்கப்படாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கெய்க்வாட் குழுயின் அறிக்கையின்படி, மராத்தா சமூகம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கூறியது. ஆனால், அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மராத்தா இட ஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே தலைமையில் இன்று காலை மும்பையின் புறநகர் பகுதிகளை அடைந்தது பேரணி. இந்த பேரணி தற்போது நவி மும்பையின் வாஷியில் உள்ளது. போராட்டக்காரர்கள் வாஷியில் இரவு தங்குவார்கள் என்று ஜாரங்கே அறிவித்துள்ளார். மேலும் உறவினர்களைச் சேர்ப்பது தொடர்பான அரசு தீர்மானம் வழங்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் பிரதிநிதிகள் வாஷியில் ஜாரங்கேவை சந்தித்தனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் ஜாரங்கே உரையாற்றினார்.

மனோஜ் ஜாரங்கே கூறுகையில், இதுவரை 54 லட்சம் குன்பி தரவு கண்டுபிடிக்கப்பட்டு அதன்படி 37 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சான்றிதழ் வழங்கப்பட்டவர்களின் தரவுகள் கேட்கப்பட்டுள்ளன.

குன்பி தரவுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஷிண்டே குழுவுக்கு மகாராஷ்டிரா அரசு 2 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

அந்த பதிவேடு வைத்திருக்கும் நபரின் உறவினர்களுக்கு பெற்றோர் இருவரின் தரப்பிலிருந்தும் குன்பி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஜராங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தர்வாலி சாரதி போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்களை திரும்பப் பெற அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் ஜாரங்கே கூறுகிறார்.

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை தீர்க்கப்படும் வரை, மாநில அரசு அனைத்து மராத்தாக்களுக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை ஆட்சேர்ப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் மராத்தா இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் ஜாரங்கே கோரியிருந்தார்.

ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை வரை சிறுமிகளுக்கு இலவச கல்வி வழங்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் ஜாரங்கே சிறுவர்களுக்கும் இலவச கல்வியை கோரியுள்ளார்.

“54 லட்சம் குன்பி தரவு கண்டுபிடிப்புகளுக்கும், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்களில் யாருக்காவது வரலாற்று தரவு கண்டுபிடிப்பு இருந்தால் உறவினர்களுக்கு குன்பி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்ற விதிக்கும் அரசு தீர்மானம் தேவை” என்று ஜாரங்கே கூறுகிறார். இன்று இரவுக்குள் அரசு தீர்மானம் வழங்குமாறு ஜாரங்கே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், இரவு அணிவகுப்பு மும்பையின் ஆசாத் மைதானத்தை நோக்கிச் செல்லாது. ஆனால் அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். போராட்டக்காரர்கள் வாஷியில் தங்கியிருப்பார்கள்.

அரசு தீர்மானம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் ஆசாத் மைதானத்திற்குச் செல்வார்கள்” என்று கூறினார்.

இன்று காலை 11 மணி முதல் தொடங்கிய தனது உண்ணாவிரதத்தை ஜாரங்கே தொடர்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »