Press "Enter" to skip to content

கிளாம்பாக்கம்: பயணிகளை சோதிக்கும் பேருந்து நிலையம் – பிரச்னைகள் எப்போது தீரும்?

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட ஆரம்பித்துள்ளன. ஆனால், பயணிகள் இதனால் திண்டாடிப் போயுள்ளனர்.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஏற்கெனவே அங்கிருந்து இயங்க ஆரம்பித்துவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகள் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க வேண்டும் என தமிழக அரசு கூறியது.

ஆனால், ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க அவகாசம் தரவேண்டும் என்று ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஜனவரி 24ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டது. இதை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பாதி வழியில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள்

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

ஜனவரி 25ஆம் தேதி காலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்த வாகனங்கள் கிளாம்பாக்கத்திலேயே போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

அந்தப் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்லும் என எண்ணி வந்த பயணிகள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து ஓட்டுநர்களுடனும் அங்கிருந்த அதிகாரிகளுடனும் தகராறில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு, வேறு வழியின்றி பேருந்துகள், மின்சார ரயில், ஆட்டோ, தேர் போன்றவற்றைப் பிடித்து நகருக்குள் சென்றனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அன்று மாலையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய எந்த ஆம்னி பேருந்தும் கோயம்பேட்டில் இருந்து புறப்படாத வகையில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது. பிற்பகலிலேயே அங்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

இதனால், தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்தந்தப் பேருந்து நிறுவனங்கள் பிற்பகலுக்கு மேல் தொலைபேசி மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும்படி கூறினர்.

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

இது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. கிளாம்பாக்கத்திற்கு வந்த பிறகு, தாங்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை, அந்தப் பேருந்துகள் எங்கே நிற்கின்றன என்பதும் தெரியவில்லை என சில பயணிகள் புலம்பினார்கள்.

“நான் கோயம்பேட்டில் இருந்து புறப்படக்கூடிய ஒரு ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். அந்தப் பேருந்தில் 8.50க்கு வட பழனியில் ஏற்றிக்கொள்வதாக இருந்தது.

ஆனால், பிற்பகல் நான்கரை மணி வாக்கில் போன் செய்தவர்கள் கிளாம்பக்கத்திற்கு வந்து ஏறும்படி சொன்னார்கள்,” என்றார் ஊட்டி செல்லலைருந்த ரஃபீக்.

“நான் செங்குன்றத்தில் இருக்கிறேன். வருவதற்கு 3 மணிநேரம் ஆகிவிடும்,” என்று கூறியதற்கு, அப்படியானால் ஆறு மணிக்கே புறப்பட்டுவிடுமாறு தனக்குச் சொல்லப்பட்டதாகக் கூறுகிறார் ரஃபீக்.

“ரெட்ஹில்சில் இருந்து இங்கே வர நேரடிப் பேருந்தே கிடையாது. கோயம்பேடு வந்துதான் வர வேண்டும். அது மிகக் கடினமாக இருக்கும் என்பதால், என்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே இங்கு வந்தேன். இங்கே எந்தப் பேருந்து எங்கு நிற்கிறது என ஒன்றும் புரியவில்லை,” இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்ற ரஃபீக், என்ன செய்வதென்றே தெரியாத சூழலில் சிக்கியதாகக் கூறினார்.

‘கைபேசி நெட்வர்க் கிடைக்கவில்லை’

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

தனியார் பேருந்துகளுக்கு என சுமார் நான்கு நடைமேடைகள் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த நடைமேடைகளில் வந்து நிற்கும் பேருந்துகள், பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் வேறு பேருந்துகள் அங்கே வந்து நிற்க முடியும் என்பதால், தங்களுடைய பேருந்து எப்போது அங்கே வரும் என்பது தெரியாமல் பல பயணிகள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

“ரூ.2,400 கொடுத்து அனுமதிச்சீட்டு புக் செய்திருக்கிறேன். எந்த இடத்தில் எது இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. டிராவல்ஸ் பேருந்துகள் நிற்கும் இடத்தில், நான் புக் செய்த பேருந்து ஒன்றையும் காணவில்லை.

அந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. போன் நெட்வொர்க்கும் இங்கே கிடைப்பதில்லை,” என வருந்தினார் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜன்.

இதனால், பேருந்து புறப்படுவதே தாமதமாகும் என்பதால், செல்ல வேண்டிய ஊர்களுக்குச் சென்று சேர்வதும் தாமதமாகும் என்ற பதற்றமும் பலரிடம் இருந்தது.

பல மணிநேர தாமதம்

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

“ஒன்பது மணி பஸ் இன்னும் ஸ்டாண்டுக்கே வரவில்லை. ஆனால், 9:30, 9:45 மணி பஸ்ஸெல்லாம் நிற்கின்றன. இன்றைக்கு காலையில் 11 மணிக்குத்தான் அழைத்து கோயம்பேட்டில் இருந்து இங்கே வரச் சொன்னார்கள்.

கோயம்பேட்டில் இருந்து பஸ் பிடித்து இங்கே வர மூன்று மணிநேரம் ஆகிறது. நான் பொள்ளாச்சிக்குச் செல்வதற்கு காலை 10 – 11 மணி ஆகிவிடும் போலிருக்கிறது,” என்றார் பொள்ளாச்சிக்குச் செல்லவிருந்த சுந்தர்.

எல்லாப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் சில செயலிகளில் இன்னமும் கோயம்பேட்டில் இருந்து ஏறும் ‘ஆப்ஷன்’ அளிக்கப்பட்டிருப்பது பலரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

“நான் இருப்பது கிண்டியில். இன்று மதியம்தான் புக் செய்தேன். கோயம்பேட்டில் ஏறுவதற்கு ரெட் பஸ்ஸில் ஆப்ஷன் இருந்தது. மாலை ஏழு மணியளவில் சாப்பிடச் செல்வதற்கு முன்பாக கண்டக்டருக்கு போன் செய்தேன்.

பிறகுதான் பேருந்து கோயம்பேடு வரை வராது எனத் தெரிய வந்தது. அதனால் 900 ரூபாய் கொடுத்து, ஒரு தேரை பிடித்து வந்தேன். இங்கே வந்து பார்த்தால் பேருந்து ஒரு மணிநேரம் தாமதம் என்கிறார்கள்,” ஊட்டிக்குச் செல்லவிருந்த கிண்டியைச் சேர்ந்த பரத்.

‘போதுமான உணவகங்கள் இல்லை’

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வேறு சில பிரச்னைகளையும் பயணிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பேருந்து நிலையத்திற்குள் போதுமான உணவகங்கள் இல்லை. இதனால், பலரும் கடைகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் கடுமையான கூட்டம் இருந்தது. அதேபோல, பேருந்து நிலையத்திற்குள் பல இடங்களில் கைபேசி சிக்னல் கிடைக்காததால், அந்தந்த பேருந்து நிறுவனங்களைத் தொடர்புகொள்ள முடியாமலும் பலர் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

பயணிகளுக்கு இப்படியான பிரச்னைகள் இருக்கின்றனவென்றால், தனியார் பேருந்து ஓட்டுநர்களும் புலம்பித் தள்ளுகிறார்கள்.

“அங்க ஒரு காட்டுக்குள்ள இருக்க மாதிரி இருக்கு. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. இரவு முழுக்க கண் விழித்து வண்டியை ஓட்டுகிறோம். பகலில் சாப்பிட்டுவிட்டு, சிறிது தூங்கினால்தான் மீண்டும் வாகனத்தை ஓட்ட முடியும்.

சாப்பாடு வாங்கவே மூன்று நான்கு கி.மீ. போக வேண்டியுள்ளது. கோயம்பேட்டில் இருக்கும் எந்தவொரு அடிப்படை வசதியுமே அங்கு இல்லை. திடீரென மாற்றச் சொன்னால் எப்படிச் செல்வது?

எங்களையும் மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் உணவின் விலையும் அதிகமாக இருக்கிறது,” என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஓட்டுநரான பிரதாப்.

‘விரைவில் சீர் செய்யப்படும்’ – அமைச்சர்

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

அரசைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் போல, தனியார் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அங்கு மிக விரைவிலேயே நிலைமை மேம்பட்டுவிடும் என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.

“போதுமான கடைகள் இல்லை என்பது உண்மைதான். இது குறித்து சிஎம்டிஏவிடம் பேசியிருக்கிறேன். ஒப்பந்தம் விட்டு விரைவில் திறக்கப்பட்டுவிடும் என்று உறுதியளித்துள்ளார்கள். தனியார் பேருந்துகளைப் பொறுத்தவரை, தங்கள் பேருந்துகளை நிறுத்த இடமில்லை என்பதை ஒரு பிரச்சனையாக முன்வைக்கிறார்கள்.

தாம்பரத்திற்கு அருகிலுள்ள முடிச்சூரில் இதற்காக மிகப்பெரிய இடம் தயாராகி வருகிறது. வெகு விரைவில் தனியார் பேருந்துகள், தங்கள் பேருந்துகளை அங்கே நிறுத்திக்கொள்ளலாம்.

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகங்கள் இங்கே முதல் தளத்தில் தரப்படும். கோயம்பேட்டில், 5,000 சதுர அடிதான் தரப்பட்டது. இங்கே ஏழாயிரம் சதுர அடி தரவிருக்கிறோம்,” என்கிறார் எஸ்.எஸ். சிவசங்கர்.

கிளாம்பக்கம் பேருந்து நிலையம்

பயணிகளின் மற்றொரு பிரச்னை, எந்த நிறுவனத்தின் பேருந்து எங்கே நிற்கிறது எனத் தெரியாமல் தவிப்பது. இந்தப் பிரச்சனையும் விரைவில் தீர்க்கப்படும் என்கிறார் சிவசங்கர்.

“தனியார் பேருந்துகள் நிற்கும் நடைமேடைகளில், ஒவ்வொரு தூணிலும் அங்கே எந்தப் பேருந்து நிற்கும் என்பது எழுதி ஒட்டப்படும். ஆம்னி பேருந்துகள் முன்பே இங்கு வர ஒப்புக்கொண்டிருந்தால், இந்தப் பிரச்னையை முன்பே தீர்த்திருக்கலாம். விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்,” என்கிறார் சிவசங்கர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளைப் பொருத்தவரை, இதுகுறித்து கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். நேரிலும் தொலைபேசியிலும் பல முறை முயன்றும் அவர்களது கருத்தைப் பெற முடியவில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »