Press "Enter" to skip to content

காங்கிரஸ் தன்னை பெரிய கட்சியாகக் கருதிக் கொண்டிருப்பதே ‘இந்தியா’ கூட்டணியின் சரிவுக்குக் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 22 அன்று, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோதி இந்துத்துவாவை முன்னிறுத்துபவராக இருந்தார். அயோத்தியில் இருந்து எழும் மத உணர்வுகளின் அலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது.

பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸும் அந்நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்தது.

இந்த இந்துத்துவா அலை ஓய்வதற்குள் பிகாரில் எழுந்த மற்றொரு அரசியல் அலை `இந்தியா` கூட்டணியை உலுக்கியிருக்கிறது.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிதிஷ்குமார், கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிதிஷ், பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாக தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தோம், ஆனால், அங்கு (தேர்தல்) வேலைகள் மிகவும் மெதுவாக நடந்தன. இதனால் நான் வருத்தப்பட்டேன். இப்போது நாங்கள் `இந்தியா` கூட்டணியில் இல்லை. `இந்தியா` கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம்.” என்றார் நிதிஷ்.

நிதிஷ் குமாரின் விலகல் `இந்தியா` கூட்டணிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு நிதிஷ் குமாருடன், `இந்தியா` கூட்டணி பாஜகவுக்கு வலுவான சவாலை கொடுக்கும் நிலையில் இருந்தது.

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

”பாஜகவை அகற்றுவதே நோக்கம்”

ஆனால், ‘இந்தியா’ கூட்டணிக்கு இது முதல் பின்னடைவு அல்ல. சில நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு இல்லை என்றும் தனது கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்றும் அம்மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தெளிவுபடுத்தினார்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் காங்கிரஸுடன் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை என்றும் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே கூட்டணியின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அனைவருக்கும் பொருந்தும் வகையில் தொகுதிகளை பகிர்ந்தளிப்பதற்கு எந்த ஒரு ‘ஃபார்முலா’வும் இல்லை என்றும் சசி தரூர் கூறினார்.

கூட்டணியில் மாநில வாரியாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் சசி தரூர் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு வித்தியாசமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், GETTY IMAGES

“இந்தியாவின் இமேஜுக்கு நல்லதல்ல”

எதிர்க்கட்சியான ‘இந்தியா` கூட்டணிக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பாதையில் இருப்பதாக சனிக்கிழமை (ஜன. 27) குறிப்பிட்டார்.

கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை காங்கிரஸும் சனிக்கிழமை ஒப்புக்கொண்டது. இருப்பினும், மமதாவின் கோபம் தணிந்து மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாடுகள் விரைவில் எட்டப்படும் என்றும் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கூறுகையில், “சூழல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒரு தரப்பினர் எங்களுடன் அதிருப்தி அடைந்து எங்களை விட்டு வெளியேறுவதை மக்கள் பார்க்கிறார்கள். இது நன்றாக இல்லை. இது `இந்தியா`வின் இமேஜுக்கு நல்லதல்ல” என்று கூறினார்.

வலுவான அலையில் சவாரி செய்யும் நரேந்திர மோதியின் பாஜகவுக்கு முன்னால் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பலவீனமாக காணப்படுகின்றன.

நிதிஷின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் `இந்தியா` கூட்டணியிலிருந்து பிரிவதற்கு முன்பே, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி, அக்கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாகக் கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அளித்த அறிக்கையில், கே.சி. தியாகி, “காங்கிரஸின் ஒரு குழு `இந்தியா` கூட்டணியின் தலைமையைப் பறிக்க விரும்பியது. டிசம்பர் 19 அன்று அசோகா ஹோட்டலில் நடந்த கூட்டத்தில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, `இந்தியா` கூட்டணியை வழிநடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. முன்னதாக, மும்பையில் நடந்த கூட்டத்தில், எந்தவொரு தலைமையையும் முன்னிறுத்தாமல், ‘இந்தியா’ கூட்டணி செயல்படும் என, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கார்கேவின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பிற கட்சிகள் என அனைத்து காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சிகளும் காங்கிரஸுடன் சண்டையிட்டு அரசியலில் தங்கள் இடத்தைப் பிடித்துள்ளன. காங்கிரஸ் தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் கட்டத்தை கடந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகளின் தலைமையை அகற்ற காங்கிரஸ் விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

விரிசலுக்கு என்ன காரணம்?

‘இந்தியா` கூட்டணியால் தன் நிலையை தெளிவுபடுத்த முடியவில்லை என்றும் இதுவே கூட்டணியில் விரிசல் ஏற்படக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கூறும்போது, ​​“இந்தியா கூட்டணி உண்மையில் முறைப்படி கூட்டணியாகிவிட்டதா? சித்தாந்தம் பிரச்னை அல்லது குறைந்தபட்ச பொதுத் திட்டம், தொகுதிப் பங்கீடு, தலைமைத்துவம் போன்ற எதையும் அடிப்படையாகக் கொண்ட கூட்டணியாக அது உருவெடுத்துள்ளதா? தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போரை நடத்த விரும்பும் சூழலை உருவாக்குவதில் காங்கிரஸ் இதுவரை வெற்றி பெற்றுள்ளதா?” என கேட்கிறார்.

“முதல் விஷயம், கூட்டணியை முழுமையாக அமைக்க முடியவில்லை. கூட்டணி இல்லை என்பதல்ல விஷயம். அதை தெளிவுபடுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே பெரிய கட்சிகள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன” என்கிறார் அவர்.

திரிணாமூல் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பு கூட்டணிக்கு பெரும் அடி என்று விஜய் திரிவேதி கருதுகிறார்.

விஜய் திரிவேதி கூறுகையில், “காங்கிரஸுக்கு பிறகு கூட்டணியில் பெரிய கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது. ஆனால், கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிட திரிணாமுல் முடிவெடுத்துள்ளது. இது `இந்தியா` கூட்டணிக்கு பெரிய அடி” என்று கூறுகிறார்.

மமதா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

“மோதிக்கு நம்பிக்கை இல்லை”

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நிதிஷ் குமாருடன் இணைந்திருப்பது பிகாரில் பாஜகவின் நிலையை பலப்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், நிதிஷை உடன் வைத்துக் கொள்வது பாஜகவின் நிர்ப்பந்தம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ராமர் கோவிலுக்குப் பிறகு இந்துத்துவா அலை இருப்பதாகக் கூறப்படும் போதிலும், பிகாரில் பாஜக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் என, மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி நம்புகிறார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி குறித்த நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது.

ஹேமந்த் அத்ரி கூறும்போது, ​​“ராமர் கோவில் நிகழ்ச்சிக்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நாடு முழுவதும் செய்தி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த நரேந்திர மோதி, பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு மரணத்துக்குப் பின் வழங்கப்படும் பாரத ரத்னா வழங்குவதாக அறிவித்தார். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்தால், ராமர் கோவில் திட்டத்துக்குப் பிறகு உடனடியாக இந்த அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் பிரதமருக்கு ஏன் வந்தது என்ற கேள்வி எழுகிறது. வரவிருக்கும் தேர்தலில் டெல்லியில் தனது ஆட்சியை திரும்பப் பெறுவதில் நரேந்திர மோதிக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது” என்றார் அவர்.

ஹேமந்த் அத்ரி கூறும்போது, ​​“மகாராஷ்டிரா, பிகார் என இரண்டு மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய இழப்பை எதிர்கொள்கிறது என்பது பாஜகவுக்குத் தெரியும். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியை பாஜக அமைத்த விதம், அக்கட்சி அங்கு பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

“கட்டாயத்தில் பாஜக”

நிதிஷ் குமார் வெளியேறிய பிறகு, `இந்தியா` கூட்டணியின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், பிகாரில் கூட்டணி தோல்வியடைந்தாலும் தேசியளவில் கூட்டணி வலுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், நிதிஷின் விலகல் `இந்தியா` கூட்டணியின் இமேஜை நிச்சயம் பாதிக்கும்.

விஜய் திரிவேதி கூறும்போது, ​​“நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சென்றுள்ளார். நிதிஷ் விலகியதால் கூட்டணி முடிவுக்கு வராமல் போகலாம். ஆனால், கருத்துப் போரில் `இந்தியா` கூட்டணி வெகுவாகப் பின்தங்கிவிடும். அக்கூட்டணி போராட முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் கருதுவார்கள். நிதிஷ் குமார் `இந்தியா` கூட்டணியின் தலைமை பொறுப்பில் இல்லாவிட்டாலும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தார். தற்போது நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டார். இது கூட்டணியை வெளிப்படையாக பலவீனப்படுத்தும்” என்றார் அவர்.

‘இந்தியா’ கூட்டணியின் முகமாக அறிவிக்கப்படாததால், கூட்டணியில் இருந்து விலக நிதிஷ் ஒரு காரணத்தைத் தேடிக் கொண்டிருந்ததாக ஹேமந்த் அத்ரி நம்புகிறார்.

அவர் கூறும்போது, ​​“நிதிஷ் வெளியேற ஒரு காரணம் தேவைப்பட்டது. கூட்டணியில் அவர் விரும்பியது கிடைக்காததால், ‘இந்தியா’ கூட்டணியின் பலவீனமான இணைப்பு நிதிஷ் என்பது பாஜகவுக்குத் தெரியும். தேஜஸ்வியை சீக்கிரம் முதலமைச்சராக்க வேண்டும் என்று லாலு விரும்புவதாகவும் முதலமைச்சர் பதவியை அவரே விட்டுவிட விரும்பவில்லை என்றும் அதனால்தான் பாஜகவுடன் செல்ல நிதிஷ் கருதினார். வரும் மக்களவை தேர்தலில் பிகாரில் எந்த சூழ்நிலையிலும் தொகுதிகளை இழக்கும் நிலையில் பாஜக இல்லை என்பதால் நிதிஷை உடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.

இருப்பினும், பிகாரில் `இந்தியா` கூட்டணி இமேஜ் இழப்பை எதிர்கொண்டாலும், தேஜஸ்வி மற்றும் ராகுல் காந்தி இன்னும் மக்களை நெருங்கி தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹேமந்த் அத்ரி கூறும்போது, ​​“நிதிஷ் குமாரின் விலகல் பிகாரில் `இந்தியா` கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தேஜஸ்வி இப்போது முழு வீச்சில் இருக்கிறார். அவர் பாஜகவைத் தாக்குகிறார். இப்போது அவர் நிதிஷையும் தாக்குவார். தேஜஸ்வி நிதிஷின் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார். அவரால் இதைச் செய்ய முடிந்தால், நிதிஷ் விலகலால் ஏற்படும் நஷ்டத்தை லாபமாக மாற்ற முடியும்” என்றார்.

உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிற இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பல மாநிலங்களில் பாஜகவுக்கு தனித்துப் போட்டி கொடுக்கும் நிலையில் பிராந்திய கட்சிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“மற்ற மாநிலங்களில் ‘இந்தியா` கூட்டணியில் இல்லாவிட்டாலும் பிராந்திய கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன என்று விஜய் திரிவேதி கூறுகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் என எதுவாக இருந்தாலும், அங்குள்ள பிராந்தியக் கட்சிகள் பாஜகவை தோற்கடிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளன. இந்த மாநிலங்களில் பிராந்தியத் தலைவர்களுக்கு எதிராகப் போராடும் வலிமையான நிலையில் பாஜகவால் இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை” என்கிறார் விஜய் திரிவேதி.

`இந்தியா` கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸின் முன் உள்ள சவால்

இப்படிப்பட்ட நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் பெருந்தன்மை காட்டவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் திரிவேதி கூறும்போது, ​​“காங்கிரஸின் இடங்கள் அதிகரித்திருந்தால், ‘இந்தியா’ கூட்டணி இன்னும் பலம் பெற்றிருக்கும். பிராந்தியக் கட்சிகளைப் பொறுத்தவரை, அவை தனித்தும் பாஜகவுக்குப் போட்டி கொடுக்கும் நிலையில் உள்ளன. கூட்டணியை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என்றார்.

இதே கருத்தை ஹேமந்த் அத்ரியும் கூறுகிறார். அவர் கூறுகையில், “இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தோன்றாத வரை, இத்தகைய நெருக்கடி நீடிக்கும். ஆனால், அது சமாளிக்க முடியாத அளவுக்கு பெரிய நெருக்கடி இல்லை. `இந்தியா` கூட்டணியின் கட்சிகள் ஒரே குரலில் பேசினால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இந்த நேரத்தில் கூட்டணி குறித்த பார்வையை மாற்றி, பிராந்திய கட்சிகளை வலுவாக வைத்திருப்பதற்குத் தான் முன்னுரிமை என்ற செய்தியை மற்ற கட்சிகளுக்கு வழங்குவது காங்கிரஸின் முன் உள்ள மிகப்பெரிய சவால்.

விஜய் திரிவேதி கூறுகையில், “இந்தியா கூட்டணியின் காந்தமாக காங்கிரஸ் இருந்திருக்கலாம். ஆனால், கூட்டணியை வலுப்படுத்தும் வேலையை காங்கிரஸால் இதுவரை செய்ய முடியவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸின் முழுக் கவனமும் இதுவரை தன்னைப் பலப்படுத்திக் கொள்வதில்தான் உள்ளது. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் கட்சி கவனம் செலுத்தவில்லை” என்றார்.

“மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோபத்தை நீக்கியிருக்க வேண்டும். கூட்டணியை வலுப்படுத்தினால் மட்டுமே காங்கிரஸுக்கு பலன் கிடைக்கும். கூட்டணியை தக்கவைக்க காட்ட வேண்டிய சுறுசுறுப்பை காங்கிரஸ் காட்டவில்லை. ராகுல் காந்தி கூட்டணிக் கொடியை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் தனியாக நியாய யாத்திரை சென்றுள்ளார். இப்போது கூட்டணியின் மற்ற தலைவர்களுடன் பேசக்கூட அவருக்கு நேரம் இருக்காது. காங்கிரஸ் தன்னை பெரிய கட்சியாக கருதாமல், அனைவரையும் சமமாக வைத்திருக்க முயற்சி செய்திருக்க வேண்டும். இது ‘இந்தியா’ கூட்டணி மற்றும் காங்கிரஸின் நிலையை மேம்படுத்தியிருக்கும்” என்றார் விஜய் திரிவேதி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »