Press "Enter" to skip to content

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகலப்பு; அதிபர் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?

மாலத்தீவில், முகமது முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும் கருதப்படுகிறது. இந்தியாவுடனான உறவு மோசமடைந்து வருவதாக முய்சு அரசை மாலத்தீவு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மோதல்கள் வெடித்தன.

இந்த வேறுபாடுகள் மிகவும் வளர்ந்ததால், முய்சு அரசின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று குரல் எழுப்பினர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் அளவு நிலைமை மேலும் மோசமடைந்தது.

நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த மோதல் தொடர்பான காணொளிக்களும் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பட மூலாதாரம், X

கைகலப்பு நடந்தது ஏன்?

மாலத்தீவு முற்போக்கு கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் (பிஎன்சி) இடையே கூட்டணி உள்ளது. இந்த கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது.

இந்த கூட்டணி 4 பேரை புதிதாக அமைச்சர்களாக்க விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விரும்பவில்லை.

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி), நான்கு அமைச்சரவை உறுப்பினர்களின் நாடாளுமன்ற ஒப்புதலை நிறுத்தி வைக்க கோரியது.

இதையடுத்து முகமது முய்சு அரசை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

இந்த மோதலின் போது, கண்டிதிமு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஷாஹிம் அப்துல் ஹக்கீம் ஷாஹிமுக்கும் கெண்டிகுல்ஹுது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அஹமத் இசாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது, இரு உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கை அருகே கீழே விழுந்தனர். இதில் ஷாஹிமுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிறுபான்மைத் தலைவர் மூசா சிராஜும் இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஜாகீர், விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த மோதல் காரணமாக, புதிய அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

அரசு ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் தற்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையின் புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பட மூலாதாரம், Getty Images

முய்சு தனது அமைச்சரவையில் சேர்க்க விரும்பும் 4 பேர் யார்?

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மாலத்தீவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று இந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.

அமைச்சரவையில் ஒப்புதல் தேவைப்படும் நான்கு உறுப்பினர்கள்

  • அட்டர்னி ஜெனரல் அகமது உஷாம்
  • வீட்டுவசதி, நிலம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மருத்துவர் அலி ஹைதர்
  • இஸ்லாமிய விவகார அமைச்சர் முகமது ஷாஹிம் அலி சயீத்
  • பொருளாதார, வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் முகமது சயீத்

அமைச்சரவையை அங்கீகரிக்காதது மக்களுக்காக பணியாற்றும் அரசாங்கத்தின் சேவைகளுக்கு இடையூறாக உள்ளது என்று ஆளும் மக்கள் முற்போக்கு கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கூறுகின்றன.

மாலத்தீவில் சபாநாயகர் முகமது அஸ்லாம் மற்றும் துணை சபாநாயகர் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக ஆளும் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அறிவிப்பு கொடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அரசியல் கட்சியின் நலன்களுக்காக சபாநாயகர் அஸ்லம் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக ஆளும் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பட மூலாதாரம், ANI

மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் யார் பக்கம்?

மாலத்தீவின் எதிர்க் கட்சிகளும் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தன. தற்போது மாலத்தீவில் எதிர்க்கட்சிகளில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவின் ஆதரவாளர்களாகவே கருதப்படுகிறார்கள்.

அதிபர் முய்ஸு இந்தியாவுக்கு எதிரானவராகவும், சீன ஆதரவாளராகவும் கருதப்படுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, முய்சு அரசாங்கத்தின் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறை குறித்து மாலத்தீவின் ஜனநாயக கட்சி கவலை தெரிவித்திருந்தது.

மாலத்தீவு அரசாங்கம் ஒரு சீனக் கப்பலை மாலே துறைமுகத்தில் நிறுத்திக் கொள்ள அனுமதித்திருந்தது.

மாலத்தீவு ஜனநாயக கட்சியினர் இதை எதிர்த்தனர், தங்கள் நீண்டகால நட்பு நாடான இந்தியாவை தனிமைப்படுத்துவது சரியல்ல என்று கூறினர்.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, முகமது முய்சு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

சீனாவிலிருந்து திரும்பியதும், முகமது முய்சு இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் , “எங்கள் நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் எங்களை துன்புறுத்த உரிமம் பெற்றுள்ளனர் என்று அர்த்தமல்ல.” என்று கூறினார்.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கு இடையேயான ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்து வரும் நேரத்தில் அவரது அறிக்கை வந்துள்ளது.

சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற மாலத்தீவு காலக்கெடு விதித்தது.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் மோதியை விமர்சிக்கும் கருத்துக்கு மாலத்தீவு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஜனவரி 2024-ல், மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோது, மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தன.

முய்சு அரசாங்கம் கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை இடைநீக்கம் செய்தது.

அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மட்டும் போதாது என்றும், இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மாலத்தீவின் முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரும் அமைச்சரின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

முய்சுவுக்கு முன்னதாக இப்ராஹிம் முகமது சோலிஹ் மாலத்தீவின் அதிபராக இருந்தார். அவரது அரசாங்கம் ‘இந்தியா முதலில்’ என்ற கொள்கையை அமல்படுத்தியது. அதே நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ‘இந்தியா வெளியேறு’ என்ற முழக்கத்தை முய்சு கையில் எடுத்தார்.

இதுபோன்ற கருத்துகள் உறவுகளை சேதப்படுத்தும் என்று சோலிஹ் குதிப்பிட்டிருந்தார்.

“இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அரசு அதிகாரிகள் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சை தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். இந்தியா எப்போதுமே மாலத்தீவின் நல்ல நண்பராக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெடுங்கால நட்பை எதிர்மறையாக பாதிக்கும் இதுபோன்ற கருத்துகளை நாம் அனுமதிக்கக்கூடாது.” சோலிஹ் X தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முய்சு அதிபரானவுடன், இந்தியாவில் இருந்து தூர விலக்கிக் கொள்வது தனது வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை என்று தெரிவித்திருந்தார்.

அவர் துருக்கிக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம், முய்சு பாரம்பரிய வழக்கத்தை உடைத்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »