Press "Enter" to skip to content

சிந்துச் சமவெளி குறியீடுகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையா? புதிய ஆய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சிந்துச் சமவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருக்கிறது.

இது குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? விரிவான கட்டுரை.

சிந்துச் சமவெளி குறியீடுகளின் புதிர்

உலகில் கண்டறியப்பட்ட பண்டைக்கால குறிப்பிடத்தக்க நாகரீகங்களில் இந்தியாவுக்கு நெருக்கமான நாகரீகம் சிந்துச் சமவெளி நாகரீகம். சிந்துச் சமவெளி உச்சகட்டத்தில் இருந்த காலகட்டத்தில் அதாவது கி.மு. 2,600 முதல் கி.மு. 1900 வரையிலான காலகட்டத்தில் தற்போதைய பாகிஸ்தானின் பெரும் பகுதியிலும் வடமேற்கு இந்தியாவிலும் இந்த நாகரீகம் பரவியிருந்தது.

1920களில் சிந்துச் சமவெளிப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த அகழாய்வு, இந்திய வரலாறு குறித்த பல முந்தைய கருதுகோள்களை மாற்றியமைத்தது. இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த நாகரீகத்தின் உச்சகட்டமாக கி.மு. 2,600 முதல் 1,900 வரையிலான காலகட்டம் கருதப்படுகிறது. சிந்துவெளி அகழாய்வின்போது, குறியீடுகள் (signs) இடம்பெற்ற முத்திரைகள் (seals), அந்த முத்திரை பதிக்கப்பட்ட பொருட்கள், மண் பலகைகள், பானை ஓடுகள், கல் வளையல்கள், தந்த குச்சிகள் போன்றவை கிடைத்தன.

சிந்துச் சமவெளிப் பகுதி

ஆனால், இந்த குறியீடுகள் எதனைக் குறிக்கின்றன என்பது ஒரு நீண்ட காலப் புதிராகவே இருந்து வருகிறது. இவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனால், குறியீடுகள் பல்வேறு இடங்களில் ஒரே மாதிரி இருப்பது, இந்த குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் பொறிக்கப்பட்டிருப்பது, வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரி குறியீடுகள் இடம்பெற்றிருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இவை ஒரு மொழியின் எழுத்துகளாகவே இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார் ஹெல்சிங்கி பல்கலைக்கழகப் பேராசிரியர் அஸ்கோ பர்போலா.

பாகிஸ்தானிலும் வடமேற்கு இந்தியாவிலும் சுமார் 1,500 ஹரப்பன் தொல்லியல் தளங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் இருந்து சுமார் 6,000 குறியீடுகளும் சிறிய குறியீடுட்டுத் தொகுப்புகளும் கிடைத்திருக்கின்றன. சிந்துச் சமவெளி நாகரீகமும் இந்த குறியீடுகளும் கி.மு. 1,000வாக்கில் முழுமையாக மறைந்துவிட்டன.

சிந்துச் சமவெளி அகழாய்வு நடந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பெங்களூரில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இந்த குறியீடுகள் வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை ‘Semantic scope of Indus inscriptions comprising taxation, trade and craft licensing, commodity control and access control: archaeological and script-internal evidence’ https://www.nature.com/articles/s41599-023-02320-7 என்ற தலைப்பில் நேச்சர் குழும இதழில் கடந்த டிசம்பர் மாதம் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இதற்கு முன்பாக சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தொடர்பாக Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics’ https://www.nature.com/articles/s41599-021-00868-w என்ற கட்டுரையைப் பதிப்பித்திருந்தார். அந்தக் கட்டுரையில், சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, தொல் திராவிட மொழியாக இருக்கலாம் எனக் கூறியிருந்தார்.

தற்போது அவர் பதிப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரை, சிந்துச் சமவெளி குறியீடுகள் தொடர்பாக பல புதிர்களை விடுவிக்க முயல்கிறது. சிந்துச் சமவெளியில் கிடைத்த குறியீடுகள் சொல்வது என்ன என்பதை துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாததற்கு அவர் சில காரணங்களை முன்வைக்கிறார்.

அதாவது, மிகக் குறைவாகவே இந்த எழுத்துகள் கிடைத்திருப்பது, பெரும்பாலும் மிகக் குறைவான எழுத்துக்களைக் கொண்ட வாக்கியங்களே கிடைத்திருப்பது (சராசரியாக ஐந்து குறியீடுகளைக் கொண்ட வாக்கியங்களே கிடைக்கின்றன. 50 வரிகள் மட்டுமே பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன), அந்த குறியீடுகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்பது தெரியாமல் இருப்பது, பிற்காலத்திய பிற மொழிகளுடன் அதற்கு தொடர்பு ஏதும் இருக்கிறதா என்பது தெளிவில்லாமல் இருப்பது, இந்த எழுத்துகள் உடனேயே வேறு மொழி எழுத்துகள் இல்லாமல் இருப்பது ஆகியவை இந்தக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றன என்கிறார் பஹதா.

சிந்துவெளி குறியீட்டு புதிரை விடுவிப்பது தொடர்பாக, அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஏற்கனவே சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிந்துவெளி குறியீடுகளைப் படித்தறியும் முயற்சிகளில், அந்த குறியீடுகளுக்கு ஒலி வடிவம் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை ஒலிகளைக் கொண்ட எழுத்துகள் அல்ல என்கிறார் ஆய்வாளர் பஹதா.

உண்மையில் சிந்துவெளிக் குறியீடுகள் சில நிர்வாக விதிகளை குறிக்கின்றன என்கிறார் அவர். விவசாயம், வர்த்தகம், உற்பத்தி தொடர்பான சில உத்தரவுகள், வரிகளை வசூலித்துக்கொண்டு, சில வர்த்தகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உத்தரவுகளைத்தான் இந்த குறியீடுகள் குறிக்கின்றன என்கிறார் பஹதா.

சிந்துச் சமவெளி குறியீடுகளைப் பொறுத்தவரை, சுமார் 600 – 700 ஆண்டுகளுக்கு, ஒட்டுமொத்த பத்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பிலும் ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் பல்வேறுவிதமான கலாசாரங்கள், மொழி வழக்குகள் இருந்திருக்கக்கூடும். அம்மாதிரி சூழலில், மொழிகளுக்கான எழுத்துகளைப் போல மிகச் சிக்கலான ஒரு குறியீடாக இந்த குறியீடுகள் இருந்திருக்க முடியாது என்கிறார் அவர்.

மெசபடோமியா, எகிப்து போன்ற இடங்களில் கிடைத்த முத்திரைகள், தனித் தனி நபர்களைக் குறிப்பவையாக இருந்தன. ஆனால், சிந்துச் சமவெளியில் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்கிறார் பஹதா. இதுதவிர, காலம் செல்லச் செல்ல சிந்துவெளி முத்திரைகளில் உள்ள குறியீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

உதாரணமாக, கி.மு. 2800க்கும் 2600க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த முத்திரைகளில் ஒன்றிரண்டு எழுத்துகள்தான் இருந்திருக்கின்றன. 2600க்கும் 2450க்கும் இடையில் இது 1-3ஆக அதிகரித்திருக்கிறது. 2450லிருந்து 1900க்கு இடைப்பட்ட காலத்தில் நீளமான குறியீட்டுத் தொடர்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

வேறு நாகரீகங்களில் கிடைத்த முத்திரைகள், கற்கள், மரம் போன்ற பல்வேறு பொருட்களில் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சிந்துவெளியில், அவை ஸ்டெடைட் எனும் பாறை, டெரகோட்டா, தாமிரம் ஆகியவற்றில் செய்யப்பட்டிருந்தன. ஆகவே அவை தனிநபர்களால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக ஒரு அதிகாரம் மிக்க குழுவால் தரப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டவை என்கிறார் பஹதா. இந்த முத்திரைகள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் தயாரிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்.

சிந்துச் சமவெளி

அதேபோல, இந்த முத்திரைகளை வழங்கும் அமைப்புகளின் பெயர்கள் இதில் இடம்பெறவில்லை என்றும் சொல்கிறார் பஹதா. காரணம், சிந்துவெளி என்பது சுமார் பத்து லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்திருந்த ஒரு நாகரீகம். ஆகவே ஒரு பகுதியில் உள்ள அமைப்பின் பெயர், மற்றொரு பகுதியில் புரியாமல் போகலாம். அதனால், ஒவ்வொரு அமைப்பும் காளை, ஆடு, புலி, தேள் போன்ற மிருகங்களின் உருவங்களை தங்கள் அடையாளமாகப் பயன்படுத்தின.

வேறு பல பழங்குடி, இனக் குழுக்களிடம் மிருகங்களின் பெயர்களைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதே போன்ற போக்கே இங்கும் இருந்தது என்கிறார் அவர். இந்த முத்திரைகளில், ஒற்றைக் கொம்புடைய மிருகத்தின் உருவம் கிட்டத்தட்ட 60 சதவீத முத்திரைகளில் காணப்படுகிறது. ஆகவே, அது ஒரு பிரபலமான வணிகக் குழுவின் முத்திரையாக இருக்கலாம்.

சிந்துச் சமவெளி முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறார் பஹதா. சிந்துச் சமவெளி நாகரீகத்தில் பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. அந்தப் பகுதியில் என்னவிதமான வர்த்தகம் நடைபெற்றதோ, யார் வலிமை வாய்ந்த வணிகக் குழுவாக இருந்தார்களோ அதற்கேற்றபடி முத்திரைகள் உருவாக்கப்பட்டன என்கிறார் பஹதா.

சில குறியீடுகள் ஒரே இடத்தில் அதிகம் கிடைக்கும்போது, அவை அந்த இடத்தைக் குறிப்பவையாகக் கருதப்படலாம் என முந்தைய ஆய்வாளர்கள் சிலர் கருதினர். ஆனால், அப்படியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் பஹதா. இன்னும் பல சிந்துச் சமவெளி தளங்கள் அகழாய்வு செய்யப்படாத நிலையில், சில இடங்களில் கிடைத்த முத்திரைகள், அந்த இடத்தின் பெயரைக் குறிப்பிடுவதாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர்.

மேலும், ஒரு பொருள் விற்கப்பட்ட அளவையோ, வாங்கப்பட்ட அளவையோ இந்தக் குறியீடுகள் குறிக்கவில்லை; ஏனென்றால் முத்திரைகள், குறியீடுகள் இடம்பெற்ற மண் பலகைகள் ஆகியவை ஏற்கனவே உருவாக்கப்பட்டவை.

அந்தந்த நேரத்து வர்க்கத்திற்கு ஏற்றபடி அவற்றில் குறியீடுகளை இடமுடியாது என்பது பஹதாவின் வாதம். இது தவிர, சில குறியீடுகள் ஒரு பொருளின் மீது விதிக்கப்பட்ட வரிகளைக் குறிக்கலாம். அதேபோல, மண் பலகைகளில் உள்ள எழுத்துகள் அவற்றை வைத்திருப்பவரின் அதிகாரபூர்வ பதவி, சலுகைகள், பொறுப்புகள், அதிகாரங்கள், உரிமங்கள் ஆகியவற்றைக் குறிக்கலாம் என்கிறார் பஹதா.

சிந்துச் சமவெளிப் பகுதி

சிந்துவெளி நகரங்களைச் சுற்றிக் கோட்டைச் சுவர்கள் இருந்தது எதற்காக?

சிந்துச் சமவெளியைப் பொறுத்தவரை அங்கு எதுபோன்ற அரசு இருந்தது என்பது இன்னும் விவாதத்திற்கு உரியதாகவே இருக்கிறது. ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு நகரமும் ஒரு நாட்டைப் போல செயல்பட்டிருக்கலாம். அல்லது அரசே இல்லாத நகரங்கள் இருந்திருக்கலாம். அல்லது இவை எல்லாமும் இருந்திருக்கலாம்.

ஆனால், இந்த நகரங்களைச் சுற்றிச் சுவர்கள், நகர்ப்புரத் திட்டமிடல், சுத்தமான நீருக்கான ஏற்பாடு, பொதுவாகக் குளிக்கும் இடங்கள் ஆகியவை இருந்தன என்பதால், பொது மக்களிடம் வரி விதித்தே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வரி விதிப்பு உற்பத்தியின்போது, விற்பனையின்போது, பொருட்கள் நகரத்திற்குள் வந்துசெல்லும்போது விதிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை சிக்கலான வரிவிதிப்பு முறைகள் என்பதால், அவற்றை எழுதி வைப்பதற்கான தேவை ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் குறியீடுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் பஹதா.

சிந்துச் சமவெளிப் பகுதிகளில் ஹரப்பா, மொஹஞ்ச – தாரோ, தோலவிரா, குன்டசி, சன்ஹுதாரோ, லோதல் போன்ற நகரங்களைச் சுற்றி சுவர்கள் இருந்தாலும் அவை பகைவரிடமிருந்து பாதுகாக்கும் அமைக்கப்படவில்லை. ஆகவே, அவை வரிவிதிப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பல கோட்டைச் சுவர்களில், நுழைவாயிலுக்கு அருகில் ஆட்கள் உட்கார்ந்து கண்காணிப்பதற்கான அறைகள் இருந்துள்ளன.

மேலும், வாயில்கள் ஒரு வண்டி செல்லும் அளவுக்கே இருந்துள்ளன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, வரிவிதிப்பதற்காக மட்டுமே இந்தச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கலாம். அகழாய்வின்போது இதுபோன்ற வாயில்களுக்கு அருகில் பல முத்திரைகள் கிடைத்திருப்பதும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

சிந்துச் சமவெளிப் பகுதி

சிந்துவெளி முத்திரைகளில் மதரீதியிலான அம்சங்கள் உண்டா?

எகிப்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களில் முத்திரைகள் கிடைத்துள்ளன. ஆனால், சிந்துவெளி நாகரீகத்தில் இறந்தவர்களுக்கு அருகில் வைக்கப்படும் பொருட்களில் இதுபோன்ற முத்திரைகள் இல்லை. மிகச் சில முத்திரைகள் தந்திரீகம், மதம் சார்ந்த உருவங்களைக் குறிப்பிடுவதைப் போல இருந்தாலும், அவை பெரிதும் நிர்வாகக் காரணங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மொஹஞ்சதாரோவில் இருந்த ஒரு கட்டடத்தை, ஜேன்சன் என்ற ஆய்வாளர் ஒரு வழிபாட்டுத் தலமாக இருக்கலாம் என அடையாளம் கண்டார். அங்கு சில முத்திரைகள் கிடைத்தன. ஆனால், இங்கு கிடைத்த முத்திரைகளும் வரி வசூலிக்கும் நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் பஹதா. காரணம், இந்த முத்திரை கிடைத்த இடத்திலேயே எடைக் கற்கள் போன்றவை கிடைத்திருப்பதையும் பழங்காலத்தில், இம்மாதிரி கோவில்கள் பொதுவாக கூடிப் பேசுவதற்கும் வரி குறித்து முடிவுசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது தவிர, இங்கு கிடைத்த முத்திரைகள் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முத்திரைகளாகவே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் குறியீடுகள் சில நேரங்களில் மத ரீதியிலான குறியீடுகளில் இருந்து கிடைத்திருக்கலாம். உதாரணமாக, இந்தியாவின் பழங்காலக் காசுகளில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது வெளியிட்டவர் மற்றும் பயன்படுத்துபவர்களின் மதநம்பிக்கையைக் குறிக்கிறது.

ஆனால், அதற்காக அந்தக் காசுகள் மத ரீதியான விஷயங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டன என்று சொல்ல முடியாது. அதேபோலத்தான், சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட வரி முத்திரைகள், உரிம முத்திரைகள் மதக் குறியீடுகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அவற்றின் பிரதான பயன்பாடு வர்த்தகத்திற்காக பயன்படுத்துவதுதான்” என பிபிசியிடம் தெரிவித்தார் பஹதா.

சிந்துச்சமவெளி நாகரீகம் அழிந்தபோது, அதனோடு சேர்ந்து இந்த வரி விதிப்பு முறையும் அழிந்துபோனது. மெசபடோமியாவில் இருந்த ‘பால’ என்ற வரிவிதிப்பு முறை அழிந்ததைப் போலத்தான் இங்கும் நடந்திருக்கிறது என்கிறார் பஹதா. இந்தக் குறியீடுகள் மதம் சார்ந்த குறியீடுகளாக இருந்திருந்தால், அந்த நாகரீகம் அழிந்த பிறகும் அந்தக் குறியீடுகள் நீடித்திருக்கக்கூடும் என்கிறார் அவர். அதேபோல, இடங்களின் பெயர்களையோ, ஆட்களின் பெயர்களையோ குறிப்பதாக இருந்தால் சிந்துவெளி நாகரீகம் அழிந்த பிறகும் அவை இடங்களின் பெயர்களைக் குறிக்க நீடித்திருக்கும்.

சிந்துச் சமவெளிப் பகுதி

சிந்துச் சமவெளிக் குறியீடுகள் அனைத்தையும் படித்துவிட முடியுமா?

இப்போது கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சிந்துவெளிக் குறியீடுகள் அனைத்தையும் படித்து, அவை ஒவ்வொன்றும் என்ன சொல்கின்றன எனத் தனித்தனியாக புரிந்துகொள்வது கடினம் என்கிறார் பஹதா.

இது குறித்துப் பிபிசியிடம் பேசிய அவர், “தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்துப் பார்த்தால், அவற்றை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால், நான் என் முந்தைய ஆய்வுகளில் சொன்னதைப் போல, இந்தக் குறியீடுகளை பல்வேறு குழுவாக வகைப்படுத்தலாம். இந்தக் குழுக்களுக்கு பொதுவாக ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு குழுவில் இருக்கக்கூடிய சில குறியீடுகளைப் புரிந்துகொண்டுவிட்டால், அதே குழுவில் இருக்கக்கூடிய பிற குறியீடுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை, ஐராவதம் மகாதேவன் நினைவு ஆய்வரங்கம் ஒன்றை நடத்தியது. அதில், தங்கம், விலை உயர்ந்த உலோகங்கள், தங்க நகை தொடர்பான பணிகள் குறித்த குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை இவர் தாக்கல் செய்திருக்கிறார்.

சிந்துச் சமவெளியில் இருந்து ஏன் குறியீடுகள் மட்டுமே கிடைக்கின்றன, அவை எழுத்துகளாக மாறாதது ஏன் என்பது மற்றொரு சுவாரஸ்யமான கேள்வி. “பழங்காலத்தில் தோல், ஓலைகள் போன்றவற்றில் எழுதப்பட்ட எழுத்துகள் நிலைத்திருப்பதில்லை. ஆனால், அதற்காக அப்படி எழுத்துகளே இல்லை என சொல்லிவிட முடியாது. பழங்கால கிரேக்கத்தின் Linear B என்ற எழுத்து ஒரு தீ விபத்தின் காரணமாகத்தான் நிலைத்துவிட்டது. அந்த எழுத்து எழுதப்பட்ட களிமண் பலகைகள், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்டன. அதனால், அவை வெந்து உறுதியான பலகைகளாக நிலைத்துவிட்டன. அவற்றைப் படித்தபோதுதான், அழிந்துபோன பொருட்களிலும் எழுதப்பட்ட பிற விஷயங்களைப் பற்றித் தெரியவந்தது. அதைப் போலவே, ஒலிகளைக் குறிக்கக்கூடிய எழுத்துகளும் சிந்துச் சமவெளியில் இருந்திருக்கலாம். அவை சிந்துவெளி முத்திரைகளின் தாக்கத்தில் உருவாகியிருக்கலாம். ஆனால், இப்போது கிடைத்திருப்பவை ஒலிக்குறியீடுகள் அல்ல. அவை வர்த்தக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குறியீடுகள். ப்ராமி, கரோஷ்டி போன்ற எழுத்துகளுக்கும் சிந்துச் சமவெளி குறியீடுகளுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றே சொல்லலாம்” என்கிறார் பஹதா.

சிந்துச் சமவெளிப் பகுதி

சிந்துவெளி குறியீடுகளைப் படிக்க முன்பு நடந்த முயற்சிகள்

பேராசிரியர் அஸ்கோ பர்போலாவும் இதற்கு முன்பாக சிந்துவெளிக் குறியீட்டுப் புதிரை விடுவிக்க முயற்சித்திருக்கிறார். 1994ல் ‘Deciphering the Indus Script’ என்ற பெயரில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டார். அதில், சிந்துவெளிக் குறியீடுகள், சித்திர எழுத்துகளாக இருக்கலாம் என்றும் ஒவ்வொரு குறியீடும் ஒரு அர்த்தத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், அவற்றுக்கு ஒலியும் உண்டு என்று அவர் கூறினார். ஆகவே, தனித்தனியாக இந்தக் குறியீடுகள் ஒரு அர்த்தத்தையும் சேர்ந்து ஒலிக்கும்போது ஒரு அர்த்தத்தையும் தருவதாக அவர் கருதினார். சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்பாக ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிந்து வெளிக் குறியீடுகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார். இது தொடர்பாக, The Indus Script : Texts, Concordance and Tables என்ற நூலையும் Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study என்ற நூலையும் அவர் எழுதியிருக்கிறார். திராவிட மொழி என்ற சட்டகத்திற்குள் இருந்தபடி, சிந்துவெளி குறியீடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதில் ஐராவதம் மகாதேவனின் பங்கு மிக முக்கியமானது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »