Press "Enter" to skip to content

கடற்கொள்ளையரிடமிருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய போர்க்கப்பல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடற்கொள்ளையரிடமிருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய போர்க்கப்பல்

சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா மீட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு எதிராக இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பல் மேற்கொள்ளும் இரண்டாவது மீட்பு நடவடிக்கை இது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்கொள்ளையர்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்காக சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடா கடல் பகுதிகளில் ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பல் பணியமர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி 29-ம் தேதி நேற்று திங்கள் கிழமை இரானைச் சேர்ந்த மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து சம்பந்தப்பட்ட கப்பலை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா சென்றது. அங்கே, கடற்கொள்ளையர்களிடம் சண்டையிட்டு மீன்பிடி படகையும் படகில் இருந்த 17 பேரையும் இந்திய கடற்படை மீட்டதாக ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது. 

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் இரானைச் சேர்ந்த அல் நயீமி (Al Naeemi) எனும் மற்றொரு மீன்பிடி படகையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பதாக ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பலுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கொச்சியில் இருந்து கிட்டத்தட்ட 850 நாட்டிக்கல் மைல்  தொலைவில் உள்ள இடத்தில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த அப்படகை மீட்க  ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பல்  விரைந்தது.

கடற்கொள்ளையர்கள் பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். இந்திய போர்க்கப்பல் வெற்றிகரமாக படகையும் படகில் இருந்து 19 பாகிஸ்தானியர்களையும் 11 சோமாலிய கொள்ளையர்களிடம் இருந்து மீட்டோம் என  இந்தியக்கடற்படை தெரிவித்துள்ளது.

முதலில், மீன் பிடி படகுகளை கடத்தி பிறகு அந்த படகுகளை பயன்படுத்தி பெரிய சரக்கு கப்பல்களை கடத்தும் கொள்ளையர்களின் திட்டத்தை தங்களது இந்த நடவடிக்கை முறியடித்திருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »