Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி குரூப்-4: காலி இடங்கள் 6,244 – விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள், வயது வரம்பு என்ன?

பட மூலாதாரம், TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘குரூப் – 4’ தேர்வுகளை நடத்தவிருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள், வயது வரம்பு என்ன?

குரூப்-4 தேர்வு அறிவிப்பு – கடைசி தேதி என்ன?

கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் – 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில், 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.

குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் ஆறாம் தேதிக்குள் அந்தத் திருத்தங்களைச் செய்ய வாய்ப்பளிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி காலை ஒன்பதரை மணி முதல் நண்பகல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

இதனை ஒருமுறை செய்தால் போதுமானது. தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்த பிறகே, விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

ஒரு முறை பதிவின் போது கவனிக்க வேண்டியவை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

பட மூலாதாரம், TNPSC

  • விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் தங்களுடைய தகவல்களை முதல் முறையாகப் பதிவுசெய்யும் போது, மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • இதில் பதிவு செய்வது, எந்தப் பதவிக்கும் விண்ணப்பிப்பது ஆகாது என்பதையும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரியும் மொபைல் எண்ணும் கண்டிப்பாகத் தேவை. மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்கள், புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
  • ஆதார் எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்.
  • இந்தத் தேர்வின் மூலம் வன காவலர், வன கண்காணிப்பாளர்(Forest Guard / Forest Watcher) ஆகிய பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. ஆகவே, விண்ணப்பத்தை நிரப்பும் போது இந்தப் பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கேற்றபடி தேர்வுசெய்ய வேண்டும்.
  • இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்போர், “Posts other than Forest Guard / Forest Watcher” என்ற வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • எல்லாப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், “All the Posts” என்ற வாய்ப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு பணியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்திருந்தாலும் இந்த எண்ணிக்கையை தேர்வாணையம் கூட்டவோ, குறைக்கவோ முடியும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

பட மூலாதாரம், TNPSC

தேர்வுத் தாள் எப்படி இருக்கும்?

  • எழுத்துத் தேர்வைப் பொருத்தவரை பகுதி – அ, பகுதி – ஆ (Part – A, Part – B) என இரு பிரிவுகளாக இருக்கும்.
  • இதில் பகுதி – அ (Part – A) என்பது தமிழ் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
  • பகுதி – ஆ (Part – B) என்பது பொது அறிவு மற்றும் பொதுத் திறன் தேர்வாக இருக்கும்.
  • Part – A கேள்வித் தாள் தமிழில் மட்டுமே இருக்கும். Part – B கேள்வித்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.
  • தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயம். ஆனால், Part A-ல் உள்ள தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரரின் Part – B விடைத்தாள் மட்டுமே மதிப்பிடப்படும்.

வயது வரம்பு எவ்வளவு?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

பட மூலாதாரம், TNPSC

  • கிராம நிர்வாக அதிகாரி, வனக் காவலர், வனப் பார்வையாளர் பதவி தவிர்த்த மற்ற பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியோர் முதல் 32 வயதுக்கு உட்பட்டோர் வரை விண்ணப்பிக்கலாம்.
  • கிராம நிர்வாக அதிகாரி, வனக்காவலர், வனப் பார்வையாளர் பணியிடங்களுக்கு மட்டும் 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
  • பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். குறிப்பாக பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 42 வயது வரை கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • சில பணியிடங்களுக்கு வயது வரம்பில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 60 வயது வரை கூட விண்ணப்பிக்க முடியும்.
  • மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள், கொத்தடிமையாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாக அரசுப் பணியில் இருப்போர் ஆகியோருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
  • விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் அனுமதிச்சீட்டுகள் இணையதளத்திலிருந்தே தரவிறக்கம் செய்யப்பட வேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
  • இந்தத் தேர்வுகளின் முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
  • ஒருவர் விண்ணப்பிக்கும்போது இரண்டு மாவட்டங்களைத் தேர்வு செய்யலாம். அதில் ஒரு மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் மட்டும் ஒரே ஒரு மாவட்டத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிப்போர் தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதனை கடன் அட்டை, பற்றுமதி (டெபிட்) அட்டை, இணைய வழி வங்கிச் சேவை ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். சில பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதி விலக்கு உண்டு.
  • தேர்வு நடக்கும் தினத்தில், தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேர்வு நடைபெறும் இடத்தின் பிரதான கதவு மூடப்படும். ஆகவே, அரை மணிநேரத்திற்கு முன்பாகவே, தேர்வு நடக்கும் இடத்திற்கு உள்ளே நுழைந்துவிட வேண்டும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »