Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் ‘சங்கி’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படும் காரணமும் பின்னணியும்

பட மூலாதாரம், Aishwaryaa Rajinikanth/Instagram

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தன் அப்பா சங்கி இல்லை எனக் கூறியிருந்தார். அதற்கு பாஜக,வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், தான் சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் எனக் கூறினார்.

தொடர்ந்து, இதுதொடர்பாக ஜனவரி 29 ஆம் தேதி ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்டபோது, சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை எனக் கூறினார்.

இந்நிலையில், தற்போது, சங்கி என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன, பெருமைக்குரிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதா?, இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதா, சங்கி என்பது உண்மையில் தமிழ் சொல்லா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இச்சொல்லை பயன்படுத்துவோரிடமும், தமிழ் அறிஞர்களிடமும் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், LYCA Production/ X

என்ன நடந்தது?

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் எனக் கூறியது, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது, ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தி சென்றது போன்றவற்றை வைத்து ரஜினியை ‘சங்கி’ என பலரும் சமூக ஊடகத்தில் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. அந்தப்படத்தில், மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில், நடிகர் ரஜினி கெளரவ வேடத்தில் நடத்துள்ளார்.

விழாவில் பேசிய ஐஸ்வர்யா, “அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால், அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார்.

அவர் மனிதநேயவாதி. இந்தப்படத்தில், அவரைத் தவிர, அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்கமாட்டார்கள். நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்,” என பேசினார்.

தொடர்ந்து, ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் கருத்து தொடர்பாக, பாஜக,வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசனிடம் கேட்டபோது, தான் ஒரு சங்கி என்பதில் பெருமை கொள்வதாகக் கூறினார்.

“பாஜகவுக்கு எதிரான கொள்கையை வைத்திருப்பவர்களும், எதிர்க் கருத்து வைத்திருப்பவர்களும் எங்களை இழிவுப்படுத்தும் ஒரு சொல்லாக ‘சங்கி’ என்பதை பயன்படுத்துகின்றனர். இது ரொம்ப நாளாகவே நடந்து கொண்டிருக்கிறது.

சங்கி என்றால் என்ன என்று நான் அர்த்தம் சொல்லட்டுமா? இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமசரம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி. அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்,” எனக் கூறினார்.

ஜனவரி 29 ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் கேட்டபோது, “சங்கி என்ற வார்த்தை கெட்டவார்த்தை அல்ல. எனது மகள் சரியாகவே பேசி உள்ளார். அப்பா ஆன்மீகவாதி, அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் பார்வை,” என்றார்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், RSS/X

சங்கி என்ற சொல் எப்படி வந்தது?

இதுகுறித்து தனியார் பல்கலையின் தமிழ் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய பல்கலையின் முதன்மையருமான(மாணவர் நலன்), தமிழரசியிடம் பேசினோம்.

அப்போது அவர், “அக்டோபர் மாதம் 1951 ஆம் ஆண்டு, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தினருடனான ஆலோசனைக்குப்பின், சியாமா பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜனதா சங்கம் நிறுவப்பட்டது. பாரதிய ஜனதா சங்கம் ஹிந்தியில் ‘ஜன சங்’ என அழைக்கப்பட்டது. அந்தக் கட்சியில் அங்கம் வகித்தவர்கள் தங்களைத் தாங்களே ‘சங்கி’ என்று அழைத்துக்கொண்டார்கள். அந்தப் பெயர் அவர்களுக்கு அவர்களே வைத்துக்கொண்டது,”என்றார் தமிழரசி.

மேலும், சங்கி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையும் இல்லை, சமஸ்கிருத வார்த்தையும் இல்லை என்றார், தமிழரசி.

“தற்காலத்தில் சங்கி என்பது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் பேசக்கூடிய அரசியல் கட்சி சார்புள்ளவர்களைக் கூறுகிறார்கள். முன்பு, ஒரு சங்கத்தில், அமைப்பில் இருந்தவர்கள் தங்களை சங் உறுப்பினர் – சங்கி என அடையாளப்படுத்திக் கொண்டனர்,”என்றார்.

மேலும், தற்காலத்தில் அரசியல் சூழலில் அது வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதேபோல, ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியரான திலீபன், சங்கி என்ற சொல் தற்காலத்தில்தான் அதிகம் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

“தமிழ்நாட்டில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு சொல் பயன்பாட்டிலேயே இல்லை. தமிழ் இலக்கியங்களில் கூட அப்படி ஒரு சொல் இல்லை.” என்றார் திலீபன்.

ஆனால், அந்த வார்த்தைக்கான பொருள் குறித்து கேட்டபோது, “மானுட மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சங்கி என்றார். அதனால்தான், பாஜக,வினரே அதனை பெருமையாகக் கூறுகிறார்கள். அவர்களின் கருத்துக்கு எதிராக இருப்பவர்கள், சங்கி என்ற சொல்லை இழி சொல்லாகப் பார்க்கிறார்கள்,” என்றார் திலீபன்.

ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

சங்கி என்பதில் பாஜக பெருமை கொள்வது ஏன்?

சங்கி என்பதில் பெருமைதான் என பாஜக,வின் வானதி ஸ்ரீநிவசான் கூறியிருந்தார். இதுகுறித்து பாஜக,வின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். அப்போது, அவர், சங்கி என்ற சொல் ‘அனுமன் சாலிசா’வில் நண்பன் என்ற பொருளில் வருவதால், எங்களுக்கு பெருமைதான் என்றார்.

அனுமன் சாலிசாவில் வரும்,

“மஹாவீர விக்ரம பஜரங்கீ

குமதி னிவார ஸூமதி கே ஸங்கீ”

என்ற பாடலைக் குறிப்பிட்டு பேசிய அவர், “ராமாயணத்தை ஹிந்தியில் எழுதியவர் துளசிதாசர். அனுமன் மீது இருந்த பக்தியால், அவர் அனுமன் சாலிசா எழுதியுள்ளார். அதில்தான் இந்தப் பாடல் வரும். இதில், ஸங்கி(சங்கி) என்ற சொல் வரும். இந்தப் பாடலில், நண்பன் என்ற பொருளில் அந்த சொல் வருகிறது. நற்சிந்தனைகளின் நண்பன் என்பதில் எங்களுக்கு பெருமைதான்,” என்றார் ஸ்ரீநிவாசன்

ரஜினிகாந்த் ஐஸ்வர்யா

பட மூலாதாரம், Aishwaryaa Rajinikanth/Instagram

‘சங்கி’ என்ற சொல் இழி சொல்லா?

சங்கி என்ற சொல் இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த எழுத்தாளர் வே மதிமாறன், அந்தச் சொல்லை பிரயோகப்படுத்தும் தொனியால், அது இழி சொல்லாகத் தெரிவதாகக் கூறினார்.

“மற்றபடி, சங்கி என்ற சொல்லை யாரும் உருவாக்கவில்லை. யாரும் யாருக்கும் சங்கி என்ற பெயரை வைக்கவில்லை. ஜன சங் அமைப்பில் தொடங்கி, பாஜக மற்றும் அதன் கிளை அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களை தாங்களேதான் சங்கி என அழைத்துக்கொண்டனர்,” என்றார்.

ஆனால், தற்காலத்தில், கட்சி, அமைப்பு சாராமல் பாஜக மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கருத்துகளுக்கு ஆதரவானவர்களையும் சங்கி என அழைப்பதாகக் கூறினார் மதிமாறன்.

“பாஜக மற்றும் அதன் சார்ப்பு அமைப்புகளில் இல்லாத நபர்கள், அவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துகளைப் பேசும்போது, அல்லது அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும்போது, அந்த சொல்லைப் பயன்படுத்தி அடையாளப்படுத்துகிறோம்,” என்றார் மதிமாறன்.

அந்த வார்த்தை ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களை மட்டும் அழைப்பதில் இருந்து, தற்போது, அந்த மனோபாவத்தில் இருப்பவர்களை அழைக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

“பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளை எதிர்க்கும் அமைப்புகளிலும், அந்த மனோபாவம் கொண்ட தனி நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை சங்கி என்று அடையாளப்படுத்தி அழைக்கிறோம்,” என்றார் மதிமாறன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »