Press "Enter" to skip to content

அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான் அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்குக் காரணமா?

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி முறிந்ததற்குக் காரணம் என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 107வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை எனக் கூறியதுதான் அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.

“அடுத்த முதலமைச்சராக வருவதற்கான தகுதி எடப்பாடியாருக்குத்தான் உண்டு என நாங்கள் சொல்கிறோம். ஆனால், பா.ஜ.கவில் அடுத்த பிரதமர் நரேந்திர மோதி, அடுத்த முதலமைச்சராக வருவதற்குத் தகுதி அண்ணாமலைக்குத்தான் உண்டு என்று சொன்னால், நாங்க என்ன வேறு கடையா வைத்திருக்கிறோம் (சவரம் செய்வதைப் போல செய்துகாட்டுகிறார்).”

“பழனிக்குக் காவடி தூக்கலாம். அண்ணாமலைக்குக் காவடி தூக்க முடியாது. அதனைக் கண்டியுங்கள், எடப்பாடி முதலமைச்சராக வருவதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று சொன்னால், அவர் கூடச் செல்பவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை என்கிறார்கள். நாங்கள் என்ன இளிச்ச வாயர்களா? இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கட்சித் தலைவர் நட்டாவிடமும் சொன்னோம். அதற்குப் பிறகு, பா.ஜ.கவோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்” என்று பேசியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு

பட மூலாதாரம், திண்டுக்கல் சீனிவாசன்/ X

அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் பேசியபோது, “நான் பேசியதில் புதிதாக எதுவுமே இல்லை. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. எங்களைப் பொறுத்தவரை, பிரதமராக நரேந்திர மோதி வரவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டோம். அதைச் சொல்லியும்வந்தோம். ஆனால், முதல்வராக எடப்பாடி கே. பழனிச்சாமிதான் இருப்பார் என்பது எங்கள் நிலைப்பாடு.”

“இதற்கு மாறாக, அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் வருங்கால முதலமைச்சர் அண்ணாமலை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்டபோதும்கூட, எங்கள் பிரதமர் மோதி, மற்ற விஷயங்களை பிறகு பேசிக்கொள்வோம் என்று மட்டும் சொன்னார். இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதால் கூட்டணி முறிந்தது. பொதுக் கூட்டத்திலும் இதைத்தான் பேசினேன். இது எல்லோருக்கும் தெரிந்த தகவல்தானே.. இதில் புதிதாக என்ன இருக்கிறது?” என்றார்.

நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், நாராயணன் திருப்பதி/Facebook

ஆனால், இதுபோல பொதுவெளியில் பேசும் பேச்சுகளையெல்லாம் கடந்ததுதான் கூட்டணி என்கிறார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளரான நாராயணன் திருப்பதி.

“கூட்டணியைப் பொறுத்தவரை அது தேர்தல் காலத்தில் மட்டும் இயங்கக்கூடியது. மற்ற காலகட்டங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்க்கவே விரும்புவார்கள். தங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், கட்சித் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்றுதான் பேசுவார்கள். பா.ஜ.க. மட்டுமல்ல, எல்லாக் கட்சியும் அப்படித்தான் நினைப்பார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்கூட, திருமாவளவன்தான் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்வார்கள். அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.கவினர் அப்படிச் சொல்வதில் என்ன தவறு?” என்கிறார்.

2019-ம் ஆண்டுத் தேர்தலில் இருந்து தொடர்ந்துவந்த பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி கடந்த 2023 செப்டம்பரில் முறிந்தது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கூட்டணியை முறித்தது அ.தி.மு.க.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு

“பா.ஜ.கவின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாகவே திட்டமிட்டு அண்ணாவையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசி வருவதோடு எங்களது கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது. மேலும் 20.8.2023ல் மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியதோடு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது” என்பதை கூட்டணி முறிவிற்கான காரணமாக அந்தத் தீர்மானத்தில் அ.தி.மு.க. கூறியது.

ஆனால், பா.ஜக. அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதே காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் இப்போது தெரிவித்திருக்கிறார்.

“சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது பா.ஜ.கவைப் பொறுத்தவரை, 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றிபெற்றாலும், தங்கள் கட்சியைச் சேர்ந்தவரைத்தான் முதலமைச்சராக்க வேண்டும் என விரும்பியது. அது அண்ணாமலையாக இருக்கலாம், அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். பா.ஜ.க. ஆட்சியமைக்கும்; அதற்கு அ.தி.மு.க. ஆதரவளிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் திட்டமாக இருந்தது. இது தெரிந்துதான் அ.தி.மு.க. உஷாராகிவிட்டது. இதைத்தான் திண்டுக்கல் சீனிவாசன் இப்போது குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு

பட மூலாதாரம், X

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றைத் தனித்தே சந்தித்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் நெருங்கிவந்தன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தமிழ்நாடு- புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் இந்தக் கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.

இதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்தது. இந்தக் கூட்டணி தோல்வியடைந்தாலும் பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களைக் கைப்பற்றியது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் தனித்தனியே போட்டியிட்டன.

இதற்குப் பிறகும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்தே செயல்பட்டுவந்தன. ஆனால், 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இரு கட்சிகளுக்கும் இடையில் விரிசல் ஏற்படத் துவங்கியது. முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துகளுக்கு அ.தி.மு.க. தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் உச்சகட்டமாக, செப்டம்பர் 25ஆம் தேதி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »