Press "Enter" to skip to content

நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க்கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

கடந்த டிசம்பர் மாதம் இரண்டு இளைஞர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து குழப்பம் விளைவித்த சம்பவ நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 5 பேர், காவல்துறை தங்களை 70 பக்க வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திடச் சொல்வதாகவும், மின்சாரத்தை உடலில் பாய்ச்சி கடுமையாகச் சித்ரவதை செய்வதாகவும் கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் அந்த மனுவில், “தங்களைக் கட்டாயப்படுத்தி, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் குற்றம் செய்ததாகவும், தங்களுக்கும் தேசிய கட்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கையெழுத்திட வைத்துள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

மேலும், இதில் இருவரை “தங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தொடர்பு இருப்பதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர்,” என்று தெரிவித்துள்ளனர்.

மனோரஞ்சன் டி, சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் ஆகியோரின் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்ட வாய்ப்பு’

நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க் கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐவரின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் அமித் ஷுக்லா, “இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது இதுபோன்ற உண்மைகள் எதையும் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர விரும்பினோம்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “பிணைக்கு விண்ணப்பிக்கும்போது இந்த உண்மைகளை நாங்கள் பயன்படுத்துவோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க அரசுத் தரப்பு கால அவகாசம் கேட்டுள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி அவர்கள் தங்களது பதிலை சமர்ப்பிப்பார்கள் என்றும் அமித் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” கண்டிப்பாக இந்தப் புகார்களை அவர்கள் நிராகரிக்கத்தான் போகிறார்கள். ஆனால், அவர்கள் அதை ஒப்புக்கொண்டாலும், இல்லை என்றாலும், இந்தச் சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்களை அவர்களது பழைய மற்றும் புதிய சிம் எண்களைத் தெரிந்து கொள்வதற்காக வோடோஃபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுக்கு காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று “எதிர்தரப்பு வழக்கறிஞருக்கும்” தெரியும் என்று கூறியுள்ளார் ஷுக்லா.

அதுகுறித்து அவர் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐவரும், தங்களது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கும் சட்டவிரோதிகள் அல்லது அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்ட வாய்ப்புள்ளதாகப் பயப்படுகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.

தங்களது ஈமெயில் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் பாஸ்வோர்டுகள் கட்டாயப்படுத்தி தங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், “டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி இது சட்டவிரோதமானது” என்று கூறுகிறார் வழக்கறிஞர் அமித் ஷுக்லா

டெல்லி காவல்துறை என்ன சொல்கிறது?

நாடாளுமன்றம்: அத்துமீறி நுழைந்த 6 பேரை எதிர்க் கட்சியுடன் தொடர்புபடுத்த சித்ரவதையா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

டெல்லி காவல்துறை சார்பில் ஆஜராகியுள்ள சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் அகண்ட் பிரதாப் சிங், “ இதற்கான சரியான பதிலை நாங்கள் தாக்கல் செய்வோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஏற்கெனவே இந்த விஷயம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்துவிட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களிடம் இதுகுறித்து நீதிபதி கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று அவர்கள் சொல்லிவிட்டனர்,” என்று தெரிவித்தார்.

ஜனவரி 13 விசாரணை குறித்துப் பேசிய அகண்ட் பிரதாப் சிங், “ஜனவரி 13ஆம் தேதி நீதிமன்றம் இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கேட்டபோது, தங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று கூறிய அவர்கள் டெல்லி காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டனர். அது ஜனவரி 13 பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலும்கூட பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.

ஆனால், காவல்துறை மீதான பயத்தால்தான் அவர்கள் நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்லவில்லை என்று கூறுகிறார் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞரான அமித் ஷுக்லா.

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

மேலும் பேசிய அவர், “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறாம் நபரான நீலம் ஆசாத் தன்னை 50 பக்க வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து போடுமாறு பெண் காவலர் வற்புறுத்தியதாகத் தெரிவித்த போதுதான் இந்த விஷயம் வெளியே வந்தது. அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் அதே சம்பவம் நடந்தது,” எனக் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

இந்த விஷயத்தை பதிவு செய்ய வேண்டுமென்று அமித் ஷுக்லா நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி விட்டார்கள்.

அதற்குக் காரணம், அன்று அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்ததுதான் என்கிறார் அமைத்து ஷுக்லா.

“இந்தச் சமபவத்திற்குப் பிறகு அவர்களை சிறையில் சந்தித்தபோது, எதையும் சொல்லக்கூடாது என்று தாங்கள் மிரட்டப்பட்டுள்ளதாக” தன்னிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

இதை விவரித்த அமித் ஷுக்லா “ஜனவரி 13ஆம் தேதி அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தனர். ஆனால், அதே நாளில் அவர்களின் காவல்துறை கட்டுப்பாடு முடிவுற்று நீதிமன்ற காவல் தொடங்கியது. அப்போது அவர்களைப் பார்த்தபோது எல்லா உண்மைகளையும் தெரிவித்தனர்,” என்று கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், ANI

புதன்கிழமை நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேரின் நீதிமன்ற காவலை நீட்டிக்குமாறு டெல்லி காவல்துறை கோரிக்கை வைத்தது. அதை ஏற்று மார்ச் 1 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் அகண்ட் பிரதாப் சிங், “விசாரணை இன்னும் நடந்து வருகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை வெளியே விட்டால் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், ஆதாரங்களை அளிக்கவும் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2001 டிசம்பர் 13 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் 22வது நினைவு தினத்திலேயே, இந்த 6 பேரும் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

இதில் மனோரஞ்சன் டி, சாகர் சர்மா ஆகிய இருவரும் எம்பிக்கள் இருக்கை வரை சென்று முழக்கங்களை எழுப்பி, புகையைப் பரவச் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் நீலம், அமோல் ஷிண்டே ஆகிய இருவரும் நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று முழக்கங்களை எழுப்பியதற்காகவும், வண்ணப்புகையை பரவச் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இருவரான மகேஷ் குமாவத், லலித் ஜா ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா ஓர் ஆசிரியர். இவரே நாடாளுமன்றத்தின் பாதுகாப்புகளை மீறுவதற்கான திட்டத்தில் குமாவத்துக்கு உதவி செய்துள்ளார்.

காவல்துறை விசாரணையில், தாங்கள் வேலையில்லாதவர்கள் என்றும் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காகவே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரின் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இவர்களுக்காக ஆஜராகும் அமித் ஷுக்லா, தனக்கு இன்னும் முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »