Press "Enter" to skip to content

நரேந்திர மோதி வெகுவாகப் பாராட்டும் வரவு செலவுத் திட்டம் பற்றி பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று (வியாழன், பிப்ரவரி 1) மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்

இந்த நிதி நிலை அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். அதன்படி, 1962ஆம் ஆண்டு முதல் 2009-2010ஆம் ஆண்டு வரையிலான நிலுவையில் உள்ள 25,000 ரூபாய் வரையிலான தாவாக்கள் உடனடியாகத் தீர்க்கப்படும். 2010 – 2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் 10,000 ரூபாய் வரையிலான தாவாக்கள் தீர்க்கப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.

300 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் சோலார் பேனல்கள் ஒரு கோடி வீட்டிற்குத் தரப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். மேலும், நாடு முழுவதும் ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளைப் பயன்படுத்தி கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படும்.

தொடர்வண்டித் துறை திட்டங்களைப் பொறுத்தவரை, 40,000 சாதாரண தொடர் வண்டிபெட்டிகள் வந்தே பாரத் தொடர் வண்டிபெட்டிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். வருமான வரி வரம்பு ஏதும் உயர்த்தப்படவில்லை. கார்ப்பரேட் வரி 22% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

இடைக்கால நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், JOTHI SIVAGNANAM / LINKEDIN

இடைக்கால அறிக்கை

இது இடைக்கால அறிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிதிநிலை அறிக்கை இல்லை என்கிறார் பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

“இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, கவனிக்க வேண்டிய முதல் விஷயம், இது இடைக்கால நிதி நிலை அறிக்கை என்பது. இது வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய நிதிநிலை அறிக்கைதான். ஜூன் மாதம் புதிதாக பதவியேற்கும் அரசுதான் முழுமையான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும். ஆகவே பெரிய முக்கியத்துவத்தை இதற்கு அளிக்க வேண்டியதில்லை.”

“இந்த நிதி நிலை அறிக்கை தேர்தலுக்கு முந்தைய நிதி நிலை அறிக்கை என்பதால் சில சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை. மேலும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்படவில்லை” என்கிறார் ஜோதி சிவஞானம்.

நிதிப் பற்றாக்குறை குறைப்பு

இந்த நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ. 30.80 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரி வருவாய் மட்டும் ரூ. 26.02 லட்சம் கோடியாக இருக்கும். மொத்தச் செலவு ரூ. 47.66 லட்சம் கோடியாக இருக்கும்.

2024-25ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1%ஆக இருக்கும். கடந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் இது 0.7 சதவீதம் குறையும் என கணிக்கப்படுகிறது.

இடைக்கால நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், ANAND SRINIVASAN / LINKEDIN

நிதிநிலை அறிக்கைக்கு என்ன முக்கியத்துவம்?

பெரும்பாலான அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கைக்கு வெளியில் செய்துவிட்ட நிலையில், நிதிநிலை அறிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது எனக் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

“22 ஜனவரியன்று, தங்கத்தில் செய்யப்படும் கம்பி, ஊக்கு என்பதற்கெல்லாம் எக்ஸைஸ் வரி 10லிருந்து 15 சதவீதமாக்கப்பட்டது. பத்து நாட்களில் நிதி நிலை அறிக்கை தாக்கல்செய்யப்படவிருக்கும் நிலையில், இது போன்ற அறிவிப்பு நிதி நிலை அறிக்கைக்கு வெளியில் எதற்காக செய்யப்படுகிறது?” என்கிறார் அவர்.

தவிர, இதுபோன்ற ‘செஸ்கள்’ எதற்காக வசூலிக்கப் படுகின்றவோ. அதற்காக செலவழிக்கப்படுவதில்லை என சிஏஜி சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

வருவாய் பற்றாக்குறை இந்த நிதியாண்டில் குறையும் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் அல்ல என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். “பற்றாக்குறை எப்படிக் குறையும்? செலவை அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், விலைவாசி 6-7 சதவீதம் அதிகரிக்கிறது. பணவீக்கத்தில் வருவாய் சற்று அதிகரிக்கும். இதனால் பற்றாக்குறை குறையும் என்கிறார்கள். தவிர, இதுவரை அவர் சொன்னதைப் போல பற்றாக்குறை குறிப்பிட்ட அளவில் நின்றதே கிடையாது” என்கிறார் அவர்.

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் ஜோதி சிவஞானம். “இது வெறும் மூன்று மாதங்களுக்கான கணிப்புதான். ஆண்டு முழுமைக்குமான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வரும்போதுதான் உண்மையான நிதிப் பற்றாக்குறை தெரியும்” என்கிறார் ஜோதி சிவஞானம்.

பற்றாக்குறையும் கடனும் பெரிய அளவில் இருக்கும் நிலையில், ஏதற்காக கார்ப்பரேட் வரி குறைக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்புகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

“மன்மோகன் சிங் காலத்தில் 40 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரி, 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரியைக் குறைத்தால் அதில் சேமிக்கப்படும் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மறு முதலீடு செய்யும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி ஏதும் நடக்கவில்லை. தனியார் முதலீடு மிகக் குறைவாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இந்த நிதிநிலை அறிக்கையை பிரதமர் நரேந்திர மோதி வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். “2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளித்துள்ளது. ஆய்வுகளுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் ஏழைகளுக்காக மேலும் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது” என பிரதமர் மோதி தெரிவித்திருக்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »