Press "Enter" to skip to content

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

பட மூலாதாரம், AGS

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :

“விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

“தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. “

“ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. “

“மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.”

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

‘2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு’

“இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM

‘திரைப்படத்தில்ிருந்து விலகுகிறேன்’

அந்த அறிக்கையில் மேலும், “இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.” என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்

பட மூலாதாரம், PIB ARCHIVE

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

சர்ச்சையில் சிக்கிய விஜயின் திரைப்படங்கள்

2011ல் விஜயின் ‘காவலன்’ திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் ‘இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்’ என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நேரத்தில் விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். ‘தலைவா’ பிரச்சனையில் தலையிட்டு அம்மா வெளியீடு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.

விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM

கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை வெளியீடு செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஒலிநாடா வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.

அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் விளம்பர ஒட்டிகள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜய்

பட மூலாதாரம், YOUTUBE/SONY MUSIC INDIA

தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »