Press "Enter" to skip to content

‘விஜய் தரப்போகும் மாற்றம் என்ன?’ – புதிய கட்சி பற்றிய அரசியல் நோக்கர்களின் பார்வை

பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM

தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது அறிக்கை மூலம் கட்சியின் பெயர், நோக்கம் மற்றும் கொள்கைகளை அறிவித்துள்ள விஜய்தான் நேற்று முதல் இந்திய மிகுதியாக பகிரப்பட்டுகில் முதலிடம்.

இதற்கு முன்பே விஜயகாந்த், கமலஹாசன் என திரைத்துறையின் சமகால உச்சங்களும் இதேபோன்ற கொள்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் புதிய கட்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அவர்களில் இருந்து விஜய் எங்கு வேறுபடுகிறார்? அவரது புதிய கட்சியின் மூலம் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்களை தமிழ்நாட்டில் கொண்டு வர நினைக்கிறார்?

நடிகர் விஜயின் புதிய கட்சி

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், VIJAY / TWITTER

நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து புதிய கட்சியைத் தொடங்கியதோடு, அதுகுறித்த தனது அறிக்கையில் நடப்பு அரசியலை விமர்சித்துள்ளார்.

அதில் “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும், மதம் சார்ந்த பிளவு அரசியலும் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழக மக்கள் “ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச – ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை,” என்றும் தெரிவித்துள்ளார்.

அதில் எந்தக் கட்சியின் பெயர்களையும் குறிப்பிட்டு விஜய் விமர்சனம் செய்யவில்லை என்றாலும், “மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவையும், ஊழல் அரசியல் செய்யும் திமுக மற்றும் அதிமுகவையும் எதிர்த்து மாற்று அரசியலைக் கொண்டு வருவதே தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம்” என்று கூறுகிறார் அக்கட்சியைச் சேர்ந்த லயோலா மணி.

ஆனால், விஜய் ஒரு டெம்ப்ளேட்டிவ்(Template) அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கிறாரே தவிர, ஒரு மாற்று அரசியலை முன்வைக்கவில்லை என்று கூறுகிறார் வலைப்பேச்சு அந்தணன்.

விஜய் என்ன மாற்றம் தரப் போகிறார்?

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், ANTHANAN

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பதாகவும், அதற்காக மக்கள் சக்தியுடன் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரப் போவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுவரை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் செய்த சமூக சேவைகளைப் பட்டியலிட்டு, இனி அரசியல் ரீதியாகவும் தொண்டாற்றவே புதிய கட்சியைத் தொடங்குகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்தணன் அவர்களிடம் கேட்கும்போது, “ஒருவர் அரசியலுக்கு வரும்போது அதற்கான திறனோடு வருகிறாரா, இல்லையா என்று ஆரம்ப நிலையிலேயே தெரிந்து விடும். ஆனால், அப்படி எந்தத் திறனும் விஜயிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் இதுவரை அறிவித்த திட்டங்கள் அனைத்துமே பம்மாத்து திட்டங்கள் மட்டுமே,” என்று கூறுகிறார்.

அதற்கு உதாரணமாக விஜய் தொடங்கிய இரவுப் பாடசாலை திட்டத்தைக் குறிப்பிடும் அவர், அது உண்மையில் யாருக்குத் தேவையோ அவர்களைச் சென்றடையவில்லை என்றும், ஓர் அறிவிப்பை விடுத்துவிட்டு அதற்காக பயனே இல்லாத வேலையைச் செய்து அதை முடித்து விடுவதே இவர்கள் பாணியாக இருக்கிறது என்கிறார்.

மேலும் விஜயகாந்திடம்கூட வீட்டிற்கே வந்து ரேஷன் வழங்கப்படும் போன்ற சில நல்ல திட்டங்கள் இருந்தன. ஆனால் விஜயிடம் அப்படி எந்த மக்கள் நலத் திட்டமும் இல்லை. எனவே இவர்களிடம் ஒரு மாற்றத்திற்கான அரசியலை நம்மால் எதிர்பார்க்க முடியாது என்கிறார் அந்தணன்.

என்ன மாற்றம் கொண்டு வரப் போகிறார்கள்?

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், A S PANEERSELVAN / TWITTER

மாற்றம் கொண்டு வருகிறேன் என்று சொல்லாமல் யாராலும் அரசியலுக்குள் வர முடியாது. ஆனால் அது என்ன மாதிரியான மாற்றம் என்பதுதான் முக்கியம், அது வெற்றுக் கோஷமா அல்லது உண்மையான கொள்கையா என்பதும் முக்கியம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

இதற்கு உதாரணம் கூறும் அவர், “கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலைக்கு தமிழ்நாடு எப்படி உயர்ந்தது? இந்தப் பார்வை உங்களுக்கு இருக்க வேண்டுமல்லவா?”

“அந்தப் பார்வை இல்லாமல் நீங்கள் என்ன மாற்றம், எதில் கொண்டு வர போகிறீர்கள். கல்வியிலா? தொழில்துறையிலா? மக்கள்நல கட்டமைப்பிலா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

மேலும், மாற்றம் என்றால் தமிழ்நாட்டிற்கா? அல்லது தேசிய அரசியலுக்கா? அப்படியென்றால் இன்று இந்தியாவிற்கான பெரிய சவால் என்பது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல். அதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதை நீங்கள் சொல்லவில்லை என்பதே உங்களிடம் தெளிவில்லை என்பதற்கான அர்த்தம் என விமர்சிக்கிறார்.

எனவே இவர்களது அறிக்கையில் மாற்றம் என்பது வெறுமையானதாக இருக்கிறது என்கிறார் அவர்.

மேலும் பேசிய அவர், “மாநில உரிமை குறித்த விவாதம் 1947ஆம் ஆண்டிலிருந்து எழும் குரல். இதில் நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்? இதர அரசியல் சூழல், மக்கள் நலன் சார்ந்து என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்? தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் கொள்கை முடிவுகள் என்ன என்ற தெளிவே இவர்களிடத்தில் இல்லை,” என்கிறார்.

ஆனால், புதிதாகத் தொடங்கியுள்ள கட்சி மீது இவ்வளவு அழுத்தம் போட முடியுமா என்று கேட்கும்போது, “ஆரம்பிக்கும் போதுதான் போட முடியும். ஆரம்பிக்கும்போதே தெளிவு இல்லை என்றால் அது கடைசி வரை வரவே வராது” என்கிறார் பன்னீர்செல்வன்.

விஜய் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், LOYOLA MANI

தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் யார் என்ற விவரங்கள், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் சார்ந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால், 25.01.2024 நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசமைப்பு சட்டம் மற்றும் சட்ட விதிகளுக்கு (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் விஜய்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பெரிய மாநாடு நடத்தி கட்சியின் கொள்கை, கொடி, எதிர்கால மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என்றார் லயோலா மணி.

‘கட்சியே மாற்றம் தான்’

விஜய் என்ன மாற்றங்களை உருவாக்கப் போகிறார் என்ற கேள்வியை முன்வைத்தபோது, “ஊழல் மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராக தளபதி விஜய் இந்தக் கட்சியைத் தொடங்கியதே அடுத்த தலைமுறைக்கான முதல் மாற்றம்,” என்று கூறுகிறார் லயோலா மணி.

மேலும் பேசிய அவர், “ஏற்கெனவே கட்சியின் தலைவர் தளபதி விஜய், எங்களுடைய சித்தாந்தம் பெரியாரிய சமூகநீதி அரசியல், அம்பேத்கரிய சமத்துவ அரசியல், திராவிட, தமிழ்த்தேசிய கோட்பாடுகளை உள்ளடக்கிய அரசியலே என அறிவித்துவிட்டார்,” என்கிறார்.

மேலும் இத்தனை ஆண்டுகளாக சமூகநீதி என்ற பெயரில் மாற்றம் எதையும் கொண்டு வராமல் குடும்ப அரசியல் செய்யும் திமுக, மதவாத அரசியல் செய்யும் பாஜகவை எதிர்த்து 2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவிரல் புரட்சி செய்வதே தங்களின் தற்போதைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதில் விஜயுடன் இருக்கும் தொண்டர்கள் மற்றும் தம்பி, தங்கைகள் அனைவருமே விளிம்பு நிலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அரசியல் மாற்றத்திற்கான அடுத்தபடி என்கிறார் மணி.

மாற்றங்களைச் சாத்தியப்படுத்துவாரா விஜய்?

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM

ஒரு கட்சியின் இலக்குகளைச் சாத்தியப்படுத்த அதன் அடுக்குகள் மிக அவசியமானவை. அந்த வகையில் தனது மக்கள் இயக்கத்தை நம்பி களத்தில் இறங்கியிருக்கும் நடிகர் விஜய்தான் நினைக்கும் மாற்றங்களை எப்படி சாத்தியப்படுத்துவார் என்ற கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அந்தணன், “அறிவார்ந்த தலைவர்கள் யாருமே தமிழக வெற்றிக் கழகத்தில் கிடையாது. அதிலும் புஸ்ஸி ஆனந்தெல்லாம் ஒரு கோமாளி போலத்தான் இருக்கிறார். அவரையெல்லாம் ஒரு அரசியல் தலைவர் என்றே சொல்ல முடியாது,” என்கிறார்.

மேலும் பேசிய அவர், “ஆனாலும் அவரது தொண்டர் படைகளை வைத்துக் கொண்டு நிச்சயம் அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். காரணம் அவர் ரஜினியைப் போலன்றி, சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்துள்ளார்.

அவரது வருகை அனைத்து கட்சி மீதும் தாக்கம் செலுத்தும். தமிழ்நாடு அரசியலை சற்று உலுக்கும். ஆனால் இந்தக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு வெற்றியெல்லாம் பெற முடியாது,” என்கிறார்.

விஜயும் ஒரு “பி” டீம் தான்

தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இல்லாமல் 12% வாக்கு வங்கி உள்ளது. அதைக் குறிவைத்துதான் மூப்பனார், வைகோ, விஜயகாந்த் எனப் பலரின் அரசியல் பயணித்துள்ளது. அதை நோக்கித்தான் விஜயும் கட்சி தொடங்கியுள்ளார் என்கிறார் பன்னீர்செல்வன்.

மேலும் ஒரு படிமேலே சென்று, “தற்போது இந்தியா கூட்டணிக்கு எதிராக வாக்குகளைச் சிதறடிப்பதற்கான ஒன்றிய அரசின் முயற்சியாகவே விஜய் களமிறக்கப் பட்டுள்ளாரோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது,” என்றும் அவர் கூறுகிறார்.

அதற்குக் காரணமாக “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் எதற்காக இப்போதே கட்சி தொடங்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். “இவர்கள் கட்சி தொடங்கிய நேரமே சந்தேகத்தைக் கிளப்புகிறது.”

“ஆம் ஆத்மியின் ஊழல் நிலைப்பாடு, இடதுசாரிகளின் மதவாத எதிர்ப்பு, திமுகவின் மாநில உரிமை கொள்கை என எல்லாவற்றையும் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் ஸ்பெக்ட்ரமுக்குமே ‘பி’ டீம்” என்று காட்டமாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்து பிபிசி தமிழிடம் பேசிய‌ லயோலா மணி, “இவர்கள் திமுகவிற்கு எதிராக யாராவது பேசினாலே பாஜகவின் ‘பி‌‌’ டீம் எனச் சொல்லி‌ விடுகிறார்கள். ஆனால், உண்மையில் திமுகதான் பாஜகவின் ‘பி’ டீம். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சி,” என்று தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »