Press "Enter" to skip to content

‘சாதி, மதம் அற்றவர்’ சான்றிதழால் வாரிசுரிமை, இட ஒதுக்கீட்டிற்கு என்ன சிக்கல்? உயர் நீதிமன்ற தீர்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

சாதி, மத பிரிவினைகளுக்கு எதிராக சிந்திக்கும் சிலர், தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ‘சாதி, மதம் அற்றவர்’ என அரசிடம் சான்று வாங்கிக் கொண்டு அதனை வெளிப்படையாக்கி கவனம் ஈர்த்தனர். இது தொடர்பானதொரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எண்ணம் நல்லதாக இருந்தாலும் அதுபோன்ற சான்றினை அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு சொல்வது என்ன?

திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ், ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அதுபோன்ற சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

“ஒரு நல்ல குடிமகனாக இருப்பது நமது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும். இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51 (ஏ) இன் கீழ் இருக்கும் கடமையாகும். “எந்த மதமும் சாதியும் இல்லை” என்ற சான்றிதழைப் பெற வேண்டும் என்ற மனுதாரரின் விருப்பம் பாராட்டுதலுக்குரியது. ஆனால் அத்தகைய சான்றிதழை வழங்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் வட்டாட்சியரால் அத்தகைய சான்றிதழை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது” என சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது.

மேலும், “வட்டாட்சியருக்கு அத்தகைய அதிகாரம் எதுவும் சட்டத்தால் வழங்கப்படாத நிலையில், அத்தகைய சான்றிதழ்களை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசாணைகளின்படி பட்டியலிடப்பட்ட சான்றிதழ்களை மட்டுமே வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் உண்டு” எனும் அந்த தீர்ப்பில், அவ்வாறான சான்றுகள் இட ஒதுக்கீட்டை, வாரிசு உரிமைகளை பாதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. “சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் சில வாரிசுரிமை மற்றும் இடஒதுக்கீட்டில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்று நீதிமன்றம் கூறுகிறது.

“இடஒதுக்கீட்டின் விதிகள் குடிமக்களால் பயன்படுத்தப்படுகின்றன, எனவே பின்விளைவுகளையும் விளைவுகளையும் புரிந்து கொள்ளாமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டால், அது எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்” என்றார்.

வார்த்தையில் கடுமை தேவையில்லை என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு,”மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கி வந்தனர். இதுபோன்ற சான்றிதழ்களை வழங்க அவர்களுக்கு அரசு உத்தரவு எதுவும் இல்லை. வருவாய் துறையின் ஆணைகள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். இதுபோன்ற சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படாதவை என்று நீதிபதி கூறியது சரிதான். ஆனால் அவர் தேவையின்றி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.” என்றார்.

சாதி இல்லை மதம் இல்லை

பட மூலாதாரம், Facebook/Chandru Krishnaswamy

இதுவரை வழங்கப்பட்ட சான்றுகள் செல்லுமா?

நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இதுவரை வாங்கப்பட்ட சான்றுகள் செல்லாமல் ஆகவில்லை என்கிறார் வழக்கறிஞர் ஸ்னேகா, இந்தியாவில் முதன் முதலில் ‘சாதி, மதம் அற்றவர்’ சான்றிதழை பெற்ற திருப்பத்தூரை சேர்ந்த அவர் இதனால் இட ஒதுக்கீடு பாதிக்காது என்கிறார். “வருவாய் வட்டாட்சியருக்கு ‘இதர’ என்ற பிரிவில் வட்டாட்சியர் சுயமாக சான்றிதழ்களை வழங்க அதிகாரம் உள்ளது. அப்படி தான் எனது சான்றிதழ் 2019ல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இது வரை சுமார்30 முதல் 40 பேர் இந்த சான்றிதழ்களை பெற்றிருந்தனர்.

‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்று கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. பள்ளிகளில் ‘சாதி இல்லை, மதம் இல்லை’ என்று கூறிக் கொள்ளும் உரிமை ஏற்கனவே இருக்கிறது. அப்படி எனில், அதை சான்றிதழாக கொடுத்தால் மட்டும் இட ஒதுக்கீடு எப்படி பாதிக்கப்படும்?

இட ஒதுக்கீடு கொள்கை கண்டிப்பாக அவசியம். ஆனால் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முன் வந்து கூறும் கிரீமி லேயர், அல்லது முன்னேறிய வகுப்பினர் சாதி இல்லை, மதம் இல்லை என்ற சான்றிதழை ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது? சிலிண்டர் எரிவாயு மானியத்தை முடிந்தவர்கள் விட்டுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறுவது போல தான் இது. ” என்கிறார்.

சாதி இல்லை மதம் இல்லை

பட மூலாதாரம், Facebook/SnehaParthibaraja

மேலும், “பட்டியல் பிரிவு இந்துக்கள் கிறித்தவர்களாக மாறினால், அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக மாறிவிடுகிறார்கள். இதற்கு எல்லாம் சட்டத்தில் வழிகள் இருக்கும் போது, ஏன் இதற்கு இருக்கக் கூடாது?

இந்த சான்றிதழ் வழங்குவதால், சொத்துரிமை, வாரிசுரிமை சட்டங்கள் பாதிக்கப்படாது. ஏனென்றால், இந்து சட்டப்படி, கிறித்தவர்கள் அல்லாத, இஸ்லாமியர்கள் அல்லாத அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்” என்று தனது வாதங்களை அடுக்கினார்.

மதம் இல்லை என சொல்வது வாரிசுரிமையை பாதிக்கும் என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, “எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் மறுக்கப்படும் அபாயம் உள்ளது. உதாரணமாக, சொத்து பகிர்வு பற்றி நமக்கு எந்த சிவில் சட்டமும் இல்லை. நீங்கள் இந்துவாக இல்லாவிட்டால், உங்கள் பெற்றோர்களின் சொத்துகள் அவர்கள் இறந்த பிறகு தானாக கிடைக்கும் உரிமை மறுக்கப்படலாம். எனவே சட்டம் இல்லாத வரை சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். இந்து மதத்தில் நீங்கள் இந்து என்று சான்றிதழ் வழங்க எந்த நிறுவனமும் இல்லை. அதேபோல், நான் இந்து இல்லை என்று கூறி சான்றிதழ் பெற முடியாது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த எண்ணிக்கையை கணக்கிட இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. அந்த நேரத்தில் உங்களுக்கு சாதி அல்லது மதம் இல்லை என்று நீங்கள் அறிவிக்கலாம்.” என்றார்.

சாதிக்கு எதிரான முடிவா?

சாதி இல்லை மதம் இல்லை

“சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெறுவதை சமூக மாற்றத்துக்கான செயலாக நான் பார்க்கவில்லை” என்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான அஜிதா கூறினார். மேலும் அவர்,”இந்த செயலை முன்னேறிய வகுப்பினர், சாதியினர், சாதிய கட்டமைப்பின் காரணமாக ஒடுக்கப்பட்டு வரும் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்கும் செயலாக தான் பார்க்கிறேன். எனவே இதை பிரசாரம் செய்து இயக்கமாக எடுத்து செல்லக் கூடிய விசயம் அல்ல இது” என்று கூறினார்.

சாதி பற்று உள்ளவர்களே இதனை எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறார் இதேபோன்ற சான்றை பெற்றுள்ள சேலம் ஆத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் வீ.கார்த்திக், “நான் ஏற்கனெவே கொண்டிருந்த சாதி சான்றிதழை திருப்பி அளித்து விட்டு, சாதி இல்லை மதம் இல்லை என்ற சான்றிதழை பெற்றேன். நான் சட்டப்படிப்பில் சேரும் போது இந்த சான்றிதழை சமர்ப்பித்து இருக்கிறேன். சாதி மத சார்பில்லாத இந்தியாவில், நானும் அப்படியே இருக்க விரும்பினேன். இந்த சான்றிதழ் பெறுவதற்காக ஒரு மாதம் தாசில்தார் அலுவலகத்துக்கு அலைந்தேன். முதலில் என்னை விசித்திரமாக பார்த்தார்கள். அதிகாரிகள் பல கட்ட விசாரணைகள் நடத்திய பிறகே, இந்த சான்றிதழை தர ஒப்புக் கொண்டனர்” என்றார்.

தொடரும் சட்ட போராட்டம்!

சாதியற்றவள் என்ற அடையாளத்தை தக்க வைக்க விரும்புவதாக கூறும் ஸ்னேகா, ” சாதி சான்றிதழ் அச்சிடப்படும் காகிதம் தயாரிக்கும் முன்பே, உலகில் சாதி தோன்றிவிட்டது. சாதி சான்றிதழால் சாதியை ஒழிக்க முடியாது. அதே சமயம் இட ஒதுக்கீட்டின் மூலமும், சாதியை ஒழிக்க முடியாது. நான் எனக்கு மட்டும் தான் சாதி சான்றிதழ் பெற்றுள்ளேன். எனது பிள்ளைகளுக்கு நான் பெறவில்லை. அது அவர்களின் முடிவு. ஆனால் நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதம் இல்லை, சாதி இல்லை என்ற சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த குழந்தைகள் பின்னர் வேண்டுமானால், அந்த சான்றிதழை ரத்து செய்துக் கொள்ளலாம். சொந்த வாழ்க்கையில் பின்பற்றினால் அதையே ஏன் சான்றிதழாக வாங்கக் கூடாது? சாதியை சான்றிதழில் பெற்று அதை அடையாளமாக வைத்துக் கொள்கிறார்களே, நான் சாதியற்றவள் என எனது அடையாளத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுகிறார்.

உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் சில விளக்கங்களை வழங்கியுள்ளது, “சாதி குறிப்பிட ஒருவர் விரும்பவில்லை என்றால், பள்ளி சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழில் எதுவும் நிரப்பாமல் காலியாக விடலாம். கல்வித்துறை இதற்கான அரசாணையை 1973-ம் ஆண்டு பிறப்பித்துள்ளது. பள்ளி சான்றிதழ்கள் அல்லது மாற்றுச் சான்றிதழில் ஒரு நபர் தனது சாதி மற்றும் மதத்தை குறிப்பிடவில்லை என்றால் அது போதுமானது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“எந்த மதமும் இல்லை” சான்றிதழைப் பெற வழிவகுக்கும் எந்த அரசாங்க உத்தரவையும் அல்லது சட்டத்தையும் மனுதாரரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அத்தகைய அரசாணைகள் எதுவும் இல்லாத நிலையில், வட்டாட்சியர்கள் தங்கள் விருப்பப்படி ஒவ்வொரு சான்றிதழையும் வழங்க முடியாது. இத்தகைய வழிகாட்டப்படாத அதிகாரங்கள் நிர்வாக கோளாறுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானதாக மாறும். நடைமுறையிலுள்ள சட்டங்கள், விதிகள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றின் வரம்புக்குட்பட்டு வருவாய் அலுவலர் தனது அதிகாரங்களைச் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் முடிவை மாற்ற முடியும் என்கிறார் ஸ்னேகா, “இதற்கு முன்பு வாங்கிய சான்றிதழ்கள் செல்லாது என்று நீதிமன்றம் கூறவில்லை. ஒரு மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பலர் இதே போல மனு அளிக்கலாம். சென்னை ஆவடியில் நீதிமன்றத்தின் மூலமே ஒருவர் சாதி இல்லை மதம் இல்லை சான்றிதழை பெற்றுள்ளார்” என்றார்.

இவ்வாறு சான்று கொடுக்க சட்டத்தில் தடை இருக்கக் கூடாது என அஜிதா கூறினார், ““ஒருவர் சாதி, மதம் அற்றவர் என்று கூறிக் கொள்ள சட்ட வழிகளை உருவாக்க வேண்டும். தற்போது இருக்கும் சட்டத்தின் கீழ், சாதி உள்ளவர், சாதி அற்றவர் என்ற பிரிவினை கிடையாது. சாதி குறிப்பிடவில்லை என்றால், அவர் முன்னேறிய சாதியாகவே கருதப்படுவார்.

சொத்துரிமை சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வழிகள் உள்ளன. திருமணச் சட்டத்தின் படி, திருமணமான பிறகு ஒருவர் மதம் மாறினாலும், ஒருவர் திருமணமாகும் போது என்ன மதத்தவராக இருந்தாரோ, அந்த மதத்தின் சட்டங்களே அவருக்கு பொருந்தும். அதே விதி இங்கும் பொருந்தும்.” என்றார்.

மதம் மாறும் விசயத்தில் சான்றிதழுக்கு வேலை இல்லை என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ” நீங்கள் விரும்பினால் மதத்தை மாற்றிக் கொள்ளலாம், தினமும் உங்கள் விருப்பப்படி மதத்தை மாற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்த சான்றிதழ் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?” என கேட்டார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »