Press "Enter" to skip to content

மோதி பிரதமராகி 9 ஆண்டு கழித்து அத்வானிக்கு பாரத ரத்னா ஏன்? ராமர் கோவிலுக்கு அழைக்காததை ஈடுகட்டவா?

பட மூலாதாரம், @NARENDRAMODI

பாரதிய ஜனதா மூத்த தலைவரும், ராமர் கோவில் இயக்கத்தின் தலைவருமான அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நேற்று அறிவித்தார்.

அத்வானியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மதிப்புமிக்கது என தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு, அவர் மறைந்த பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க மத்தியில் ஆளும் பாஜக முடிவு செய்தது.

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியலில் லால் கிருஷ்ண அத்வானி 50வது இடத்தில் உள்ளார் . 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, அத்வானி உள்பட மொத்தம் 7 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது.

அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, இப்போது ஏன் இந்த முடிவை எடுத்தது?

அத்வானிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான காரணம் என்ன? இதைப் புரிந்துகொள்ள, மூத்த பத்திரிகையாளர்கள் ஹேமந்த் அத்ரி, விஜய் திரிவேதி, ஷரத் குப்தா ஆகியோரிடம் பிபிசி ஹிந்தி பேசியது.

அத்வானிக்கு மோதியின் குரு தட்சணையா?

மோதியும் அத்வானியும்

பட மூலாதாரம், @NARENDRAMODI

1991ல் லால் கிருஷ்ண அத்வானி தனது ரத யாத்திரையை சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை தொடங்கியபோது, அந்த யாத்திரைக்காக குஜராத்தில் ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்டது.

ரத யாத்திரையின் போது மட்டுமின்றி, பிரதமர் மோதியை குஜராத் முதல்வராக்கியதிலும் எல்.கே. அத்வானி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தாவும் இதே கருத்தை கூறியுள்ளார்.

“பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நரேந்திர மோதி என அனைவருக்கும் அரசியல் பயிற்சியளித்தவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோதி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்,” என்றார் குப்தா.

ராமர் கோவிலுக்கு அழைக்காத அதிருப்தியை சரிகட்டவா?

மோதியும், அத்வானியும்

பட மூலாதாரம், ANI

ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் குடமுழுக்கு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ராமர் காவில் இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய இரண்டு முக்கிய முகங்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வரவில்லை.

கோவில் அறக்கட்டளை அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததுது.

இதுகுறித்து பேசிய ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் , “அத்வானியின் வருகை மிகவும் முக்கியமானது தான், ஆனால், நாங்கள் தான் அவரை வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். நான் அவரிடம் மீண்டும் மீண்டும் சொன்னேன். உங்களுக்கு வயதாகிவிட்டது, இங்கு மிகவும் குளிராக உள்ளது, உங்கள் கால் முட்டியும் மாற்றப்பட்டுள்ளது என அவரிடம் கூறினேன்,”என்றார்.

அறக்கட்டளை அவரது மோசமான உடல்நிலையை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டியது. ஆனால் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அட்ரி இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நம்புகிறார்.

“இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அத்வானி அழைக்கப்படவில்லை. இதனை, இந்த நாடு பார்த்தது. சம்பத் ராய், அத்வானியை வர வேண்டாம் என்று கூறியதாகக் கூறுகிறார்.

தலாய் லாமாவின் வயதுக்கு, அவரை அழைக்கும்போது, அத்வானியை ஏன் அழைக்கவில்லை. இந்த விவகாரம், அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால், அதனை சரி செய்யவே தற்போது முயன்று வருகின்றனர்,” என்றார் ஹேமந்த் அட்ரி.

தொடர்ந்து பேசிய அவர், “மத்தியில் மோதி தலைமையில் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அவர்கள் விரும்பியிருந்தால், இந்த விருதினை முன்பே வழங்கியிருக்கலாம். ஆனால், ராமர் கோவில் திட்டம்தான் தற்போது பாரத ரத்னாவுக்கு வழிவகுத்துள்ளது,” என்றார் ஹேமந்த்.

பாஜக சொல்லும் செய்தி என்ன?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போது, அரசியல் ஆய்வாளர்கள் அதை தேர்தல் நேரத்து உத்தி என விமர்சித்தனர்.

பிகாரில் மிகவும் பின்தங்கிய வகுப்பினரைத் தன் பக்கம் கொண்டு வரவும், பிகாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பைக் மட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி,“சில நாட்களுக்கு முன்புதான் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அரசியல் வார்த்தைகளை பயன்படுத்தினால் மண்டலம், கமண்டலம் இரண்டையும் வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் குப்தா அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும் முடிவை தேர்தலுடன் இணைக்கவில்லை.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி பேசுகையில், “பாஜகவில் ஒரு பெரிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஜன சங்கத்திலும் ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் கழித்துள்ளனர். அத்வானிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. பாரத ரத்னா மூலம், இந்த சீனியர் குழுவை மகிழ்விக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அத்வானிக்கு பாரத ரத்னா கொடுக்க காரணம் என்ன?

பாஜக தலைவர் அத்வானி

பட மூலாதாரம், ANI

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படும் என்பதை பிரதமரே குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்கிறார்.

இது தவிர, வேறு எந்த சம்பிரதாயமும் தேவையில்லை. ஒரு வருடத்திற்குள் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம்.

அரசியல் தெரிந்தவர்கள் பாரத ரத்னா விருதை அரசியல் உள்நோக்கம் கொண்ட கௌரவம் என்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் குப்தா, “பாரத ரத்னா யாருக்கு வழங்கப்படும் என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை, தகுதிக்கு குறிப்பிட்ட வரையறையும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால், ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

சிலரை மகிழ்விப்பதற்காக, அவர்களை மாநில ஆளுநராக ஆக்குகிறார்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்குகிறார்கள். பாரத ரத்னா விஷயத்திலும் அப்படித்தான்,”என்றார்.

தொடர்ந்து பேசிய ஷரத் குப்தா,“அத்வானி சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு பயணம் செய்த போது, பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. அவரது அரசியல் செய்தி அவரது கட்சியினருக்கானது. அது நாட்டிற்கான அரசியல் செய்தி அல்ல. அத்வானி முன்வைத்த சித்தாந்தத்தால் நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்தது என்பது விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கலாம்,” என்றார் ஷரத் குப்தா.

அத்வானியை பாரதிய ஜனதா அல்லது ஜனசங்கத்தின் தலைவராகப் பார்ப்பது அவரது அரசியல் வாழ்க்கையை சுருக்குவதாகக் கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி.

“இன்று ஊழல் மற்றும் அமலாக்கத் துறை வழக்கின் காரணமாக சிறைக்குச் செல்வது குறித்து அரசியல் தலைவர்கள் பேசி வரும் சூழலில், இந்திய அரசியலில் அத்வானியின் அரசியல் புத்திசாலித்தனத்திற்கு இணையான தலைவர்கள் மிகக் குறைவு. ஹவாலா மோசடியில் எல்.கே அத்வானியின் பெயர் வந்தவுடன், அவர் உடனடியாக மக்களவையில் இருந்து ராஜினாமா செய்தார்.

பின், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் வரை, நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள், ஊழல் வழக்குகளில் சிறையில் இருந்தாலும், அரசாஙங்கத்தை நடத்துவது பற்றி பேசுகிறார்கள்,” என்றார் விஜய் திரிவேதி

கூட்டணி அரசியலில் அத்வானியின் பங்கை நினைவில் கொள்ள வேண்டும், எனவும் கூறினார் விஜய் திரிவேதி

“1996 இல், ஆதரவு இல்லாததால், வாஜ்பேயி அரசாங்கம் 13 நாட்களில் வீழ்ந்தது. அப்போது அத்வானி, நாங்கள் சமூக தீண்டாமையை ஒழிப்பது பற்றி பேசுகிறோம், ஆனால் நாங்கள் அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக் கூறியிருந்தார்.

அரசியல் தீண்டாமை என்பது கூட்டணி அரசியலில் முக்கியமான வார்த்தை. எந்த ஒரு அரசியல் கட்சியையும் எதிரியாகவோ அல்லது தீண்டத்தகாதவராகவோ கருதுவது சரியல்ல, இதுவே அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை சிறப்பாக நடத்த காரணம்” என்றார் விஜய் திரிவேதி.

அத்வானியின் மகள் என்ன சொல்கிறார்?

அத்வானியும் அவரது மகளும்

பட மூலாதாரம், ANI

அத்வானிக்கு இந்த கவுரவம் வழங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது மகள் பிரதீபா அத்வானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா அத்வானி , “தாதா’வுக்கு இவ்வளவு பெரிய, உயரிய கவுரவம் கிடைத்ததில் நானும், ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நான் அதிகம் மிஸ் செய்வது என் அம்மா. அம்மாவின் தாத்தா. தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் அவரது வாழ்வில் பெரும் பங்களிப்பு.”

அவர் கூறுகையில், “தாதா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் தாதாவிடம் சொன்னபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டு சேவையில் செலவிட்டதாக கூறினார், இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் நாட்டுக்கு நன்றி. அவர் மிகவும் நேசிக்கும் மக்களுக்கு அவர் மிக்க நன்றி.” என்றார்.

அத்வானிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து

அத்வானிக்கு வாழ்த்து சொல்லிய பாஜக தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் மூத்த தலைவரான அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

“இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கெட்டுப் போகாமல் இருப்பதற்கு முக்கியப் பங்காற்றியவர், அத்வானி. தேசியத் தலைவராக தனது புலமையாலும், நாடாளுமன்ற நிர்வாகத் திறனால் நாட்டையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தியவர்.

அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது மிகப்பெரிய கவுரவம். ஒவ்வொரு இந்தியருக்கும், இது மகிழ்ச்சியான விஷயம். இந்த முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி. அத்வானிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ராஜ்நாத் சிங்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன உறுப்பினரும், எண்ணற்ற கட்சி உறுப்பினர்களுக்கு உத்வேகமும், முன்னாள் துணைப் பிரதமருமான மதிப்பிற்குரிய அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பதற்கான முடிவு அவரது தசாப்தங்களுக்கு அங்கீகாரமாக உள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கான அவரது அயராத முயற்சிகள் நம் அனைவருக்கும் தனித்துவமான உத்வேகம் அளிக்கும். மதிப்பிற்குரிய அத்வானி ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார்.

அத்வானி குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் , “நாட்டின் மூத்த தலைவரும், நமது வழிகாட்டியுமான மதிப்பிற்குரிய அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மறுசீரமைப்பில் அத்வானி முக்கிய பங்கு வகித்துள்ளார். அரசியலில் தூய்மைக்கு அத்வானி வாழும் உதாரணம்.”

அத்வானியை ‘பாரத ரத்னா’வாக அறிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், அத்வானியின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்,” எனக் கூறினார் நிதின் கட்கரி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »