Press "Enter" to skip to content

தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐபோன் உற்பத்தி ஆலையான பாக்ஸ்கான் அமைந்துள்ளதை மையமாக வைத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறையில் வெற்றியாளராக பயணித்து வருவதாகவும், நாட்டிலேயே அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ஒவ்வொரு விதமான தொழில்களையும் குறிப்பிட்டு தமிழக தொழில்துறையை பாராட்டியுள்ளது அந்த பத்திரிகை.

ஆனால், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது ஏன்? இதற்கான விதை எங்கு போடப்பட்டது? ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பாதையில் செல்லும்போது தமிழகம் தனக்கான பாதையை அமைத்து முன்னேற தொடங்கியது எப்போது? அதன் பலன் என்ன? உண்மையில் தமிழகம் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா?

தொழிற்சாலை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் தனித்துவம்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிட சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகிய கூறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் சிசு மரண விகிதம் (IMR) 1000 பேருக்கு 8.2, தனிநபர் வருமானம் ரூ.1,66,727, உயர்கல்வி சேர்க்கை (GER) விகிதம் 47% என அனைத்திலும் இந்தியாவின் முதன்மையான இடங்களை பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த வளர்ச்சிக்கு காரணமாக 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் அவர்களிடம் பேசினோம்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், LINKEDIN

தமிழ்நாடு vs மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை, மற்றுமொரு மாடலோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தொடங்கிய அவர் மத்திய அரசோடு ஒப்பிட்டு பேசினார்.

“மத்திய அரசு தங்களது வளர்ச்சி பாதையை 50, 60 களில் தான் முன்னெடுக்க தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த வளர்ச்சி பாதைக்கு நேர்மாறான பாதையை நாம் எடுத்ததின் விளைவு தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

இதற்கு உதாரணமாக “மத்திய அரசு வளர்ச்சி பகிர்வு(Growth With Distribution) என்ற பாதையை கையில் எடுத்தார்கள். அதன்படி முதலில் வளர்ச்சியடைதல், பின்னர் அதை பகிர்ந்து கொடுத்தல் என்ற வழியில் சென்றார்கள். முதலில் இந்த திட்டம் வளர்ச்சியை தந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை” என்கிறார்.

ஆனால், தமிழகமோ 1960களுக்கு பிறகு வேறு விதமான கொள்கையை பின்பற்ற தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் அரசு மாறி திமுக ஆட்சியை பிடித்த போது, சாமானிய மக்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தினார்கள். யாசகர்கள் மறுவாழ்வு திட்டம், குடிசைமாற்று வாரியம், கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி, சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

மேலும் பேசிய அவர், “திமுக வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அதற்கு முன்பெல்லாம் அரசு செலவு செய்ததெல்லாம் அணை கட்டுவது போன்ற மூலதனம் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இவர்கள் தான் கல்வி, சுகாதாரம் என மக்கள் வளர்ச்சிக்கு தேவையான செலவுகளை செய்தார்கள்” குறிப்பிடுகிறார் அவர்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், SALEM DHARANIDHARAN

இதே கருத்தை முன்வைக்கிறார் திமுகவின் செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன், “1960களில் உத்தரபிரதேசத்தின் தனிநபர் வருமானமும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமும் ஒன்றுதான். ஆனால், 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உத்தரப்பிரதேசத்தை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் தொழிற்துறை வளர்ச்சியிலும் கூட இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்று..”

“அதற்கு முக்கிய காரணம் திமுக மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தியது. இடஒதுக்கீடு, கல்விக்கான ஏராளமான திட்டங்கள், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி, பெண்களுக்கான கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொருளாதாரம் வளர மூலதனமும், மனிதவளமும் மிக அவசியம். மனிதவளத்தை வளர்க்க கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு மிக முக்கியமென கருதி பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக” அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு தொழிற்சாலை

பட மூலாதாரம், Getty Images

சேவைத்துறை மீது கவனம் செலுத்திய மத்திய அரசு

மத்திய அரசு சேவைத்துறை சார்ந்து முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்த காலத்தில், தமிழக அரசு வறுமை ஒழிப்பு, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்திருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய அரசு மக்களுக்கு வளர்ச்சியை பகிர்தல் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதலில் தேக்கமடைந்து விட்டதாக குறிப்பிடுகிறார் அவர்.

ஆனால், மனிதவளத்தை மேம்படுத்துவதில் குறிக்கோளாக இருந்த தமிழக அரசு அதற்காக கல்வியை ஜனநாயக படுத்தியது, கிராமங்களில் இருந்த மக்களை நகரங்களை நோக்கி அழைத்து வந்தது, சாலை வசதி, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திவிட்டு அமைதியாக இல்லாமல் அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வழங்கியது உள்ளிட்ட பல காரணிகளை அடுக்குகிறார் ஜோதி சிவஞானம்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், DMK / AIADMK

கட்சி பேதமற்ற வளர்ச்சி கொள்கைகள்

மக்கள்நலன் சார்ந்த கொள்கைகள் தமிழ்நாட்டில் மட்டுமே கட்சிபேதமின்றி தொடர்ந்து வந்துள்ளதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

உதாரணமாக, “ காமராஜர் பள்ளிகளை கட்டினார். மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில்திமுக அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் புதிய புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டன. ஆக எப்படியாவது மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்பதில் தமிழக கட்சிகள் ஒத்த கருத்தோடு இருந்தன” என்கிறார் அவர்.

குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எம்ஜிஆரும் அப்படியே தொடர்ந்தார். திமுக கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியது. எம்ஜிஆர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார்.

இதில் எங்கள் எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்பட்டன. அதன் விளைவாக 90களுக்கு பிறகு வந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இங்கு படித்தவர்கள் நேரடியாக வேலைக்கு சேர முடிந்தது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்த திட்டங்களின் விளைவாக 1990களில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் முதலீடு செய்ய வந்த பல நிறுவனங்களும் டெல்லி, மும்பைக்கு அடுத்து தமிழ்நாட்டை நோக்கி வந்ததாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். அதற்கு காரணம் மனிதவள மேம்பாட்டில் அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட வேலையின் காரணமாக திறன்மிக்க தொழில் நிபுணர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்கிறார்.

சென்னை  தொடர் வண்டிநிலையம்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

வளர்ச்சியை பகிர்தல் எனும் பாணியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட மன்மோகன் சிங் 2004க்கு பிறகு உரிமை சார் அணுகுமுறையை கொண்டுவந்தார்.

“வளர்ச்சி கிடைத்தும் பகிர்தல் நடக்கவில்லை என்றபோது வேலைக்கான உரிமை, உணவுக்கான உரிமை, ஆரோக்கியத்திற்கான உரிமை உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்தார். இந்த பிரச்னைகளை அரசே இனி நேரடியாக அணுகும் என்றும் அறிவித்தார்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

“ஆனால், 2014க்கு பிறகான ஆட்சியில் அந்த முழக்கங்களையே விட்டுவிட்டார்கள். பகிர்தல் என்பதை விட்டுவிட்டு வளர்ச்சியே பெரிய விஷயம் என்ற பாதையில் எடுத்து செல்கிறார்கள்” என்றும் கூறுகிறார் அவர்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், TIDEL PARK

உலக மாற்றத்திற்கு ஏற்ப ஏற்பாடுகள்

தமிழகம் எப்போதும் உலக அளவில் நடைபெறும் மாற்றங்கள், ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அப்படி தமிழகத்தில் இதற்கு முன்னாலும் உலகளவில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்பவும் தயக்கமே இல்லாமல் முன் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறுகிறார் பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம்.

அப்படித்தான் டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

இதுகுறித்து பேசிய சேலம் தரணிதரன், இந்தியாவின் முதல் ஐடி கொள்கையே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது என்று கூறுகிறார். மேலும், சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளை உருவாக்கியதையும் குறிப்பிடுகிறார். அதே சமயம் தற்போதைய ஆட்சியில் விண்மீன்ட்டப் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, முதலீடுகளை ஈர்த்தல், பட்டியலின மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு ஒதுக்கீடுகளையும்” மேற்கோள் காட்டுகிறார்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், D JAYAKUMAR / TWITTER

இதேபோல் பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறை நிறுவனங்களின் அனுமதிக்கான ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடும் அவர், “நான் ஐடி அமைச்சராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கும் எளிய வழியில் அனுமதி வழங்கப்பட்டது. சிறுசேரியில் நிறுவனம் தொடங்க ஹெச்சிஎல் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு அரசு விலையில் நிலம் வழங்கப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் தொழில்துறை வளர்ச்சிக்காக ஐடி காரிடார் அமைப்பு, சரக்கு பெட்டகம் செல்வதற்கான எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

பெண்களுக்கான முன்னேற்றம்

ஒட்டுமொத்த இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். பெண்களின் கல்விக்கு இன்னும் தடை போடும் சமூக கட்டமைப்பில் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை கேட்டபோது,

“பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தை சமீபத்தில் தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 1960 களிலேயே தமிழக பெண்கள் அதற்காக போராடியுள்ளனர். பெண்களுக்கெதிரான பல அநீதிகளுக்கு எதிராக அன்று பெண்களே போராடினர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த ஆட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களும் பெண்கள் வளர முக்கிய காரணம். அதன் விளைவே இன்று பொதுத்துறை பணிகளில் 100க்கு 65 பெண்கள் இருக்கின்றனர்” என்கிறார் ஜோதி சிவஞானம்.

தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம், TWITTER

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தன்னுடைய புத்தகமான Uncertain Glory-இல் கூறியுள்ள சில விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

அந்த புத்தகத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ள போதிலும், தமிழ்நாடு எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார் அமர்த்தியா சென்.

அதில், “குஜராத் உற்பத்தி துறையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் வளர்ச்சியை பகிர்தல் மற்றும் மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. கேரளா மனிதவள மேம்பாட்டில் உச்சத்தில் உள்ளது. ஆனால் உயர்கல்வி, உற்பத்தி துறை, ஐடி துறையில் பின்தங்கியுள்ளது. ஆனால், இது இரண்டையும் ஒன்றாக இணைத்து வளர்ந்து வந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தம்” என்று அவர் குறிப்பிட்டு தமிழக வளர்ச்சியை பாராட்டி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார் ஜோதி சிவஞானம்.

குடியரசு தின வாகனம் தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முதன்மையாக தெரிந்தாலும், தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமானதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதுகுறித்து பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம் கூறுகையில், “நாம் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நாம் மிக மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது இரண்டுமே தேவை. இது இரண்டிலும் தமிழ்நாடு மட்டுமே சுட்டிக்காட்ட கூடிய ஒரே மாநிலம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »