Press "Enter" to skip to content

தஞ்சை: தரிசாக விடப்பட்ட நிலத்தில் விதைக்காமலேயே மூட்டைமூட்டையாக நெல் விளைந்தது எப்படி?

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் ஓராண்டுக்கு பிறகு மூட்டை மூட்டையாக நெல் விளைந்ததால், நிலத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார். தரிசு நிலத்தில் டன் கணக்கில் நெல் விளைந்தது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட ஆம்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இ.ஜெயராஜ். இவர் தனது நிலத்தில் தென்னை, நெல் போன்ற பயிர்களை நடவு செய்து விவசாயம் பார்த்து வருகிறார்.

இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு ஏக்கர் பரப்பளவிலான தனது நிலத்தில் 50 ஆயிரம் செலவு செய்து டி.பி.எஸ்-5 ரக நெல் விதையை பயிரிட்டு, உரம் தெளித்து, நீர் பாய்ச்சி பராமரித்து இருக்கிறார்.

ஆனால், 130 நாளுக்கு பிறகு அதனை அறுவடை செய்த போது அதிலிருந்து 35 முதல் 40 மூட்டைகள் வரை மட்டுமே நெல் கிடைத்தது. இதனை நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்த போது 48,500 ரூபாய்க்கு மட்டுமே கிடைத்ததால், விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டது.

நெல்லை நடவு செய்து ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த நிலத்தில் அடுத்து நெல் பயிர் செய்யாமல் அருகில் இருந்த தென்னை தோப்பை பராமரித்து விவசாயப் பணிகளை செய்து வந்திருக்கிறார்.

விவசாயம் பார்க்காமல் இருந்த தரிசு நிலத்தில் நெல்மணிகள் தானாக முளைத்து அறுவடைக்குத் தயாராகி இருந்தன. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அருகில் இருந்த விவசாயிகள் விவசாயி ஜெயராஜிடம் கூறி உள்ளனர். அதில் ஒரு ஏக்கரில் அறுவடை செய்தபோது 16 மூட்டைகள் நெல் கிடைத்துள்ளது.

தரிசு நிலத்தில் விளைந்த நெல்

தரிசு நிலத்தில் மூட்டைமூட்டையாக விளைந்த நெல்

தரிசு நிலத்தில் விளைந்த நெல்

நிலத்தின் உரிமையாளர் ஜெயராஜ், நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், நெல் விவசாயம் செய்வதை நிறுத்தியிருந்ததாகக் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், “நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் பணி செய்து, சொந்த ஊருக்குத் திரும்பிய பின் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். எங்களிடம் 12 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நெல் பயிரிட்டிருந்தேன்.

அறுவடையில் முதலீடு செய்த பணமே கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நெல் விவசாயம் செய்யக்கூடாது என அந்த நிலத்தில் எந்த பயிரையும் விதைக்காமல் தரிசாக விட்டு இருந்தேன்.

ஆனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக அருகில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் எனது நிலத்தில் நெற் பயிர் வளர்ந்து இருப்பதாக கூறினர். அங்கு சென்று பார்த்த போது நெல்மணிகள் நன்றாக வளர்ந்து இருந்தன. பின், மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு சென்று பார்த்த போது நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இதனை அப்படியே விட்டால் வீணாகிவிடும் என முதலில் ஒரு ஏக்கரில் மட்டும் அறுவடை பார்க்கலாமே எனப் பார்த்தேன். அதில் 16 நெல் மூட்டைகள் கிடைத்தது.

வயலில் நெல் பயிரிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் என எந்த வேலையும் செய்யாமல் இவ்வளவு மூட்டை நெல் கிடைத்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது”, என்றார்.

“விவசாயம் செய்தாலே 10 மூட்டைதான் கிடைக்கும்”

தரிசு நிலத்தில் விளைந்த நெல்

தன்னுடைய நிலத்தில், எந்த விவசாயமும் முறையாக செய்யாமலேயே எட்டு மூட்டை நெல் கிடைத்ததாக ஜெயராஜ் கூறினார்.

“எங்கள் பகுதியில் மூன்று மாவுக்கு சேர்ந்தால் ஒரு ஏக்கர் என கூறுவோம். நிலத்தில் நெற்பயிர்களை முறையாக பராமரித்து அறுவடை செய்தால் ஒரு மாவுக்கு 10 முதல் 11 மூட்டை நெல் மட்டுமே கிடைக்கும். ஆனால், இங்கே நான் எதுவும் செய்யாமலேயே 8 மூட்டை நெல் கிடைத்து இருக்கிறது.

சில நேரங்களில் தாழ்வான நிலத்தில் இருக்கக் கூடிய நிலத்தில் இது மாதிரி நெற்கதிர்கள் வளர்ந்து அதில் அறுவடை செய்தால் அதிகபட்சம் 2 மூட்டை நெல் கிடைக்கும். ஆனால் இவ்வளவு நெல் கிடைத்து பார்த்ததே இல்லை”, எனக் கூறினார்.

“எனது தரிசு நிலத்தில் மூட்டைமூட்டையாக நெல் கிடைத்தது குறித்து வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு மீதம் இருக்கும் பயிர்களை அறுவடை செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.

அந்த பயிர்களை நேரில் ஆய்வுக்கு உட்படுத்தி எப்படி தரிசு நிலத்தில் இவ்வளவு விளைச்சல் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளனர்,” என்றார்.

தரிசு நிலத்தில் விளைந்த நெல்

தமிழ்நாடு வேளாண் துறை அதிகாரி நேரில் ஆய்வு

தரிசு நிலத்தில் விவசாயம் செய்யாமலேயே மகசூல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தஞ்சாவூர் வேளாண் துறை இணை இயக்குநர் ஈஸ்வரன், “விவசாயப் பணிகளை நிறுத்திய நிலத்தில் 1,800 கிலோ நெல் கிடைத்ததாக விவசாயி கூறினார். இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு வேளாண் துறை அதிகாரி நிலத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த பொழுது அது உண்மைதான் என்பதை உறுதி செய்தார்,” என்றார்.

மேலும், அவரது நிலத்தில் தற்போதும் சில நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி உள்ளதை காண முடிந்ததாக அவர் கூறினார்.

“நெல் விவசாயம் பார்த்த நிலத்தை அப்படியே விட்டால் நெல் முளைக்கும் என்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால், இவ்வளவு மூட்டைமூட்டையாக நெல் முளைப்பதை புதிதாக பார்க்கிறோம்,” என்றார் ஈஸ்வரன்.

“நாட்டு நெல் ரகம் என்பதால் மீண்டும் விளைச்சல்”

பேராசிரியர் சுரேஷ்

கம்பு, சோளம், நெலை அறுவடை செய்யாமல் விட்டால் நாட்டு ரக விதையாக இருந்தால் மீண்டும் முளைக்கும் என்கிறார் மதுரை வேளாண் கல்லூரி இணை பேராசிரியர் சுரேஷ்.

இது குறித்து பேசிய அவர் கூறும் போது,”விவசாய நிலத்தில் பயிரிட்ட நெற்கதிர்களை 60% வளர்ச்சிக்கு பிறகு அதனை அறுவடை செய்ய வேண்டும். அப்படி அறுவடை செய்யப்படாமல் விடக்கூடிய நெல் மணிகள் மீண்டும் நிலத்தில் விழுந்து மழை பொழிவு இருக்கு நேரத்தில் கிடைக்கும் நீரைக் கொண்டுத் தானாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தப் பட்டுக்கோட்டை விவசாயி நிலத்தில் சென்ற விதைப்பில் அறுவடை செய்த போது அதிலிருந்து நெல் நிலத்தில் விழுந்து இருக்கலாம். பின் மழை பெய்ததும் மீண்டும் வளர்ந்து இருக்கிறது. விவசாயி நாட்டு விதைகளை நடவு செய்து இருந்ததால் வளர்ந்து இருக்கும்.

இதுவே மிகப்படுத்துதல்ரிட்(Hybrid) விதையை நிலத்தில் விதைத்து இருந்தால் இந்த விளைச்சல் கிடைத்து இருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கம்பு, சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களை அறுவடை நேரத்தில் எடுக்காமல் விட்டால் அது மீண்டும் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த அளவிற்கான வளர்ச்சி கிடைக்குமா என்றால் அதற்கு வாய்ப்புகள் குறைவு தான்.

நிலத்தில் இயந்திர நடவு, கை நடவு மூலம் முறையாக நெல் விதைத்து நீர் பாய்ச்சி, மருந்து தெளித்து பயிரை பராமரித்து பாதுகாத்தால் அறுவடையின் போது ஏக்கருக்கு 40 மூட்டை வரை நெல் கிடைக்கும்.

இவர் தனது நிலத்தில் நீர் பாய்ச்சல், களை எடுத்தல், விதைப்பு போல எந்த பணியும் செய்யாமலேயே ஏக்கருக்கு பாதிக்குப் பாதி மூட்டை நெல் கிடைத்து இருப்பது விவசாயிக்கு லாபம்தான். அதற்கு அந்தப் பகுதியில் இருக்கும் மண் வளம், நிலத்தடி நீர், நாட்டு நெல் ரகம் ஆகியவை முக்கிய காரணியாக இருந்திருக்கும்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »