Press "Enter" to skip to content

விளம்பரம் பார்த்தால் பணம்: கோவை ‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவனர் மீது புகார் – 50 லட்சம் பேரிடம் மோசடியா?

  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் மைவி3 ஆட்ஸ் என்ற எம்.எல்.எம். முறையில் செயல்படக் கூடிய நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது அந்த மாநகரத்தையே உலுக்கியது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் மற்றும் வாகனங்களால் அங்கே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக நடந்த இந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரிதும் கவனம் ஈர்த்த நிலையில், அடுத்த ஒரே வாரத்தில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. அதன் பேரில் அதன் நிறுவனர் சக்தி ஆனந்தனை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்திய ஒரே வாரத்தில் என்ன நடந்தது? புதிய மோசடி புகார் என்ன? காவல்துறையினர் என்ன கூறுகின்றனர்?

கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மைவி3 கணினிமயதொலைக்காட்சிஎன்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேர் இன்று புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். முன்னதாகவே பதியப்பட்டிருந்த வழக்குடன் சேர்ந்து, இந்தப் புகாரும் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மைவி3 ஆட்ஸ் நிறுவனம் போலவே, மைவி3 கணினிமயதொலைக்காட்சிநிறுவனமும் செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைகாட்டி, ஆயிரக்கணக்கான மக்களிடம் பணத்தைப் பெற்ற பின், மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்றதாகப் புகார் அளித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் பணத்தை இழந்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர்கள், இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, மிகவும் குறைந்த அளவிலேயே பணத்தை வாங்கி, அதற்கான பொருட்களை கொடுத்து, பின் அன்றாடம் விளம்பரம் பார்ப்பதற்கு குறைந்த அளவில் பணம் கொடுத்ததாகக் கூறினர்.

பின், நிறுவனத்தை நடத்தியவர்கள், அதிக பணத்தை செலுத்தினால், அதிக வருமானம் வரும் என ஒரு சலுகைத் திட்டத்தை அறிவித்து, மக்கள் அனைவரும் பணத்தை செலுத்திய பின், நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்றதாக புகார் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள்

மைவி3 கணினிமயதொலைக்காட்சிஎப்படி தொடங்கினர்?

தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான சக்தி ஆனந்தன், மைவி3 கணினிமயதொலைக்காட்சிநிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியதாக பாதிக்கப்பட்ட மக்கள் பிபிசியிடம் கூறினர்.

மார்க்கெட்டிங் பணியில் ஈடுபட்டு வரும் கோயம்புத்தூர் சவுரிபாளையத்தைச் சேர்ந்த ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டிற்கு முன், சக்தி ஆனந்துடன் பழகி வந்துள்ளார்.

“நான் அவருடன் பழகிய காலத்தில், அவர் சமையலுக்குத் தேவையான மசாலா பொடிகளை விற்பனை செய்து வந்தார். நான் அவரிடம் மல்லிப்பொடி, மிளகாய் பொடி வாங்கும்போது தான், அவர் தினமும் இரண்டு மணி நேரம் விளம்பரம் பார்த்தால், நிறைய சம்பாதிக்கலாம். அதற்கு ஒரு முறை 600 ரூபாய் கட்டினால் போதும் என்றெல்லாம் கூறினார்.

ஆரம்பத்தில் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், குறைந்த பணம்தானே கொடுக்கிறோம், அதற்கும் அவர்கள் மசாலா பொடிகளைக் கொடுக்கிறார்கள் என, முதலில் 600 ரூபாய் மட்டும் கொடுத்து, பொடிகளை வாங்கிக்கொண்டு, அவர்கள் கொடுத்த ஐடி(ID)-ஐ வாங்கி வைத்துக்கொண்டு விளம்பரம் பார்க்க ஆரம்பித்தேன்,” என்றார் ஸ்டாலின்.

இந்த 600 ரூபாய் திட்டத்தில் அதிகம் பேர் இணைந்தவுடன், திட்டத்திற்கான பணத்தை அதிகரிக்கத் தொடங்கியதாகக் கூறினார் ஸ்டாலின்.

“வெறும் ரூ 600இல் தொடங்கிய திட்டம், ரூ 12,000 முதல் ரூ 1,20,000 வரை திட்டத்தை நீட்டித்தனர். நீங்கள் ரூ 1.20 லட்சம் செலுத்தி பொருட்களை வாங்கிக்கொண்டு, உங்களுக்கான ஐடி(ID) வாங்கி விளம்பரம் பார்த்தால், மாதம் ரூ 12,000 சம்பளம் மற்றும் ஒவ்வொரு நபர்களை அந்த திட்டத்தின் கீழ் ஆள் சேர்த்துவிட்டால், அதற்கு ரூ 18,000 என கொடுக்கத் தொடங்கினர். இதனால், நானும் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை செலுத்தினேன். அதன் மூலம் நான் ஐந்து முதல் ஆறு லட்சம் வரை பெற்றுள்ளேன்,”என்றார்.

பாதிக்கப்பட்டர்கள்

மைவி3 கணினிமயதொலைக்காட்சிஎப்படி ஏமாற்றினர்?

இதைத் தவிர, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மொபைல் போன் வாங்குவதற்காக ரூ 15,000, வருடத்திற்கு ரூ 1,500 சம்பள உயர்வு, ஆறு வருடம் இந்தப் பணி செய்தால், அவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா, 12 வருடம் இந்த வேலையை பார்த்தால், தேர் மற்றும் வீடு வாங்குவதற்கு பணம் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறினார் ஸ்டாலின்.

நிறுவனம் மூடப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் ஸ்டாலின்.

“எப்போதும் போல நாங்கள் விளம்பரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களும் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், ரூ 18,000 செலுத்தி உறுப்பினர் ஆகும் திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து ரூ 21,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், முன்னதாகவே உறுப்பினராக இருப்பவர்களும் பணம் செலுத்தி உறுப்பினர் ஐடி(ID) வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றும், புதிதாக வர விரும்புபவர்களும் விரைவாக இணைய வேண்டும் என்றும் கூறினர்

அதனை நம்பி, ஆயிரக்கணக்கான நபர்கள், அப்போது அவசர அவசரமாக வங்கியில் கடன் பெற்றெல்லாம் பணம் செலுத்தினார்கள். அவர்கள் சொன்ன காலக்கெடு முடிந்ததும், அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். பணத்தை செலுத்தியவர்களும் ஏமாந்தார்கள்,” என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலினைப் போல, நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் இணைந்தவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தைவிட அதிகமாகவே திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால், நிறுவனம் மூடுவதற்கு ஒரு வருடத்திற்குள் இணைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.

“நாங்கள் யாரிடம் புகார் சொன்னாலும் அவர்கள் நீங்கள் ஏன் பணத்தைக் கொடுத்தீர்கள் என்று தான் எங்களை கேட்கிறார்கள். அதனால், யாரிடமும் சொல்லாமல் இருந்தோம். தற்போதுதான், இந்த நிறுவனத்தைப்பற்றி செய்திகளில் பார்த்ததால், நம்பி புகார் கொடுக்க வந்துள்ளோம்.

நாங்கள் 16 பேர் புகார் கொடுக்க வந்தோம். ஆனால், 10 பேர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றனர். நாங்கள் யார் கண்ணிலும் படாமல் வெளியே நின்றுகொண்டோம்,” என்றார் பெயர் வெளியிட விரும்பாத பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர். கவுண்டம்பாளையயைச் சேர்ந்த இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மைவி3 ஆட்ஸ் நிறுவனம் எப்படி மோசடி செய்கிறது?

கோவையில் மைவி3 ஏட்ஸ்

மைவி3 ஆட்ஸ் நிறுவனம் ஆறு வகைகளில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. முதல் வகையில் சேர்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இவர்கள் விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் தினமும் ஐந்து ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆகவே மாதம் 150 ரூபாய் சம்பாதிக்கலாம்.

அடுத்த வகையில், 360 ரூபாய் செலுத்தி உறுப்பினராக வேண்டும். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 ரூபாய் கிடைக்கும். அடுத்தடுத்த வகைகளில் எந்த அளவுக்குக் கட்டணம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு தினம் கிடைக்கும் பணத்தின் அளவும் அதிகரிக்கும்.

இதன் உச்சகட்டமாக 1,21,260 ரூபாய் செலுத்தி கிரவுன் உறுப்பினர் ஆகலாம். இவர்களுக்கு தினமும் 480 ரூபாய் கிடைக்கும். இதெல்லாம் தவிர, செலுத்திய பணத்திற்கு ஏற்றபடி சில பொருட்களையும் இந்த நிறுவனங்கள் தருகின்றன.

இதற்கு அடுத்தகட்டமாக ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்களைச் சேர்த்துவிடும்படி கூறப்படுவார்கள். அப்படிச் சேர்த்துவிடும்போது, பொருட்களாகவும் பணமாகவும் கமிஷன் கிடைக்கும். உதாரணமாக புதிய உறுப்பினரைச் சேர்த்துவிடும் அடிப்படை உறுப்பினருக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

அதேநேரம், கிரவுன் உறுப்பினர் புதிதாக ஒருவரைச் சேர்த்துவிட்டால், அவருக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இதுதவிர, இவரால் சேர்த்துவிடப்பட்டவர்கள், புதிதாக உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், அதிலிருந்தும் சிறிய அளவு கமிஷன் கிடைக்கும்.

காணொளி பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று எம்.எல்.எம். முறையில் செயல்படும் இந்தத் திட்டம், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக முதலில் மதுரைப் பகுதியில் பரவ ஆரம்பித்தது. பிறகு கோவைப் பகுதியில் அறிமுகமானது. அங்கு இந்தத் திட்டத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

இந்தப் பகுதியில் பலர் 1,21,00 ரூபாய் செலுத்த வேண்டிய கிரவுன் உறுப்பினர் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் இணைத்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை ஒவ்வொரு நாளும் எடுக்க முடியாது. மாதம் ஒரு முறைதான் நம் ஊதியத்தைப் பெற முடியும்.

கோவையில் மைவி3 ஏட்ஸ்

50 லட்சம் பேரிடம் மோசடியா?

இந்த வழக்கை விசாரித்து வரும் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “இந்த மோசடியை சட்டத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்காகத்தான் அவர்கள் பெற்ற பணத்திற்காக பொருட்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், இது மோசடிதான்,” என்றார்.

மேலும், இந்த நிறுவனத்தில், மொத்தம் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பணத்தை செலுத்தி, பொருட்களைப் பெற்று விளம்பரம் பார்த்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“இந்த 50 லட்சம் பேரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரூ 1,21,000 கட்டி உறுப்பினராகச் சேர்ந்தவர்கள். இதில், காவல்துறையைச் சேர்ந்தவர்களே பணம் செலுத்தியுள்ளனர்,” என்றார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “வழக்கு தொடர்பாக சக்தி ஆனந்தனுக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி அவரை இன்று வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு முழு விபரம் தெரியவரும்,” என்றார்.

மேலும், இந்த வழக்கு கோவை சைபர் கிரைம் போலீசில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தனிடம் இந்த மோசடி புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி கணேசன்

சக்தி ஆனந்தன் கூறுவது என்ன?

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் விசாரணைக்கு ஆஜரான சக்தி ஆனந்தன், விசாரணை முடிந்து வெளியே வந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நிறுவனத்தில் உறுப்பினர்களுக்கு எவ்வாறு பணம் கொடுக்கப்படுகிறது, பொருட்கள் எவ்வாறு விற்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் கேட்டதாகக் கூறினார்.

“என்னிடம் 87 வகையான விற்பனை பொருட்கள் உள்ளன. அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்ப்பித்துள்ளேன். காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன்,” என்றார்.

சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்ததும், கோவை நிலம்பூர் பகுதியில் கடந்த வாரம் பல ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தை தான் கூட்டவில்லை என்றும் கூறினார்.

“நிலம்பூர் பகுதியில் கூட்டிய கூட்டத்தை நான் கூட்டவில்லை. அதில் நானும் ஒருவனாக கலந்து கொண்டேன். கூட்டம் கூடினால் வழக்கு பதிவு செய்வது இயல்பு. ஆனால் அன்று கூடிய கூட்டத்திற்கு வழக்கு பதிந்ததாக எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கவில்லை. என்னுடைய உண்மையான கூட்டத்தை பார்க்க வேண்டும் என்றால் , ஒரு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள், எந்த இடமாக இருந்தாலும், அந்த கூட்டத்தை நான் கூட்டி காண்பிப்பேன்,” என்றார்.

அதேபோல, மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி செய்தீர்களா என்ற கேள்விக்கு, “பிரபலம் ஆனால், பிராப்ளம்(problem) வருவது இயல்பு தான். வியாபாரமும், விளம்பரமும் உள்ள வரை மக்களுக்கு நான் பணம் கொடுத்துக்கொண்டே இருப்பேன். மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி செய்கிறேன் என்பதில் உண்மையில்லை. படித்தவர்கள் தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »