Press "Enter" to skip to content

சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் மீண்டும் அனுமதியா? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து ஓரிடத்தில் நின்று பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல் உண்மையா?

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில், சென்னை நகரப் பகுதிகளுக்குள் ஓரிடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அரசு அனுமதி அளிக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘கிளாம்பாக்கத்தில் 77 நடைமேடைகளே உள்ளன’

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென சென்னை வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதிலிருந்தே அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் அங்கிருந்துதான் சேவையை வழங்குகின்றன. ஆம்னி பேருந்துகள் எனப்படும் தனியார் பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

ஜனவரி 24ஆம் தேதிக்குப் பிறகு, நகருக்குள் வந்து பயணிகளை இறக்கிவிடும் பேருந்துகளுக்கும் ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவதில் பெரும் அசௌகர்யங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை நகரிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இது பேருந்துகளை இயக்குவோருக்கும் பயணிகளுக்கும் வசதியானதாக இல்லை.

தினமும் சுமார் 800 தனியார் பேருந்துகள் சென்னையிலிருந்து தென் பகுதி நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. ஆனால், கிளாம்பாக்கத்தில் 77 நடைமேடைகளே உள்ளன.

இதனால், தங்கள் முறைவரும்வரை ஆம்னி பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லாததாலும் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

மேலும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் தேசிய அல்லது மாநில போக்குவரத்து உரிமத்தை வைத்திருக்கின்றன. அவற்றை சென்னை நகருக்குள் வர அனுமதி மறுக்கக்கூடாது” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, “பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு போதுமான அளவுக்கு நகரப் பேருந்துகள் ரூ. 17 – ரூ. 35 கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. இது தவிர, ஆம்னி பேருந்துகளை நிறுத்தத் தனி இடம், கடைகள், காவல் நிலையம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியது. புகைப்படங்களையும் சமர்ப்பித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் புதிய பேருந்து நிலையம் மிகப் பெரிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கூறியது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் 4 யோசனைகள்

இந்த நிலையில்தான், ஆம்னி பேருந்து உரிமையாளர் தரப்பு நான்கு ஆலோசனைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது.

1. பெரும்பாலான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நகரத்திற்குள் தங்கள் பேருந்துகளை நிறுத்தவும் பராமரிக்கவும் சொந்தமாகவோ, வாடகைக்கோ இடங்களை (கராஜ்) வைத்துள்ளனர். ஆகவே சென்னை நகருக்குள் உள்ள பேருந்து நிறுவனங்களின் சொந்த இடங்களில் பேருந்துகளை நிறுத்த அனுமதிக்க வேண்டும். கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இயங்கிய போது இப்படி அனுமதிக்கப்பட்டது.

2. தங்கள் கராஜிலிருந்து பேருந்தை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குக் கொண்டுவரும்போது கராஜிலோ, வழியிலோ பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறையை இப்போதும் அனுமதிக்க வேண்டும்.

3. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் மாதவரத்திலிருந்தும் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்ற அனுமதியை ஆம்னி பேருந்துகளுக்கும் அளிக்க வேண்டும்.

4. சென்னையிலிருந்து பெங்களூர், ஆந்திரப்பிரதேசம் செல்லும் சில ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்ற அனுமதியை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கும் அளிக்க வேண்டும். போகும்வழியில், அவர்கள் கிளாம்பாக்கத்திற்குச் சென்று பயணிகளை ஏற்றிச் செல்வார்கள்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்

இதில் முதலாவது யோசனையை அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், கராஜிலிருந்து கிளாம்பாக்கத்திற்குச் செல்லும் வழியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் யோசனைக்கு தமிழ்நாடு அரசு தயக்கம் தெரிவித்தது.

நகருக்குள் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதித்தால் அது பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று கூறிய நீதிமன்றம், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

பொதுமக்களின் பிரநிதிநிதிகளையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி இடைக்கால உத்தரவு ஒன்றை அளித்தது.

இதனை அடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பிப்ரவரி மூன்றாம் தேதியன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அ. அன்பழகன், டி.கே. திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது நீதிமன்றத்தில் தெரிவித்த யோசனைகள் தவிர, வேறு சில யோசனைகளையும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்தனர்.

“அதாவது, கோயம்பேட்டில் இருந்ததைப் போல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு 100க்கும் மேற்பட்ட அலுவலகங்களைத் தர வேண்டும். நடைமேடைகளை ஒதுக்கும்போது டிராவல்ஸ் நிறுவனங்களின் பெயர்களில் ஒதுக்காமல் அரசு பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர் வாரியாக ஒதுக்க வேண்டும்” என்று கோரினர்.

இந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்ட அரசுத் தரப்பினர், சில நாட்களில் முடிவுகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. அன்பழகன், “ஆம்னி பேருந்துகளை காலியாக நகருக்குள் கொண்டுவந்து அவரவர் கராஜில் நிறுத்திக்கொள்ள நீதிமன்றத்திலேயே அரசு ஒப்புக்கொண்டுவிட்டது. கராஜிலிருந்து கிளாம்பாக்கம் செல்லும் வழியில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிப்பதைப் பற்றி ஆலோசித்துச் சொல்வதாகத் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

சிஎம்டிஏ தரப்பில் இது குறித்துக் கேட்டபோது, “தற்போது நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவைத்தான் தந்திருக்கிறது. சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிப்பதென்றால் எதற்காக புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும்? ஆனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மற்ற யோசனைகள் குறித்து படிப்படியாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமையன்று (பிப்ரவரி 7) விசாரணைக்கு வருகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »