Press "Enter" to skip to content

திருப்பூர்: தீண்டாமைச் சுவரா? பாதுகாப்புச் சுவரா? – பிபிசி கள ஆய்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, “தீண்டாமைச் சுவரால் அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக” பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அது தீண்டாமைச்சுவர் அல்ல, குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர் என எதிர்தரப்பும் புகார் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை கண்டறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் ஊராட்சியின் தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர்.

‘‘இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது. இதனால், தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானதால், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

குன்னத்தூர் சாலையின் ஓரத்தில் தேவேந்திரன் நகர் அமைந்திருக்கிறது. அந்த நகருக்கும் வி.ஐ.பி கார்டனுக்கும் மத்தியில், அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதி எம்எல்ஏவுமான தனபால் தொகுதி மேம்பாட்டு நிதி 8.5 லட்சம் ரூபாயில், ஊராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் ஒரு பகுதியில் தான் அந்தச்சுவரும் அமைந்திருக்கிறது.

நாம் தேவேந்திரன் நகருக்குள் சென்றதும் சில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அந்தச்சுவரின் மீது ஏறிக்குதித்து வி.ஐ.பி நகருக்குள்ளும், மறுமுனையில் இருந்து தேவேந்திரன் நகருக்குள்ளும் வந்து சென்றனர்.

தேவேந்திரன் நகரில் சிலரிடம் சுவர் குறித்தும் சுவரை மக்கள் தாண்டிக்குதிப்பதையும் பற்றி விசாரித்தோம்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

‘20 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கிறோம்’

பிபிசி தமிழிடம் பேசிய தேவேந்திரன் நகரைச்சேர்ந்த குமரேசன், ‘‘300-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் தேவேந்திரன் நகருக்குள் குடியிருக்கிறோம். வி.ஐ.பி கார்டன் பகுதியில் மனை இடங்கள் உருவாக்கப்பட்ட போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்பைச்சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6-7அடி உயரத்துக்கு இந்த தீண்டாமைச்சுவரை கட்டினர். அப்போதே நாங்கள் எதிர்த்தும் எந்தப்பயணும் இல்லை.

எங்கள் பகுதியிலுள்ள அரசு ரோட்டின் அருகேயுள்ள வி.ஐ.பி கார்டன் அரசு ரோடுகளை பயன்படுத்தி 2-3 நிமிடங்களில் சேயூர் பேருந்து நிலையம் செல்ல முடியும். ஆனால், இந்தச்சுவர் அகற்றப்படாமல் உள்ளதால், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி நாங்கள் பேருந்து நிலையம் செல்கிறோம். சுவரின் அருகே அந்தப்பக்கம் இருக்கும் சேவை மையம் செல்லவும், ஞாயவிலைக்கடைக்கும் செல்லவுமே நாங்கள் பல தொலைவு நடக்க வேண்டியுள்ளது,’’ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘நாங்கள் பலமுறை இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். விசாரணை நடத்திய முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள், ‘உடனடியாக தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்தித்தர சேயூர் ஊராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என பதிலளித்து உள்ளனர்.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த தீண்டாமைச்சுவரை அகற்றி பாதை ஏற்படுத்த வேண்டுமென ஊராட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சுவர் இன்னமும் அகற்றி பாதை ஏற்படுத்தப்படவில்லை,’’ எனக்கூறினார்.

மேலும், நம்மிடம் முதல்வரின் தனிப்பிரிவு பதில் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு தொடர்பான ஆவணங்களை காண்பித்தார்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

‘அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்’

பிபிசி தமிழிடம் பேசிய மனோன்மணி, ‘‘வி.ஐ.பி நகரில் இருக்கும் மூன்று ரோடுகளை அரசிடம் ஒப்படைத்து தான் மனையிடத்தை உருவாக்கியுள்ளனர். அரசு அமைத்துள்ள இந்த மூன்று ரோடும் நாங்கள் இருக்கும் தேவேந்திரன் நகரில் எம்.எல்.ஏ நிதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோட்டுக்கு வருமாறு தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு அரசு ரோடுகளுக்கு மத்தியில் சுவர் இருக்கிறது. அரசு ரோட்டில் சுவர் ஏன் இருக்க வேண்டும்?”

“எங்கள் பகுதி ரோட்டுக்கு அந்தப்பக்கம் வி.ஐ.பி கார்டன் அரசு ரோட்டின் ஓரம் சேவை மையம் உள்ளது. இதைப் பயன்படுத்தவும் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி வி.ஐ.பி கார்டனுக்குள் வந்து சேவை மையத்தை பயன்படுத்த வேண்டுமா? சுவரை முழுமையாக அகற்ற வேண்டுமென நாங்கள் கூறவில்லை, மூன்று அரசு ரோடு இணையும் பகுதியில் 5 அடிக்கு சுற்றுச்சுவரை இடித்து வழி ஏற்படுத்தித்தர அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள்,’’ என்றார் மனோன்மணி.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

‘வி.ஐ.பி நகருக்குள் தான் வேலைக்கு செல்கிறோம்’

நாம் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது வி.ஐ.பி நகரில் இருந்து சுவரை ஏறிக்குதித்து வந்த கோவிந்தராஜிடம் பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘தேவேந்திரன் நகருக்குள் வசிக்கும் நான் வி.ஐ.பி கார்டன் பகுதிக்குள் செயல்படும் பனியன் நிறுவனம்க்கு வேலைக்குச் செல்கிறேன். சுவரை தாண்டாமல் சாதாரண ரோட்டில் நடந்து சென்றால், நிறுவனம்க்கு செல்ல 20 நிமிடங்கள் ஆகிவிடும். உணவு இடைவேளையில் சீக்கிரம் வந்து செல்ல சுவர் ஏறிக்குதிக்கிறேன். இப்படி வந்தால் நான் வீட்டுக்கு வர, 3 நிமிடங்கள் கூட ஆகாது,’’ என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த கோவிந்தராஜ், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை விட அதிக பனியன் நிறுவனம்கள் உள்ளன. இங்கு எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் தான், 90 சதவீத தொழிலாளர்களாக உள்ளனர். இந்தச்சுவரை நான் மட்டுமல்ல, பெண் பணியாளர்களும் ஏறிக்குதித்து தான் கடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சுவரை ஏறிக்குதித்து தான் பேருந்து நிலையம் செல்கின்றனர்,’’ எனக்கூறினார்.

மேலும், தாங்கள் ஏறிக்குதிப்பதால் அந்த சுவற்றில் ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும், அதில் காலை வைத்து தான் அனைவரும் ஏறிக்குதிப்பதாக நம்மிடம் சுவற்றையும் காண்பித்தார்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

‘நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம்’

தேவேந்திரன் நகர் மக்கள் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து வி.ஐ.பி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த கோவிந்தசாமியிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘வி.ஐ.பி கார்டன் பகுதியில் 72 மனையிடங்கள் உள்ளன. 2006-ல் இருந்து இங்கு மக்கள் மனையிடங்கள் வாங்கி வசித்து வருகின்றனர். நாங்கள் மனையிடம் வாங்கும் போது வி.ஐ.பி கார்டன் உருவாக்கிய நான்கு பேரும், இந்த நான்கு பேரிடம் விவசாய பூமியை வாங்கியுள்ள கே.சி.பழனிசாமியும் இணைந்து இந்த சுற்றுச்சுவரை பாதுகாப்புக்காக கட்டியுள்ளனர். அதுவும் கே.சி பழனிசாமி என்பவரின் இடத்தில் தான் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்தச்சுவர் எங்கள் பகுதிக்கு பாதுகாப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரோடு பழனிசாமிக்கு சொந்தமானது என அவர் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த கோவிந்தசாமி, ‘‘சில நாட்களாக இந்தச்சுவரை தீண்டாமைச்சுவர் என, அரசு அதிகாரிகளும், தேவேந்திரன் நகரை சேர்ந்தவர்களும் தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது. புகார் தெரிவிக்கும் தேவேந்திரன் நகரைச் சேர்ந்தவர்களின் உறவினரான ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் கூட எங்கள் பகுதியில் வசித்து வருகிறார், குடியிருப்பு சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நாங்கள் அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம், எங்களை குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பது, தீண்டாமை எனக்கூறுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்துள்ளோம்,’’ என்கிறார் அவர்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

‘மக்கள் நடக்கும் ரோடு எனக்கு சொந்தமான இடம்’

இந்த நிலையில், தேவேந்திரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு சாலையே தனது சொந்த நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் கே.சி.பழனிசாமி.

இது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த கே.சி.பழனிசாமி, ‘‘5.6 ஏக்கர் நிலம் ராவாளன், சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம் மற்றும் நடராஜன் ஆகியோருக்குச் சொந்தமானது. இதில், 4 ஏக்கர் நிலம் வி.ஐ.பி கார்டன் மனையிடமாக மாற்றப்பட்டது, 1.6 ஏக்கர் நிலத்தை நான் இந்த நான்கு பேரிடம் இருந்து விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். வி.ஐ.பி கார்டன் பகுதிக்கும் தேவேந்திரன் நகர் பகுதிக்கும் இடையில் இருக்கும் சுவர் மற்றும் அந்த வழித்தடம், எனக்கும் இந்த நால்வருக்கும் கூட்டாக பாத்தியப்பட்டது.”

“அந்த மக்களின் நலன் கருதி பெருந்தன்மையாக அந்த இடத்தில் அவர்கள் நடந்து செல்ல அனுமதித்தேன். இன்று தீண்டாமை எனக்கூறி அவர்கள் புகார் தெரிவித்துள்ளது எனக்கு மன உளைச்சலை தருகிறது. அந்த இடம் எனக்குச்சொந்தமானது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது,’’ என்றார்.

கே.சி.பழனிசாமி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பிப்ரவரி 5-ம் தேதி மனுவும் கொடுத்துள்ளார்.

திருப்பூர் தீண்டாமை சுவர் சர்ச்சை

அரசு என்ன சொல்கிறது?

‘ஒரு தரப்பு சுவரை தீண்டாமைச்சுவர் என்கிறார்கள், மறு தரப்பு பாதுகாப்புச்சுவர் என்கிறது. எது உண்மை, தீர்வு தான் என்ன’? என்ற கேள்வியை பிபிசி தமிழ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவிநாசி தாசில்தாரிடம் முன்வைத்தது.

அதற்கு விளக்கமளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ‘‘இருதரப்பிடமும் மனு பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான விவகாரம் என்பதால் வருவாய்த்துறை மூலம் மாவட்ட ஆட்சியர் விசாரிக்கிறார். இடத்தை அளந்து, முழு விசாரணை முடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தால் அதை நாங்கள் செயல்படுத்துவோம்,’’ என்றார்.

அரசு சாலை அமைத்துள்ளதே தனது நிலத்தில் தான் என கே.சி.பழனிசாமி தெரிவிக்கிறார். அப்போது, சாலை அமைக்கும் போது அது யார் இடம் என ஊராட்சி நிர்வாகம் விசாரிக்கவில்லையா? தனியார் இடத்தில் ஊராட்சி ரோடு அமைத்தது எப்படி? என்ற கேள்வியை பிபிசி தமிழ் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த விஜயகுமார், “ஊராட்சியினர் முறைப்படி சாலை அமைத்துள்ளனர். சாலை அமைத்த இடத்தில் 5 அடி எனக்குச் சொந்தம் என பழனிசாமி தெரிவிக்கிறார். அந்த இடத்தை அளவீடு செய்தால் உண்மை என்னவென்று தெரியவரும்,” என்றார்.

பிபிசி தமிழிடம் விளக்கமளித்த தாசில்தார் மோகனன், ‘‘இரண்டு நாட்களில் பிரச்னை குறித்து துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருதரப்பு புகார்களையும் பெற்றுள்ளோம். விசாரணை முடித்து ஒருவேளை அது தீண்டாமைச்சுவராக இருந்தால் இடித்து அகற்றப்படும். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் விசாரணை முடிந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்,’’ என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »