Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற என்ன செய்ய வேண்டும்? புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அரசாங்கம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் குடியேறியவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கப் போவதாக 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அறிவித்தது.

தனது குடியேற்ற முறையில் உள்ள சிக்கல்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய விதிகள், சர்வதேச மாணவர்களுக்கும், திறன் குறைந்த வேலைகளுக்கும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும்.

ஆனால், நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களை ‘இன்றியமையாதவர்கள்’ எனக் கருதி, திறன்மிகு தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவற்கான வாய்ப்பை வழங்க சிறப்பு விசா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, திறன்மிகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற சில வழிமுறைகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவை இயங்கு தளமாகக் கொண்ட எந்தவொரு முதலாளியும் நிரந்தர வசிப்பிடத்திற்கு திறன்மிகு தொழிலாளர்களை பரிந்துரைக்க முடியும். கூடுதலாக, புலம்பெயர்ந்தோர் ‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், நிரந்தரமாக குடியேறும் வாய்ப்பு பெறுவதாலேயே நீங்கள் ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுவிட மாட்டீர்கள் என்பதையும் கவத்தில் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் குறைந்தது நான்கு ஆண்டுகள் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும். மேலும், புலம்பெயர்ந்தோர் இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியில் இருந்திருக்கக் கூடாது. மேலும், ஒரு வருடத்தில் 90 நாட்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியில் இருந்திருக்கக் கூடாது.

நிரந்தரமாக குடியேறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் வெவ்வேறு விசாக்களுக்கும் வேறுபடும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் ஒரு முதலாளி, உயர்திறன் கொண்ட ஒரு புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர குடியிருப்பு பெற, 4,640 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபாய்) விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான விசா விண்ணப்பக் கட்டணம் 4,710 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 2.6 லட்சம் இந்திய ரூபாய்).

ஆஸ்திரேலியா, விசா, குடியுரிமை

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் யார்யாரெல்லாம் நிரந்தரமாக குடியேறலாம்?

ஒரு குடியேறி, ஆஸ்திரேலிய முதலாளியால் அல்லது நிறுவனத்தால் நிரந்தரமாக குடியேற பரிந்துரைக்கப்பட்டால், அவர் ஆறு மாதங்களுக்குள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், புலம்பெயர்ந்தவர் விசா கிடைத்த ஆறு மாதங்களுக்குள் அங்கு வேலையில் சேர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்.

பொதுவாக, புலம்பெயர்ந்தோர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இருப்பினும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் அல்லது அரசாங்க அறிவியல் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு இது பொருந்தாது.

நிரந்தரமாக குடியேற விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தவர் ஆங்கில மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது பணித் துறையில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர் வேலை செய்ய விரும்பும் நாட்டின் பிரதேசத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொழில்முறை அமைப்பின் உறுப்பினராக பதிவுசெய்திருக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட, குடியேறியவரின் குடும்ப உறுப்பினர் நிரந்தரமாக குடியேறுவதற்கான விசாவிற்கு விண்ணப்பித்தால், அவர்கள் 4,890 ஆஸ்திரேலிய டாலர்களை (2.6 லட்சம் இந்திய ரூபாய்) செலுத்த வேண்டும். இது தவிர, அவர்களின் மருத்துவ சோதனை, காவல் துறை சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக் செலவுகளையும் செலுத்த வேண்டும்.

குடிவரவு வழக்கறிஞரும் அஜ்மீரா சட்டக் குழுவின் நிறுவனருமான பிரசாந்த் அஜ்மீரா கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேற்ற விசா பெறுவதற்கான அதிகபட்ச வயது 45. கனடாவில் நிரந்தர வசிப்பிட விசாவைப் பெறுவதற்கான அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்,” என்றார்.

“இதனால், வயது காரணமாக ஒருவர் கனடாவில் நிரந்தர குடியிருப்பு விசாவைப் பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்பு பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கும். பெரும்பாலான ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பொதுவாக பொறியியல், நிதி, மருத்துவம், துணை மருத்துவம் போன்ற துறைகளில் உயர்திறன் கொண்ட புலம்பெயர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்புக்கான பரிந்துரை செய்யப்படுகிறது,” என்றார்.

ஆஸ்திரேலியா, விசா, குடியுரிமை

பட மூலாதாரம், Getty Images

‘குளோபல் டேலண்ட் விசா’ பெறுவது எப்படி?

‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் மூலம் நிரந்தர வசிப்பிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், சர்வதேச அளவில் ஏதாவது ஒரு துறையில் சிறந்த பங்களிப்புகளைச் செய்திருக்க வேண்டும்.

விளையாட்டு, கலை, ஆராய்ச்சி, அல்லது கல்வி ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒருவர், ‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வசிப்பிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை. இருப்பினும், விண்ணப்பதாரர் 18 வயதிற்குட்பட்டவராகவோ அல்லது 55 வயதிற்கு மேற்பட்டவராகவோ இருந்தால், விண்ணப்பதாரர் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையோ அல்லது ஏதேனும் முக்கியமான துறையில் புதிய ஆராய்ச்சியையோ செய்திருக்க வேண்டும்.

கூடுதலாக, நிரந்தரமாக குடியிருக்க விண்ணப்பிக்கும் ஒருவர் தனது துறையில் சிரமமின்றி எளிதாக வேலை தேட முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆங்கில மொழித் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

‘குளோபல் டேலண்ட் விசா’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் குடியேறியவர் அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ள எவரும் ஆஸ்திரேலிய அரசிடம் கடன் பெற்றிருக்கக் கூடாது. ஏதேனும் கடன் இருந்தால், புலம்பெயர்ந்தவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், கடந்த காலத்தில் விசா நிராகரிக்கப்பட்ட ஒருவர் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

குடிவரவு வழக்கறிஞர் பிரசாந்த் அஜ்மேரா கூறுகையில், ‘குளோபல் டேலண்ட் விசா’ ஆஸ்திரேலிய நிறுவனங்களை CEO, CFO அல்லது CTO போன்ற மூத்த நிர்வாகப் பதவிகளை நிரப்புவதற்கு, திறமையான குடியேறியவர்களை நிரந்தர குடியிருப்புக்காக பரிந்துரைக்க அனுமதிக்கிறது.

ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்த விசா மூலம் சர்வதேச திறமைகளை ஈர்க்க விரும்புகின்றன. மேலும் இந்த விசாவின் செயலாக்கமும் வேகமாக உள்ளது.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய குடிவரவு நிபுணர் மருத்துவர் ஜூலி தேசாய், உலகமயமாக்கல் காரணமாக ஒவ்வொரு நாடும் சர்வதேச அளவில் திறமையானவர்களை ஈர்க்க விரும்புகிறது என்று கூறினார். சர்வதேச தொழிலாளர் சந்தையில் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு மத்தியில், இந்தத் திட்டத்தின் மூலம், ஆஸ்திரேலியாவும் தனது நாட்டில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த உலகளாவிய திறமையாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த விசாவைப் பெறுவதற்கு ஒருவர் சர்வதேச அளவில் விளையாட்டு, கலை, ஆராய்ச்சி அல்லது கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்க வேண்டும், என்றார்.

மேலும், “ஒருவகையில், குளோபல் டேலண்ட் விசா பெற வயது வரம்பு இல்லை. இதனால், பல ஆண்டுகளாக தங்கள் துறையில் பணியாற்றி, சர்வதேச அளவில் புகழ் பெற்ற புலம்பெயர்ந்தோர் கூட இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »