Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிஜத்தில் முதலீடாக மாறாதது ஏன்? என்ன பிரச்னை?

பட மூலாதாரம், DIPR

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

புதிய முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3,440 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகளை ஈர்த்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடாக மாறுவதில் என்ன சவால்கள் இருக்கின்றன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 29ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலர் உள்ளிட்டோரும் சென்றனர். முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி ஏழாம் தேதி சென்னை திரும்பினார்.

அவரது ஸ்பெயின் பயணத்தின் மூலம் சுமார் 3,440 கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்பெயினிற்குச் சென்ற பிறகு முதல் கட்டமாக, அங்குள்ள தொழில்துறையினரின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதற்குப் பிறகு சில நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

ஸ்டாலின் பயணத்தால் ஸ்பெயினிலிருந்து எவ்வளவு முதலீடு கிடைக்கும்?

முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம், Erik Solheim/X

புதன்கிழமையன்று சென்னைக்கு வந்துசேர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட சில நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டார்.

அதன்படி, ஹபக் – லாயிட் நிறுவனம் 2,500 கோடி ரூபாயையும் எடிபான் நிறுவனம் 540 கோடி ரூபாயையும் ரோகா நிறுவனம் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மனியைச் சேர்ந்த கப்பல் மற்றும் கன்டெய்னர் நிறுவனமான ஹபக் – லாயிட், தூத்துக்குடி மற்றும் வேறு சில துறைமுகப் பகுதிகளில் கன்டெய்னர் முனையங்களை அமைக்க சுமார் 2,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால், எத்தனை வருடங்களில் இந்த முதலீடுசெய்து முடிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சானிடரிவேர் பொருட்களை உற்பத்தி செய்துவரும் ரோகா நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இப்போது கூடுதலாக 450 கோடி ரூபாயை இங்கே முதலீடு செய்ய இந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையில் தானியங்கி உற்பத்தி அமைப்புகளை மேம்படுத்தவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் குளோபல் டெக்னிகல் சென்டரை மேம்படுத்தவும் இந்த முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோகா நிறுவனத்தின் முதலீடு இந்த வருட இறுதிக்குள் செய்து முடிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ரோகா நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒன்பது இடங்களில் தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது. இதில் நான்கு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, பெருந்துறை, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன. அதில் பெருந்துறை, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளை மேம்படுத்த புதிய முதலீட்டை ரோகா பயன்படுத்தும்.

ஜனவரி மாதத் துவக்கத்தில் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டின் மூலம் சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பல லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிஜத்தில் முதலீடாக மாறாதது ஏன்?

ஸ்பெயினில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

இதற்குப் பிறகு, புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா, சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் பயணத்தை மேற்கொண்டு முதலமைச்சர் திரும்பியிருக்கிறார்.

ஆனால், இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு முதலீடாக மாறுகின்றன என்ற கேள்வியும் இருக்கிறது. இதுதொடர்பான தகவல்களை மாநில அரசுதான் வெளியிட வேண்டும். ஆனால், பெரும்பாலான தருணங்களில் அது நடப்பதில்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றுவதிலும் சவால்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அனுமதிகளைப் பெற்றுத்தருவதில் ஒற்றைச் சாளர அமைப்பாக இருக்கும் ‘கைடன்ஸ்’ போன்ற அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் தருவது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, நிஜமான முதலீடாக மாற்ற உதவும் என்கிறார் தமிழக பொருளாதார நகர்வுகளை நீண்ட காலமாக கவனித்துவரும் பொருளாதார ஆலோசகரான பாலசுப்பிரமணியன்.

“இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையில் நிறுவனங்களுக்கு சாதகமானவை. இதில் அரசு பல வாக்குறுதிகளை அளிக்கும். இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வந்த நிறுவனங்களால்தான் ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்கள் வளர்ந்தன.

தமிழ்நாட்டில் கைடன்ஸ் என்ற நிறுவனம்தான் புதிதாக வரும் நிறுவனங்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறது, ஒற்றச்சாளர அனுமதிகளைப் பெற்றுத்தருகிறது. தான் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு இந்த நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும்.

சட்டரீதியான அதிகாரம் இல்லாவிட்டால், கைடன்ஸ் சொல்வதை அரசின் பிற துறைகள் கேட்காது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அப்படித்தான் இருக்கிறது” என்கிறார் பாலசுப்பிரமணியன்.

என்ன சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்?

உலக முதலீட்டாளர் மாநாடு

பட மூலாதாரம், DIPR

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1996 – 2001 காலகட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என்றும் இதன் காரணமாகவே ஹுண்டாய், செயின்ட் கோபைன் போன்ற நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்ய வந்தன. அந்தத் தருணத்தில் அரசின் எல்லாத் துறைகளும் முதலீட்டு அனுமதிகளை அளிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட்டன என்கிறார் அவர்.

“புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பவை ஒரு பரந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனம் பல்வேறு அம்சங்களை ஆராயும். அரசு தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா, சரியான இடம் கிடைக்கிறதா, நிறுவனம் நல்ல நிதி நிலையில் இருக்கிறதா போன்றவற்றின் அடிப்படையில்தான் முதலீடுகள் அமையும். எல்லா அரசுகளும் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு முதலீடாக மாறின என்ற தகவலை வெளியிட வேண்டும். அது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி.

தமிழ்நாட்டில் முதலீட்டாளர் மாநாடுகள் நீண்ட காலமாகவே நடத்தப்பட்டுவருகின்றன. முதல் முதலீட்டாளர் மாநாடு 2015ல் நடத்தப்பட்டது. அதில் 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 2019ஆம் ஆண்டில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, இந்த ஆண்டுத் துவக்கத்தில் புதிதாக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தியது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »