Press "Enter" to skip to content

திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பதை அரசுக்கு தெரிவிப்பது அவசியமா? எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

உத்தராகண்ட் மாநில பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் பொது சிவில் சட்ட மசோதாவில், `லிவ்-இன்` உறவில் இருப்பவர்களுக்கென வகுத்துள்ள விதிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, `லிவ்-இன்` உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மாவட்ட பதிவாளரிடம் அறிவிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதேவேளையில், அந்த உறவில் இருக்கும்போது, குறிப்பாக பெண்களுக்கு ஏதேனும் வன்முறைகள் நிகழும்போது அவற்றுக்கு தீர்வு காண இத்தகைய பதிவுகள் அவசியம் என்பது பாஜகவின் வாதமாக இருக்கிறது. `லிவ்-இன்` உறவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்திருப்பது ஏன்?

உத்தராகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தராகண்ட் இருக்கிறது.

புதன்கிழமை (பிப். 07) அம்மாநில சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சாதி, மதம், பாலினம், பாலின தேர்வுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் வகையிலான சட்டம் இது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றை மட்டுமே இச்சட்டம் குறிக்கிறது.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், AFP

லிவ்-இன் உறவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?

திருமணம் செய்துகொள்ளாமல் `லிவ்-இன்` உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மாவட்ட பதிவாளரிடம் அறிவித்து, அதுதொடர்பான சான்றிதழை பெற வேண்டும் என அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கும் மேலாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து, அதை தெரிவிக்காத இளைஞர் அல்லது இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ்-இன் உறவில் இருக்க வேண்டுமெனில் முதலில் தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.

லிவ்-இன் உறவை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

`லிவ்-இன்` உறவை பதிவு செய்யும்போது மாவட்ட பதிவாளர், சம்பந்தப்பட்ட ஜோடியிடம் சிறு விசாரணையையும் நடத்துவார்கள். அப்போது கூடுதல் தகவல்கள் கேட்கப்படலாம். அவர் பெற்ற தகவல்கள் உள்ளூர் காவல் நிலையம் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் சமர்ப்பிக்கப்படும். எல்லாவற்றையும் சரிபார்த்து பின்னர், அந்த ஜோடிக்கு சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும். அப்படி சான்றிதழ் மறுக்கப்பட்டால், அதற்கான காரணம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். உறவில் இருப்பவர்கள் திருமணமானவராகவோ, 18 வயதுக்குட்பட்டவராகவோ இருந்தால் சான்றிதழ் மறுக்கப்படலாம்.

மேலும், இந்த உறவில் இருப்பவர்கள் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பித்து அந்த உறவை முறித்துக்கொள்ளவும் செய்யலாம். இதையும் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், GETTY IMAGES

எதிர்ப்பு எழுவது ஏன்?

இந்த விதிகளில், `லிவ்-இன்` உறவுகளை பதிவு செய்து அறிவிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

திருமண உறவில் அல்லாமல் `லிவ்-இன்` உறவில் இருப்பவர்கள் இந்தியா போன்ற நாட்டில் ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இவை மேலும் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் அந்த உறவில் இருப்பவர்கள்.

இத்தகைய பதிவுகளால் தங்கள் உறவு குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து அவர்கள் தங்களை புறக்கணிக்கலாம் என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது. இதனால், வீடு கிடைப்பது உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள்.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

“பிற்போக்குத்தனமானது”

இரண்டு ஆண்டுகளாக `லிவ்-இன்` உறவில் இருக்கும் சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 31 வயது பெண் ஒருவர் இதுதொடர்பாக பிபிசியிடம் பேசினார். அப்பெண்ணும் அவருடைய இணையும் `கிரியேட்டிவ்` துறையில் உள்ளனர். இத்தகைய விதிகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை என்கிறார் அவர்.

“உலகின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா சில ஆண்டுகளில் மாறிவிடும் என பேசப்பட்டுவரும் நிலையில் இந்த விதிகள் மிக பிற்போக்குத்தனமாக உள்ளன. நாம் முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்லக்கூடாது. இத்தகைய விதிகளை நிறைவேற்றுவதற்கு முன் தகுந்த ஆய்வுகளை செய்திருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

பழமைவாத எண்ணத்திலிருந்து இத்தகைய விதிகள் தோன்றியிருப்பதாக கூறும் அவர், தன்னுடைய தனிப்பட்ட உறவு குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து தான் அசௌகரியமாக உணர்வதாக கூறுகிறார்.

“இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதில் அரசு தலையிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிலர் திருமணம் போன்ற நிரந்தர உறவுக்குள் செல்வதற்கு முன்பான காலத்தில் `லிவ்-இன்` உறவில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உறவுகளை வெளியே சொல்ல விரும்ப மாட்டார்கள்” என்கிறார் அவர்.

ஏற்கனவே `லிவ்-இன்` உறவில் இருப்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்ற பார்வையே பெரும்பாலும் உள்ளதாக கூறும் அவர், வாடகை வீடு போன்றவற்றை கண்டறிவது தங்களுக்கு பெரும் பிரச்னையாகவே இருக்கும் என்றார்.

“நாங்கள் வீடு தேடி சென்றால் எங்களை வித்தியாசமாகவே பார்ப்பார்கள். புரோக்கர்கள் கூட எங்களுக்கு வீடு குறித்த தகவல்களை தர மாட்டார்கள். எனினும் எங்களுக்கு அந்த சிக்கல் எழவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதால் `லிவ்-இன்` உறவு குறித்த உரையாடல்கள் மாறியிருக்கின்றன. ஆனால், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய விதிகள் மேலும் பல சிக்கல்களுக்கே வழிவகுக்கும்” என்றார்.

இதனால், இந்த உறவில் இருக்க வேண்டாம் என பலரும் நினைக்கலாம் எனக்கூறும் அவர், ஒவ்வொருவருடைய தனித்துவம், சுதந்திரத்தை இந்த விதிகள் பாதிக்கும் என்றார்.

“லிவ்-இன் உறவில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டிருக்கலாம்” என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

“மனித உரிமை மீறல்”

குடும்ப வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பணியாற்றி வரும் தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷீலு கூறுகையில், “லிவ்-இன் உறவுகள் சரி, தவறு என கூறுவதற்கு அரசு யார்? ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களில் அரசு தலையிடுவது போன்று இருக்கிறது. எந்த பாலினமாக இருந்தாலும் அவர்களின் பாலின தேர்வு என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அரசாங்கம் அதில் தலையிட முடியாது” என்றார்.

எல்லா மத அடிப்படைவாதத்திலிருந்து தான் இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் அனைத்தும் இத்தகைய உறவுகளுக்கு எதிராக உள்ளதாக கூறுகிறார் ஷீலு.

அந்த உறவில் இருப்பவர்களை அச்சுறுத்தும் விஷயமாகவே இதனை தான் கருதுவதாக தெரிவிக்கிறார் ஷீலு. `இது அடிப்படை மனித உரிமை மீறல்` என்றும் அவர் தெரிவித்தார்.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

“பெண்களின் உரிமைகளை பாதுகாக்கத்தான்”

இத்தகைய எதிர்வினைகள் குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

அவர் கூறுகையில், “திருமணம், குடும்பத்திற்குள் வராத இத்தகைய உறவுகளில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இயற்கையாகவே பாலின ரீதியாக பெண்கள் எளிதில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். `லிவ்-இன்` உறவில் அவர்கள் சுரண்டப்பட்டால், அவர்களின் பிரச்னையை யார் தீர்ப்பது? அவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அவர்களின் உறவை பதிவு செய்வது தவறல்ல, அதற்காக யாரும் அச்சப்பட வேண்டாம். தகவல்கள் வெளியில் கசியும் என்றும் நினைக்க வேண்டாம். பெண்களின் உரிமைகளை காக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது” என்றார்.

குறிப்பிட்ட உறவில் ஓர் ஆணோ, பெண்ணோ பிரச்னை ஏற்படும்போது தாங்கள் அந்த உறவிலேயே இல்லை எனகூட கூறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறும் வானதி சீனிவாசன், அத்தகைய சமயங்களில் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றார்.

“அவர்கள் உரிமையில் தலையிடுவதில்லை. `லிவ்-இன்` உறவில் இருக்கக் கூடாது என யாரையும் அரசு சொல்லவில்லை” என்று கூறினார்.

தவறான தகவல்களை தருபவர்கள் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அதன் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்கிறார் வானதி.

`லிவ்-இன்` உறவில் இருக்கவே கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் என்ன நிலை?

கடந்த மே 2018-ல் `இன்ஷார்ட்ஸ்` 1,40,000 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 18-85 வயதுடைய 80% பேர், `லிவ்-இன்` உறவுகளை சமூக அவலமாக கருதுகின்றனர். லயன்ஸ்கேட் பிளே 2023-ல் 1,000 இந்தியர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இருவரில் ஒருவர் தங்கள் துணையை நன்றாக புரிந்துகொள்ள ஒன்றாக சேர்ந்துவாழ்வது முக்கியம் என தெரிவித்திருக்கின்றனர்.

நீதிமன்றங்களும் `லிவ்-இன்` உறவுகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளன. 2012-ல் டெல்லி உயர் நீதிமன்றம் `லிவ்-இன் உறவுகள் ”ஒழுக்கக்கேடானது” என்றும் ”மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் உருவானது” என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

எனினும், 2010-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களின் உரிமைகளை காக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் இத்தகைய உறவில் இருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனக்கூறிய உச்ச நீதிமன்றம், `லிவ்-இன்` உறவுகள் குற்றமோ, பாவமோ இல்லை என தெரிவித்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »