Press "Enter" to skip to content

அயோத்தியை தொடர்ந்து வாரணாசி, மதுரா பற்றி சட்டமன்றத்தில் பேசிய யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை அயோத்தியில் ராமர் கோவில் பற்றிக் குறிப்பிட்டு, வாரணாசி மற்றும் மதுரா பிரச்னையை எழுப்பினார்.

உத்தர பிரதேச சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின்போது பேசிய ​​யோகி ஆதித்யநாத், “நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்தச் சமூகமும் நம்பிக்கையும் மூன்று (இடங்கள்) பற்றி மட்டுமே பேசி வருகிறது” எனத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “மூன்று இடங்களை மட்டுமே கேட்கிறோம். மற்ற இடங்கள் பற்றி எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அந்த மூன்று இடங்களும் சிறப்பு வாய்ந்தவை. அவை சாதாரணமான இடங்கள் அல்ல. அவை கடவுளின் அவதார பூமி. அவற்றை சாதாரணமாகக் கருத முடியாது” என்றார்.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், ANI

“அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டுமொத்த உலகமே பார்த்தது. எனவே, சிவனும் அவருடைய பக்தர்களும் மட்டும் ஏன் பின்தங்க வேண்டும்? பக்தர்கள் நள்ளிரவில் தடுப்புகளை உடைத்து சிவனை வழிபட்டுள்ளனர். அதேபோன்று, கிருஷ்ண பகவானும் ஏன் காத்திருக்க வேண்டும்?” என, யோகி ஆதித்யநாத் பேசினார்.

ஞானவாபி மசூதியின் வியாஸ் அடித்தளத்தில் வழிபாடு

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அயோத்தியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டப்பட்ட இடத்தில், 1992ஆம் ஆண்டு வரை பாபர் மசூதி இருந்தது. இந்த மசூதி, டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்களால் இடித்துத் தள்ளப்பட்டது.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், ANI

ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். வாரணாசியின் ஞானவாபி மசூதி மீதும் இந்து தரப்பு உரிமை கோருகிறது. சிவபெருமானின் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளதாக இந்து தரப்பு நம்புகிறது.

கிருஷ்ணர் மதுராவில் பிறந்ததாக இந்து தரப்பு நம்புகிறது. மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவிலுக்கு அருகில் இத்கா மசூதி உள்ளது. இதற்கும் இந்து தரப்பு உரிமை கோருகிறது.

கடந்த மாதம், வாரணாசியில் உள்ள நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் வியாஸ் அடித்தளத்தில் வழிபாடு நடத்த இந்து தரப்புக்கு உரிமை வழங்கியது. உத்தரவு வந்த சில மணிநேரங்களில் மாவட்ட மாஜிஸ்திரேட் இரவில் அங்கு பூஜையைத் தொடங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி குழு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

`அயோத்தி, காசி, மதுராவுக்கு அநீதி`

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், ANI

இதை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். “அயோத்திக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதே அநீதிதான் காசியிலும் மதுராவிலும் நடக்கிறது” என்றார் அவர்.

“அநியாயத்தைப் பற்றிப் பேசும்போது நமக்கு 5,000 ஆண்டுகள் பழமையான ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது, பாண்டவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. அப்போது கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்று, `எனக்கு ஐந்து கிராமங்களை மட்டும் கொடுங்கள், மற்ற எல்லா நிலத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்` எனக் கூறியதாக” யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் கூறுகையில், பல நூறு ஆண்டுகளாக மூன்று இடங்களை மட்டுமே இந்தச் சமூகம் கேட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர். `வாக்கு வங்கி` காரணமாக இந்த சர்ச்சை உருவானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், “இந்தியாவில், பொது நம்பிக்கை அவமதிக்கப்பட வேண்டும், பெரும்பான்மை சமூகம் வருத்தப்பட வேண்டும் என்ற நிலை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

`வேண்டுமென்றே வளர்ச்சி நிறுத்தப்பட்டது`

யோகி ஆதித்யநாத்

அயோத்தி, காசி மற்றும் மதுராவின் வளர்ச்சி திட்டமிட்டு நிறுத்தப்பட்டதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

“அயோத்தி, காசி, மதுரா வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் என்ன?” என்று அவர் கேட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அயோத்தியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்க முடியும் என்றும் கூறினார்.

அவர் கூறுகையில், “அயோத்தியில் உள்ள சாலைகளை விரிவுபடுத்தியிருக்கலாம். அங்குள்ள மலைப்பாதைகளுக்கு புத்துயிர் அளித்திருக்கலாம். அயோத்தியில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கியிருக்கலாம். அங்கு ஒரு விமான நிலையம் கட்டியிருக்கலாம்,” என்றார்.

உத்தர பிரதேசம் மற்றும் மத்தியில் கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் மீது கேள்விகளை எழுப்பிய யோகி ஆதித்யநாத், தனது அரசு நல்ல நோக்கத்துடன் செயல்படுகிறது என்றார்.

அவர் கூறுகையில், “எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. கொள்கையும் தெளிவாக இருந்தது. எதையும் நிறுத்தாமல் நாங்கள் பணிகளை மேற்கொண்டோம். நாங்களும் அயோத்திக்கு சென்றோம். மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றோம்,” என்றார்.

வாக்கு வங்கியைப் பற்றியோ, நாற்காலியை இழப்பதைப் பற்றியோ கவலைப்படவில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

“வாக்கு வங்கி குறையும் என்ற அரசியல் நோக்கத்தால்தான் அயோத்தி சாபம் பெற்றிருந்தது. ஆனால், அயோத்தியில் தீப உற்சவத்தைத் தொடங்கும் பாக்கியம் எனக்கும் எனது அரசுக்கும் கிடைத்துள்ளது,” என்றார் அவர்.

அப்போது அவர், “அயோத்தியில் தகராறு ஏற்பட்டதாக மக்கள் கூறுவார்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், அயோத்தியின் வளர்ச்சியையும் அங்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளையும் எப்படிப் பறிக்க முடியும்?” என அவர் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991

நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆனால், நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி, ஆகஸ்ட் 15, 1947இல் என்ன வடிவத்தில் அவை இருந்தனவோ அதேபோன்றே இருக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, சுதந்திரத்தின்போது இருந்த வழிபாட்டுத் தலம், மதத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது.

‘வழிபாட்டுத் தலங்களை மாற்றுவது தொடர்பான சச்சரவுகளைத் தடுப்பதற்கும்’, ‘சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கும்’ இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

சுதந்திரத்தின்போது இருந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்த வழக்கையும் தாக்கல் செய்ய முடியாது என்று அது மேலும் கூறுகிறது.

இருப்பினும், இந்தச் சட்டம் பாபர் மசூதி-ராம ஜென்மபூமி சர்ச்சைக்குப் பொருந்தாது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »