Press "Enter" to skip to content

ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா அகற்றப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரத்திலுள்ள பன்பூல்புராவில் வியாழக்கிழமை மாலை வன்முறை வெடித்தது.

ஹல்த்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்பூல்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது, கல் வீச்சு தொடங்கியது என்று நைனிடால் காவல்துறை கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கல் வீச்சு மற்றும் தீ வைப்பில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது மக்களுக்கும், அரசு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கலவரம் செய்வோரைக் கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

பன்பூல்புராவில் உள்ள காவல்துறையினர் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டிருந்த மதரஸாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, உள்ளூர் மக்கள் தீ வைத்து கற்களை வீசத் தொடங்கியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

மதரஸாவை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

நைனிடால் மாவட்ட தகவல் அதிகாரி ஜோதி சுந்த்ரியால், பிபிசி செய்தியாளர் ராஜேஷ் டோப்ரியாலிடம் பேசும்போது, நான்கு பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். வன்முறையில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை கும்பல் பல வாகனங்களை எரித்துள்ளது, பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள். சேத விவரங்கள் குறித்து தற்போது தெளிவாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பல பத்திரிகையாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் வன்முறையில் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்புப் படைகளின் நான்கு பட்டாலியன்கள் உட்பட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து காவல்துறை படைகள் வியாழக்கிழமை மாலை ஹல்த்வானிக்கு வரவழைக்கப்பட்டன.

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மதரஸா கட்டப்பட்டுள்ளதாகவும், அதை இடிக்க ஏற்கனவே அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி எஸ்.எஸ்.பி பிரஹலாத் மீனா தெரிவித்துள்ளார்.

ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் தெரிவித்தார்.

ஹல்த்வானி

பட மூலாதாரம், ANI

ஹல்த்வானி வன்முறை பற்றி உத்தரகாண்ட் முதல்வர் என்ன சொன்னார்?

வியாழன் அன்று கலவரக்காரர்களை கண்டால் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பன்பூல்புரா, ஹல்த்வானியில் சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றும் போது காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையும், அப்பகுதியில் அமைதியின்மையை பரப்பியதையும் முதல்வர் தீவிரமாக எடுத்துக் கொண்டார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை யாரும் சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்,” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பன்பூல்புராவில் பதற்றமான பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கலவரக்காரர்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்,” என்று அந்தச் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

ஹல்த்வானியில் என்ன நடந்தது?

ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில் உள்ள தொடர்வண்டித் துறை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான பணிகளை தொடர்வண்டித் துறை நிர்வாகம் நடத்தி வருகிறது. இது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி இது.

மதரஸாவை இடிக்கும் பணி வியாழக்கிழமை மாலை தொடங்கியவுடன், ஏராளமானோர் வீதிக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கல் வீச்சு தொடங்கியது. பதிலுக்கு காவல்துறையும் நடவடிக்கை எடுத்தது.

ஆவேசமான கும்பல் பன்பூல்புரா காவல் நிலையத்தை தாக்கி பல காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்துடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க தலைவர் நேஹா ஜோஷி தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹல்த்வானி

பட மூலாதாரம், ANI

நைனிடால் ஆட்சியர் சொல்வது என்ன?

பன்பூல்புராவில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த வன்முறையில் சிலர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் உள்ளது என்று நைனிடால் ஆட்சியர் வந்தனா சிங் கூறியுள்ளார். சுடப்பட்ட தோட்டாக்கள் சட்டப்பூர்வ ஆயுதங்களில் இருந்து சுடப்பட்டதா அல்லது சட்டவிரோத ஆயுதங்களில் இருந்து சுடப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டதாகவும் ஆட்சியர் வந்தனா சிங் கூறியுள்ளார்.

“சுடப்பட்ட மூன்று முதல் நான்கு பேர் இறந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் கும்பல் சுட்ட தோட்டாக்களால் இறந்தார்களா அல்லது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா என்பதை அறியும் பணி நடந்து வருகிறது,” என்றார் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங்.

வன்முறை கும்பல் பன்பூல்புரா காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றதாக கூறும் மாவட்ட ஆட்சியர், “அப்போது காவல்நிலையத்தில் இருந்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலயைத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதையடுத்து, பன்புல்புரா பகுதியை ஒட்டியுள்ள காந்திநகர் பகுதியிலும் வன்முறை பரவியது,” என்றார்.

“இந்த வன்முறை திடீரென தூண்டப்பட்டது போன்று இல்லாமல், நன்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. கலவரக்காரர்கள் கல்லெண்ணெய் குண்டுகளையும் பயன்படுத்தினர்” என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பன்பூல்புரா பகுதியில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரின் முக்கிய பகுதியை வன்முறை எட்டவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

“அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல்துறையினரும் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

ஹல்த்வானி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அகற்றப்படும் மதரஸா நசூல் நிலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

நசூல் நிலம் என்பது அரசு நிலம். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

இந்த மசூதி அப்துல் மாலிக் என்பவரால் கட்டப்பட்டது என்று பன்பூல்புராவில் வசிக்கும் ஜாபர் சித்திக் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

“கடந்த நான்கைந்து நாட்களாக இந்தப் பகுதிக்கு காவல்துறையினர் வந்து மதரஸா, மசூதியை அகற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். வியாழக்கிழமை காலை அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரத்துடன் இங்கு வந்தனர். நான் சுமார் 5 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தேன். கற்கள் வீசி சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதை அறிந்தேன்,” என்றார்.

“சிலர் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கும் நாசப்படுத்தினர். இந்த முழு சம்பவம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. தற்போது, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, நாங்கள் எங்கள் வீடுகளை பூட்டிவிட்டோம்,” என்றார்.

மதரஸாவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சிராஜ் கான் துரித உணவு மையத்தை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான காவல் துறை வாகனங்கள் வருவதை பார்த்தபோது இங்கு வன்முறை நடந்துள்ளது தெரிய வந்தது என்றார்.

அவர் தனது கடையை விரைவாக மூடிவிட்டு தனது குடும்பத்துடன் தனது வீட்டில் தன்னை பூட்டிக்கொண்டதாக கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »