Press "Enter" to skip to content

இரண்டே வாரங்களில் 5 பேருக்கு பாரத ரத்னா, சிறிய கட்சிகளுடன் பேரம் – தேர்தலில் பின்னடைவு வரும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறதா?

  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்பூரி தாக்கூர் மற்றும் லால் கிருஷ்ண அத்வானிக்குப் பிறகு மோதி அரசு முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், செளத்ரி சரண் சிங், மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் முன்னோடியாக கருதப்படும் வேளாண் விஞ்ஞானி மருத்துவர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்குவதாக அறிவித்துள்ளது.

பாரத ரத்னா நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதாகும்.

நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர் செளத்ரி சரண் சிங். ஆயினும் அவரது பதவிக்காலம் மிகவும் குறுகியதாக இருந்தது.

1979 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற 170 நாட்களுக்குப் பிறகு அவர் பதவி விலக நேரிட்டது. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மையை அவரால் நிரூபிக்க முடியவில்லை.

சௌத்ரி சரண் சிங் விவசாயிகளின் பெரிய தலைவராக இருந்தார். 1977 இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி அரசு அமைப்பதில் அவரது கட்சி பெரும் பங்களிப்பை வழங்கியது.

நாட்டின் 10வது பிரதமராக பதவி வகித்தவர் பி.வி.நரசிம்மராவ். 1991 ஜூன் 21 முதல் 1996 மே 16 வரை பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், இந்தியப் பொருளாதாரத்தை உலகமயமாக்கலின் பாதையில் திருப்பியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவர் இந்தியாவில் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஆந்திர மாநில முதல்வராகவும் பதவி வகித்தவர் அவர். நாட்டின் உள்துறை அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார்.

மருத்துவர் எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். 1960 மற்றும் 1970 க்கு இடையிலான தசாப்தத்தில் இந்திய விவசாயத்தில் புரட்சிகரமான

தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய அவர் உணவுப் பாதுகாப்பு இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த மூவரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார். பல்வேறு துறைகளில் அவர்களது பங்களிப்பை பிரதமர் மோதி கோடிட்டுக் காட்டினார்.

ஆனால் இரண்டே வாரங்களில் கர்பூரி தாக்கூர், எல்.கே. அத்வானி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் சௌத்ரி சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய 5 பேருக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதான அறிவிப்புகள் தேர்தல் அரசியலுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.

பாரத ரத்னா விருதும் தேர்தல் ஆதாயமும்

பட மூலாதாரம், PIB

நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது ஏன்?

அதிக எண்ணிக்கையில் இந்த விருதுகளை வழங்குவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோதி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

“பிரதமரின் பார்வை முழுவதுமாக தேர்தல் மீதே உள்ளது. தேர்தல் வந்தவுடனே கர்பூரி தாக்கூர் நினைவுக்கு வந்து விட்டார். ராமர் கோவில் திறப்பு விழாவிற்குக் கூட செல்ல அனுமதிக்கப்படாத அத்வானிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இப்படி செய்வதன் மூலம் சங் பரிவாருடனான தனது கருத்து வேறுபாடுகளை தேர்தலுக்கு முன்பாக முடிவுக்கு கொண்டு வர மோதி விரும்புகிறார்,” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய் தெரிவித்தார்.

நரேந்திர மோதி சமீபத்தில் ‘குடும்பவாதம்’ பற்றிய அறிக்கைகளை அளித்தார் மற்றும் காங்கிரஸை ’குடும்பக் கட்சி’ என்று அழைக்க முயன்றார்.

நரசிம்மராவுக்கு பாரத ரத்னா அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் ’குடும்பத்திற்கு’ மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்ட மோதி விரும்புவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நரசிம்மராவ் ஒரு திறமையான பிரதமர், ஆனால் சோனியா காந்தி அவரை அவமதித்தார் என்பதைக் காட்ட பாஜக விரும்புகிறது.

“இது பாஜகவின் பழைய கோட்பாடு. அக்கட்சி, பாரதிய ஜனதாவின் பிரதமர்களுக்குப் பிறகு நரசிம்மராவை மிகவும் திறமையான பிரதமராக கருதுகிறது. அதனால்தான் பாஜக இப்போது அவருக்கு மரியாதை செலுத்துகிறது. எந்த திறமையான பிரதமரை குடும்பவாதம் காரணமாக காங்கிரஸ் அவமதித்ததோ அந்த பிரதமரை பாஜக கெளரவிக்கிறது என்று காட்ட அது விரும்புகிறது,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிட்டார்.

இந்த முறை 400 ஐ (இடங்கள்) தாண்டிவிடுவோம் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், ராமர் கோயில், வகுப்புவாதத்தின் எழுச்சி, நலத் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் அதிகமான விளம்பரங்கள் இருந்த போதிலும் அவர் பல்வேறு சமூகங்களை மகிழ்விப்பதற்காக பாரத ரத்னாவை வழங்குகிறார் என்று நீலாஞ்சன் சுட்டிக்காட்டினார்.

”சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிப்பதைப் பார்த்தால் தேர்தலில் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் பாஜக இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை இந்தக் காரணத்திற்காகத் தான் இந்த ‘தேர்தல் அணிதிரட்டல்’ நடத்தப்படுகிறது என்று நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.

பாரத ரத்னா விருதும் தேர்தல் ஆதாயமும்

பட மூலாதாரம், @JAYANTRLD

தேர்தலில் பின்னடைவு வரும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறதா?

பாரத ரத்னா அறிவிப்பை, ‘தேர்தல் கருவியாக’ மோதி அரசு பயன்படுத்தப் போகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாரத ரத்னா விருது வழங்குவதற்கான ஏற்பாடு அரசியலமைப்பின் 18(1)வது பிரிவில் உள்ளது. இந்த விருது 1954 இல் நிறுவப்பட்டது மற்றும் விதிகளின்படி ஒரு வருடத்திற்கு மூன்று விருதுகள் மட்டுமே வழங்கப்படவேண்டும்.

ஆனால் இந்த முறை மோதி அரசு 5 பேருக்கு பாரத ரத்னா வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் 1999 இல் நான்கு பேருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டது.

“இவர்கள் ‘பாரத ரத்னா’ அல்ல ‘சுனாவ்(தேர்தல்) ரத்னா’. கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதையடுத்து நிதீஷ் குமார் அரசு கவிழ்ந்தது. இதேபோல் செளத்ரி சரண் சிங்குக்கான அறிவிப்புக்குப் பிறகு, ஆர்எல்டியின் ஜெயந்த் செளத்ரி பாஜகவுடன் கூட்டணி குறித்து சூசகமாக தெரிவித்தார்,” என்று மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி கூறினார்.

”சௌத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானவுடன், அவரது பேரனும், ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் செளத்ரி இனி வேறு என்னதான் கேட்பதற்கு உள்ளது என்று கூறினார். அவர் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவார் என்பது தெளிவாக உள்ளது.

இவர்களின் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சு நடந்துவிட்டது. ஆர்எல்டிக்கு எத்தனை மக்களவை மற்றும் மாநிலங்களவை இடங்கள் கிடைக்கும் என்றும் உத்தரபிரதேசத்தில் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது,” என்று ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தலுக்கு முன்பாக மூத்த விவசாயி தலைவர் செளத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருதை நரேந்திர மோதி ஏன் அறிவித்தார்?

இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஜாட் சமூகம் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இடங்களை இழக்கும் பயம் பாஜகவுக்கு இருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஹேமந்த் அத்ரி, “விவசாயிகள் டெல்லிக்கு வெளியே தங்கள் கோரிக்கைகளுடன் 13 மாதங்களாக அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போது சௌத்ரி சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து பிரதமர் அடையாள அரசியல் செய்கிறார். எங்கள் அரசு விவசாயிகளின் மிகப்பெரிய நலம் விரும்பிகளுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் கெளரவத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் கூறுகிறார். விவசாயிகளுக்கு வேறு என்ன வேண்டும்? இது மோதி அரசின் அற்புதமான அரசியல் விளையாட்டு,” என்று குறிப்பிட்டார்.

சௌத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்கியதன் நோக்கம் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஒரு உத்தி என்று விவசாயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விஷயங்களில் நிபுணரான தேவிந்தர் ஷர்மா கருதுகிறார்.

”எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமைப் புரட்சிக்கும், வர்கீஸ் குரியன் வெண்மைப் புரட்சிக்கும் முன்னோடி என்று பெயர் பெற்றவர்கள். ஆனால் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்காமல் இருப்பது மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது ஒருவகையில் அடையாள அரசியல் என்றே குறிப்பிடலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் ஆர்.எல்.டி.யுடன் கூட்டணி முயற்சி ஏன்?

பாரத ரத்னா விருதும் தேர்தல் ஆதாயமும்

பட மூலாதாரம், @JAYANTRLD

“2013 இல் முசாஃபர் நகரில் ஜாட் சமூகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்திற்குப் பிறகு ஏராளமான ஜாட் இன மக்கள் ராஷ்டிரிய லோக்தளத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். தங்கள் சாதி அடையாளத்தை மறந்து இந்துக்களாக மாறினர்” என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் மற்றும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு மொத்தம் 27 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் பாஜக 19 இடங்களைக் கைப்பற்றியது. இவ்வளவு வலுவான நிலை இருந்தும் பாஜக ஏன் இங்கு ஆர் எல் டியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது?

“இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் கவர்ந்திழுக்கும் எந்த அறிவிப்பும் மோதி அரசால் வெளியிடப்படவில்லை என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடுத்தர வர்க்க மக்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. கிசான் சம்மான் நிதி அதிகரிக்கப்படவில்லை. அதாவது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையில் மோதிஅரசு உள்ளது. ஆனால் மோதியும் அமித் ஷாவும் வெற்றியில் அல்ல, அமோக வெற்றியில் நம்பிக்கை கொண்டவர்கள். எந்த இடங்களை நாலாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்கிறார்களோ அதை ஏன் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்,” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஷரத் குப்தா கூறினார்.

மகத்தான வெற்றிக்காகத்தான் ஆர்எல்டி, ஜிதன் ராம் மாஞ்சியின் மதசார்பற்ற இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா போன்ற சிறிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேரம் பேசுகிறது என்று ஷரத் குப்தா கூறுகிறார். ”இந்தக் கட்சிகளால் தனித்து வெற்றி பெற முடியாவிட்டாலும், அவர்களின் வாக்குகள் பாஜகவின் பலத்தை பன்மடங்கு அதிகரிக்கும். இரண்டையும் இரண்டையும் இணைத்து இருபது ஆக்க நினைக்கிறது பாஜக,” என்றார் அவர்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா வழங்குவதாக பாஜக எந்தப் பிரிவு வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவித்துள்ளது? இதற்குப் பின்னால் உள்ள அதன் நோக்கம் என்ன?

“இதன் மூலம் காங்கிரஸின் வாரிசு ஆட்சியின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் விரும்புகிறார். எந்த பிரதமரின் உடல் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லையோ அந்த பிரதமருக்கு பாஜக மரியாதை செலுத்துகிறது என்பதை அவர் நினைவுபடுத்த விரும்புகிறார்.

அதாவது காங்கிரஸில் குடும்பவாதம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மக்களுக்குக் காட்ட அவர் விரும்புகிறார். பாஜக, மன்மோகன் சிங்கிற்கு கூட பாரத ரத்னா விருதை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,”என்று ஷரத் குப்தா மேலும் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »