Press "Enter" to skip to content

மன்மோகன் – மோதி: இந்திய பொருளாதாரம் யாருடைய ஆட்சியில் சிறப்பாக இருந்தது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான சமீபத்திய வாக்குவாதங்களில் பொருளாதாரம் ஒரு முக்கியமான விஷயமாக ஆகியுள்ளது.

2004 முதல் 2014 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.) ஆட்சியின் போது பொருளாதார செயல்பாடுகள் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை ‘கஷ்ட காலம்’ என்றும், அதேசமயம் 2014 முதல் 2023 வரையிலான கால கட்டத்தை ‘அமிர்த காலம்’ என்றும் அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ-வின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 2014 முதல் 2024 வரையிலான மோதி தலைமையிலான் ஆட்சி காலகட்டம் குறித்த ’10 ஆண்டுகள் – அநீதி காலம்’ என்ற கருப்பு அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆவணங்களும் 50 முதல் 60 பக்கங்கள் கொண்டவை. புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களின் உதவியுடன் அவற்றில் குற்றச்சாட்டுகள் மற்றும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஐ.மு.கூ vs தே.ஜ.கூ.

பட மூலாதாரம், பாஜகவின் வெள்ளை பேப்பர் மற்றும் யுபிஏ வின் கருப்பு பேப்பரின் ஸ்கிரீன்ஷாட்

தனது ஆவணம் ஆளும் பாஜகவின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ‘அநீதிகள்’ மீது கவனம் செலுத்துகிறது என்று காங்கிரஸ் கூறுகிறது. அதேசமயம் அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, ஐ.மு.கூ. அரசின் பொருளாதார தவறுகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.

பிரதமர் மோதியின் பதவிக்காலத்தில் பெருமளவு வேலையில்லா திண்டாட்டம், பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையை அரை மனதுடன் செயல்படுத்தியது போன்ற பேரழிவுகரமான பொருளாதார முடிவுகள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது மற்றும் தனியார் முதலீடு குறைந்திருப்பது ஆகியவற்றுக்கு சாட்சியாக இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.

மறுபுறம் வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிப்பு, வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையில் இருந்து தப்பி ஓடுதல், நிலக்கரி முதல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடர்ச்சியான ஊழல்கள் மற்றும் முடிவுகளை எடுப்பதில் இயலாமை போன்ற பல குற்றச்சாட்டுகளை பாஜக காங்கிரஸ் மீது சுமத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் முதலீட்டின் வேகம் குறைந்துள்ளதாக பாஜக கூறுகிறது.

இரு தரப்பும் ஒருவர் மற்றவர் பற்றிக் கூறும் கூற்றுகள் ஓரளவிற்கு உண்மை என்பதை பல்வேறு பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தக் கூடும்.

“இரு தரப்பிலும் இருந்து வரும் குற்றச்சாட்டுகளில் ஓரளவு உண்மை உள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் நிலக்கரியில் காங்கிரஸ் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பாஜக என்று இருவருமே சில மோசமான முடிவுகளை எடுத்தனர்,” என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மிஹிர் ஷர்மா கூறினார்.

ஆனால் 10 ஆண்டுகால ஐ.மு.கூ. vs தே.ஜ.கூ. ஆட்சியின் பொருளாதாரத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டின் செயல்பாட்டிலும் கலவையான சித்திரம் வெளிப்படுகிறது.

ஐ.மு.கூ vs தே.ஜ.கூ.

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார வளர்ச்சி எப்படி?

  • ஐ.மு.கூ.யின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் (2008-09 க்கு இடையிலான உலக பொருளாதார நெருக்கடியை விட்டுவிட்டு) சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 சதவிகிதமாக இருந்தது.
  • தே.ஜ.கூ.யின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில்(2020-21 இல் கோவிட் பெருந்தொற்று காலத்தை விட்டுவிட்டு) சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகிதமாக இருந்தது.

ஆதாரம்- ஐஎம்எஃப் , எம்ஒஎஸ்பிஐ

ஆனால் உண்மை என்னவென்றால், உலகப் பொருளாதார நெருக்கடியை விட கோவிட் தொற்றுநோய் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டுகளின் ஜிடிபி சராசரி குறைவாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

“கோவிட் பெருந்தொற்று பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இந்த தொற்றுநோய் பத்தாண்டுகளில் சில ஆண்டுகளுக்கு பொருளாதாரத்தை மந்தமாக்கியது,” என்று பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் பிருந்தா ஜாகிர்தார் தெரிவித்தார்.

ஆனால் உள் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அடிமட்டம் வரை நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்த அரசு வரும் ஆண்டுகளில் “விரைவான வளர்ச்சிக்கு” அடித்தளம் அமைத்துள்ளதாக பிருந்தா ஜாகிர்தார் மேலும் கூறினார்.

பணவீக்க கட்டுப்பாட்டில் மோதி அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்திருப்பதை புள்ளிவிவரம் உணர்த்துகிறது.

  • ஐ.மு.கூ. ஆட்சிக்காலத்தில் சராசரி பணவீக்க விகிதம் 7.9 சதவிகிதமாக இருந்தது. தே.ஜ.கூ. ஆட்சிக்காலத்தில் அது 4.7 சதவிகிதமாக இருந்தது.
  • உண்மையில் கடந்த அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சராசரி ஆண்டு பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.

ஆதாரம்- உலக வங்கி, பிஐபி

ஐ.மு.கூ vs தே.ஜ.கூ.

பட மூலாதாரம், Getty Images

”பாஜகவின் சாதனை சிறப்பாகத் தெரிகிறது. ஏனெனில் அதன் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருந்தது. அதேசமயம் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் இந்த காரணத்தால்தான் பணவீக்கம் மற்றும் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறை அதிகமாக இருந்தது,” என்று மிஹிர் ஷர்மா சுட்டிக்காட்டினார்.

சாலை அமைப்பது போன்ற மூலதனச் செலவுகளுக்கு மோதி அரசு அதிக செலவு செய்தது

  • 2014 முதல் 2024 க்கு இடையே சுமார் 54,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது.
  • இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் வெறும் 27,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையே அமைக்கப்பட்டது.
  • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்கு குறைந்துள்ளது.
  • ஐ.மு.கூ. அரசு ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில், உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி 15 முதல் 17 சதவிகிதம் வரை இருந்தது என்று உலக வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • மோதி அரசின் ஆட்சியில் ‘மேக் இன் இந்தியா’ போன்ற முன்முயற்சி, உற்பத்தி மானியங்களுக்கு பில்லியன்கணக்கான டாலர்கள் செலவு ஆகியவை இருந்தபோதிலும் 2022 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கு 13 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
  • ஐ.மு.கூ. ஆட்சிக்காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் தே.ஜ.கூ. ஆட்சிக் காலத்தை விட அதிகமாக இருந்தது
  • 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் மூன்றரை மடங்கு அதிகரித்து 80 பில்லியன் டாலர்களில் இருந்து 300 பில்லியன் டாலராக ஆனது.
  • ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஒன்றரை மடங்காக இருந்தது. அதாவது 300 பில்லியன் டாலர்களில் இருந்து 437 பில்லியன் டாலர்கள் ஆனது.

ஆதாரம்- பிஐபி, வரவு செலவுத் திட்டம் ஆவணங்கள்.

  • இவை இரண்டிற்குமே, நிலம் கையகப்படுத்தல் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி உலக வர்த்தகத்துடன் இந்தியா எப்படி இணைந்திருக்க வேண்டுமா அப்படி இணைக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்.
  • நீண்ட காலமாக நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு இவையே காரணமாகும்.
  • மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவின் ரேங்கிங் குறைந்துள்ளது. மொத்தம் 191 நாடுகளில் 2004 இல் இந்தியா 131 வது இடத்தில் இருந்தது. ஆனால் 2021 இல் 132 வது இடத்திற்கு வந்துள்ளது.

ஆதாரம்- யுஎன்டிபி

ஐ.மு.கூ vs தே.ஜ.கூ.

பட மூலாதாரம், Getty Images

மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா

மனித வளர்ச்சிக் குறியீட்டின் (HDI) அடிப்படையில் கூட தே.ஜ.கூ. அரசின் செயல்பாடு ஐ.மு.கூ. அரசை விட மோசமாக உள்ளது. இந்த குறியீடு சுகாதாரத் துறையில் முன்னேற்றம், கல்விக்கான அணுகல் மற்றும் தனிநபர் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றின் அளவீடாகும்.

2004 மற்றும் 2013 க்கு இடையில் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டு மதிப்பு 15 சதவிகிதம் மேம்பட்டது.

இருப்பினும் இது 2014 மற்றும் 2021 க்கு இடையில் 2 சதவிகிதம் மட்டுமே மேம்பட்டுள்ளது என்று UNDP இன் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட் தொற்றுநோய் தாக்கத்தின் இரண்டு ஆண்டுகள் விலக்கப்பட்டாலும், 2019 ஆம் ஆண்டு வரை HDI, UPA ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் இருந்த 7% ஒப்பிடும்போது 4% மட்டுமே மேம்பட்டுள்ளது.

மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவின் நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் உள்ள 191 நாடுகளில், 2004ல் 131வது இடத்தில் இருந்த இந்தியா 2021ல் 132வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கவலை தெரிவித்திருந்தார்.

‘ ஃபிஸிகல் மூலதனத்தை’ உருவாக்குவதற்கு அதிக நேரம் செலவிடப்பட்டதாகவும், ஆனால், ‘மனித மூலதனத்தை’ உருவாக்குவதற்கும், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை விட இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளை ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ள ஒரு நாட்டிற்கு இது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் கூறினார்.

மேலே செய்யப்பட்டுள்ள ஒப்பீடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சித் துறையில் கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இரண்டு வெவ்வேறு அரசுககளின் செயல்பாட்டின் விரிவான ஒப்பீட்டு மதிப்பீடு அல்ல.

அத்தகைய ஒப்பீடுகளைச் செய்யும்போது, பங்குச் சந்தையில் வருமானம், மானியங்களுக்கான செலவு, புதிய வேலைகளை உருவாக்குதல் மற்றும் நுகர்வு போன்ற பொருளாதார தரவுகளையும் பார்க்க வேண்டும்.

இதிலிருந்து வெளிப்படும் சித்திரம் வெவ்வேறு காட்சிகளை காட்டக்கூடியதாக இருக்கிறது. இதில் ஒரு அரசு ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாக செயல்பட்டிருப்பதையும் மற்றொரு துறையில் பின்தங்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது.

பொருளாதாரக் கொள்கை உருவாக்கம் என்பது தொடர்ந்து நடக்கும் ஒரு செயல்முறையாகும். வெவ்வேறு அரசுகள் இதை தொடர்ந்து செய்கின்றன. இதில் ஒவ்வொரு அரசும் முந்தைய அரசிடமிருந்து நல்ல மற்றும் கெட்ட நடைமுறைகளைப் பெறுகிறது.

சில நேரங்களில் ஒரு அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சி அல்லது நடவடிக்கை, அடுத்த அரசால் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அடிப்படையிலான அடையாள அட்டை முறையின் பெருமை ஐ.மு.கூ. அரசையே சேரும்.

பொருளாதார விஷயங்களின் பகுப்பாய்வை கருப்பு மற்றும் வெள்ளைக்கு மட்டுப்படுத்தும் முயற்சியை இந்த காரணங்கள் அனைத்தும் முறியடிக்கின்றன. மேலும் இந்த விஷயத்தில் உண்மை என்பது இரண்டுக்கும் இடையில் எங்கோ உள்ளது என்பதுதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »