Press "Enter" to skip to content

கிளாம்பாக்கம்: அடிப்படை வசதிகள் போதாமை குற்றச்சாட்டை உயர்நீதிமன்ற உத்தரவு உறுதி செய்கிறதா?

சென்னை நகரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் இனி கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் வழியாகவே பயணிக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சென்னை நகரில் இருந்து கிளாம்பாக்கத்தை அடையப் பல மணிநேரம் ஆவதாக மக்கள் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.

அதோடு தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னை நகருக்குள் செல்லாமல், கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் திடீர் உத்தரவால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் ஸ்தம்பித்துப் போயின.

இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக இடைக்கால தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்?

முன்னதாக தமிழக அரசின் உத்தரவுப்படி, ஜனவரி 24ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். அதற்குக் காரணமாக, கிளாம்பாக்கத்தில் தனியார் பேருந்துகளுக்குப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் இல்லை, மக்கள் பயணிக்க சிரமமாக உள்ளது போன்றவை சொல்லப்பட்டன.

ஆனால் அரசுத் தரப்பில் இருந்து, தனியார் பேருந்துகளுக்கான பார்க்கிங் வசதிகள், அலுவலக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு நகர பேருந்து வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய மின்சார தொடர் வண்டிநிலையம் அமைக்கப்படும், பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நீட்டிக்கப்படும் போன்ற எதிர்கால திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

நீதிமன்ற வழக்கு

கிளாம்பாக்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் அரசு முடிவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவர், புதிய இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்து, முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் தயாராகிவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது என்று தெரிவித்துள்ள நீதிபதி, இதற்குத் தீர்வு காணும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டை பயன்படுத்த ஆணையிட்டுள்ளார்.

இடைக்கால தீர்ப்பின்படி, ஆம்னி பேருந்துகள் ஏற்கெனவே கோயம்பேட்டில் இயங்கி வரும் அவர்களது பணிமனை மற்றும் அலுவலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கோயம்பேடு பணிமனை தவிர சூரப்பட்டு மற்றும் போரூர் சுங்கச்சாவடிகளில் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மட்டும் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.

அதேநேரம் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்களை ஏற்றி, இறக்காமல் போகக்கூடாது. மேற்கூறிய போரூர், சூரப்பட்டை தவிர கணினிமய செயலியில் வேறு எந்த இடங்களையும் ஏறும் இடமாகக் குறிப்பிடக்கூடாது.

மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை தொடரும். வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15, 2024 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம்

பட மூலாதாரம், TWITTER

இதுகுறித்துப் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சிஎம்டிஏ தலைவருமான சேகர்பாபு, “நாங்கள் நீதிபதி உத்தரவின் பேரில் செயல்படுகிறோம். தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், இது இறுதித் தீர்ப்பல்ல, அதற்கான விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை நீதிமன்றத்தின் ஆணையைப் பின்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் பேசியபோது, “நான் தற்போது தொகுதியில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறேன். இன்னும் தீர்ப்பு விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதைப் பார்த்து விட்டுப் பேசுகிறேன்,” என்றார்.

இடம் மாறுவது சாத்தியமா?

கிளாம்பாக்கம்

ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்காக முடிச்சூர் பகுதியில் பணிமனை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பணிகள் முடிந்த பிறகு ஆம்னி பேருந்து பணிமனை இங்கிருந்து இயங்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் பேசும்போது, “முடிச்சூரில் 5 ஏக்கரில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதில் போதுமான வசதி இருக்காது. நாங்கள் 1000 பேருந்துகளை நிறுத்தும் வகையில் 20 ஏக்கரில் இடம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கேட்கிறோம்,” என்கிறார்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, “பயணிகளுக்குப் போக்குவரத்து வசதி இல்லை. ஒரு புதிய இடத்திற்கு மாறும்போது உடனே இடம் மாறுவது கடினம். எனவே அதற்கு உண்டான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது தங்களுக்குத் தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளதாக” தெரிவித்தார்.

கிளாம்பாக்கத்திற்கு மாறுவதில் என்ன சிக்கல்?

கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கத்திற்கு மாறுவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து விவரித்த அவர், “ஆம்னி பேருந்து என்பது பெரிய ஆட்டோ மொபைல் துறை. இதை திடீரென ஓர் உத்தரவை போட்டு ஒரே நாளில் இடம் மாற்றுவது எளிதல்ல. அதற்கான கால அவகாசத்தை நாங்கள் கேட்கிறோம். அதைச் செய்துவிட்டு மாற்றம் செய்திருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது,” என்றார்.

ஆனால், “கிளாம்பாக்கத்தில் ஆயிரம் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான சரியான பார்க்கிங் வசதிகூட கிடையாது. 2003ஆம் ஆண்டே கோயம்பேட்டில் 53 ஆம்னி பேருந்து அலுவலகங்கள் இருந்தன. ஆனால், 2024இல் கிளாம்பாக்கத்தில் வெறும் 27 அலுவலகம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதி குறித்த பிரச்னைகளைச் சரி செய்யாமல் அங்கு மாறுவது கடினம்.”

அதேநேரம் அமைச்சர் சேகர்பாபுவிடம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கேட்டபோது, “அதெல்லாம் இல்லாமலா ஒரு மாதமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது? எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காகத்தான் அரசு செயல்பட முடியும்,” என்று கூறுகிறார்.

கோயம்பேட்டில் இருந்து இடம் மாறுவது குறித்துப் பேசிய அன்பழகன், “முடிச்சூர் மற்றும் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைந்தாலும்கூட பயணிகள் நகரத்தில் இருந்து அங்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை. குறிப்பாக மெட்ரோ, மின்சார தொடர் வண்டிபோன்ற எந்த வசதியும் இல்லாமல் எப்படி புதிய இடத்திற்கு பேருந்து நிறுத்தத்தை மாற்றுவது?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

இதற்கான நிரந்தரத் தீர்வாக, சென்னையின் நான்கு திசைகளிலும் உள்ள கிளாம்பாக்கம், மாதவரம், வேளச்சேரி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் அன்பழகன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »