Press "Enter" to skip to content

சூரியனுக்கு ஆற்றல் தரும் அணுக்கரு இணைவு முறையில் புதிய மின் நிலையம் – இங்கிலாந்து திட்டம்

பட மூலாதாரம், UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION

உலகின் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்கும் கனவு சமீபத்திய ஆய்வுகளால் ஒரு படி முன்னேறியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அணுக்கரு இணைவின் (Nuclear fusion) மூலம் உருவாக்கப்படும் ஆற்றலின் அளவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வில் இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கும் ஜெஇடி ஆய்வகம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

அணுக்கரு இணைவு என்பது நட்சத்திரங்களுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு செயல்முறையாகும். இருவேறு அணுக்கள் ஒன்றாக இணைந்து பெரியளவிலான ஆற்றலை வெளிப்படுத்துவதே இந்த செயல்முறை.

இதன் மூலம் வளிமண்டலம் வெப்பமாகாமல் அதிக அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய விஞ்ஞானிகள், “ இதற்கு முன்பு படைத்திராத புதிய சாதனையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்” என்று தெரிவிக்கின்றனர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சியின், சமீபத்திய இறுதிப் பரிசோதனையில் இம்முடிவு கிடைத்துள்ளது.

இதை இங்கிலாந்தின் அணுசக்தி அமைச்சர் ஆண்ட்ரூ போவி “ஃபிட்டிங் ஸ்வான்சாங்” என்று கூறியுள்ளார்.

அணுக்கரு இணைவு

பட மூலாதாரம், UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION

இந்த அணுக்கரு இணைவு செயல்முறைதான் சூரியனுக்கு ஆற்றலை வழங்குகிறது. இந்த செயல்முறையில் சிறிய துகள்களின் மீது அழுத்தத்தை போட்டு அவற்றை சூடாக்கி ஒன்றிணைத்து பெரியவையாக மாற்றுவதன் மூலம் ஆற்றல் உருவாகிறது.

வர்த்தக ரீதியில் இதை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால், கார்பன் உமிழ்வே இல்லாமல் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்க முடியும். இந்த செயல்முறையை சாத்தியப்படுத்த காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போல வானிலையை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் அணுக்கரு இணைவு ஆய்வாளர் மருத்துவர் அனீகா கான், இது நேரடியானதல்ல என்று கூறுகிறார்.

இது குறித்து அவர் விவரிக்கையில், “ பூமியில் அணுக்களை ஒன்றாக இணைக்க, சூரியனை விட 10 மடங்கு அதிகமான வெப்பநிலை தேவை. அதாவது கிட்டத்தட்ட 10 கோடி செல்சியஸ். அத்துடன், போதுமான அளவு அதிக அடர்த்தி கொண்ட அணுக்கள் நீண்ட காலத்திற்கு தேவை” என்கிறார்.

தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனையில் 5 நொடிகளில் 69 மெகாஜுல் ஆற்றல் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் 4 முதல் 5 முறை சூடான குளியலுக்கு தேவைப்படும் ஆற்றல் மட்டுமே.

இதன்மூலம் நாம் அணுக்கரு இணைவு மின் நிலையங்களை உருவாக்கும் கனவை அடைய இன்னும் வெகு தூரம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் ஒவ்வொரு சோதனையிலும் நாம் ஒரு படி நெருக்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

அணுக்கரு இணைவு

பட மூலாதாரம், Getty Images

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விண்வெளி, பிளாஸ்மா மற்றும் காலநிலை ஆராய்ச்சி சமூகத்தின் தலைவர் பேராசிரியர் ஸ்டூவர்ட் மாங்கிள்ஸ் இது குறித்து கூறுகையில், “ஜெஇடி நடத்தியுள்ள இறுதி சோதனையின் புதிய முடிவுகள் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்..

“உண்மையில் இந்த முடிவு சர்வதேச கூட்டு உழைப்பின் சக்திக்கு உதாரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் உழைப்பில்லாமல் இந்த முடிவுகள் கிடைத்திருக்க சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஐரோப்பிய டோரஸ் (JET) கூடம் , 1970 களின் பிற்பகுதியில் ஆக்ஸ்போர்டில் உள்ள குல்ஹாமில் நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி வரை இதுவே உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட இணைவு (fusion) சோதனை உலையாக இருந்தது. ஆனால், டிசம்பரில் இதன் அனைத்து சோதனைகளும் நிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், இதற்கு முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அணு ஆராய்ச்சித் திட்டமான ‘Euratom’ மூலம் நிதியளிக்கப்பட்டது. அதேசமயம் இது இங்கிலாந்து அணுசக்தி முகமையால் இயக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளாக இந்த கூடம் இங்கிலாந்து, ஐரோப்பா, சுவிட்சர்லாந்து மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து பணிபுரியும் இடமாக இருந்து வருகிறது.

இந்த கூடம் பத்தாண்டுகள் அல்லது அதற்கு கொஞ்சம் அதிகமான காலம் செயல்படும் வகையில் தான் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அடுத்தடுத்த சோதனை வெற்றியடைந்ததால் அதன் செயல்பாடு நீட்டிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சோதனை முடிவானது, 1997 இல் நடத்தப்பட்ட இதேபோன்ற சோதனைகளின் முடிவை விட மூன்று மடங்கு அதிகம்.

இதுகுறித்து Eurofusion-இன் திட்ட மேலாளர் பேராசிரியர் அம்ப்ரோஜியோ ஃபசோலி கூறுகையில், “இணைவு ஆற்றலின் வளர்ச்சியில் எங்களது வெற்றிகரமான செயல் விளக்கம் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறோம் என்பதையும் தாண்டி, இதுவரை செய்யாத விஷயத்தை செய்துள்ளோம் மற்றும் இணைவு இயற்பியல் குறித்த எங்களது புரிதலும் ஆழமாகியுள்ளது” என்று தெரிவிக்கிறார்.

இங்கிலாந்து அணுசக்தி மற்றும் தொடர்புகள் துறை அமைச்சர் ஆண்ட்ரூ போவி இதுகுறித்து பேசுகையில், “1983 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக செய்யப்பட்ட அனைத்து முக்கியமான பணிகளில், ஜெஇடி-இன் தற்போதைய பரிசோதனை முடிவுகளே உச்சமாக அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இணைவு ஆற்றல் கனவை நாம் நெருங்கியுள்ளோம். இதற்கு ஆக்ஸ்போர்டுஷையரை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

அணுக்கரு இணைவு

பட மூலாதாரம், UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION

ஆனால், ஐரோப்பிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் இங்கிலாந்தின் எதிர்கால பங்கு குறித்த தெளிவு இல்லை. காரணம், பிரெக்சிட்(Brexit) வெளியேற்றத்திற்கு பிறகு, ‘Euratom’ திட்டத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி அதில் மீண்டும் சேர வேண்டாம் என்ற முடிவையும் கடந்த ஆண்டு இங்கிலாந்து எடுத்துள்ளது.

அதற்கு பதிலாக தேசிய ஆய்வு திட்டங்களுக்கு £650 மில்லியன் நிதியை ஒதுக்குவதாக அரசு அறிவித்தது.

Euratom திட்டத்தை ஆய்வு செய்ய ஜெஇடி அமைப்பை தொடர்ந்து ஐடிஇஆர்(ITER) எனப்படும் கூடம் பிரான்ஸை மையமாக கொண்டு தொடங்க திட்டமிடப்பட்டது. முதலில் இதை 2016 ஆம் ஆண்டில் திறக்கலாம் என திட்டமிடப்பட்டது. அதற்கு சுமார் 5 பில்லியன் யூரோ வரை செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

ஆனால், பிறகு அதன் மதிப்பானது முன்பை விட நான்கு மடங்கு வரை அதிகரித்ததன் காரணமாக இந்த கூடத்தை அமைக்கும் திட்டம் 2025 க்கு மாற்றப்பட்டது. எனவே இதன் முழு வீச்சிலான செயல்பாடுகளை 2035 வரை எதிர்பார்க்க முடியாது.

அதே போல் ‘Euratom’ திட்டத்தில் இங்கிலாந்து மீண்டும் இணையாமல் இருப்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், ITER திட்டத்தில் ஏற்படும் தாமதங்களும் அதில் ஒரு பங்கைக் வகிப்பதாக நம்பப்படுகிறது.

அணுக்கரு இணைவு

பட மூலாதாரம், UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION

அணுக்கரு இணைவு மின் நிலையத்தை அமைக்க இங்கிலாந்து திட்டம் – எப்போது திறப்பு?

அதே சமயம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்யம் துறையின் செய்தித் தொடர்பாளர், ” ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களோடு ஒன்றிணைவதில் ஏற்படும் தாமதம், தங்களது சொந்த இணைவு திட்ட உத்தியை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை இங்கிலாந்துக்கு வழங்குகிறது.” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணுசத்தி ஆணையத்தின் அதிகாரியான இயன் சாப்மேன் வியாழன் அன்று வெளியிட்ட அறிவிப்பில், இங்கிலாந்து எதிர்காலத்தில் ITER உடன் இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாகக் கூறினார்.

2040 ஆம் ஆண்டில் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் நாட்டிங்ஹாம்ஷயரில் உலகின் முதல் அணுக்கரு இணைவு மின் நிலையத்தை உருவாக்க இங்கிலாந்து அரசாங்கம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து இன்டஸ்ட்ரியல் ஃப்யூஷன் சொல்யூஷன்ஸ் என்ற புதிய அணுசக்தி அமைப்பால், இந்த ஸ்டெப் (Spherical Tokamak for Energy Production) திட்டம் செயல்படுத்தப்படும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »