Press "Enter" to skip to content

மன்மோகன் – மோதி ஆகிய இருவரில் பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டது யார்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி நிருபர்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.) அரசு மற்றும் 2014 முதல் 2024 வரையிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) அரசின் பொருளாதாரச் செயல்பாடுகளை, நிதி அமைச்சகம் தயாரித்துள்ள இந்த வெள்ளை அறிக்கை ஒப்பிடுகிறது.

மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தினார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நரேந்திர மோதி வழிநடத்தி வருகிறார். ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த தகவல்களை வழங்க ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படுகிறது.

உதாரணமாக, கருப்புப் பணம் பற்றிய வெள்ளை அறிக்கையை அரசாங்கம் வெளியிடலாம். இதன் மூலம் அதன் தாக்கம், சிக்கல்கள் மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளலாம்.

அரசு இதை வெள்ளை அறிக்கை என்று கூறினாலும், தொழில்நுட்ப ரீதியாக அது சரியில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். மாறாக, இது வெவ்வேறு பொருளாதார தரவுகளைக் கொண்டு இரண்டு அரசாங்கங்களின் செயல்திறனை ஒப்பிடுவதாகும் என்கின்றனர்.

மேலும், மோதி அரசு முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போது அப்போதைய பொருளாதார நிலையைப் பற்றி விரிவான ஆய்வு செய்தால், ​​அதை ‘வெள்ளை அறிக்கை’ என்று சொல்லலாம். ஆனால் தொடக்கத்திற்கு பதிலாக, அவர் தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் இதை வெளியிட்டுள்ளார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கடைசிக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்ததால், வெள்ளை அறிக்கையை முதலில் கொண்டு வரவில்லை என்று அரசு கூறுகிறது.

மேலும், இது எதிர்மறை எண்ணத்தைப் பரப்பி, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கும். அப்போது வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வரவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை முடுக்கிவிடவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது என்று கூறுகிறது அரசு.

‘வெள்ளை அறிக்கையில்’ கூறப்பட்டுள்ளது என்ன?

மோதி அரசின் வெள்ளை அறிக்கை

பட மூலாதாரம், ANI

பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவதில் நான்கு நோக்கங்கள் இருப்பதாக மோதி அரசு கூறியுள்ளது.

  • 2014இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு விடப்பட்ட அந்த பொருளாதார நெருக்கடிகள் பற்றிய தகவல்களை வழங்குதல்.
  • பொருளாதார மேம்பாட்டிற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்.
  • தேசிய நலன் மற்றும் நிதிப் பொறுப்பு பற்றிய அர்த்தமுள்ள விவாதத்தை உருவாக்குதல்.
  • புதிய உத்வேகம், உணர்வு மற்றும் உறுதியுடன் நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும், ஏனென்றால் அதன் மூலம் மகத்தான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

58 பக்கங்களைக் கொண்ட இந்த வெள்ளை அறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்து ஆண்டு காலப் பொருளாதார நிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில், ஐ.மு.கூ. ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளின் சமீபத்திய நிலை பற்றிய தகவல்களும், மூன்றாம் பகுதியில், தே.ஜ.கூ. அரசாங்கம் பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பித்துள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது.

இந்த ‘வெள்ளை அறிக்கையில்’, ஐ.மு.கூ. அரசாங்க ஆட்சியின் தொடக்கத்தில் ஒரு நல்ல பொருளாதார மரபுரிமை இருந்ததாகவும், மேலும் சீர்திருத்தங்களுக்கு இந்திய பொருளாதாரம் தயாராக இருந்ததாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தின் செயல்திறன் மோசமடைந்தது என மோதி அரசு கூறியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு முன்பு அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு, தனது பத்து ஆண்டுகளில் ஐ.மு.கூ. பொருளாதார சீர்திருத்தங்களை முற்றிலுமாக கைவிட்டது என அரசு கூறுகிறது.

மூன்றாவது குற்றச்சாட்டு 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐ.மு.கூ. அரசாங்கம் எப்படியாவது உயர் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பியது. ஆனால் இதற்காக அவர்கள் மேக்ரோ பொருளாதார அடிப்படைகளைப் பற்றி கவலைப்படவில்லை, உதாரணமாக, இந்த காலகட்டத்தில் பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருந்தது என அரசு வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.

மேலும், அப்போது நிதிப் பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது. வங்கிகளின் வாராக்கடன் நெருக்கடியும் மிக அதிகமாக இருந்தது, இதன் காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவை சந்தித்தன என கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டது யார்?

மோதி அரசின் வெள்ளை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

ஐ.மு.கூ. அரசு சந்தையில் இருந்து பெரும் கடன்களை பெற்று அதை உற்பத்தி சாரா செலவுகளுக்கு பயன்படுத்தியதாக ‘வெள்ளை அறிக்கை’ கூறுகிறது. இந்தியர்களின் சுகாதார வசதிகளுக்காக மிகக் குறைவாகவே செலவிடப்பட்டது, மேலும் அரசாங்கம் ‘கொள்கை முடக்கத்தில்’ சிக்கித் தவித்தது.

அதாவது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘கொள்கை முடக்கம்’ காரணமாக ராணுவத்தின் தயார் நிலை தடைபட்டதாக கூறப்படுகிறது. ஐ.மு.கூ. அரசாங்கத்தின் தசாப்தம் தவறான கொள்கைகள் மற்றும் மோசடிகளால் நிறைந்தது என்றும் கூறப்படுகிறது.

இதில், ஐஎம்எஃப் தரவை மேற்கோள் காட்டி, மோதி அரசை விட மன்மோகன் சிங் ஆட்சியில் பணவீக்கம் எப்படி அதிகமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

மோதி அரசின் ஆட்சிக் காலத்தில், தூய்மைப் பிரச்சாரத்தின் கீழ் ஏராளமான கழிப்பறைகள் கட்டப்பட்டதாகவும், வங்கிகளை உள்ளடக்கிய வகையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், ஏராளமானோர் வங்கிக் கணக்கு தொடங்கி, நலத்திட்டங்களில் இருந்து பணத்தை நேரடியாக தங்கள் கணக்குகளில் பெற்றனர் எனவும் ‘வெள்ளை அறிக்கையில்’ கூறப்பட்டுள்ளது.

மோடி அரசின் இந்த வெள்ளை அறிக்கை ஒரு தேர்தல் அறிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

மோடி அரசின் இந்த வெள்ளை அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் ஒரு கருப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, அதில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை சேதப்படுத்தியதாக, பொருளாதார சீர்திருத்தங்களை கைவிட்டதாக, மன்மோகன் சிங் அரசு மீது மோதி அரசின் ‘வெள்ளை அறிக்கை’யில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதுதான் இப்போது கேள்வி.

மன்மோகன் சிங் அரசு ‘கொள்கை முடக்கத்தில்’ சிக்கித் தவித்ததாக கூறப்படுவது உண்மையா?

மோதி ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதா, மன்மோகன் சிங் ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் போய்விட்டதா?

மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த இரண்டில் எந்த அரசாங்கம் சிறந்த பொருளாதார செயல்திறனைக் கொண்டிருந்தது? மோதி – மன்மோகன் இருவரில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தியது யார்?

குற்றச்சாட்டுகளில் எந்தளவு உண்மை?

மோதி அரசின் வெள்ளை அறிக்கை

பட மூலாதாரம், BRASCEU

முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லியின் குறிப்பை ‘வெள்ளை அறிக்கை’ மேற்கோள் காட்டுகிறது, அதில் 2013இல் உலகின் ஐந்து ‘மிகவும் பலவீனமான’ பொருளாதாரங்களில் இந்தியாவும் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் 2004 முதல் 2014 வரை இந்தியாவில் அப்படியொரு நிலை இல்லை என்பது உண்மைதான்.

உலகளாவிய நிதி நெருக்கடி இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் 2004 மற்றும் 2009க்கு இடையில் அதன் அதிவேகமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2008இல், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தை ஐ.மு.கூ அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலை.

உலகளாவிய நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. ஆனால் இந்தியாவில் அதன் தாக்கம் இல்லை. அதற்கு அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

மருத்துவர். பி.ஆர். அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்.ஆர்.பி.மூர்த்தி பிபிசியிடம் கூறுகையில், “ஐ.மு.கூ-1 ஆட்சிக் காலத்தில் சிறந்த வளர்ச்சி காணப்பட்டது. இதுவரை எந்த அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியிலும் அவ்வளவு உயர்ந்த வளர்ச்சி பதிவு செய்யப்படவில்லை. ஆனால், ஐ.மு.கூ-2 அரசாங்கத்தின் போது பல காரணங்களால் பொருளாதாரம் சிக்கலில் இருந்தது உண்மை தான்” என்கிறார்.

ஆனால் வெள்ளை அறிக்கையில், ஐ.மு.கூ-1 ஆட்சியில் காணப்பட்ட சிறந்த வளர்ச்சிக்கான பெருமையை முந்தைய அடல் பிஹாரி வாஜ்பேயி அரசுக்கு வழங்கியுள்ளது மோதி அரசு.

2004 முதல் 2008 வரை (ஐ.மு.கூ-1 அரசாங்கத்தின் பதவிக்காலம்), பொருளாதாரம் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்தது, ஆனால் இது அடல் பிஹாரி வாஜ்பேயி அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அப்போதைய சாதகமான உலகளாவிய நிலைமைகளின் விளைவாகும் என கூறப்பட்டுள்ளது.

ஐ.மு.கூ அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு பதவிக் காலம் அதிக வளர்ச்சி விகிதம், குறைந்த பணவீக்கம் மற்றும் சிறந்த நிதி நிர்வாகத்தின் காலம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“2003இல் எப்ஆர்பிஎம் சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act- எப்ஆர்பிஎம்) அமல்படுத்தப்பட்ட பிறகு, அதன் இலக்கு 2007-08 இல் ஒருமுறை மட்டுமே எட்டப்பட்டது. மாறாக, தே.ஜ.கூ. அரசாங்கம் எப்ஆர்பிஎம் இலக்கை ஒருபோதும் அடையவில்லை என்று கூறுகிறார் என்.ஆர்.பி.மூர்த்தி.

மேலும், “தே.ஜ.கூ. அரசாங்கம் எப்ஆர்பிஎம் விதிகளை மாற்றியமைத்தது. வருவாய் பற்றாக்குறை இலக்கை கட்டுப்படுத்தும் விதியை அது நீக்கியது” என்றும் கூறுகிறார்.

எப்ஆர்பிஎம்-இன் கீழ், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நிதி ஒழுக்கம் கண்காணிக்கப்படுகிறது.

‘தேர்தல் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட அறிக்கை’

மோதி அரசின் வெள்ளை அறிக்கை

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY

பிரபல பொருளாதார நிபுணர் அருண்குமார், ‘வெள்ளை அறிக்கை’ தொடர்பான கேள்விகளுக்கு பிபிசியிடம் பேசுகையில், “இந்த ஆவணம் தேர்தல் நோக்கத்திற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், சொந்த செயல்பாடுகள் பற்றி அதிகம் பேசுவதற்குப் பதிலாக, முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஐ.மு.கூ-2 அரசாங்கத்தின் போது ஏற்பட்ட நெருக்கடிக்கு வெளிப்புற காரணங்கள் இருந்தன. ஆனால் தே.ஜ.கூ. அரசாங்கம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி அதன் உள்நாட்டுக் கொள்கைகளின் விளைவாகும். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம். ஹோனா மற்றும் என்பிஎப்சி நெருக்கடி. இந்த மூன்று பெரிய அதிர்ச்சி சம்பவங்களும் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே நிகழ்ந்தன” என்கிறார்.

“2014இல் மோதி அரசு பெற்ற பொருளாதாரம், 2012-13 சரிவுக்குப் பிறகு மீண்டு வந்த பொருளாதாரம். 2014இல் மோதி அரசு பொறுப்பு ஏற்றபோது இந்திய பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. தோல்வியுற்ற பொருளாதாரத்தை அவர் மரபுரிமையாகப் பெற்றார் என்ற கருத்தே தவறு” என்கிறார் அருண்குமார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வி உரிமை, வேலை வாய்ப்பு போன்ற சட்டங்களை இயற்றியது என்றும், பொருளாதாரம் இதன் மூலம் பயனடைந்தது மற்றும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இது உதவியாக இருந்தது என்றும் அருண்குமார் கூறுகிறார்.

மோதி அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை விமர்சித்து வருவதாகவும் ஆனால் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

‘தரவு இல்லாமல் என்ன ஒப்பீடு?’

மோதி அரசின் வெள்ளை அறிக்கை

பட மூலாதாரம், ARUN KUMAR

அருண்குமார் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டினார், “ஊழலை முறியடித்ததாக பாஜக கூறுகிறது. கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இதன் பொருள் நேரடி வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிக்க வேண்டும், ஆனால் அது 5.4 முதல் 6.2 சதவீதமாக இருந்தது. அது மிகக் குறைவு. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் அர்த்தம் வருமானம் அதிகரித்திருக்கும் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை” என்கிறார்.

மேலும், “மோதி அரசு தனக்கு சாதகமாக இல்லாத தகவல்களை மறுக்கிறது. எடுத்துக்காட்டாக, வேலையின்மை அதிகரிப்பு மற்றும் நுகர்வு குறைவு போன்ற புள்ளிவிவரங்களை அரசாங்கம் நிராகரித்தது. இப்படிப்பட்ட நிலையில், மோதி அரசின் பொருளாதாரச் செயல்பாடுகளை மன்மோகன் சிங் அரசின் பொருளாதாரச் செயல்பாட்டோடு எப்படி ஒப்பிட முடியும்?” என்று கூறுகிறார் அருண்குமார்.

ஐ.மு.கூ-2 அரசாங்கம் சில தவறுகளை செய்தது என்று பேராசிரியர் என்.ஆர்.பி.மூர்த்தி நம்புகிறார். “அரசாங்கம் கொள்கை முடக்கத்தால் பாதிக்கப்பட்டது மற்றும் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்தது” என்கிறார் அவர்.

ஆனால் அருண்குமார் கூறுகையில், ‘நெருக்கடி உள்ளிருந்து வந்தது அல்ல, வெளியில் இருந்து வந்தது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் மைய கட்டுப்பாட்டு வங்கி பொருளாதாரத்தில் பணத்தை வெளியிடுவதை நிறுத்தியது. இதனால் இந்திய ரூபாய் நெருக்கடியில் சிக்கியது. ஆனால் மோதி அரசின் தவறான கொள்கைகளால் இதுவரை பலமுறை பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது” என்கிறார்

மோதி அரசின் மோசமான கொள்கைகளுக்கு உதாரணமாக, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »