Press "Enter" to skip to content

பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் தொடர்கிறதா? நட்டா உரையின் உட்பொருள் என்ன?

பட மூலாதாரம், ANNAMALAI/FACEBOOK

பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது தமிழக சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக சென்னை வள்ளலார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை, அதிமுகவுடனான கூட்டணி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை காட்டமாக விமர்சித்த அவர், அதிமுக என்ற பெயரை கூட உச்சரிக்காமல் சென்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, “அதிமுகவிற்கு கூட்டணி கதவுகள் திறந்திருக்கிறது” என்று பேசியிருந்த நிலையில், ஞாயிறன்று(11/2/2024) தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை” என்று அறிவித்திருந்தார்.

ஆனாலும், அதிமுக குறித்து பாஜகவின் மத்திய தலைமை எதுவும் தெரிவிக்காதது இன்னமும் கூட்டணிக்கான எதிர்காலம் உள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாஜக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், JPNADDA / TWITTER

ஜேபி.நட்டா பேசியது என்ன?

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்துகொண்ட நட்டா, பாஜக தலைவர் அண்ணாமலை உரைக்கு பின்னால் பேச தொடங்கினார்.

திருவள்ளுவர் , பாரதியார், ஜனசங்கத்தின் தலைவரான தீனதயாள் உபத்யாயாவையும் நினைவு கூர்ந்து தனது உரையை தொடங்கிய அவர் முதலில் மத்திய ஆட்சி குறித்து புகழ்ந்து பேசினார்.

பின்னர் தமிழக அரசியல் தலைமை குறித்து பேசத்தொடங்கிய அவர், “தமிழகம் மிக உயரிய மொழி , கலாசாரம் , பண்பாடு , ஆன்மிகத்தை கொண்டுள்ளது. ஆனால், மோசமான தலைமையால் ஆளப்படுகிறது. திமுகவின் மோசமான ஆட்சி இங்கு நடக்கிறது” என்று தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது, எமெர்ஜென்சி காலம் நினைவுக்கு வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சியை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்” என்று பேசினார்.

உரைக்கு நடுவிலேயே இந்தியில் பேசத்தொடங்கிய அவர், திமுக, காங்கிரஸ், மற்றும் பரூக் அப்துல்லா , முலாயம் சிங் , லல்லு பிரசாத் , ஜெகன் மோகன் , உத்தவ் தாக்கரே , சரத்பவார் போன்ற தலைவர்கள் குடும்ப ஆட்சி நடத்தி வருவதாக விமர்சனம் செய்தார்.

மேலும் விரைவில் இவர்களது ஆட்சிகளை தூக்கி எறிந்து பாஜக தனிப்பெரும் சக்தியாக உயரும். இந்த முறை நாடாளுமன்றத்தில் 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது ஒட்டுமொத்த உரையிலும் அதிமுக குறித்து எந்த ஒரு சிறு குறிப்பும் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்னமும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு எதிர்காலம் உள்ளதோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY / TWITTER

பாஜக கூறுவது என்ன?

பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இது குறித்து கேட்கும்போது, “ஒரு தேசிய தலைவராக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள், வாரிசு அரசியல் குறித்து அவர் பேசியிருக்கிறார். இதில் அதிமுக குறித்து பேசவில்லை என்பதற்காக அவர் கூட்டணியை எதிர்பார்க்கிறார் என்றோ அல்லது எதிர்பார்க்கவில்லை என்றோ நாம் பொருள் கொள்ளக்கூடாது” என்று கூறினார்.

ஆனால், மூத்த பத்திரிகையாளர் பிரியன் இதுகுறித்து வேறு பார்வையை முன்வைக்கிறார். “தனியாக நிற்பதால் இரண்டு கட்சிகளுக்குமே பயனில்லை. எனவே ஒன்று இணைந்து நிற்பார்கள் அல்லது பிரிந்து வேறு திட்டத்தோடு செயல்படுவார்கள்” என்று கூறுகிறார் பிரியன்.

பாஜக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?

பாஜக மற்றும் அதிமுகவின் மாநில தலைமைகள் கறாராக கூட்டணி இல்லை என்று மறுத்து வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர்கள் அமைதி காப்பதற்கு காரணம் கண்டிப்பாக கூட்டணிக்கான எதிர்காலம் இருப்பதே என்று தெரிவிக்கிறார் பிரியன்.

ஆனால், இன்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி உட்பட சமீபத்தில் பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரை, “பாஜகவோடு கூட்டணி அமைக்க 1000 சதவீதம் வாய்ப்பு இல்லை” என்றே கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பிரியன் பேசுகையில், “இரண்டு கட்சிகளும் தனித்து நிற்பதால் எந்த பயனும் இல்லை. குறிப்பாக எடப்பாடிக்கு இது பெரிய சரிவை தரும். மாநில கட்சிகளான பாமக, தேமுதிகவும் அதிமுகவுடன் போக விரும்பமாட்டார்கள். இந்நிலையில் இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்றால் கொங்குமண்டலம், தென் மாநிலங்களில் பல்வேறு சமூகத்தினரின் வாக்குகள் பிரியும். இது இரு தரப்புக்கும் பயன் தராது” என்கிறார்.

அப்படி கூட்டணி இல்லாமல் தோற்று விட்டால், அதிமுக 2026ஐ நோக்கி பலவீனமாக செல்லும். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அணி பாஜகவோடு நின்று எங்காவது வென்றுவிட்டால் அது உட்கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார் பிரியன்.

பாஜக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், K.ANNAMALAI / TWITTER

தற்போதைய பிரிவுக்கான காரணம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அந்த உறவை முறித்து கொள்வதற்கான காரணமாக, தொண்டர்கள் விருப்பம், மாநில நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியுடன் கூட்டணி உள்ளிட்டவை வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது எதுவுமே இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே உள்ள மோதலே இதற்கு காரணம் என அழுத்தமாக கூறுகிறார் பத்திரிகையாளர் பிரியன். அதற்கு உதாரணமாக “சமீபத்தில் நடந்த கூட்டம் , ஊடக சந்திப்பு அல்லது மேடை என எதிலும் மோதி, பாஜக, அமித்ஷா என்ற வார்த்தைகளை எடப்பாடி உதிர்க்கவே இல்லை. ஊடகவியலாளர்கள் அமித்ஷா பேட்டி குறித்து கேட்ட கேள்விக்கு கூட தனக்கு தெரியாது என்று சொல்கிறார் எடப்பாடி ” என்கிறார் அவர்.

“அண்ணாமலையை மாற்ற வேண்டும், 2026இல் தன்னை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை எடப்பாடி முன்வைப்பதே இந்த பிரிவுக்கு காரணம்” என்று கூறும் அவர் மேலும் திரைக்கு பின்னால் வேறு சில பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிவிக்கிறார்.

பாஜக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், PRIYAN

‘அண்ணாமலையை முதல்வர் ஆக்குவதே இலக்கு’

அதன்படி தற்போது இன்னமும் கூட்டணி முடிவாகாமல் இருப்பதற்கு, மேற்கூறிய காரணங்களும், தொகுதி பங்கீடு முடிவாகாததுமே காரணமாக இருக்கலாம் எனவே கூட்டணிக்கான கதவுகள் இன்னமும் திறந்தே இருக்கிறது என்று கூறுகிறார் பிரியன்.

அதை தாண்டியும் இவர்கள் சேராமல் போனால், அது அமித்ஷாவின் திட்டபடியே நடக்கும். அத்திட்டத்தின் படி, பிரிந்து நின்று திமுகவிற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதே அவர்களின் நோக்கம் என்று உறுதியாக கூறுகிறார் அவர். அப்படி நின்றாலும் கூட அது இரண்டு கட்சிகளுக்கும் சேதாரத்தை கொடுக்குமே தவிர வெற்றி வாய்ப்பை தராது என்கிறார் அவர்.

ஆனால், கூட்டணி இல்லாமல் இருப்பதற்கு மேற்கூறியவை தான் காரணமா என்று கேட்டபோது, “2026இல் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும், அதுவே இந்த கேள்விக்கு பதில்” என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பூடகமாக பதிலளித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »