Press "Enter" to skip to content

ஆளுநர் உரையை வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு – அவையில் என்ன நடந்தது? சபாநாயகர் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI

ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சட்டப்பேரவையில் தேசிய கீதத்திற்கு போதுமான மரியாதை தரப்படவில்லை என்றும் கூறி, உரையை வாசிக்க மறுத்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா?

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.

இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாஸனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். “ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும்.

இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று கூறினார்.

சபாநாயகர் இதனைச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17ஐத் தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். “2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் ஆறு சதவீதத்தையும் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது.
  • மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும்.
  • மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம், மற்ற மாநிலங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற அணுகுமுறையால், முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது.
  • மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் சாதனைகளும் ஆளுநரின் உரையில் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு

ஆளுநர் ஆர்.என். ரவியின் முந்தைய சட்டப்பேரவை சர்ச்சைகள்

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்ற பிறகு, ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை எழுவது இது இரண்டாவது தடவை. கடந்த ஆண்டும் ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த உரையில் இருந்த சில வரிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தார். சில வாசகங்களை சேர்த்தும் படித்தார். ஆனால், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசித்தார். இதற்குப் பிறகு, இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அவையைவிட்டு அவசரஅவசரமாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் மரபு தொடங்கியது எப்போது?

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராரும் கடலுடுத்த” எனத் துவங்கும் பாடல் அரசு விழாக்களின் துவக்கத்தில் பாடப்படும் என 1970 மார்ச் 11ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, பொது நிகழ்ச்சிகளில், அரசு விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.

“ஏதோ எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென ஆளுநர் இதைச் செய்ததைப் போல இருக்கிறது. ஆளுநர் உரையின் சில அம்சங்கள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென கூறுகிறார் ஆளுநர். எந்தெந்தப் பகுதிகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல், பொத்தாம்பொதுவாக பல பகுதிகள் ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

“தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு நல்லது அல்ல”

ஆனால், இதுபோலச் செயவது தமிழ்நாட்டில் பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

“உங்களுக்கு ஏற்பிருக்கிறதோ, இல்லையோ, தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க அண்ணாமலை ஏதோ முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆளுநர் இதுபோலச் செயல்படுவது பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும். இதைப் பார்க்கும் சாதாரண மக்கள், ஆளுநர் ஏன் இப்படிச் செய்கிறார், பா.ஜ.க. சொல்லித்தான் இதைச் செய்கிறாரா என்று யோசிப்பார்கள். அரசு எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் அவருடைய வேலை. முழுமையாகப் படிக்க விருப்பமில்லையென்றால், முதல் பத்தியையும் கடைசிப் பத்தியையும் வாசிக்கலாம். அதுபோல பல ஆளுநர்கள் செய்திருக்கிறார்கள். ஆளுநர் உரையையே ஏற்கவில்லையென அவர் சொல்ல முடியாது” என்கிறார் ஷ்யாம்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 90களின் துவக்கத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான மோதல் இருந்துவந்தது. “ஆனால், அப்போதும் சென்னா ரெட்டி மரபுகளை மீறியதில்லை. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, விதிகளை மீறக்கூடிய ஆலோசனைகளை யாராவது அளித்தால் ‘unbecoming of Governor’ என்று கூறி அதனை மறுத்துவிடுவார் சென்னாரெட்டி” என்று நினைவுகூர்கிறார் ஷ்யாம்.

ஆளுநர் உரை வாசிக்கப்படுவது இதற்கு முன்பாக தவிர்க்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில் ஆளுநர் ஒருவர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க மறுத்த சம்பவங்கள் இதற்கு முன்பு அரிதாக நிகழ்ந்திருக்கின்றன.

மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த பத்மஜா நாயுடு, 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநர் உரையை வாசிக்க வந்தபோது உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர் தனது உரையை வாசிக்க முடியவில்லை. இதையடுத்து உரையின் பிரதிகள் உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் கல்கத்தா நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஆளுநர் உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டதால் அது படிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1969ல் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் சார்பில் அஜோய் முகர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அந்த ஆண்டு மார்ச் ஆறாம் தேதியன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது. அந்த ஆளுநர் உரையில் மத்திய அரசை விமர்சித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய ஆளுநரான தர்மவீரா, அந்த வரிகளைப் படிக்க மறுத்திவிட்டார்.

இதையடுத்து, உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டுப் படித்ததற்காக அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் துவங்குவதாக இருந்தது அவைக்கு வந்த ஆளுநர் , ஆளுநர் உரையின் 62 பக்க உரையைத் தவிர்த்துவிட்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். அத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டு ஆளுநர் வெளியேறினார். மொத்தமே 4 நிமிடங்கள்தான் ஆளுநர் அவையில் இருந்தார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த பகுதியில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் தான் படிக்க வேண்டும் என முதல்வர் கூறுவதால், அதனைப் படிப்பதாக கூறிப் படித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு

பட மூலாதாரம், ANI

தமிழக ஆளுநரின் விளக்கம் என்ன?

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் பின்வருமாறு..

  • பிப்ரவரி 9ஆம் தேதி ஆளுநர் உரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக இருந்தன.
  • பின்வரும் அறிவுரைகளுடன் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது: தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
  • மேலும், ஆளுநர் உரையானது அரசின் சாதனைகளை, கொள்கைகளை, திட்டங்களைச் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான தகவல்களை, பாரபட்சமான அரசியல் பார்வைகளைச் சொல்வதாக இருக்கக்கூடாது.
  • ஆனால், அரசு ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டது.
  • பிப்ரவரி 12ஆம் தேதியன்று சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திய ஆளுநர், ஆளுநர் உரையின் சில அம்சங்கள் உண்மைக்கு மாறாக இருப்பதால் அதனை வாசிக்க முடியாது என் கூறினார். சபாநாயகர் தமிழ் வடிவத்தை படிக்கும்போது ஆளுநர் முழுவதுமாக அமர்ந்திருந்தார்.
  • சபாநாயகர் உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் வாசிக்கப்படும் என கருதி ஆளுநர் எழுந்தார். ஆனால், ஏற்கனவே இருந்த நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார். இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »