Press "Enter" to skip to content

சட்டப் பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக – என்ன காரணம்?

பட மூலாதாரம், Facebook/M.K. Stalin/Edappadi Palanisamy

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடந்த மூன்றாவது நாள் கூட்டத்தில், திமுக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருக்கிறது. இதன் நோக்கம் என்ன?

சட்டப் பேரவையில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு எதிராக இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டும் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரமும், மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது, ஆனால் அதே வேளையில் ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்மட்ட குழுவிடம் தாங்கள் அளித்த 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அந்த திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக. தொடர்ந்து பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்று அறிக்கை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எஸ்டிபிஐ மற்றும் கிறிஸ்துவ மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியது போன்ற நடவடிக்கைகளில் இருந்து பாஜகவின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெளிவுப்படுத்தியது அதிமுக.

இப்போது தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான திமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் அதை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதே வேளையில் பத்து கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்போம் என்று கூறுவதன் மூலம் பாஜகவை முழுமையாக எதிர்க்க தயங்குகிறதா அதிமுக? வரும்காலத்தில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்படலாம் என்பதற்காக இவ்வாறு செய்கிறதா?

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

பட மூலாதாரம், M.K.Stalin/X

சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இரண்டு தனித்தீர்மானங்கள்

சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நாட்டு மக்களை அச்சத்திலும், பதட்டத்திலும் வைக்கும் இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழநிலை ஏற்பட்டிருக்கிறது. ஒன்று, ஒரே நாடு ஒரே தேர்தல். மற்றொன்று, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை.

இந்த பிரச்னை, மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இதற்கெதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை முற்றிலுமாக நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று” என்று கூறினார்.

மேலும், “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்கும் சூழல் ஏற்படும், அவ்வாறு கலைப்பது அரசியல் சட்டவிரோதம். இதனை எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து, ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா அல்லது சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியிலிருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா” என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

‘மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனை’

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்து பேசிய முதலமைச்சர் “‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதனால் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் பிரதிநிதித்துவம் அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். மேலும் குறைந்தால் என்னவாகும். எனவேதான் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது” என்றார்.

“தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறிய முதலமைச்சர், “மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும்” என்றார்.

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

‘தொகுதி மறுவரையரை குறித்த அச்சம் நியாயமானது தான்’

இந்த தனித்தீர்மானங்கள் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், “முதல் தீர்மானம் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது குறித்தது. வாக்கு மொத்தமாக பார்க்கும் போது தென் மாநிலங்கள் பல்வேறு விதமான சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதாலும் சிறப்பான இலக்கை அடைந்துள்ளன.”

“வருங்காலத்தில் தொகுதி எண்ணிக்கை குறையும்போது நமக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. தீர்மானத்தில் உள்ள கவலைகளை, அக்கறையை பாஜக புரிந்துகொள்கிறது. எந்த இடத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை பாஜக எடுக்கும்” என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தீர்மானம் குறித்து பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஒரே நாடு ஒரே தேர்தல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அமலாகப் போவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சீர்திருத்தங்களை அரசியல் கட்சிகள் குழுவிடம் தெரிவிக்கலாம்.”

“இதனை ஒரு சீர்த்திருத்த முயற்சியாக பார்க்க வேண்டுமே தவிர ஏதோ ஒரு கருத்தியலுக்காக, யாரோ ஒருவர் ஆட்சிக்கு வருவதற்காக கொண்டு வருவதாக எழுந்த தேவையில்லாத பயத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதாக நினைக்கிறோம். ஆகவே, இந்த தீர்மானம் அவசியமற்றது” என்று கூறினார்.

இதையடுத்து இரண்டு தனித்தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

பட மூலாதாரம், ஜவஹர் அலி

‘தொகுதி மறுவரையை தீவிரமாக எதிர்க்கிறோம்’

“தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம் செய்து விடக்கூடாது என்பதற்காக அதை எதிர்க்கிறோம். மற்றபடி நாங்கள் எப்போதும் திமுகவிற்கு எதிரானவர்கள் தான்” என்று கூறுகிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தலைப் பொறுத்தவரை, இப்போது இந்த தீர்மானம் அவசியமற்றது. 2019ஆம் ஆண்டிலே இதை பேசினார்கள், அப்போது ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைத்தார்கள். அப்போதும் ஒன்றும் பேசவில்லை”

“சட்டம் ஒழுங்கு பிரச்னை, விலைவாசி உயர்வு என பல பிரச்னைகள் தமிழ்நாட்டில் உள்ளன. பல லட்சம் கோடி கடனை வாங்கி திமுக அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் திசை திருப்பவே இதை கொண்டு வந்துள்ளார்கள். முதலில் ஒரு திட்டம் வருகிறதென்றால் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யோசிக்க முடியாது அல்லவா. அதனால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை” என்கிறார் ஜவஹர் அலி.

“1972 வரை அப்போதைய திமுக அரசுக்கு பதவிக்காலம் இருந்தும், 1971இல் இந்திராகாந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினார் என்பதற்காக திமுகவும் ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்தி 182 இடங்களில் வெற்றி என்ற சாதனையை படைத்தது. இதை அவர்கள் இன்று மறந்துவிட்டு பேசுகிறார்கள். அப்போது மாநில உரிமைகள் பறிபோகவில்லையா” என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

“அதிமுக இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளது. பத்து வருடத்தில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இதை எதிர்ப்போம் என்கிறார்கள், இந்த காலகட்டத்தில் என்ன நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள், புரியவில்லை. மாநில உரிமைகள் பாதிக்கப்படாதவாறு நாங்கள் இதை செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு உறுதியளிக்கிறது, பிறகு எதற்கு இந்த தேவையற்ற கோரிக்கைகள். ஆக, இரண்டு கட்சிகளும் இதில் ஒரு தவறான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள்” என்கிறார் மாலன்.

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

‘பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது’

“அதிமுக முன்வைத்த கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றால் ஒரே நாடு ஒரே தேர்தலைக் கண்டிப்பாக எதிர்ப்போம். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக தான் உள்ளோம். திமுக தான் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இதை அவசரமாக கொண்டுவந்துள்ளது.” என்கிறார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்.

“மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்காமலிருத்தல், எல்லா மாநிலங்களிடமும் கருத்து கேட்க வேண்டும், தேர்தலுக்கான தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக கொண்டு வரவேண்டும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சரியாக அமுல்படுத்த வேண்டும், உள்ளிட்ட எங்களின் 10 கோரிக்கைகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். திமுகவைப் போல எங்களால் தேர்தலுக்காக நடிக்க முடியாது என்பதால் அவகாசம் கொடுத்துள்ளோம். மற்றபடி எங்கள் பொதுச் செயலாளர் கூறியது போல பாஜகவுடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது” என்று திட்டவட்டமாகக் கூறினார் தளவாய் சுந்தரம்.

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் தான் தொகுதி மறுசீரமைப்பும் வருகிறது. எனவே இதை புத்திசாலித்தனமாக திமுக பிரித்து இரண்டு தீர்மானங்களாக கொண்டு வந்துள்ளது. அதனால் தான் ஒன்றை ஆதரித்தோம், மற்றொன்றை எதிர்த்தோம். 39 தொகுதிகளும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது” எனக் கூறுகிறார் அவர்.

சட்டப்பேரவையில் திமுகவின் தீர்மானத்தை ஆதரித்த அதிமுக

‘கூட்டணி குறித்து டெல்லி பாஜக முடிவு செய்யும்’

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முன்பிருந்தே அதிமுக ஆதரவு கொடுத்து தானே வருகிறார்கள். எனவே அவர்கள் கூறுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் மீண்டும் வந்து அவர்கள் இணைவார்களா என்பதை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும்” என்கிறார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

“இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது இதன் அடிப்படையில் செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. 2026இல் தான் இது குறித்து அறிவிக்கப்படும் என தெளிவாக சொல்லிய பிறகும் எதற்கு அவசரமாக இந்த தீர்மானம். மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தின் மூலம் தமிழர்களின் நலன், தென்னகத்தின் நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதைத் தான் வானதி ஸ்ரீனிவாசனும் சட்டசபையில் கூறினார்” என்றார் நாராயணன் திருப்பதி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »