Press "Enter" to skip to content

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க “பதில் உதவியை எதிர்பார்க்கும்” நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 12, 2019 முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த தகவலை மார்ச் 13, 2024க்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 நாட்களுக்குள் செல்லுபடியாகும், அரசியல் கட்சிகளால் எடுக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் வாங்குபவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.

இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன?

இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, ​​தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது.

ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் ஒளிவுமறைவின்மையை அதிகரிக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பத்திரத் திட்டம் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளது. வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு பண மசோதா என்பதால் ராஜ்யசபா அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

ராஜ்யசபாவில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெற்றிருக்கிறது?

2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன.

இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன.

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் ஆணையம் மற்றும் மைய கட்டுப்பாட்டு வங்கி என்ன சொல்கிறது?

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை ‘நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை’ என்று குறிப்பிட்ட மைய கட்டுப்பாட்டு வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் மைய கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்திருந்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »