Press "Enter" to skip to content

கிருஷ்ணா-கோதாவரி படுகை: கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பால் இந்தியாவின் இறக்குமதி குறைய வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (கேஜி படுகையில்) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) முதன்முதலாக கச்சா எண்ணெயை எடுத்துள்ளது.

ஆந்திர மாநில கடற்கரை அருகே வங்காள விரிகுடாவிலேயே மிகவும் ஆழமான பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இரண்டாம் கட்டப் பணிகளின்போது, ‘எம்’ வயலில் இருந்து, கச்சா எண்ணெய் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெட்ரோலிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய நம்பிக்கை ஒளியாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மற்ற நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் எடுக்க சவாலான கே ஜி படுகை

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

கடந்த மாதம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

“காக்கிநாடா கடற்கரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கே.ஜி பேசினில் உள்ள ஒரு பகுதியில் இருந்து முதல்முறையாக எண்ணெய் எடுத்தோம். இதற்கான பணிகள் 2016-17ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காரணமாக இது தாமதமானது,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஓ.என்.ஜி.சி ஏற்கெனவே தனது முதல் கட்டப் பணிகளின்போது, மார்ச் 2020 முதல் கேஜி படுகையில் ‘யு’ வயலில் இருந்து எரிவாயுவை பிரித்தெடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் கச்சா எண்ணெய் உற்பத்தியின் மூலம், ஓ.என்.ஜி.சி.யின் உற்பத்தித் திறன் 11 சதவீதமாகவும், எரிவாயு உற்பத்தித் திறன் 15 சதவீதமாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல சவால்களுக்கு மத்தியில் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து எரிவாயு உற்பத்தி செய்ததாக ஓ.என்.ஜி.சி அறிவித்தது. கே.ஜி படுகையில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பகுதி மற்ற இடங்களைவிட மிகவும் வித்தியாசமானது. எனவே அங்கு கச்சா எண்ணெய் பிரித்தெடுப்பது கடினமான பணியாகும்.

அங்கு அதிக எண்ணெய் பிசின் காரணமாக கச்சா எண்ணெயைப் பிரித்தெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஓ.என்.ஜி.சி எண்ணெய் பிரித்தெடுப்பதற்கு பைப்-இன்-பைப் தொழில்நுட்பத்தை (ஒரு குழாயில் இருந்து மற்றொரு குழாயை இணைப்பது) பயன்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுவது நாட்டில் இதுவே முதல்முறை.

நாட்டின் 7% எண்ணெய் தேவை தீரும்

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், ONGC

ஓ.என்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் அக்ஷய ஜீனா பிபிசியிடம் பேசுகையில், இந்த ஆண்டே எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதியில் இருந்து முழுமையான அளவில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

“பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்த ஆத்மநிர்பர் பாரத்-இல் (தற்சார்பு பாரதம்) இது ஒரு முக்கியப் படி. காக்கிநாடா வயலில் முழு அளவிலான உற்பத்தி தொடங்கினால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 45,000 பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் ஒரு நாளைக்கு 10 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இதன் மூலம் நாட்டின் தேவைகளில் கூடுதலாக 7 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

கே.ஜி படுகை எங்கு அமைந்துள்ளது?

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

வங்காள விரிகுடாவில் கிருஷ்ணா (கே) மற்றும் கோதாவரி (ஜி) ஆறுகள் சந்திக்கும் பகுதியின் நடுவில் கிருஷ்ணா – கோதாவரி (கேஜி) படுகை அமைந்துள்ளது. இது 40,000 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 15,000 சதுர கி.மீ. கடலோரப் பகுதிகள் மற்றும் மற்றொரு 25,000 சதுர கிலோமீட்டர் கடல் பகுதிகள்.

படுகையில் எண்ணெய் இருப்பதைக் கண்டறிவதற்கான முதல் முயற்சிகள் 1959இல் தொடங்கின. ஓ.என்.ஜி.சி 4,220 சதுர கிலோமீட்டருக்கான புவியியல் வரைபடத்தைத் தயாரித்துள்ளது.

இதுதவிர, மேலும் 19,200 சதுர கி.மீ. கடலோரப் பகுதியிலும் புவிஈர்ப்பு-காந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவுகளை ஆராய்ந்து, ஓ.என்.ஜி.சி 1990களில் 225 இடங்களில் 22 எண்ணெய் கிணறுகள் மற்றும் 53 எரிவாயு கிணறுகள் உட்பட 557 கிணறுகளை அமைத்தது.

இதேபோல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், செயில், ஜிஎஸ்பிசி, டோரண்ட் மற்றும் கெயில் போன்ற நிறுவனங்கள் உட்பட 19 எண்ணெய் இருப்பு இடங்களை தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த 2018 ஏப்ரல் மாதம் முதல் பணிகளைத் தொடங்கி, கடந்த மாதம் ஒரு கிணற்றில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் எடுத்தது. இந்தத் தொகுதியில் உள்ள 26 கிணறுகளில் நான்கில் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது.

கேஜி படுகையில் எண்ணெய் எடுப்பது எளிதானதா?

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

காக்கிநாடாவில் உள்ள ஜே.என்.டி.யு பெட்ரோலியம் கோர்சஸ் இயக்குநர் பேராசிரியர் கே.வி.ராவ் கூறுகையில், “எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுக்கும் பணிகளைப் பொறுத்தவரை கே.ஜி பேசின் தனித்துவமானது, இங்கு எண்ணெய் எடுப்பது மிகவும் கடினம்,” என்றார்.

முன்னதாக அவர் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

கேஜி படுகையில் உள்ள எண்ணெய் படிமங்கள் குறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், “முன்னதாக, ஓ.என்.ஜி.சி ஒரு நாளைக்கு 70,000 பீப்பாய் எண்ணெயை எடுக்க முடியும் என்று மதிப்பிட்டிருந்தது. இப்போது அது 45,000 பீப்பாய்களை மட்டுமே எடுக்க முடியும் என்று கூறுகிறது, ஏனெனில் மற்ற படுகைகளுடன் ஒப்பிடும்போது கே.ஜி படுகை மிகவும் சிக்கலானது.

மற்ற படுகைகளில் இருப்பது போல, எண்ணெய் படிமங்கள் தடிமனாக இருக்காது. அதனால்தான் இங்கு எண்ணெய் உற்பத்தி சவாலாக உள்ளது” என்று அவர் விளக்கினார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், பேராசிரியர் கே.வி.ராவ்

நாட்டில் 26 படுகைகள், 3.36 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று பிரிவுகளில் உள்ளன.

முதல் பிரிவின் கீழ் ஏழு வண்டல் படுகைகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகின்றன. அவை காம்பே, அசாம் படுகை, மும்பை கடற்கரை, கே.ஜி., காவிரி படுகைகள், அசாம் அரக்கான் பெல்ட், ராஜஸ்தான்.

இரண்டாவது பிரிவின் கீழ் உள்ள ஐந்து படுகைகளில் பெட்ரோலிய வளங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டாலும், வணிக ரீதியான பிரித்தெடுத்தல் அங்கு தொடங்கப்படவில்லை. கட்ச், மகாநதி-NEC, அந்தமான் மற்றும் நிக்கோபார், விந்தியன் மற்றும் சௌராஷ்டிரா படுகைகள் இரண்டாவது பிரிவின் கீழ் உள்ளன.

தற்போது இந்தியா ஒரு நாளைக்கு 10.16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது.

ஆனால், ஒரு நாளுக்கு 44.43 லட்சம் கச்சா எண்ணெய் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்தியாவில் எடுக்கப்படும் எண்ணெயில் 71 சதவீதத்தை ஓஎன்ஜிசி பிரித்தெடுக்கிறது, மீதமுள்ள 29 சதவீதம் தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. கே.ஜி படுகையில், மட்டும் 5.07 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தனது எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரும்பாலும் இறக்குமதியை நம்பியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் திட்டமிடல் பகுப்பாய்வு அமைப்பின் (பிபிஏசி) அறிக்கைப்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியா 85.5 சதவீத எண்ணெய் தேவைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதன் மதிப்பு , 122.45 பில்லியன் டாலர்.

கேஜி படுகையால் எண்ணெய் இறக்குமதி குறையுமா?

கிருஷ்ணா கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு: இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறையுமா?

பட மூலாதாரம், Getty Images

மக்களவையில் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கேஜி படுகையில் 698 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி தற்போது ஒரு நாளைக்கு 19,190 பீப்பாய்களாக உள்ளது. அதே நேரத்தில் இயற்கை எரிவாயு ஒரு நாளைக்கு 9.8 மில்லியன் மெட்ரிக் கன மீட்டராக உள்ளது.

நாட்டின் மற்ற படுகைகளுடன் ஒப்பிடும்போது கே.ஜி படுகையில் உற்பத்தி செலவு குறைவு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பீப்பாய்க்கு 12-42 டாலராகவும், மற்ற படுகைகளில் 15-62 டாலராகவும் உள்ளது.

அதனால்தான் ஓ.என்.ஜி.சி மற்றும் ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் கே.ஜி படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஓ.என்.ஜி.சி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 45,000 பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தற்போது, இந்தியா ஒரு நாளைக்கு 42,55,300 பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது, அதாவது அது ஒரு மாதத்திற்கு 11 பில்லியன் டாலர் செலவிடுகிறது. பேரலின் மதிப்பு அதிகரித்தால், செலவு மேலும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் கே.ஜி படுகையில் ஒரு நாளைக்கு 45,000 பீப்பாய்களை எடுக்க முடியும் என்று ஓ.என்.ஜி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு 1.16 மில்லியன் டாலர் மிச்சமாகும்,” என்று ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஓ.என்.ஜி.சி.யின் திறன் என்ன?

கிருஷ்ணா கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு: இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறையுமா?

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் (PPAC) தரவுகள்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி டிசம்பர் 2023இல் 2.5 மில்லியன் மெட்ரிக் டன்களை (MMT) எட்டியது.

இதில் ஆயில் இந்தியா லிமிடெட் (ஓஐஎல்) மூலம் 0.3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டது, ஓ.என்.ஜி.சி 1.6 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்தது. இருப்பினும், இது டிசம்பர் 2022 உடன் ஒப்பிடும்போது 1.03 சதவீதம் குறைவு.

ஒட்டுமொத்தமாக, டிசம்பர் 2023இல் இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 22.7 MMT ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டைவிட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி 2.6 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் இறக்குமதி 20.1 டன்னாகவும் இருந்தது. கச்சா எண்ணெய்க்காக மற்ற நாடுகளை அதிகம் சார்ந்திருப்பதால் எண்ணெய் கையிருப்பு முக்கியமானதாகி வருகிறது.

சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் பெரும்பாலான நாடுகள் மூலோபாய இருப்புகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவும் இதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் தரவுகள்படி, இந்தியா குறைந்தது மூன்று மாதங்களுக்கு 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மூன்று இடங்களில் 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை பூமிக்கு அடியில் 10 நாட்களுக்கு சேமிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய மூலோபாய பெட்ரோலிய முன்பதிவு லிமிடெட் (ஐ.எஸ்.பி.ஆர்.எல்) மங்களூர், படூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள மூன்று இடங்களில் நிலத்தடி கல் குகைகளை அமைத்துள்ளது.

அந்தமானில் கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

அந்தமான் கடற்கரையிலும் எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தமான் கடற்கரையில் 120 பில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது 70 ஆண்டுகளுக்கு போதுமானது.

அந்தமான் நிக்கோபாரில் 22,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓ.என்.ஜி.சி மற்றும் இந்தியன் ஆயில் லிமிடெட் அங்கு துளையிடும் பணிகளை மேற்கொள்ளும்.

இந்த இரு நிறுவனங்களும் இந்த ஆண்டு மே மாதத்தில் துளையிடும் பணியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இதுவும் கிடைத்தால், இந்தியா தனது பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய முடியும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »