Press "Enter" to skip to content

சர்ஃபராஸ் கான்: பெருங்கனவு நிறைவேறிய நாளில், ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது சோதனை போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின் தந்தைதான்.

தொடக்கப் போட்டியிலேயே சிறப்பாக ஆடி தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் சர்ஃபராஸ் கான்.

சர்ஃபராஸ் கானுக்கு தந்தையாகவும், சிறுவயதிலிருந்தே பயிற்சியாளராகவும், கிரிக்கெட்டில் வழிகாட்டியாகவும் இருந்து இந்திய அணிக்குள் செல்ல மூலகாரணமாக இருந்தவர் அபு என்ற நெளசத்கான் கான்.

இந்திய அணிக்காக பல போராட்டங்களுக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது சோதனை போட்டியில் வாய்ப்பு பெற்றார் மும்பையைச் சேர்ந்த வலதுகை பேட்டர் சர்ஃபராஸ் கான். முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கரங்களால் இந்திய அணியின் தொப்பியைப் பெற்று களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த தந்தை நெளசத் கானும், சர்ஃபராஸ் கான் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இந்த தருணத்துக்காகத்தான் நெளசத்கான் நீண்டகாலம் காத்திருந்தார். தேசத்துக்காக தன் மகன் விளையாட வேண்டும், இந்திய அணிக்குள் இடம் பெற வேண்டும் என்ற பல ஆண்டுகள் கனவு நேற்று நெளசத்கானுக்கும், சர்ஃபராஸ் கானுக்கும் நிறைவேறி இருக்கிறது.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

“நினைக்கும் நேரத்தில் சூரியன் உதிக்காது”

போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வர்ணணையாளர் பகுதிக்கும் சர்ஃபராஸ்கான் தந்தை நெளசத் கான் சென்றார். அங்கு வர்ணணையாளர் பணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா, நெளசத் கானிடம் “ இந்திய அணியில் உங்கள் மகன் அறிமுகத்துக்கு நீண்டகாலம் ஆகிவிட்டதா, அதிக காலம் காத்திருக்க வேண்டியது இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நெளசத்கான் பதில் அளிக்கையில் “ நம்முடைய விருப்பப்படி சூரியன் உதயமாகாது. இரவைக் கடந்தால்தான் சூரியன் உதயமாகும், ஆதவனைப் பார்க்க முடியும்” என்று ஆழ்ந்த பதிலைத் தெரிவித்தார்.

அற்புதமான மட்டையாட்டம்

நெளசத் கானின் பதிலைப் போலவே, ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும், இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போலவும், சர்ஃபராஸ் கான் மட்டையாட்டம் நேற்று அமைந்திருந்தது.

ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது சோதனை போட்டியில் அறிமுக போட்டியேலேயே சர்ஃபராஸ் கான் 96 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து, 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் தவறால் சர்ஃபராஸ் கான் 62 ஓட்டங்களில் ஓட்டத்தை அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக அறிமுகப் போட்டியேலேய சதம் கண்டிருப்பார்.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் சாதனை சமன்

இங்கிலாந்து அணியில் நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், ஆன்டர்சன், ஹார்ட்லே, ரூட் ஆகியோரின் பந்துவீச்சை மிகவும் அனாசயமாகக் கையாண்டு சர்ஃபராஸ் கான் ரன்களைச் சேர்த்து அரைசதம் கடந்தார். அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சர்ஃபராஸ்கான் சமன் செய்தார்.

சர்ஃபராஸ்கானின் மட்டையாட்டம் செய்யும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஸ்வீப் ஷாட், ஃபுல் ஷாட், ஸ்குயர்கட், லேட் கட், ஸ்கொயர் ட்ரைவ் என பல கோணங்களில் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக ஃபேக் ஃபுட்டில் சென்று சுழற்பந்துகளை தேர்டு மேன் திசையில் தட்டிவிடும் நுட்பத்தை சர்ஃபராஸ்கான் அருமையாகச் செய்தார்.

ரசிகர்கள் ஆதங்கம்

இப்படிப்பட்ட பேட்டருக்கா இத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தையும் காண முடிந்தது.

உண்மையில், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதர் போன்ற வீரர்கள் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் அதிகமாக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் வந்தனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சர்ஃபராஸ் கான் மீதான ரசிகர்களின் அன்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால், அரைச் சதம் அடித்த பிறகு ஓட்டத்தை அவுட் ஆனபோது, அதற்கு காரணமான ரவீந்திர ஜடேஜாவை திட்டித் தீர்க்கும் அளவுக்கு இருந்தது. தனது தவறுக்காக ஜடேஜாவை சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரி பதிவிடும் வகையில் ரசிகர்கள் தங்களது அன்பை சர்ஃபராஸ் கானுக்கு தெரிவித்தனர்.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

மும்பையின் ரன்மெஷின்

ஆனால், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குள் வருவதற்கு முன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர், மும்பை அணிக்காக பல போட்டிகளில் பல சதங்களையும், ஏராளமான ரன்களையும் குவித்து மும்பையின் ரன்மெஷின் என்று வர்ணிக்கப்பட்டவர்.

குறிப்பாக 2019 முதல் 2022 பருவம் வரை ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்து, சர்ஃபராஸ் கான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். கடைசியாக 2022-23 பருவத்தில்கூட ரஞ்சிக் கோப்பையில் 6 போட்டிகளி்ல 500 ரன்களுக்கு மேல் குவித்து தனது சராசரியை 90 ரன்களுக்கு மேல் வைத்திருந்தார்.

தனது மட்டையாட்டம்கில் எந்தவிதமான குறையும் பெரிதாகக் கூற முடியாத அளவுக்கு சர்ஃபராஸ் கான் ஆட்டம் அமைந்திருந்தும் அவருக்கான வாய்ப்புக் கதவுகள் இந்திய அணியில் திறக்கப்படவில்லை.

இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்பதை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா என பலரும் தங்களின் ஆதங்கங்களை பல நேரங்களில் வெளிப்படுத்தினர்.

45 முதல் தரப்போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 3,912 ஓட்டங்கள் சேர்த்தபின்புதான் இந்திய அணி அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இதில் சர்ஃபராஸ் கான் ஒருமுறை முச்சதம், இரட்டை சதமும் அடித்துள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் சர்ஃபராஸ் கான் 70 ஸ்ட்ரைக் ரேட்டும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 94 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ஓட்டத்தை சராசரி கொண்ட வீரர் என்ற பெருமையை சர்ஃபராஸ் கான் பெற்றிருந்தார்.

இருப்பினும், சர்ஃபராஸ் கானின் மட்டையாட்டம் திறமை மீது இந்திய அணித் தேர்வாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருந்தபோது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானை தேர்ந்தெடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டுக்காக படிப்பு நிறுத்தம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கார்க் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது சர்ஃபராஸ் கான் குடும்பம். ஆனால், ஒரு கட்டத்தில் சர்ஃபராஸ் கான் தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பைக்கு வந்து அங்கு தங்கிவிட்டனர்.

1997, அக்டோபர் 22ம் தேதி மும்பையில் பிறந்தவர் சர்ஃபராஸ் கான். வலது கை பேட்டர், வலது கை சுழற்பந்துவீச்சாளர், தேவைப்பட்டால் மட்டும் மட்டையிலக்கு கீப்பிங் செய்யும் பழக்கம் கொண்டவர்.

சர்ஃபராஸ் கானுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் திறன் இருப்பதை அவரின் தந்தை நெளசத் கான் கண்டறிந்தார். குறிப்பாக பந்தை டைமிங் பார்த்து தட்டிவிடும் திறன் சர்ஃபராஸ் கானுக்கு அதிகம் இருந்தது. இதையடுத்து, இந்தத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கானுக்கு தீவிரமாக பயிற்சியை நெளசத் கான் அளித்தார்.

ஆனால், காலநிலை சரியில்லாதது, மழை போன்றவற்றால் மைதானத்துக்கு செல்ல முடியாத சூழல் பல நேரங்களில் இருந்தது. இதனால் தனது வீட்டின் அருகே, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, செயற்கை பிட்ச் அமைத்து அதில் மகனுக்கு நெளசத் கான் மட்டையாட்டம் பயிற்சி அளித்து உருவாக்கினார். தீவிரமான கிரிக்கெட் பயிற்சி காரணமாக, சர்ஃபராஸ் கான் படிப்பு 4 ஆண்டுகள் பாதித்தது. வீட்டிலேயே ஆங்கிலம், இந்தி, கணித வகுப்புகள் சர்ஃபராஸ்கானுக்கு எடுக்கப்பட்டன.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

சச்சின் சாதனையை முறியடித்தவர்

பள்ளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியான ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் தனது 12 வயதில் 2009ம் ஆண்டு பங்கேற்றார். அந்த போட்டியில் 12 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகல் உள்பட 421 பந்துகளில் 439 ஓட்டங்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சர்ஃபராஸ் கான் முறியடித்தார். இந்த ஆட்டம்தான் சர்ஃபரஸ் கான் யார் என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியது.

அதன்பின் மும்பைஅணியில் 19 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் சர்ஃபராஸ் கான் இடம் பெற்று, இந்திய அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற வாய்ப்பளித்தது.

இதுவரை சர்ஃபராஸ் கான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று 2 உலகக் கோப்பை(2014, 2016) தொடர்களில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக அரைசதங்கள் (7அரை சதம்) அடித்த வீரர் என்ற பெருமையையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 355 ஓட்டங்கள் குவித்து 2வது அதிக ஓட்டத்தை சேர்த்த வீரர் என்ற சிறப்பையும் சர்ஃபராஸ் கான் பெற்றார்.

ஆனாலும், சர்ஃபராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சையோடுதான் தொடங்கியது. 2011ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் பங்கேற்றபோது அவருக்கு 15 வயது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எலும்பு வளர்ச்சி பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்பின் சர்ஃபராஸ் கானுக்கு நடத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி பரிசோதனையில் அவர் அதிக வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவரின் பயிற்சியாளரான நெளசத்கான் ஏற்கவில்லை. எனவே 2வது அதிநவீன பரிசோதனைக்குச் சர்ஃபராஸ் உட்படுத்தப்பட்டார். இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சர்ஃபராஸ் கான் சான்றிதழில் அளித்த வயதும், அவரின் எலும்பு வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருப்பதாக உறுதியானது.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார், சர்ஃபராஸ் சர்ச்சை

இது தவிர 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. அந்த வெற்றிக்குப்பின், சர்ஃபராஸ் கானும், சூர்யகுமார் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் செய்கையில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளில் பேசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவர் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர், 2 ஆண்டுகளுக்கு இருவருக்கும் போட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் ஒழுக்கம் கண்காணிக்கப்பட்டது.

திரும்பிப் பார்க்க வைத்த ரஞ்சி பருவம்

சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக 2014ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் 2015-16 பருவத்தில் உத்தர பிரதேச அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019-20ம்ஆண்டு ரஞ்சி பருவத்தில் மும்பை அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மும்பை அணிக்காக மட்டையிலக்கு கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சிறுவயதில் மட்டையிலக்கு கீப்பராக இருந்துள்ள சர்ஃபராஸ் கான், சீனியர் அணிக்காக விளையாட வந்தபோது முதன்முறையாக மட்டையிலக்கு கீப்பிங்கில் ஈடுபட்டு புதிய அவதாரமெடுத்தார்.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

பிராட் மேனுக்கு அடுத்ததாக ஓட்டத்தை சராசரி

கடந்த 3 ரஞ்சி பருவம்களிலும் சர்ஃபராஸ் கான், ஏறக்குறைய 2,500 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்துள்ளார். 2019 முதல் 2022 வரை ஒவ்வொரு சீசனிலும் 900 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து முதல் தரப்போட்டியில் புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார்.

டான் பிராட்மேனுக்கு அடுத்தாற்போல் உள்நாட்டுப் போட்டிகளில் அதிக மட்டையாட்டம் சராசரி வைத்துள்ள இளம் வீரர் எனும் பெருமையும் சர்ஃபராஸ் கானுக்கு இருக்கிறது.

இளம் வயதில் ஐபிஎல் அறிமுகம்

ஐபிஎல் டி20 தொடரில் தனது 17வயதிலேயே சர்ஃபிராஸ் கான் அறிமுகமாகினார். 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சர்ஃபராஸ் கான் ஆட்டத்தைப் பார்த்த ஆர்சிபி அணி அவரை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2015 பருவம் முதல் 2018 பருவம் வரை ஆர்சிபி அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார்.

2019 ஐபிஎல் பருவத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சர்ஃபராஸ் கானை விலைக்கு வாங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்த பருவத்தில் சர்ஃபராஸ் கான் மட்டையிலக்கு கீப்பர் பேட்டராகவும் செயல்பட்டார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »