Press "Enter" to skip to content

தேர்தல் பத்திரம் ரத்து: அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் ஏற்படப்போகும் பாதிப்புகள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஜனவரி 2018 முதல் ஜனவரி 2024 வரை ரூ .16,518 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தத் தொகையில் பெரும் பகுதி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கப்பட்டவை. அதில் பெரும்பாலான நிதி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே கிடைத்ததாக கடந்த சில ஆண்டுகளில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தத் திட்டம் பணமோசடி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், “தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. யார் நிதி வழங்குகிறார்கள், எவ்வளவு நிதி என்பன போன்ற சில தகவல்கள் ரகசியமாக இருந்தால் நல்லது என்று நன்கொடையாளர்கள் கருதுகிறார்கள். இது இயல்பான கோரிக்கைதான். ஏனென்றால், ஆட்சி மாறும்போது, அடுத்து வரும் அரசு, அவர்களைக் குறி வைக்கக்கூடும்,” என்று கூறினார்.

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

ஏடிஆர் நிறுவனர் மற்றும் அறங்காவலர் பேராசிரியர் ஜக்தீப் சோக்கர் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் முடிவு பாராட்டத்தக்கது. இதனால், பொது மக்களுக்குத் தெரியாமல் கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்குப் பணம் வழங்குவது நிறுத்தப்படும்.

தேர்தல் பத்திர திட்டங்களால் தேர்தல் நிதி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. தற்போது அது மீண்டும் கிடைக்கும்,” என்றார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை குறித்து மார்ச் 6ஆம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தகவல் வெளியாகும்போது, தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யாருக்குக் கொடுத்தார்கள் என்பது தெளிவாகும்.

இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தத் திட்டம் அரசமைப்பிற்கு விரோதமானது. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளை மறுக்கிறது.

அடுத்த மூன்று வாரங்களில், தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதனால் என்ன நடந்தது, யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள், அவர்களுக்குப் பதிலுக்கு என்ன செய்தீர்கள் என்பது தெரிய வரும்,” என்றார்.

ஆரம்பத்தில் இருந்தே, அவரும் அவரது கட்சியும் தேர்தல் பத்திரங்கள் அரசியல் ஊழலை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றன என்று கூறி வந்ததாக யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார்.

“அதனால்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் கட்சி ஒரு தேர்தல் பத்திரத்தைக்கூட இதுவரை ஏற்கவில்லை. மற்ற கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் எங்கள் கட்சி அதை ஏற்கவில்லை. எனவே நீதிமன்றம் எங்கள் மனுவை விசாரித்தது,” என்றார்.

நன்கொடையாளர்கள் தனியுரிமையை விரும்பினார்களா?

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், “தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

இந்தத் தகவல்கள் ரகசியமாகக் காக்கப்பட வேண்டும் என எங்கள் நன்கொடையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். எனவே நேர்மையாக தொழில் செய்பவர்கள், அதைத் தொடர்ந்து செய்யட்டும் என நினைத்தோம்,” என்று கூறினார். மேலும் அவர், உச்சநீதிமன்றத்தின் முடிவை மதிக்கிறோம் என்றும் தீர்ப்பு குறித்த கருத்தைப் பின்னர் தெரிவிப்பதாகவும் கூறினார்.

‘ஊழலுக்கான சட்டப் பாதுகாப்பு நீக்கப்பட்டது’

உலகளாவிய சிந்தனைக் குழுவான கார்னகி எண்டவ்மென்ட்டின் இயக்குநர் மிலன் வைஷ்ணவ் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தல் நிதி குறித்த வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் என்றார்.

“தனிநபர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவது இப்போது அரசாங்கத்தின் பொறுப்பாகும்,” என்றார் அவர்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக வைஷ்ணவ் கூறுகிறார்.

“அரசாங்கத்துடன், அதிலும் குறிப்பாக அரசின் முக்கிய விவகாரங்களில் அல்லது பிரச்னைகளில், நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையிலேயே நீதிமன்றம் பலமுறை நடந்து கொண்டுள்ளது. ஆனால், தேர்தல் பத்திரம் குறித்து ஏகமனதாக அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை அறிவித்துள்ளனர். எனவே தேர்தல் பத்திரங்கள் அரசமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் வலுவாக உணர்ந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நிதின் சேத்தி தி அறிக்கைடர்ஸ் கலெக்டிவ் உறுப்பினராக உள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்து புலனாய்வு செய்து செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“தேர்தல் பத்திரங்களை ரத்து செய்ததன் மூலம் ஊழலுக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்த ஷெல் நிறுவனங்கள் வெளியே வர வேண்டும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இது நீதிமன்றம் எடுத்த துணிச்சலான நடவடிக்கை,” என்று பாராட்டினார்.

கருப்புப் பணமும், கணக்கில் வராத பணமும் அரசியலில் நுழைவதற்கான ஒரு வழியே தேர்தல் பத்திரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் சேத்தி. மேலும், “தேர்தல் பத்திரங்கள் பல குழப்பங்களை, சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இதை சீர்திருத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால், தங்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதை வெளியே சொல்ல அரசு விரும்பாது. தேர்தல் பத்திரங்களில் இருந்து பெரும்பாலான பணம் பாஜக மற்றும் மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கே வந்ததை நாங்கள் கண்டறிந்தோம். தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த ரூ.16,500 கோடி குறித்த விவரங்கள் வெளியில் வரக்கூடாது என நீதிமன்றத்தில் யாரையாவது கொண்டு வழக்கு தொடுப்பார்கள்,” என்று அவர் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.

தேர்தல் நிதி வழங்குவதில் என்ன தாக்கம் ஏற்படும்?

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Nitin Sethi

கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன்பு, பணமாக வழங்கப்பட்ட நன்கொடைகள் காரணமாக தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று விவாதிக்கப்பட்டது. தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வரும்போது, இந்தத் திட்டம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்று அரசு கூறியது.

இப்போது தேர்தல் பத்திரங்கள் அரசமைப்பிற்கு விரோதமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நிதி பெறுவதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பொருளாதார விவகார நிபுணரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான அருண் குமார் கூறுகையில், “தேர்தல் பத்திரங்களை ஒழிப்பது தேர்தல் நிதி பெறுவதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

ஏனென்றால், பெரும்பாலான தேர்தல் நிதி ரொக்கமாக வருகிறது. நிதியின் வெளிப்படைத்தன்மை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே இந்த முடிவு முக்கியமானது. ஆளும் கட்சிக்குத் தொடர்ந்து நிதி கிடைக்கும், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரம் குறையலாம்,” என்று அவர் கூறினார்.

நிதின் சேத்தி கூறுகையில், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கைத் தாமதப்படுத்தியதால், சில ஆண்டுகளிலேயே 16,000 கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், பணம் பெறுவதற்கு, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 30 நாள் கால அவகாசம் எஞ்சியிருந்தது. இந்தத் தீர்ப்பு வந்ததால், அரசியல் கட்சிகள் சுமார் 3-4 ஆயிரம் கோடியை இழக்கும் என்று கூறலாம்,” என்றார்.

இதுவரை வந்த பணம் என்னவாயிற்று?

பிப்ரவரி 5ஆம் தேதியன்று, நிதி அமைச்சகம் 30 கட்டங்களாக இதுவரை ரூ.16,518 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலான பத்திரங்கள் ஏற்கெனவே பணமாக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது.

இந்தத் திட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும்போது, அதன் மூலம் கிடைத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.

மிலன் வைஷ்ணவ் கூறுகையில், “பணமாக மாற்றப்படாத பத்திரங்களை திருப்பித் தருமாறு உச்சநீதிமன்றம் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது நியாயமாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே செலவழித்த பணத்தை திருப்பித் தருவது கட்சிகளுக்குக் கடினமாக இருக்கும்,” என்றார்.

சீதாராம் யெச்சூரி கூறுகையில், “இந்தத் திட்டமே அரசமைப்பிற்கு விரோதமானது என்பதால் பணத்தை திருப்பித் தருவதுதான் சரியாக இருக்கும். ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் இந்தப் பணம் தரப்படக்கூடாது. இந்தப் பணத்தை அரசு கணக்கில் வைப்பீடு செய்து, தேர்தலுக்கு அரசு நிதி வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும்,” என்றார்.

‘தேர்தலுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்’

சீதாராம் யெச்சூரி, “ தேர்தல்களுக்கு அரசு நிதி வழங்கி, அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே வெளிப்படைத்தன்மை வரும்,” என்கிறார்.

“இப்போது வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் செலவுகளுக்கு வரம்பு இல்லை. எனவே, தேர்தலின்போது வேட்பாளர் செலவு செய்யவில்லை, கட்சி செய்தது எனக் கூறி, கட்சிகள் தப்பித்து விடுகின்றன. இதன் காரணமாக, தில்லுமுல்லு ஏற்படுகிறது. கட்சிகளின் செலவுகளுக்கு ஒரு வரம்பு இருக்கும்போது, கட்சிகள் அதற்கு ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது வெளிப்படைத்தன்மை இருக்கும்,” என்றார் அவர்.

தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், எந்தக் கட்சிக்கு வாங்கினார்கள் என்பது மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும்போது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு வரும் என்கிறார் யெச்சூரி.

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பத்திரத் திட்டம் தேர்தல் நிதி குறித்த வெளிப்படைத்தன்மையை உருவாக்கவில்லை என்றார் ஜக்தீப் சோக்கர் கூறுகிறார்.

“முன்பெல்லாம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும்போது, அதை யாராவது பிடித்தால், அது சட்டப்படி குற்றமாக இருந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதை சட்டப்பூர்வமாக்கியது. தேர்தல் நிதியின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எப்போதுமே இருந்துள்ளன. தேர்தல் பத்திரங்களால் மோசமடைந்த நிலைமை மட்டுமே இப்போது சீராகும்,” என்கிறார் அவர்.

தேர்தல் நிதி விவகாரத்தில், அரசு வெளிப்படைத்தன்மையை விரும்புவதாக தான் நினைக்கவில்லை என்று நிதின் சேத்தி கூறுகிறார்.

“புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் பல்லைப் பிடுங்கிய அரசு இது. தேர்தல் நிதி வழங்கும் வழியை வெளிப்படையானதாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு விரும்புவதாக கடந்த பத்தாண்டுகளில் தெரியவில்லை. ஆட்சியில் இருக்கும்போது பாஜக வசூலித்த பணம் அடுத்த மூன்று கட்சிகளின் கூட்டுத்தொகையைவிட அதிகம்,” என்றார்.

“தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் ரொக்கமாகவும் கட்சிகளுக்குப் பணம் கிடைத்து வந்தன. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் நிதி அதிகரித்தன என்றாலும் ரொக்கமாகப் பெறும் வழக்கமும் இருந்து கொண்டு இருந்தது.

தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தாலும் பிற வழிகள் மூலம் கட்சிகள் பணம் பெறத்தான் போகின்றன. தேர்தல் ஆணையம் வலுவிழந்து நிற்கும். தேர்தல் செலவுகளைக் கண்காணிப்பது போல நடிக்கும், மறுபுறம் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்கள் வேலைகளை நடத்திக் கொண்டிருப்பர்,” என்று கூறுகிறார் அவர்.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் நன்கொடைகளை ஆராய வேண்டும்

தேர்தல் பத்திரம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

உச்சநீதிமன்ற தீர்ப்பு தேர்தல் பத்திரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், இந்தத் திட்டங்களால் நடந்ததாகக் கூறப்படும் ஊழலின் அடிப்பகுதிக்குச் சென்று உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனப் பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

நிதின் சேத்தி கூறுகையில், “லாபம் ஈட்டாமல் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுக்க விரும்பிய ஷெல் நிறுவனங்கள் எவை, எதற்காகக் கொடுத்தனர்? யார் பணம் கொடுத்தார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைத்தன? இவற்றைக் கண்டறிய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றார்.

“போலி நிறுவனங்கள் கொடுக்கும் பணம் தங்களுக்கான சில வேலைகளை முடித்துக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் கொடுத்தால் ஐந்து ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்ற முதலீடாக அரசியல்வாதிக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக என்ன கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்க்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றார்.

“இது அரசியல் நிதியைப் பற்றியது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியது. ஊழலின் நாடித் துடிப்பை நிறுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு,” என்று அவர் கூறுகிறார்.

மேலும், “கட்சிகளுக்கு நிதி பெறும் பல்வேறு வழிகளில் தேர்தல் பத்திரங்களும் ஒன்று. தேர்தல் பத்திரம் தவிர வேறு வழிகளில் கிடைத்த பணத்துக்கு, உச்சநீதிமன்ற உத்தரவால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்றார் சேத்தி.

கட்சிகளுக்கு நிதி கிடைக்கும் சட்டவிரோதமான அனைத்து வழிகளையும் மூடிவிட்டு முழு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் ஒரு சீர்திருத்த முடிவை வழங்க உச்சநீதிமன்றத்திற்கு இதுவொரு வாய்ப்பாக இருந்தது என்று சேத்தி சுட்டிக்காட்டுகிறார்.

“ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மை குறித்துப் பேசவில்லை. நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதோடு நிறுத்திக் கொண்டது. தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால் நமது தேர்தல் முறையை மாற்ற இது போதுமானதாக இல்லை,” என்கிறார் சேத்தி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »