Press "Enter" to skip to content

ரஷ்யா உருவாக்கும் புதிய விண்வெளி ஆயுதத்தால் அமெரிக்காவுக்கு என்ன அச்சுறுத்தல்?

பட மூலாதாரம், EPA

ரஷ்யா ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும், அது தனக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்த ஆயுதத்தை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரின் அறிக்கைக்கு ஒரு நாள் பிறகு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆயுதம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என குடியரசுக் கட்சி எம்.பி., ஜான் கிர்பி, பிரதிநிதிகள் சபையில் எச்சரித்துள்ளார்,

இந்த ஆயுதத்தை விண்வெளியில் பயன்படுத்த முடியும் என சிபிஎஸ் செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் அணுசக்தி பொருத்தப்பட்டு செயற்கைக்கோள்களை தாக்க பயன்படுத்த முடியும். இந்த தகவலை ஜான் கிர்பி உறுதிப்படுத்தவில்லை. மேலும், இந்த அச்சுறுத்தல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க அவர் மறுத்துவிட்டார்.

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Getty Images

மறுபுறம், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ரஷ்யா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க காங்கிரஸை கட்டாயப்படுத்தி, உக்ரைனுக்கு கூடுதல் நிதியை எப்படியாவது ஏற்பாடு செய்வதற்கான கூட்டுச்சதி இது என ரஷ்யா கூறியுள்ளது.

சமீபத்தில், ஜான் கிர்பி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த ஆயுதம் குறித்து பேசிய அவர், அமெரிக்க மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

“நாங்கள் மனிதர்களைத் தாக்கும் ஆயுதம் அல்லது பூமியில் ஏதேனும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆயுதம் குறித்து பேசவில்லை,” என்று கூறினார்.

இது குறித்து அதிபர் ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறும், ஜான் கிர்பி, பைடன் தலைமையிலான அரசு இந்தப் பிரச்னையை ‘மிகவும் தீவிரமாக’ எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடி இராஜ தந்திர தொடர்பை ஏற்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Getty Images

பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் குழுத் தலைவர் மைக் டர்னர் புதன்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் குறித்த சமிக்ஞைகளை எச்சரித்தார்.

அவரது அறிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் வசந்திகள் பரவத் தொடங்கின.

இருப்பினும், விண்வெளி ஆயுதங்களைப் பற்றி பேசும் போதெல்லாம், ஒரு அறிவியல் புனைகதை நாவல் குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது.

ஆனால், தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் உலகில் விண்வெளி அடுத்த போர்க்களமாக இருக்கும் என்று ராணுவ வல்லுநர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்க இதை எப்படி அணுகுகிறது?

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Getty Images

ஜான் கிர்பியின் கருத்துகளைத் தவிர, அமெரிக்க அரசு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல் பற்றிய எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க அரசு தெரிந்தே மெளனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் பற்றிய தகவல்களை சேகரிக்க அமெரிக்க உளவு அமைப்புகள் செயல்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற செய்தி நெட்வொர்க்குகள் தங்கள் அறிக்கைகளில், இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் ஆயுதத்தால் வந்ததாகக் கூறியது. இது விண்வெளியில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை ‘மிக தீவிரமாக’ எடுத்துக் கொள்கிறது என்றார்.

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Getty Images

பல ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட விண்வெளியில் தங்கள் ராணுவத் திறன்களை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகளும், விண்வெளி நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவின் சிந்தனைக்குழுவான குழல்டிஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்(Strategic and International Studies), கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தது. நவம்பர் 2021 இல், செயலிழந்த ஒரு சோவியத் கால செயற்கைக்கோளுக்கு எதிராக ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஒரு சம்பவத்தையும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையின் ஆசிரியர்களின் ஒருவரும், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான பிங்கன் பிபிசியிடம் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா ஏற்கனவே பல வழிகளை முயற்சித்துள்ளதாகக் கூறினார்.

அவர்களின் முயற்சியில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சீர்குலைக்க சைபர் தாக்குதல் நடத்துவதும் அடக்கும் என்றார் பிங்கன்.

“இவை அனைத்தும் ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் முறைகளில் உள்ளன,”என்றார் அவர்.

ரஷ்யாவின் புதிய ஆயுதத்தால் அமெரிக்காவுக்கு என்ன அச்சுறுத்தல்?

மைக் டர்னர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்க காங்கிரஸின் மூத்த தலைவர்கள், மக்களை இப்போதே எச்சரிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மைக் டர்னர் மக்களை எச்சரித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஓகல்ஸ் இது அலட்சியம் என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்களும், முன்னாள் அரசு அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பைத்தான் பெருமளவு நம்பியுள்ளது.

அதில், கண்காணிப்பு, ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிதல், வான் மற்றும் கடல் தாக்குதல் முதல் ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மூலம் இலக்கை தாக்கும் குண்டுகள் மற்றும் போர்க் களத் தொடர்பு வரை அனைத்திற்கும் செயற்கைக்கோள்களைத்தான் அமெரிக்கா பயன்படுத்துகிறது.

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Reuters

காரி பிங்கன் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இரண்டாவது உயர் மட்ட உளவுத்துறை அதிகாரியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”இன்று நமது ராணுவம் போராடும் விதம் மற்றும் நாம் முதலீடு செய்யும் ஆயுதங்கள் அனைத்தும் நமது விண்வெளி திறன்களைப் பொறுத்தது. அது இல்லாவிட்டால், நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்போம். நாங்கள் இப்படி போராடக் கற்றுக்கொண்டோம். எங்களால், அது இல்லாமல் போராட முடியாது,” என்றார்.

இருப்பினும், ராணுவத் தேவைகளைத் தவிர, ஜிபிஎஸ் போக்குவரத்து சேவை, உணவு விநியோகம் மற்றும் வானிலை தகவல் போன்ற பல இடங்களில் செயற்கைக்கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயம் முதல் சிக்னல் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் வரை அனைத்திலும் இது தேவைப்படுகிறது.

தொடர்ந்து பேசிய காரி பிங்கன்,”செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அமெரிக்கர்களும் உலகெங்கிலும் உள்ள மக்களும் விண்வெளியை நம்பியிருக்கிறார்கள்,” என்றார்.

விண்வெளி ஆயுதங்கள் தொடர்பாக உள்ள விதிகள் என்ன?

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், AIRBUS

கோட்பாட்டளவில் அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்றாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கும் திறன் உள்ளது.

மூன்று நாடுகளும் 1967 விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதன் மூலம் ஆயுதம் ஏந்திய எதையும் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்ப முடியாது.

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த ஒப்பந்தம் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரியான மிக் முல்ராய் கூறினார்.

“ரஷ்யா தான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. அது அனைத்து சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி உக்ரைனுக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்தியது. அந்த நாடு தனது சொந்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை,”என்றார் அவர்.

நவீன போர்க்களமாக மாறுகிறதா விண்வெளி?

அமெரிக்க மூலோபாய விவகார காங்கிரஸின் உறுப்பினரும், முன்னாள் அதிபர்களான புஷ், ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோரின் காலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரியாக இருந்த மேத்யூ குரோனிங் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், உலகெங்கிலும் உள்ள ராணுவ சக்திகள் விண்வெளியில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை என்று கூறினார்.

“ஒரு காலத்தில், மனிதர்கள் விண்வெளியை ஆராய்ந்தனர். இப்போது நாம் விண்வெளியை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில் நுழைகிறோம், நாம் இன்னும் அதன் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்,” என்றார்.

இந்தக் கட்டத்தில், உலகெங்கிலும் உள்ள சக்திகள் விண்வெளியில் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

“வானமும் கடல்களும் இலவசம் மற்றும் வணிக ரீதியாக நாம் விரும்பியபடி பயன்படுத்த முடியும் என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்,” என்றார் மேத்யூ குரோனிங்.

“வரவிருக்கும் 30 ஆண்டுகளில் இதேபோன்ற இடத்தை நாம் பார்க்க விரும்புகிறோம், அங்கு சுதந்திரமான இருக்க முடியும், வர்த்தகம் செய்ய முடியும் மற்றும் அதை வாழக்கூடியதாக மாற்றவும் முடியும்.” என்று கூறிய அவர், அது பாதுகாப்பான இடமாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »